இயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு!

ஜூன் 01-15 2019

அய்யாவின் அடிச்சுவட்டில் ….

கி.வீரமணி

 சமூகநீதி மாநாடு, ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் பேராளர்கள் மாநாடு, பெண்கள் விடுதலை மாநாடுகள் 24, 25.05.1987 அன்று தஞ்சை திலகர் திடலில் சிறப்பான முறையில் நடைபெற்றது. முன்னதாகவே தஞ்சை  வல்லம் பெரியார் நூற்றாண்டு விழா மகளிர் பாலிடெக்னிக்களில் அமைந்துள்ள “அன்னை மணியம்மையார் விடுதியை’’ குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ஜெயில்சிங் அவர்கள் திறந்து வைத்து, தந்தை பெரியாரின் தொண்டுகள் குறித்து பூரிப்படைந்தார். பெரியார் தமிழ்நாட்டில் பிறந்தவராயினும், இந்தியா முழுவதும் நிலவிய சமுதாயக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் என்று புகழாரம் சூட்டினார். மேலும் வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்துப் போரிட்ட வீரர், இந்தியா முழுவதுமுள்ள சமுதாய அநீதிகளை எதிர்த்தார் பெரியார் என்று கூறினார்.

அன்னை மணியம்மையார் விடுதியை ஜனாதிபதி ஜெயில் சிங் திறந்து வைக்கிறார். உடன் ஆசிரியர் கி.வீரமணி, சந்திரஜித் யாதவ்

 மகளிர் பாலிடெக்னிக் விடுதி திறப்பு விழாவில் நான் வரவேற்புரை ஆற்றினேன். அப்போது, பெருமைக்குரிய நமது குடியரசுத் தலைவர் அவர்கள் வந்து திறந்து வைக்கும் இந்த நாள் அவர்கள் வாழ்வில் ஒருநாள். ஆனால், நமக்குத் திருநாள், இந்த கல்வி வரலாற்றில் ஓர் பொன்னாள். கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் மட்டுமல்ல, ஏன்! தமிழக வரலாற்றிலே ஒரு பொன்னாள் என்ற குறிப்பிட்டேன்.

அதனைத் தொடர்ந்து தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற வரலாற்றுப் புகழ் வாய்ந்த தஞ்சையில் சமூகநீதி(Social Justice) மாநாட்டினை துவக்கி வைக்க பெரு உள்ளத்தோடு தாங்கள் (ஜனாதிபதி) வந்திருப்பது தங்களுக்கு சமூகநீதித் தத்துவத்தில் உள்ள அழுத்தமான உறுதியான வெளிப்பாடே ஆகும் என்று குறிப்பிட்டேன்.

இம்மாநாடு ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடு, வரலாறு படைக்கப் போகும் மாநாடு, வாயிருந்தும் ஊமையர்களாக உள்ள கோடானகோடி மக்களின் உரிமைக்குரல் கொடுக்கும் மாநாடு என்று ஜனாதிபதி முன்னிலையில் குறிப்பிட்டேன்.

இம்மாநாட்டின் தலைவர் நீதிபதி வேணுகோபால் தென்மாநில சமூகநீதி அமைப்பின் தலைவர், அதற்காக தமது வாழ்நாளை ஒப்படைத்தார். மற்ற தலைவர்கள் சமூகநீதி தடாகத்தில் பூத்த மலர்கள் _சமூகநீதிக்காகப் போராடும் தலைவர்கள் சந்திரஜித் யாதவ், சௌத்திரி பிரகாஷ் போன்றவர்கள், பெரியாரின் சமூகநீதிப் போராட்டத்தில் பூத்த மலர்களினால் காய்த்த கனிகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி வரதராஜன் அவர்கள். முன்னாள் தலைமை செயலாளர் தமிழ்ப் பெருமக்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.

பெண்கள் விடுதலை மாநாட்டில், மத்திய, மாநில அரசுக்கு மகளிர் விடுதலை மாநாடு சார்பாக மகளிர்க்கு அரசு வேலைகளில் 50 விழுக்காடு ஒதுக்கீடு தருக என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமூகநீதி மாநாட்டின் முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட கடலில்லா தஞ்சையில் கருஞ்சட்டைக் கடல் போல் கூடியிருந்த கூட்டங்களைக் கண்டு நமது இன எதிரிகள் அஞ்சி நடுங்கும் அளவுக்குக் கூடியிருந்தார்கள்.

மாநாட்டு மேடையிலே திருமணங்கள், தாலி அகற்றம் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளுடன் 24, 25.05.1987 அன்று இயக்க வரலாற்றில் சரித்திரத் திருநாட்கள் என்றே சொல்ல வேண்டும். ‘வரலாற காணாத’ மாநாடு என்றே சொன்னால் அது சம்பிரதாயமாகச் சொல்லப்படுவது அல்ல. இந்த மாநாட்டைப் பொருத்தவரை அதுதான் உண்மை. இதில் தலைவர் கலைஞர் கலந்துகொண்டு பங்கேற்றார்.

தந்தை பெரியாரின் சமூகநீதிக் கருத்துக்களை நாட்டுக்கு எடுத்துச் சொல்ல இந்தியாவின் குடியரசத் தலைவரே தெரிவித்தார் என்றால் தந்தை பெரியார் கொள்கைக்கு கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரம் அல்லவா?

அதுவும் குடியரசுத் தலைவர் இந்த மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று பார்ப்பன சக்திகள் தங்களின் அத்தனை அதிகாரச் செல்வாக்கையும் பயன்படுத்திப் பார்த்தும் படுதோல்வியைத்தான் தழுவின.

பகீரதன்

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் கழகத் தோழர்கள் பங்கேற்பதை தங்களது கட்டாயக் கடமையாகவே கருதினார்கள் என்பதை மாநாட்டுக்கு வந்து கூட்டத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டார்கள். மேடையில் பல்வேறு சமூக அமைப்பின் தலைவர்கள் வந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களில், அகமுடையார் கல்வி வளர்ச்சிக் கழகத் தலைவர் ரேடியம் பகீரதன் அவர்கள் மாநாட்டுக்கு தலைமை தாங்கி உரையாற்றினார். அம்பேத்கர் குடியரசுக் கட்சித் தலைவர் மு.சுந்தர்ராசன், கிராமணிய குல சங்க பொதுச் செயலாளர் சீனிவாசன், ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் மணவாளன், பேராசிரியர் அய்யாசாமி எஸ்.பழனிவேல் (பார்க்கவ குல சங்கம்) பி.ஏ., ஆரோக்கியசாமி (தாழ்த்தப்பட்ட கிருத்துவ சங்கம்), சாஸ்திரி வெங்கட்ராமன் (முக்குலத்தோர்), ஜானகிராமன் (துளுவ வேளாளர் சங்கம்), அரப்பா (தேவர் பேரவை), பத்மனாபன் (சலவைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம்), பாலகிருஷ்ணன் (அகில இந்திய ரயில்வே பிற்படுத்தப்பட்டோர் கழகம்), ஆர்.அருணாசலம் (அரசு ஊழியர் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு), காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி ரமணிபாய், தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவர் டாக்டர் எம்.வெங்கிடசாமி உள்ளிட்டோர் பெருந்திரளாகக் கலந்துகொண்டார்கள்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் அலட்சியங்காட்டும் டில்லிக்கு நமது கொதிப்பை உணர்த்த ரயில் மறியல் கிளர்ச்சி நடத்தப்பட்டது. 30.05.1987 அன்று விழுப்புரத்தில் நடந்த ரயில் மறியல் விளக்கக் கூட்டத்தில் விளக்கி உரையாற்றினேன்.

“சிங்கள அரசு திட்டமிட்டு இன்னும் 2 நாளில் தமிழர்களை அழித்துவிட நினைக்கும்பொழுது ராஜிவ்காந்தி அரசு சும்மா இருக்கலாமா? ரயிலை நிறுத்த வேண்டும் என்பது அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல; அல்லது சட்டம்  ஒழுங்கைக் குலைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தமிழர்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள் என்பதைக் காட்ட வேண்டும். மத்திய அரசை விரைந்து செயல்பட வைக்க வேண்டும் என்பதற்காக’’ என்று எடுத்து விளக்கினேன். மக்கள் கடல்போல் கலந்துகொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து ஜூன் முதல் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் பயணத்தைக் கைவிடுக என்றும், பயணத்தை தவிர்த்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நமது கிளர்ச்சிக்கு ஒத்துழைப்பைக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம்.

01.06.1987 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் சென்று ரயில் மறியல் செய்து நான் 19ஆவது முறையாக கைதானேன். என்னுடன் 50 தோழர்களும் மறியல் செய்து கைதானார்கள்.

என்னுடைய துணைவியார் திருமதி மோகனா, திருமதி சொர்ணா ரங்கநாதன் தலைமையில் பெண்கள் அணியில் எழும்பூரிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் மறியலுக்கு சென்றபோது கைது செய்யப்பட்டார்கள். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ரயில் மறியல் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்று கைதானார்கள். இந்தப் போராட்டம் 19 ரயில்கள் முன் மறியல் அணி அணியாகக் கைதானார்கள்.

பட்டுக்கோட்டை

சி.நா.விஸ்வநாதன்

முதுப்பெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை இயக்க அடி நாட்களிலிருந்து நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் வழி நின்று அவரது மறைவுக்குப் பின்னரும் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், இறுதி மூச்சடங்கும் வரை சுயமரியாதை வீரராகவே ஒரே தலைமை, ஒரே கொள்கை, ஒரே கழகம் என்று ஏற்றுக் கொண்டு கட்டுப்பாட்டோடு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த கழக வீரர் அய்யா பட்டுக்கோட்டை மானமிகு சி.நா.‘விசுவம்’ (விஸ்வநாதன்) அவர்கள் 07.06.1987 அன்று காலமானதைக் கேட்டு 08.06.1987 அன்று ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தேன். முழுமையக சில மாதங்கள் அவர் நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் படுத்த படுக்கை நிலையில் அவர் இறக்க நேரிட்டது மிகவும் வருத்தத்திற்கு வேதனையுள்ளாக்கியது.

தந்தை பெரியார் அவர்கள் பெரியவர் ‘விசுவம்’ அவர்களை திராவிடர் கழக மாநில அமைப்பாளராகவும் நியமித்தார்கள். தளபதி அழகிரி போன்றோரிடம் பல ஆண்டுகள் நெருக்கமாகப் பழகியவர் என்று அதே இரங்கல் அறிக்கையில் தெரிவித்து இருந்தேன்.

16.06.1987 அன்று மன்னை வடச்சேரியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் அய்யா சிலையை திறந்துவைத்து உரையாற்றினேன். அப்போது, அய்யா அவர்கள் எங்கு சென்றாலும் அங்கு கல்லடிபட்டார், சொல்லடிபட்டார், தாங்கொண்ணாத எதிர்ப்பைச் சந்தித்தார். ஆனால், இப்போது நீங்கள் இது ஒரு ‘மாநாடோ’ என்று வியக்கக்கூடிய வண்ணம், நீங்கள் சுற்று வட்டாரங்களிலிருந்து எல்லா கட்சியிலிருந்தும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டும் இங்கே குழுமியிருக்கிறீர்கள். பெரிய மாபெரும் திருவிழா போல இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அய்யா அவர்கள் 1932லே சோவியத் ரஷ்யாவுக்குச் சென்றபோது அங்கே அவர்கள் எழுதிய குறிப்புகள் இன்றைக்கு அங்கு ஆய்வு செய்யப்பட்டு, ஆராய்ச்சி செய்யப்பட்டு சோவியத் ரஷ்யாவிலே நூல்களாக வந்திருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களிலே தந்தை பெரியாரைப் பற்றி ஆய்வுகள் நடக்கின்றன என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். இதுதான் பெரியார் பெற்ற வெற்றிகளிலே மிகப்பெரிய வெற்றி. மனித குலத்திலே மாற்றான் கருத்தையும் மதிக்கும் பண்பாடு இருக்கிறதே அது மிகுந்த ஆழமான பண்பாடு என்று குறிப்பிட்டேன்.

சிங்கப்பூர் செகதீசன் அவர்களது மூத்த சகோதரர் மா.காசிநாதன் அவர்களுடைய செல்வன் எழிலன்_விஜயா ஆகியோர்களுடைய வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா நிகழ்ச்சி டாக்டர் கலைஞர் தலைமையில் என் முன்னிலையிலும் நடைபெற்றது. 24.06.1987 அன்று மாலை 6 மணிக்கு தஞ்சை மாவட்டம் திருவாரூக்கு அருகிலுள்ள ஆலத்தம்பாடியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அய்யா அவர்கள் காலத்திலிருந்து இன்றைக்கு திருமணத்தை நடத்துகின்றவரைக்கும் அவர்களுடைய குடும்பம் சுயமரியாதைக்காரர்களுடைய குடும்பமாகவே வாழ்ந்து கொண்டு வருகின்ற குடும்பம் என்று குறிப்பிட்டேன்.

28.06.1987 அன்று காஞ்சி ரெயில்வே சாலை, அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் கழக மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் மானமிகு வேல் சோமசுந்தரம் அவர்களது இல்ல மண விழா சிறப்புடன் நடைபெற்றது. மணமக்கள் ராசராசனுக்கும் சந்திரிக்காவிற்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறி மணவிழா நடந்தது.

வேல் சோமசுந்தரம்

திரு வேல்.சோமசுந்தரம் அவர்கள் தந்தை பெரியாரவர்கள் பால் பற்றுக் கொண்டவர் என்பது மாத்திரமல்ல _ எங்கள் இயக்கம் நடத்திய, நடத்துகின்ற எந்த போராட்டமாக இருந்தாலும் அதிலே தவறாமல் கலந்து கொள்ளக்கூடியவர்.

நீண்ட வழிநடைப் பயணம் என்றாலும் கூட, அறுபதைத் தாண்டியும் இந்த வயதிலும் அந்தப் பிரச்சாரத்தைத் தங்கு தடை இல்லாமல் செய்யக் கூடியவர் என்று அன்று எனது உரையில் குறிப்பிட்டேன்.

 ஆளவந்தார்

பெரியார் பெருந்தொண்டர் திருச்சி சி.ஆளவந்தார்_பாப்பம்மாள் ஆகியோரது இளைய மகள் செல்வி கனிமொழி _செங்கற்பட்டு (அண்ணா மாவட்டம்) மதுராந்தகத்தை அடுத்த அச்சரப்பாக்கம் திருவாளர் எல்லா (பிள்ளை) _ சக்குபாய் ஆகியோரது இளைய மகன் செல்வன் பார்த்தசாரதி ஆகியோரது வாழ்க்கை ஒப்பந்த விழா 01.07.1987 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் விழாவிற்கு முன்னிலை வகித்தார்கள். மணமக்களுக்கு ஒப்பந்த உறுதிமொழி கூறி மணவிழாவினை நடத்தி வைத்தேன்.

கோவை மாவட்டக் கமிட்டிக் கூட்டம் 08.07.1987 மாலை 5.30 மணிக்கு கோவை ‘வசந்தம் டிம்பர் மார்ட்’டில் நடைபெற்ற இக்கமிட்டிக் கூட்டத்திற்கு நான் தலைமை வகித்தேன். மாவட்டத் தலைவர் வசந்தம் கு.இராமச்சந்திரன் முன்மொழிய, கோவை மாவட்ட தி.க. இளைஞரணி தலைவர் குனியமுத்தூர் கோ.செல்வம் வழிமொழிந்தார்.

நான் உரையாற்றும்போது கு.இராமகிருஷ்ணன் அவர்கள் ஏதோ ஒருவரின் வில்லுக்கு அம்பாகப் பலியாகிவிட்டார் என்பதை பரிதாப உணர்ச்சியோடு கூறி, கழகத்திற்கு கட்டுப்பாடே அவசியம் என்றும், கட்டுப்பாடு மீறுவோர் மீது தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது என்று குறிப்பிட்டேன்.

25.07.1987 அன்று கீழத்தஞ்சை மாவட்டம் கீழ்வேளூர் திராவிடர் விவசாய தொழிலாளர் கழக மாநாடு நடைபெற்றது. மிகப் பெரிய அளவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினேன். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நான் மாநாட்டில் உரையாற்றும்போது, தஞ்சை மாவட்டம்தான் தமிழகத்தினுடைய நெற்களஞ்சியமென்று ஒரு காலத்திலே புகழப்பட்ட மாவட்டம். இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, பக்கத்து மாவட்டத்திலே பட்டினி கிடக்கிறவர்களுக்கும்கூட வாரி வாரி வழங்கிய நெற்களஞ்சியம் இந்த மாவட்டம்.

ஆனால், இன்று எப்படியிருக்கிறது என்று சொன்னால், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினி கிடக்கக் கூடிய நிலை குடிக்கக்கூட நீர் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்க அவல நிலை. இவைகளைத்தான் நாம் பார்க்கின்றோம்.

இரண்டு மூன்று ஆண்டுகளக்கு முன்னால் இதே தஞ்சை மாவட்டத்திலே திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன் காவிரி நீருக்காக என்று போராட்டத்தை அறிவித்தோம். அன்றைக்கு ஏறத்தாழ 1000 தோழர்களுக்கு மேலாக கைது செய்யப்பட்டார்கள். தாய்மார்கள் மட்டும் திருவாரூரிலே ஏறத்தாழ 1000 பேர்களுக்கு மேல் வந்தார்கள். அந்தப் போராட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்றது.

ஈழத்தமிழர் பிரச்சினைக்காக பேச்சு வார்த்தை நடத்திட இந்திய அரசு சமாதான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நேரத்தில் நான் திருவாரூரில் 25.07.1987 அன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்தேன். அப்போது செய்தியாளர்கள் என்னைச் சந்தித்து ஈழத்தமிழர்கள் தொடர்பான கேள்விகளை கேட்டார்கள் அப்பொது அளித்த பதில்கள் வருமாறு:

கேள்வி: பிரபாகரன் டெல்லி சென்றுள்ளரே அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் பதில் அளிக்கும் போது விடுதலைப் புலிகளின் கோரிக்கையான தமிழ் ஈழ விடுதலையை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இந்த சூழ்நிலையில் இந்திய அரசே பொறுப்பை ஏற்று மூன்று ஹெலிகாப்டர் விமானங்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி, தம்பி பிரபாகரனும், அவரைச் சார்ந்த பிரதிநிதிகளையும், பாதுக்காப்புடன் அழைத்துச் சென்று சமாதானம் பேச்சு நடத்தி வருகிறார்கள். இது நமது கோரிக்கையின் வெற்றி முனையாக தெரிகிறது.

தம்பி பிரபாகரன் தனது நிலைமையை விளக்கச் சென்றுள்ளார். இதில் ‘சரணாகதி’ எதுவும் இல்லை. தம்பி இதுப்பற்றி தெளிவாக பேட்டி அளித்து உள்ளார்.

எந்த பேச்சு வார்த்தையானதும் அடிப்படை கொள்கை மாறாமல், ஒரே தமிழ்ப்பகுதி, அதாவது தமிழ்ப்பிரதேசம் என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும் என்பது, அரசுக்கு தம்பி பிரபாகரன் விதித்த மூன்று நிபந்தனைகளில் ஒன்று இந்த நடைமுறை நிலைமையிலிருந்து விடுதலைப் புலிகளின் தளபதி தம்பி பிரபாகரன் மாறமாட்டார்கள். யார் விரித்த வலையிலும் விழுந்து விடமாட்டார்.

ஜெயவர்த்தனாவின் புதிய சமரச யோசனைக்கு, சக்தி போன்ற புத்த பிக்குகளும் பண்டார நாயாகவும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலைமைகளைப் புரிந்து நம்மைவிட எச்சரிக்கையாக செயல்படுவதில் வாய்ப்புக்கு தக்கப்படி நடந்து கொள்வதில் விடுதலைப் புலிகள் வல்லவர்கள் என்று நம்பலாம் என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தேன்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் ஒரு துரோக ஒப்பந்தத்தை இயற்றியது. இதனை, கண்டித்து, ராஜீவ் _ ஜெயவர்த்தனா துரோக ஒப்பந்த நிலையை நாடெங்கும் தீவைத்துக் கொளுத்தும் போராட்டத்தை 02.08.1987 அன்று என்தலைமையில் நடைபெற்றது. அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு கழகத் தோழர்களும் பொதுமக்களும் ஏராளமான அளவில் திரண்டு இந்த போராட்டத்தில் நான் உரையாற்றும்போது தமிழர்கட்கு துரோகம் இழைக்கும் ஒப்பந்தம் சிங்கள ராணுவத்தால் புலிகளின் ஆயுதங்களைப் பறிக்க முடியவில்லை என்பதால் இந்திய இராணுவத்தைப் பயன்படுத்தி அதைச் செய்து முடிக்க ஜெயவர்த்தனா திட்டம் தீட்டினார். அதற்கு ராஜீவ் உடைந்தையானார்.

வடக்கு _ கிழக்கு ஒரே மாநிலமாகிவிட்டது என்பது மோசடி ஒப்பந்தத்தில் இதை ஒரு நிர்வாகப் பிரிவு என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை விளக்கி எடுத்துரைக்கும் ஆசிரியர் கி.வீரமணி

தமிழ் ஆட்சி மொழி என்றும் உறுதியாகக் கூறப்படவிலை. சிங்களம் தான் ஆட்சி மொழி என்று கூறிவிட்டு, தமிழும் சிங்களமும் கூட ஆட்சி மொழியாக இருக்கும் என்கிறார்கள்.

இந்திய ராணுவத்தைவிட்டு புலிகளிடம் மோதவிட்டு அதன்மூலம் தமிழ் நாட்டில் புலிகளுக்கு இருக்கும் ஆதரவை குறைத்துவிட ஜெயவர்த்தனா திட்டம் தீட்டினார் என்று அந்தக் கூட்டத்தில் எடுத்து விளக்கினேன். உடனே அனைவரும் உணர்ச்சி முழக்கங்களோடு ஒப்பந்தத்திற்குத் தீ வைத்தனர். இந்த ஒப்பந்த எரிப்புப் போராட்டத்தில், என்னுடன் காமராசர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.கே.டி.சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். (பிரபாகரனுக்கு ஏதோ நெருக்கமானவர்களைக் காட்டி அரசியல் செய்பவர் பலர் அப்போது எங்கிருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.)

06.08.1987 அன்று பெங்களூரில் நடைபெற்ற திராவிடர் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு அறிவுரை வழங்கினேன். பெங்களூரில் ராஜீவ்காந்தி_ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எரித்தது மிக எழுச்சியாக இருந்தது என்பதை விளக்கி உரையாற்றினேன்.

ராஜீவ்காந்தி

புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவரும் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு உறுப்பினரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும் கழகக் கட்டுப்பாட்டின் இலக்கணமாகவும், பொதுத் தொண்டின் பாடமாகவும் விளங்கி, காரைக்காலில் செல்வாக்கு மிக்க பிரமுகராகத் திகழ்ந்த சுயமரியாதை வீரர் காரை சி.மு.சிவம் அவர்கள் 17.08.1987 அன்று அவர்கள் மறைவு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்ததியது.

சி.மு.சிவம்

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் எந்த நிகழ்ச்சிக்கும் அவர்கள் தவறாது வருகை தரக்கூடியவர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலங்களிலும், நம் காலத்திலும் கழகம் நடத்தும் போராட்டங்களில் எல்லாம் பங்கு கொள்ளக்கூடிய இந்த பெரியார் பெருந்தொண்டரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று உள்ள நெகிழ்வுடன்  குறிப்பிட்டேன்.

                                          (நினைவுகள் நீளும்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *