சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

ஜூன் 01-15 2019

பிறப்பு: 01.06.1888

தந்தை பெரியாரின் தலைமையை ஏற்று சுயமரியாதை இயக்கத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்டார்.

1929-இல் செங்கற்பட்டில் கூடிய சுயமரியாதை மாகாண மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் துணைத் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் நாள் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத வாலிபர் மாநாட்டுக்கு (18.2.1929) தலைமை வகித்து சங்கநாதம் செய்தார் பன்னீர்செல்வம். தஞ்சாவூர் மாவட்டத் தலைவராக (District Board) இருமுறை இருந்து அரும்பணியாற்றினார்.

அவர் அந்தப் பொறுப்பில் இருந்தபோதுதான் திருவையாற்றில் பார்ப்பனர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட சமஸ்கிருதக் கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்து தமிழில் புலவர் படிப்புக்கும் வழி செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசாமடம், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் இருந்த விடுதிகளைச் சீர்திருத்தி, பார்ப்பனர் அல்லாத மாணவர்களும் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார். அந்தக் காலகட்டத்தில் இந்த இரு விடுதிகளும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்கள் தங்கிப் படித்து கல்வி பெறும் நல்வாய்ப்பினைக் கொடுத்தது.

நீதிக்கட்சி அமைச்சரவையில் அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். தஞ்சாவூர் நகராட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். நீதிக்கட்சி தோற்று பெரிய நெருக்கடிக்கு ஆளானபோது, கட்சிக்குப் புதிய தலைவர் தேவை அதுவும் பெரியார்தான் அதற்குத் தகுதியானவர் என்று கூறி 28.11.1938-இல் கூடிய நீதிக்கட்சிக் கூட்டத்தில் முத்தையா செட்டியார் முன்மொழிய, அதனை வழிமொழிந்தவர் செல்வம் ஆவார்.

இங்கிலாந்தில் உள்ள இந்திய அமைச்சருக்கு ஆலோசனைக் குழு உறுப்பினராக செல்வம் தேர்வு செய்யப்பட்டார். அவர் சென்ற அனிபா விமானம் ஓமான் கடலில் விழுந்தது. அரிய செல்வத்தை நாடு பறிகொடுத்தது! (வயது 52).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *