பாராட்டுக் கடிதம்
கடந்த பிப்ரவரி 16_29இல் சுதந்திர இந்தியாவின் அவல நிலை(யை) வெளிச்சம். உச்சநீதிமன்ற (தீர்ப்பு) 5 பேர் குழுவின் தீர்ப்பை அவமதித்து 2 நீதிபதிகளின் தீர்ப்பு முயலுக்கு கொம்பு முளைத்தது போல் ஆகிவிட்டது. பட்டை _ நாமம் போட்ட பக்த பதர்களுக்கு மகா சிவராத்திரியின் யோக்கியதை அம்பலம், நிரூபணம் பெரியாரால், உண்மையில். என்னுடைய சிலை முக்கியமல்ல. சிலைக்கு அடியில் இருக்கும் கடவுள் மறுப்பு வாசகம்தான் மிக முக்கியம். பெரியார் பக்கம் திரும்பியுள்ளது _ இன்றைய உலகம். மகிழ்ச்சி. வந்தேறிகளின் அட்டகாசம், ஒடுக்கு முறைகளுக்கு ஆப்பு. பெரியார் கொள்கையே வலிமை. ஆசிரியரின் தற்போதைய சுற்றுப் பயணக் கூட்டங்கள் மத்திய மாநில அரசுகளின் கண்களில் பட விழி பிதுங்கும் அளவுக்கு ஆசிரியரின் எடுத்துக்காட்டுடன் கூடிய உரை வீச்சுகள் பயனளித்துள்ளன. ஆசிரியருக்கும், கருஞ்சட்டையினருக்கும், காலம் தாழாமல் உண்மை இதழை வழங்கிவரும் முகவருக்கும் பாராட்டுகள். தொய்வில்லாப் பணிகளுக்கு உறுதுணையாக இருப்போம். நாத்திக நீரைப் பாய்ச்சுவோம். பயனாளிகளை உருவாக்குவோம். வணக்கம்.
– இப்படிக்கு, சுந்தரம், தி.மு.க., ஊராட்சி துணைத் தலைவர், சிங்கிபுரம்
உயர்திரு ‘உண்மை’ இதழின் ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தனி மனிதனின் தன்னம்பிக்கையையும், விழிப்புணர்வையும் வெளிக்கொண்டுவரும் தங்களுக்கு ஈடு இணையில்லா பாராட்டுகள்.
தங்களின் பிப்ரவரி 1_15, 2020 இதழில் வெளிவந்துள்ள “பகுத்தறிவே துணை’’ என்னும் கதையின் ஆசிரியர் திரு.ஆறு.கலைச்செல்வன் அய்யா அவர்கள் உடற்பயிற்சியின் அவசியத்தை மிதிவண்டியின் மூலமாக சிறப்பாக விளக்கியுள்ளார். ஜப்பான் மற்றும் ஜெர்மனியில் ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் 5 பேருக்கும் மிதிவண்டி என்கிற செய்தி முன் உதாரணமாக இருந்தது. இதனால் விபத்துக்கு வாய்ப்பில்லை என உணர்த்தியது. சில இயற்கையாக இரட்டிப்புத் தன்மையாக நடைபெறுகிறது, என்ன செய்ய முடியும்?
அருகிலேயே தேர்வை வைத்துக்கொண்டு அவசர அவசரமாக வீட்டை அடைய புறப்பட்டு, கண் அயர்ந்ததால் ஏற்பட்ட விபத்து ஒரு சிறந்த விழிப்புணர்வு. இறுதியாக தந்தை, ‘பகுத்தறிவுடன் செயல்படு’ எனக் கூறியது “பகுத்தறிவே துணை’’ என்னும் தலைப்பை சிறப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
உயர்திரு டாக்டர் கிருஷ்ணவேணியின் ‘நீட்’ இல்லாத நிலையில்தான் பெற்றோரை இழந்த நான் பெண் மருத்துவரானேன் என்றது சமுதாயக் கண்ணோட்டம் பற்றிய சிந்தனையை தூண்டும் அளவில் இருந்தது. நன்றி!
– இரா.திலகம், பரங்கிப்பேட்டை.
பிப்ரவரி 1-_15 உண்மை இதழைப் படித்தேன். மாநிலப் பட்டியலில் உள்ள மருத்துவமனைகள் பொது சுகாதாரத்தை பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போவதா? என்று நமது ஆசிரியர் அவர்கள் எழுதிய தலையங்கம் நாட்டிற்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஆசிரியர் அவர்களின் கேள்வி பதில்கள் பொதுமக்களுக்கு நல்ல சிந்தனைத் தெளிவை உருவாக்கும் வகையில் உள்ளது. அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரை தமிழர் தலைவரை இளைஞர்கள், மாணவர்கள் பின்பற்றக் கூடிய வகையில் பாடமாக உள்ளது.
உணர்வு பொங்க நடைபெற்ற உண்மை இதழின் பொங்கல் விழா என்ற அய்யா மஞ்சை வசந்தனின் கட்டுரை அந்த விழாவில் நேரில் பங்கேற்க முடியாதவர்களை அந்த விழாவிற்கே அழைத்துச் செல்லும் வகையில் உள்ளது. விதி நம்பிக்கையை விலக்கிய அதிநவீன மருத்துவங்கள் என்ற நமது மருத்துவர் அய்யா இரா.கவுதமன் எழுதியது, பேராசிரியர் ந.வெற்றியழகன் எழுதிய தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள், பகுத்தறிவே துணை என்ற சிறுகதை, மூடநம்பிக்கையால் வரும் கேடுகள் என்ற கட்டுரை இவை அனைத்தும் படிக்கப் படிக்க எனது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருந்தது. உண்மை இதழை படித்துப் பயன்பெற வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.
– கோ.வெற்றிவேந்தன், கன்னியாகுமரி