தன் பெயரின் அடைமொழிக்கு ஏற்ப கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் பணியாக சிலப்பதிகாரத்தைப் பட்டிதொட்டியெல்லாம் அயராது அரும்பாடுபட்டு பரப்பி வந்தவர். 1975ஆம் ஆண்டு சிலப்பதிகாரம் பற்றி முழுமையான ஆய்வு நூலை எழுதி ‘சிலம்பொலி’ என்ற தலைப்பில் வெளியிட்டார். அதன் பின்னர் சிலம்பொலி செல்லப்பனாகிறார். அவருக்கும் பெரியார் இயக்கத்துக்குமான தொடர்பு நெடியது. அவர் 6.4.2019 அன்று இறந்துபட்டார்.
அவருக்கு நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்ச்சி 16.5.2019 மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிலம்பொலி செல்லப்பனார் உருவப் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார். பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை கிருஷ்ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். செயலாளர் கி.சத்திய நாராயணன் வரவேற்புரையாற்றினார்.
செல்லப்பனாரது தமிழ்ப்பற்றையும் பகுத்தறிவுத் தொண்டையும் எடுத்துக் கூறி உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார்.
கவிஞர் கலி.பூங்குன்றன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், முனைவர் ம.இராசேந்திரன், மயிலை நா.கிருஷ்ணன் ஆகியோருக்கு பயனாடை அணிவிக்கப்பட்டு தந்தை பெரியார் நூல்கள் வழங்கப்பட்டன.
சிலம்பொலி செல்லப்பனாரது மருமகன் புட்பராசு மணிமேகலை அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்துச் சிறப்பித்தார். இந்நிகழ்வில், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, மாநில பகத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைச் செயலாளர் கோ.ஒளிவண்ணன் மற்றும் பல கழக முன்னணியினர் கலந்துகொண்டனர். நிறைவாக ச.சேரன் நன்றி கூறினார்.