17.05.2019 – மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பகுத்தறிவு வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக் களஞ்சியமாக வெளிவந்திருக்கும் ‘உண்மை’ (மே 16 – 31, 2019) இதழ் படித்தேன்.
அரசே யாகம் நடத்துகின்ற அறியாமையை, அரசமைப்புச் சட்டத்தைச் சுட்டிக் காட்டியிருப்பதுடன், அதை ஆதாரத்துடன் கண்டித்திருப்பது கருத்துக்கு விருந்து!
பிற கோள்களுக்கு, மனிதர்களை அனுப்ப ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த அறிவியல் காலத்தில் கணினி யுகத்தில், காலாவதியான கருத்துக்களுக்கு, அரசே புத்துயிரூட்ட முனைவது வெட்கக் கேடானது. மக்களின் வரிப்பணம் இப்படி வீண் விரயம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.
கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழாற்றுப்படை பெரியார்’ என்ற காவியச் சுருக்கமே… படிப்போர் நெஞ்சில் எழுச்சிக் கனலை மூட்டுகிறது. இவ்வளவு சிறப்புக்குரிய அய்யாவுக்கு, அய்.நா. விருது வழங்கியதிலே வியப்பொன்றுமில்லை!
ஆனால், அதனைப் பொய் என்று இன்றைக்கே பார்ப்பனர் துணிந்து புளுகுகிறார்கள் என்றால், நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன் திராவிட இனத்தை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்!
எனவேதான் பார்ப்பனர்களிடம் நாம் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும் என்பதை… ஆபிடியூபா என்பவர், “அக்காலத்து மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம் கொடுமை முதலியன புரிய ஆரியர் துணிவர். சிண்டு முடிந்து விடுவதிலே, கலகமூட்டுவதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்’’ என்று குறிப்பிடுகிறார். இதனை அண்ணா, ‘ஆரியமாயை’ (பக்.12) என்ற நூலிலே எடுத்துக்காட்டியுள்ளார்! இன்று அரசியலில் நடக்கின்ற கோமாளிக் கூத்துக்களைக் காணும்போது, இது நூற்றுக்கு நூறு சரியெனவே தோன்றுகிறது. எத்தனை எத்தனை மோசடிகள், தில்லுமுல்லுகள், எமாற்றுப் பேச்சுக்கள், காவிகளும் அவர்களின் தொண்டரடிப்பொடி ஆழ்வார்களும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!
அவர்களின் பொய் முகமூடியைக் கிழித்தெறிந்தது, தங்களுடைய பேச்சும், எழுத்தும் அறிக்கைகளும்தான்! அதேபோல் உண்மை இதழில் வெளியாகி இருக்கும் ஒவ்வொரு கட்டுரைகளும், கவிதையும், சிறுகதையும், மனுநீதிக்குப் பயணச் சீட்டாகவும், பகுத்தறிவு, மனித நீதிக்கு நுழைவுச் சீட்டாகவும் அமைந்திருக்கிறது.
மற்றும் வரலாற்றுக் குறிப்புகள், தமிழர்களின் கலை, இலக்கிய மறுமலர்ச்சி பற்றிய செய்திகள், உள்ளத்தைக் குளிர்விக்கின்றது!
என்னதான் பார்ப்பனர்கள், காவிகள், தமிழ் மண்ணில் காலூன்ற நினைத்தாலும் அது பகற்கனவே! காரணம் இது ‘பெரியார் மண்’ என்பது மட்டுமல்ல, இளைஞர்கள், மாணவர், மகளிரிடையே ஏற்பட்டிருக்கும் புதிய எழுச்சியும், விழிப்புணர்வுமே காரணம்!
இதற்கு இடைவிடாது தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் பரப்புரைகள், கருத்தரங்கங்கள், மாநாடுகள், விடுதலை, உண்மை, Modern Rationalist, பெரியார் பிஞ்சு போன்ற ஏடுகளும் பெருந்துணை புரிகின்றன.
இவைகளைத் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கின்ற தங்களின் தூய தொண்டறம், காலத்தாலழியாதது. ‘உண்மை’ இதழை படித்தவுடன், எனக்கு ஏற்பட்ட எண்ணங்களே இவைகள்! எனவே, எதிர்காலம் மதங்களுக்கல்ல, அறிவியலுக்கே! இது உறுதி!!
– நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக்கருப்பூர்.