அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா ? (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக?

ஜூன் 01-15 2019

சிகரம்

 விதேச நாட்டை ருக்மாங்கதன் ஆண்டு வந்தான். அவனது மனைவி சந்தியாவனி. மகன் தர்மாங்கதன்.

இவர்கள் சிறந்த விஷ்ணு பக்தர்கள். ஏகாதசி விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்து வந்தனர். மேலும் மன்னன் இவ்விரதத்தின் மகிமையை மக்களுக்கும் எடுத்துக் கூறி அவர்கைளயும் அவ்வாறு செய்வித்தான்.

எட்டு வயது முதல் எண்பத்தைந்து வயதுக்குட்பட்ட ஆண் பெண் அனைவரும் அனுஷ்டிக்குமாறு மன்னன் ஆணை பிறப்பித்திருந்தான். தசமி அன்று ஒருவேளை அன்னம் உட்கொண்டு, ஏகாதசி அன்று உபவாசமிருந்து துவாதசி அன்று பகவானைப் பிரார்த்தித்து பாராயணம் செய்வர்.

எல்லா மாதங்களிலும் ஏகாதசி விரதம் இருந்தாலும், மார்கழி மாதம் வரும் ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்புடையது. இது முக்கியமாக விஷ்ணு பக்தர்களால் அனுஷ்டிக்கப்படும் முக்கிய விரதமாகும்.

விதேச நாட்டு அரசரும், அவர் குடும்பத்தினரும் மட்டுமின்றி, அந்நாட்டு மக்களும் அதன் பயனைக் கருதி ஏகாதசி விரதமிருந்து பாவம் நீங்கி சொர்க்கத்தை அடைந்தனர். ஒருவர்கூட நரகத்துக்குச் செல்வதில்லை.

இது யமதர்மனுக்கு ஒரு சோதனையாக இருந்தது. ஒருநாள் நாரதர் அங்கு வர யமன், “எல்லோரும் சொர்க்கம் சென்றுவிட நரகம் காலியாக உள்ளது. அதனால் தனக்கு வேலையில்லை என்று கூறி வருந்தினார்.

இருவரும் சத்தியலோகம் சென்று பிரம்மனிடம் முறையிட, அவர் தன் மாய சக்தியால் மோகினி என்ற பெண்ணைப் படைத்து, அவளிடம், “பூலோகம் சென்று ருக்மாங்கதனை மயக்கி, மணம் செய்து கொண்டு அவன் ஏகாதசி விரதத்துக்குப் பங்கம் ஏற்படுத்து’’ என்று பணித்தார். அவளும் அவ்வாறே செய்வதாகக் கூறி பூலோகம் சென்றாள்.

ஒருநாள் காட்டில் வேட்டையாடிக் களைத்த ருக்மாங்கதன் வாமேதவர் என்ற முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தான். அப்போது மோகினி அந்த ஆசிரமத்துக்குச் சற்று தூரத்தில் இருந்து பாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய கானத்தில் மயங்கிய மன்னனைக் கண்டு மோகினியும் மயங்கினாள். இருவரும் கந்தர்வ மணம் செய்து கொண்டனர். இருவரும் அரண்மனை அடைந்தபோது மன்னர் மனைவியும், மகனும் மோகினியை ஏற்றுக் கொண்டனர்.

சில மாதங்கள் கழித்து மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி வந்தது. ருக்மாங்கதன் மோகினியிடம் ஏகாதசி விரதம் பற்றிக் கூறி அவளையும் விரதமிருந்து மேலான நிலை அடையுமாறு அறிவுறுத்தினான்.

ஆனால், அவள் அதனை விரும்பாமல் விரதம் என்பதும் தவம் என்பதும் முற்றும் துறந்த முனிவர்களுக்கே அன்றி மன்னர்களுக்குக் கிடையாது. அதனால் தன்னை விட்டு எங்கும் போகாமலிருக்குமாறு கூறினாள். ருக்மாங்கதன் மோகினியின் மீதிருந்த மயக்கத்தின் காரணமாக அவள் மாளிகையிலேயே இருந்து வந்தான். எனினும், தசமி நடுஇரவில் எழுந்து ஏகாதசி விரதம் பற்றிய எண்ணத்துடன் மோகினியையும் எழுப்பினான். தன்னைத் தடுக்க வேண்டாம் என்றும் விரதத்திலிருந்து தவறமுடியாதென்றும் கூறிவிட்டான். தான் விரதத்தைக் கைவிடமுடியாதென்று கண்டிப்பாகக் கூறினான்.

அப்போது மோகினி கோபம் கொண்டு தன்மீது உண்மையான ஆசையிருந்தால் மன்னன் விரதம் இருக்கக்கூடாது என்றும், தன் பேச்சை மீறி நடந்தால் தன்னை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தாள்.

தன் ஆணைக்கு மன்னன் கட்டுப்படாததை அறிந்த மோகினி அங்கிருந்து புறப்பட எத்தனித்தாள். மகாராணியும் இளவரசியும் செய்தி அறிந்து அங்கு வந்து ஏகாதசி மகிமை பற்றி அவளிடம் கூற, மோகினி அத்தனை சிறப்புடையதென்றால் தான் சொல்வதுபோல் செய்யுமாறு கூறினாள்.

“மகன் தர்மாங்கதனை இரு துண்டாக்கி, விரத மகிமையால் அவனை உயிர்ப்பிக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியாது என்றால் மன்னன் விரதம் இருக்கக் கூடாது’’ என்றாள்.

ருக்மாங்கதன் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனால், ராணி பிள்ளையைக் கொடுக்க ஒப்புதல் அளித்தாள். தர்மாங்கதன் தனக்கு அது பெரிய பாக்கியம் என்று பலிக்குத் தயாரானான்.

மேலும், தர்மாங்கதன் தந்தையிடம், “இத்தனை காலம் விரதமிருந்து வருகிறீர்களே, அது வீண் போகாது. தயக்கம் வேண்டாம், வெட்டுங்கள்’’ என்று தயாரானான்.

ருக்மாங்கதன் மகாவிஷ்ணுவை மனதில் தியானித்து வணங்கி, வாளெடுத்து ஓங்கினான். அப்போது பேரொளியுடன் சங்கு சக்கரதாரியாக மகாவிஷ்ணு தோன்றினார். வாள் மலர் மாலையாகித் தர்மாங்கதன் கழுத்தில் விழுந்தது’’ (ஸ்ரீநாரத புராணம்) என்கிறது இந்து மதம்.

தீயென்றால் சுடும். வாள் வெட்டும். ஆனால், வளை கழுத்தை வெட்ட ஓங்கியபோது, வால் மாலையாக மாறி கழுத்தில் விழுந்தது என்கிறது இந்து மதம். இது அறிவியலுக்கு ஏற்றதா? வாள் என்பது இரும்பு. மாலை என்பது பூக்களால் தொடுக்கப்பட்டது. அப்படியிருக்க இரும்பு எப்படி பூவாக மாறும்? இப்படி அறிவியலுக்கு எதிரான, முட்டாள்தனமான கருத்தைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

சாபத்தால் மனிதன் ஒட்டகமாவானா?

ஒருநாள் சனத்குமாரர் சிவத்தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது ஈசன், உமையோடும் கணங்கேளாடும், நந்தி முன் செல்ல, அவ்வழியே சென்று கொண்டு இருந்தார்.

இதனால் சனத்குமாரன் யோகநிலை கலைந்தது. மனம் ஐம்புலன்கள் சலனம் பெற்றன. அவர் கண் விழிக்காமல் தியானத்திலிருந்தார். பரமன் அருகில் சென்றும் அவரை வணங்கவில்லை.

உமாதேவியார் ஈசனிடம் அவன் அருகிலிருப்பதை விட்டு விட்டு எங்கோ தேடுகிறார் சனத்குமாரர் என்றாள். கோபம் அடைந்த நந்திகேசுவரர் ஒட்டகத்தைப் போல் ஈசனை வணங்காதிருக்கும் இவன் ஒட்டகமாக மாறட்டும் என்று சபித்தார்.

கண்களைத் திறந்து பார்த்த சனத்குமாரர் தான் ஒட்டகமாயிருப்பதை உணர்ந்து தந்தையாகிய பிரம்மனை அடைந்து முறையிட்டார். பிரம்மன்  ஞானதிருஷ்டியால் நடந்ததை அறிந்து, ஈசனைப் பக்தியோடு தியானிக்க அவர் முன் தோன்றிய பரமனிடம் சனத்குமாரர் சிவ தியானத்தில் இருந்தாரே அன்றி தவறிழைக்கவில்லை. அவன் மீண்டும் சுயஉருபெற அருளுமாறு வேண்டினார்.

அப்போது பரமன் தன் பக்தன் நந்தியின் சாப பலன் இது. எனவே அவரிடமே அருள்பெற உபாசிக்குமாறு கூறினார்.

அவ்வாறே சனத்குமாரர் நந்தியை உபாசித்து வழிபட அவரும் மனமகிழ்ந்து சனத்குமாரருக்கு சுயஉரு பெற அருளினார்’’ (ஸ்ரீலிங்க புராணம்) என்று கூறுகிறது இந்து மதம். சாபம் என்பது வார்த்தைகள். வாயால், வார்த்தைகளால் சாபம் விட்டால் மனிதன் ஒட்டகமாகவும், பின் அருளால் மீண்டும் மனிதனாகவும் மாற முடியுமா? இது அறிவியலுக்கு ஏற்றதா? அறிவியல்படி மனிதன் ஒட்டகமாகவோ, ஒட்டகம் மனிதனாகவோ மாற முடியாது. அப்படியிருக்க இப்படிப்பட்ட மூடக் கருத்துக்களைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

                                                   (சொடுக்குவோம்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *