Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இயக்க வரலாறான தன் வரலாறு(231) : அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

சென்னை பெரியார் திடலில் உள்ள, பெரியார் நகர குடும்ப நல மய்ய ஸ்டோர் கீப்பர் மற்றும் க்ளார்க்காகப் பணியாற்றி தற்போது பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மேலாளராகப் பணியாற்றும் கோ.குணசேகரன்-சாந்தி வாழ்க்கை ஒப்பந்த விழா பெரியார் திடலில் 20.4.1988 அன்று நடைபெற்றது. விழாவில் நான் பங்கேற்று வாழ்க்கை ஒப்பந்தத்தை சிறப்பாக நடத்தி வைத்தேன். அப்போது, நான் உரையாற்றுகையில் ‘‘நல்ல உதாரணமாக, நம்பிக்கைக்கும், பொறுப்புணர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக இருக்கக் கூடியவர் மணமகனாக அமைந்திருக்கின்ற அருமை குணசேகரன் அவர்கள். இந்தத் திடலினைப் பொருத்தவரையிலே நாங்களெல்லாம் யாரோ என்று இருந்ததில்லை. இங்கே இருக்கின்றவர்கள் _ பணியாற்றுகின்றவர்கள்  ஒருவர் வேலைக்காரர் இன்னொருவர் எஜமானர் என்கிற நிலை கிடையாது. அதற்குப் பதிலாக எல்லோரும் கூட்டுப் பணியாளர்கள் என்று சொல்லக்கூடிய அந்த உறவுமுறைதான் இங்கு உண்டு’’ என்று குறிப்பிட்டேன். விழாவிற்கு, பெரியார் பெருந்தொண்டர் சி.ஆளவந்தார் விழாத் துவக்க உரையாற்றினார். டாக்டர் கே.ராமச்சந்திரா, நீதிபதி பெ.வேணுகோபால் மற்றும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை பெரியார் திடலில் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற கோ.குணசேகரன் – சாந்தி வாழ்க்கை ஒப்பந்த விழாவில் ஆசிரியருடன் நீதியரசர் பி.வேணுகோபால் மற்றும் உறவினர்கள்

புரட்சிக்கவிஞர் விழா, தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி விழாவாக 28, 29, 30.4.1988 ஆகிய மூன்று நாள்கள், மூன்று வெவ்வேறு இடங்களில் வெகுசிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் இயக்குநர் நடிகர் பாண்டியராசனுக்கு ‘புதுமைக் கலை மன்னர்’ பட்டம் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் விழாவில், தன்மானத் தமிழ்த் திரைப்படக் கவிஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுக் கேடயங்களை வழங்கினோம். நகைச்சுவைக் கலைஞர் ஜனகராஜூக்கு “நகைச்சுவை நன்மணி’’ என்னும் பட்டத்தையும், ‘பாசம் ஒரு வேஷம்’ என்னும் பகுத்தறிவுப் படத்தைத் தயாரித்த புரட்சி இயக்குநர் ஜெயதேவிக்கு ‘கலைச்சுடர்’ என்னும் பட்டத்தையும் பெரியார் விருதுகளையும் வழங்கினேன். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் தந்தை பெரியார் வேடமணிந்து சிறப்பாக நடித்தவருமான வேலு பிரபாகரனுக்கு பாராட்டு தெரிவித்து மூன்றாம் நாள் விழாவில், திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிற்கு நீதிபதி வேணுகோபால் ‘புரட்சிக் கலைவேந்தர்’ பட்டம் வழங்கினார். பட்டத்தைப் பெற்றுக் கொண்டு இயக்குநர் பாரதிராஜா அவர்கள் பேசும்பொழுது, “இந்த விழாவிற்கு வந்திருக்கின்றவர்களை எல்லாம் பார்க்கிறேன். ஒரு பக்கம் புடவை அணிந்து வந்திருக்கின்ற தாய்மார்கள், இன்னொரு பக்கம் கறுப்புச் சட்டை அணிந்த பெரியோர்கள். கறுப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்’’ என்று குறிப்பிட்டார்.

நடிகர் ஜனகராஜ்க்கு ‘நகைச்சுவை நன்மணி’ பட்டத்தினை

வழங்குகிறார் ஆசிரியர்

இயக்குநர் ஜெயதேவிக்கு ‘கலைச்சுடர்’ பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்துகிறார் ஆசிரியர்

இயக்குநர் பாண்டியராசனுக்கு ‘‘புதுமைக் கலை மன்னர்’’ பட்டத்தினை  வழங்கும் நீதியரசர் பெ.வேணுகோபால்

 நான் உரையாற்றும்போது, “தமிழர் கலை எல்லாம் ஆரியக் கலையாக உருமாற்றம் பெற்றது. தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கம்தான் இந்தப் பிரச்சனை மீது கவனம் செலுத்தியது. பிரச்சனையின் ஆணிவேருக்கே சென்று காரியங்களைச் செய்ய ஆரம்பித்தது.

தந்தை பெரியார் அவர்களின் இந்தப் பணிக்கு இலக்கியத் துறையில் மட்டுமல்ல, இயக்கப் பணியிலும் பெரும் பங்கு ஆற்றிய பெருமை புரட்சிக்கவிஞருக்கு உண்டு. அதனால் புரட்சிக்கவிஞரின் பிறந்த நாளை தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி நாளாக நாம் கொண்டாடிக் கொண்டு வருகிறோம்’’ என்று எடுத்துக் கூறினேன்.

ஏ.டி.பன்னீர்செல்வம்

நீதிக்கட்சியின் தூண்களுள் ஒருவரும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக அரும் பாடுபட்டவரும், தந்தை பெரியார் அவர்களின் உற்ற தோழராக, தொண்டராக நம்பிக்கை ஒளியாக வாழ்ந்தவருமான ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நூற்றாண்டு விழா 1.6.1988 அன்று திருவாரூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொள்ள இரயில் மூலம் திருவாரூர் வந்த தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் ஜஸ்டிஸ் பெ.வேணுகோபால், டாக்டர் ஏ.கிருட்டினசாமி பார்_அட்_லா ஆகியோரை கீழ்த்தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியம் கைத்தறி ஆடை போர்த்தி அன்புடன் வரவேற்றார். விழாவில் திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுரையாற்றினார். கீழத்தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியம் தலைமையேற்றார்.

ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் உருவப் படத்தினை டாக்டர் ஏ.கிருட்டினசாமி பார்_அட்_லா அவர்கள் திறந்துவைத்து அருமையான ஆங்கில உரையை ஆற்றினார். இதனை பெரியார் பேருரையாளர் அ.இறையன் அவர்கள் தமிழில் சுவைபட மொழிபெயர்த்தார். விழாவில் நான், ‘தமிழன் யார்?’ என்று ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் அழுத்தந்திருத்தமாகச் சொன்ன கருத்துகளை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்தேன்.

பார்ப்பான் தமிழனாக மாட்டான் என்று பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தைப் பரப்புவதும், ஏற்றுக்கொள்வதும்தான் விழாக் கொண்டாடுவதன் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன்.

விழாவில் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் மத்திய அரசு அவர் நினைவாக அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்றும், அதற்காக பொதுமக்கள் கருத்தை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டேன். விழாவில் கழகத் தோழர்களும் பொதுமக்களும் ஏராளமாய் கலந்து கொண்டனர்.

நமது எதிரிகளே அடையாளம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தம்பி பிரபாகரனுக்கு ஆபத்து என்றால் தமிழகம் எரிமலையாக வெடிக்கும் என்பதை மாத்திரம் இந்த நேரத்திலே நினைத்து எச்சரிக்கை விடுக்கிறேன் என்று குறிப்பிட்டேன்.

தமிழகம் மத்திய அரசால் எல்லாத் துறைகளிலும் வஞ்சிக்கப்படுவதை கண்டித்து, நாடு முழுவதும் மத்திய அரசினுடைய போக்கை பொதுமக்களுக்கு விளக்குகின்ற வகையிலே தீவிர பிரச்சாரத் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தி வந்தோம். 6.5.1988 அன்று ராமேசுவரத்தில் துவங்கிய பிரச்சாரப் பெரும்பயணம் 1000 கிலோ மீட்டர் பயணம் _ 1500 கிலோ மீட்டராக நீண்டது. நள்ளிரவு ஒரு மணிக்கு திருத்தணியில் நிறைவுப் பெருவிழா நடைபெற்றது. அதில் இரண்டாவது கட்டமாக 8.5.1988 அன்று காரைக்குடியிலிருந்து பேராவூரணி வரை துவங்கினோம். அதனைத் தொடர்ந்து, மறைந்த ம.கந்தசாமி, நம்புராசன் அவர்கள் பெயரால் அமைக்கப்பட்ட கல்வெட்டினை திறந்து வைத்தேன். அதன்பின், ராங்கியம் கிராமத்தில் பெரியார் சிலையையும், பெரியார் நூலகத்தையும் திறந்து வைத்து உரையாற்றினேன். தொடர்ந்து குழிபிறை, பனையப்பட்டி, விரச்சாலை, நற்சாந்துபட்டி மற்றும் நமனசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பேராவூரணி அடைந்தோம். பொதுக்கூட்டம் இரவு 10.00 மணிக்கு நடைபெற்று, எனது உரையை மக்கள் நள்ளிரவு தாண்டியும் கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சித் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர்களின் எழுச்சி வடிவம்’’ என்னும் நூல் வெளியீட்டுவிழா 19.5.1988 இரவு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கர்நாடகத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் கணபதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

நான், “பிரபாகரன், தமிழர்களின் எழுச்சி வடிவம்’’ என்னும் நூலினை பொதுமக்களுடைய பலத்த கைத்தட்டலுக்கிடையே முதற்படியை வெளியிட திரைப்பட இயக்குநர் வ.சொ.குகநாதன் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

விழாவில், பெங்களூர் பாவிசைக்கோ, சுப.வீரபாண்டியன், சாலினி இளந்திரையன், திரைப்படத் தயாரிப்பாளர் பழ.கருப்பையா, கோவை மகேசன், சாலை இளந்திரையன், பெருஞ்சித்திரனார், இயக்குநர் குகநாதன், ஜனதா கட்சித் தலைவர் இரா.செழியன், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவர் தஞ்சை அ.இராமமூர்த்தி ஆகியோர் நெடுமாறன் அவர்கள் எழுதிய நூலைப் பற்றியும் தம்பி பிரபாகரன் பற்றியும் சிறப்பாக உரையாற்றினார்கள். இறுதியாக நான் உரையாற்றினேன். முன்னதாகவே, நிகழ்ச்சியில் மறைந்த விடுதலைப்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. எம்.கே.டி.சுப்ரமணியம் நன்றிகூற கூட்டம் நிறைவுபெற்றது.

டி.டி.வீரப்பா

தந்தை பெரியார் அவர்களின் அடிநாள் தொண்டரும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், திராவிடர் கழக மத்திய நிருவாகக் குழுவின் அங்கத்தினரும், திருச்சி மாவட்டத் தலைவராக பல்லாண்டு காலம் பணி புரிந்தவருமான மானமிகு டி.டி.வீரப்பா அவர்கள் 6.5.1988 அன்று மறைவுற்றார் என்ற செய்தி நமக்கு வேதனை தந்தது. பல்வேறு இயக்கப் பணிகளுக்கிடையே சிக்கிக்கொண்டு உரிய நேரத்தில் செல்லமுடியாத சூழ்நிலைக் கைதியாகிவிட்ட நிலை. என்ன செய்வது! நமது வேதனையை வார்த்தைகளால் வர்ணித்திட இயலாது. பாசமுள்ள இந்தக் கொள்கைக் குடும்பத்தில் இப்படி எத்தனையோ முறை ஆகிவிடுகிறது. எனதருமைத் தந்தையார் தம் முதுமை வாழ்வில் மரணத்துடன் இறுதிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போதுகூட இந்திராகாந்திக்கு கறுப்புக் கொடி காட்டியதற்காக சிறையில் இருந்தேன். அவர் மறைந்த பிறகு அவரை அடக்கம் செய்வதற்கு ஒரு சில மணித்துளிகள் முன்புதான் சிறையிலிருந்து வெளியே வந்து, இறுதி மரியாதை செலுத்த _ அதுவும் நண்பர்கள் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக முடிந்தது.

அதேபோல் அருப்புக்கோட்டை சுயமரியாதையின் மொத்த உருவம் இலட்சிய வீரர் வள்ளல் பெருமாள் அவர்களும் அடக்கத்தின் மொத்த உருவமான அய்யா டி.கே.சுப்ரமணியனார் அவர்களும் மறைந்தார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.

23.5.1988 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் ‘முப்பெரும் பெரியார் பெருந்தொண்டர்களை இழந்தோமே!’ என்று தலைப்பிட்டு முக்கிய அறிக்கையை எழுதியிருந்தேன்.

முதுமைக் காலத்தில் மறைந்தார்கள் இவர்கள் என்றாலும், சமுதாய விஞ்ஞானிகளான சுயமரியாதை வீரர்களை நாடு இழந்ததால் அது நோபல் பரிசாளர்களை இழந்தது போன்று அல்லவா என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

இப்படிப்பட்ட மற்றொரு பேரிழப்பு, அருமைப் பெரியார் பெருந்தொண்டர் ‘விஜி’ என்று அழைக்கப்பட்ட மானமிகு வீ.குருசாமி (சென்னை) அவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன் சென்னையில் மறைந்தார்.

இவர், நான் சிறுவனாக இருந்தபோது கடலூரில் ‘விடுதலை’, ‘குடிஅரசு’, ‘திராவிடநாடு’ ஏடுகளை மிதிவண்டியில் சென்று விற்பனை செய்தவர்.

தந்தை பெரியாருடன், குனியமுத்தூர் திரு.சதாசிவம் மற்றும் அவர் மனைவி, கஸ்தூரி அய்யா, மனைவி ருக்குமணி அம்மாள் மற்றும் குழந்தைகள் சந்திராகுமாரி, தேவேந்திரன், நாகேந்திரன் ஆகியோர் (28-01-1955)  

 கோவை மாவட்டம், குனியமுத்தூரில் 12.06.1988 அன்று பெரியார் பெருந்தொண்டர் மறைந்த சதாசிவம் அய்யா அவர்கள் நினைவு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது கோவையில் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்திலே, இளைஞர்கள் வராத காலத்திலே கோவையிலே இயக்கம் இருக்கிறதா என்று கேட்ட காலத்திலே, மறைந்த அய்யா சதாசிவம் அவர்கள், தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களாக கறுப்புச்சட்டை அணிந்து அய்யா அவர்களை அப்படியே பின்பற்றுபவர்களாக இருந்தார்கள்.

அவர்களுக்கு உற்ற துணையாக, அவர்களை பாதுகாப்பதுபோல அவர்களுடைய துணைவியார் நம்முடைய பாசத்துக்கும் பெருமிதத்துக்கும் உரிய அம்மையார் அம்மணியம்மாள் அவர்கள் இருந்தார்கள். அம்மணியம்மையார் போன்றோரின் பற்று, பாசத்தால்தான் நாங்களெல்லாம் பணியாற்ற முடிகிறது என்றும் இயக்கத் தொண்டுகள் குறித்து குறிப்பிட்டேன். அப்படிப்பட்ட அந்த அம்மணியம்மா கணவர் இறந்த 10 நாள்களில் 22.06.1988 அன்று சதாசிவம் அவர்களது நினைவுப் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மருத்துவமனையில் இருந்த அம்மையாரை நேரில் சென்று சந்தித்து விட்டு வந்தேன். அதற்குள் அம்மையாரின் இழப்புச் செய்தி வந்து என்னைப் பெரிதும் வாட்டியது.

உலகப் புகழ்பெற்ற இரட்டையர்களில் ஒருவரான டாக்டர் சர்.ஏ.இராமசாமி (முதலியார்) அவர்களது மூத்த மகனும், ‘லிபரேட்டர்’ என்னும் ஆங்கில நாளேட்டின் ஆசிரியரும், சிறப்பான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாட்டில் புலமைமிக்க ஆங்கிலப் பேச்சாளருமான சமூகநீதியில் அழுத்தமான உறுதியாளருமான டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் 22.6.1988 அன்று மறைவுற்ற செய்தி மிகவும் வேதனையும் வருத்தத்தையும் தந்தது.

ஏ.கிருஷ்ணசாமி

டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் கடைசியாக திருவாரூரில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு அரியதோர் ஆய்வு உரையாற்றி அனைவரையும் அகமகிழ வைத்தார்.

அவர் சீரிய பண்பாளர் _ இனவுணர்வு மிக்கவர் தந்தை பெரியார் அவர்களிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வகுப்புரிமைக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் நம்மோடு தோளோடு தோளாக நின்ற போர்வீரர்! என்று இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி இறுதி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை தெரிவித்தேன்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும் நீண்டகாலம் ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதியான காரைக்குடி நகரில் கழகத்தின் தூணாக விளங்கி, இயக்கம் வளர தனது உடல், பொருள், உழைப்பு, தொண்டு அத்தனையும் தத்தம் செய்த லட்சிய வீரர் மானமிகு அய்யா என்.ஆர்.சாமி அவர்கள் 25.7.1988 அன்று காலை மறைந்த செய்தி பேரிடியாய்த் தாக்கியது. அதுபற்றி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அய்யா என்.ஆர்.சாமி அவர்கள் குடும்பமே கழகக் கொள்கைக் குடும்பம். எவ்வித சபலங்களுக்கோ சஞ்சலங்களுக்கோ ஆளாகாத நிலையில் தனது பேரன் பேத்திகள் அத்தனைப் பேரையும் இயக்கக் கொள்கைப் பயிர்களாக ஆளாக்கியுள்ளார்கள்.

ஆசிரியருடன் என்.ஆர்.சாமி உரையாடும் காட்சி

அதேபோல் அடுத்த தலைமுறையையும் நமக்கு அவர்கள் இருவருமே தந்து தயார் செய்துள்ளார்கள். அய்யா என்.ஆர்.சாமி அவர்கள் எதிர்நீச்சல் போட்டு, துணிச்சலுடன் கழகத்தை அப்பகுதியில் வளர்த்த மாவீரர்; ஒரு தளபதி. அவர் இல்லாத காரைக்குடியில் சுயமரியாதை வரலாற்றில் சூன்யம் ஏற்படவே செய்தது. ஈடுசெய்ய முடியாத இழப்பு என்பது இப்படிப்பட்டதுதான் என்பதை எல்லோரும் உணரும்படிச் செய்தது அவர் இழப்பு.

நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி கோரி ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்

நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி கோரி 27.7.1988 அன்று என் தலைமையில் ஆளுநர் மாளிகையின் முன் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது. மேலும் பேரணி முடிவில் ஆளுநரிடம் கோரிக்கை மனுவை நான் அளித்தேன். அதனைத் தொடர்ந்து 21.9.1988 அன்று சென்னை வந்திருந்த சட்டத்துறை மத்திய அமைச்சர் சங்கரானந்தை நான் சந்தித்து நீதிபதிகள் பதவிகளில் சமூகநீதியை தாங்கள் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை மனுவை அவரிடம் கொடுத்தேன்.

அமெரிக்கா பயணம்

அமெரிக்காவில் வாழ் தமிழர்களின் அழைப்பினை ஏற்று இனப் படுகொலையைத் தடுக்கும் அமெரிக்கா குழுவின்  (U.S.A Committee to stop Genocide in Sri Lanka) சார்பில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பினை ஏற்று அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பொருட்டு நான் 28.7.1988 அன்று அதிகாலை 2.40 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றேன்.

29.7.1988 அன்று வாஷிங்டன் நிகழ்ச்சி, 30.7.1988 நியூயார்க், நியூஜெர்சி நிகழ்ச்சிகள் மற்றும் சிகாகோ, செயின்ட் லூயிஸ், ஆல்டன் மாண்ட்ரியா, ஒட்டாவா நகரங்களில் நடைபெறும் பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள கொள்கைப் பயணமாக புறப்பட்டுச் சென்றேன்.

விமான நிலையத்தில் வழியனுப்ப திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், மதுரை மாநகர் மாவட்ட தி.க. தலைவர் கல்வி வள்ளல் பே.தேவசகாயம், திராவிடர் கழக மளிரணிச் செயலாளர் க.பார்வதி உள்பட பல கழகத் தோழர்கள் வந்து வழியனுப்பி வைத்தனர்.

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கோரி பேரணி மற்றும் ஆளுநர் பி.சி.அலெக்ஸ்சான்டரிடம்

மனு கொடுக்கும் ஆசிரியர்

29.7.1988 அன்று காலை வாஷிங்டனில் இலங்கையில் உள்ள இந்திய இராணுவத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், ஈழ மக்களை தமது ராணுவத்தின் மூலம் துன்புறுத்தும் இந்தியப் பிரதமர் ராஜீவின் செயலைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன்   இந்த ஆர்ப்பாட்டம் வெள்ளை மாளிகை முன்பு நடைபெற்றது.

அதன் பின்பு, “நேஷனல் பிரஸ் கிளப்’பில் உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. இந்தச் சந்திப்பில் என்னுடன், சென்ட்ரல் அமெரிக்கா சுப்ரீம் கோர்ட் நீதிபதி சச்சி பொன்னம்பலம், அய்.நா. மனித உரிமைக் கழகப் பிரதிநிதியான சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செல்வி கிரேன் பாரிக்கர், நியூஜெர்சி அட்டர்னி வேக்பால், ஓய்வு பெற்ற அதிகாரி ராஜரத்தினம், அமெரிக்கா வாழ் டாக்டர் சோம.இளங்கோவன், பாதிரியார் தாமஸ் முதலியோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் வெள்ளை மாளிகைக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டார்கள். இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர்களுக்கு ஈழத்தமிழர் படும் இன்னல்கள், இந்திய அரசின் வல்லாதிக்கப் போக்கு, சிறீலங்கா இந்திய ஒப்பந்தக் கேடுகள் முதலானவை பற்றி விளக்கினேன்.

31.7.1988 அன்று நியூயார்க் பேர்லிடிக்கன்சன் பல்கலைக்கழக மண்டபத்தில் நடக்கவுள்ள ஈழத் தமிழர் பற்றிய கருத்தரங்கில் சிறப்புரையாற்றினேன்.

2.8.1988 அன்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மனித உரிமைகள் சங்க இயக்குநரையும் நான் சந்தித்து, ஈழத்தில் தமிழர்கள் அனுபவித்துவரும் இன்னல்களை நேரில் விளக்கினேன். வாஷிங்டன் நகரில் நாடாளுமன்ற அலுவலகத்தில் _ கலிபோர்னியா நாடாளுமன்ற உறுப்பினர் டோம்லேன்டோஸ் அவர்களை நான் சந்தித்தேன். மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பெர்னாண்டஸ் பால்வோவையும் சந்தித்து ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை எடுத்து விளக்கினேன்.

என்னுடன் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள் உடனிருந்தார். 13.8.1988 அன்று கனடா நாட்டின் மான்ட்ரீஸ் மாநிலத்தில்  Balharst மய்ய தொழில்நுட்ப பள்ளி வளாகத்தில் உலகத் தமிழர்கள் இயக்கம் சார்பில் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, சிறப்புரை ஆற்றினேன்.

ஈழத் தமிழர்கள் படும் இன்னல்கள், இந்தியா _ இலங்கை ஒப்பந்த முறைகேடுகள் பற்றியும், அந்த ஒப்பந்தத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்பது பற்றியும் அந்த மண்டபத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தமிழ் அன்பர்கள் மத்தியில் தெளிவுபட எடுத்துரைத்தேன். 24.8.1988 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து அடைந்தேன்.

(நினைவுகள் நீளும்…)