இந்து அறநிலையத் துறை என்பது கோயிலில் பல பார்ப்பன பெருச்சாளிகள் கொள்ளையடித்துக் கொழுத்து வந்ததைத் தடுக்கவே, நீதிக்கட்சி அரசின் முதல் அமைச்சர் பனகால் அரசரால், பார்ப்பனர்களது பலத்த எதிர்ப்பையும் மீறி _ கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும்.
1) கோயில் சொத்துக்களைப் பராமரிக்கவும், கொள்ளை போகாமல் தடுத்து, சரியான வழியில் செலவழிக்கப்படுகிறதா என்று ஆராய்ந்து தணிக்கை செய்யும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட சட்டமே தவிர, அவ்விலாகாவின் அதிகாரிகள் பூஜை, புனஸ்காரம் செய்யவோ, இந்து மதப் பிரச்சாரம் செய்யவோ, இந்து மத சடங்குகளை வளர்த்து பக்தியைப் பரப்புவதற்கோ கொண்டு வரப்பட்ட சட்டம் அல்ல; அதுபோது நடந்த விவாதங்கள் ஆவணங்களாக உள்ளன; அவை தெளிவுபடுத்தும்.
2) அது மட்டுமல்லாமல், தற்போதுள்ள இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின்படி, முகவாண்மை _ பீடிகை Prearble உட்பட தெரிவிப்பது, இந்திய அரசு _ மத்திய _ மாநில அரசுகள் _ மதச் சார்பற்ற அரசுகள்(Secular State)என்பதாகும்.
3) மேலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) பிரிவு ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள அடிப்படைக் கடமைகள் பற்றிக் கூறுகையில், ஒவ்வொருவரும் அறிவியல் மனப்பான்மையையும், கேள்வி கேட்டு ஆராயும் தன்மையையும், மனிதநேயத்தையும், சீர்திருத்தத்தையும் வளர்த்துப் பெருக்க வேண்டும் என்று திட்டவட்டமாக வரையறுத்துள்ளது..
மதச்சார்பற்ற தன்மையை அலட்சியப்படுத்திய அதிகார துஷ்பிரயோகம்
இதன்படி, மழைவேண்டி வருணஜெபம் அரசின் இலாகா செலவில் _ உத்தரவுப்படி _ யாகம், பூஜை, அமிர்தவர்ஷிணி ராக கச்சேரி முதலியன பாடி பார்ப்பன புரோகித வர்க்கம் கொழுத்து வளர வாய்ப்பளிப்பது எவ்வகையில் நியாயம்? அறியாமை பரப்புதல் அல்லவா?
1. மதச் சார்பற்ற தன்மையை அலட்சியப்படுத்திய அதிகார துஷ்பிரயோகம்.
2. விஞ்ஞான அறிவையே கொச்சைப்படுத்தி 21ஆம் நூற்றாண்டில் _ இப்படி நடத்த அதுவும் அரசின் இலாகாவே செய்வது மிகவும் கேவலமானது அல்லவா?
மழை தேவை என்பதில் எவருக்கும் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.
அதற்கு அறிவியல் அணுகுமுறைகள் பல உள்ளனவே.
செயற்கை மழையை வரவழைக்கலாமே!
முதலாவது மழை நீர் சேகரித்து, நிலத்தடி நீர் நிலைகளில் தூர் வாருவது, ஆக்கிரமிப்புகளைத் தடுத்து ஏரிகள் காணாமற் போவதைத் தடுத்து _ காப்பாற்றுதல், காடுகளை அழித்தல், மரங்களை வெட்டுதல், வெப்பசலனத்தைத் தடுத்தல் போன்ற பணிகளில் தமிழக அரசு ஈடுபாடு கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதும் _ முன்பு 1970களில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சென்னையில் செயற்கை மழையை, விமானம் மூலம் பனிக்கட்டிகளைத் தூவி, வரவழைத்தாரே அதுபோல செய்யலாம். மற்ற மேல் நாடுகளில் செயற்கை மழை வரவழைக்கும் நவீன அறிவியல் முறைகளை உலக வங்கி உதவியுடன் கேட்டுப் பெறலாமே!
குழந்தை இல்லை என்ற குறையுடைய திருமணமானோர் முன்பெல்லாம் அரச மரத்தடிப் பிள்ளையாரை வேண்டுவர்; இராமேசுவரம் சென்று வேண்டி திரும்புவர். ஆனால் அவர்கள் இப்போது எங்கெங்கும் உள்ள மருத்துவ சாதனையான _ கருத்தரிப்பு மய்யங்களுக்கு (Fertility Centres) சென்று டாக்டரைத் தானே நாடுகின்றனர்? அப்படியிருக்கையில் மழை வேண்டி யாகம், பூஜை, அமிர்தவர்ஷிணி ராக ஆலாபனம் செய்து மழையை வரவழைப்போம் என்பது மடமையின் வெளிச்சம் அல்லவா?
(முன்பு குன்னக்குடி வைத்தியநாதன் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில் குளத்தில் முழங்கால் தண்ணீரில் அமிர்தவர்ஷிணி ராகம் வாசித்தே மழை பெய்யாத நிலை _ மறந்துவிட்டதா?)
இதுவரை பல கோவில்களில் நடந்த யாகத்தால் மழை பெய்ததா? வடபழனி முருகன் கோயில் படத்தைக் காண்க:
இன்னும் இராமேசுவரம் உட்பட பல ஊர்களில் நடந்த யாகங்களால் பெய்த மழையின் அளவு என்ன?
யாகம் ஏற்படுத்திய பலன் என்ன?
தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத் தினார்களா என்று அரசியல் கட்சியினரைக் கேட்பது போல, யாகம் ஏற்படுத்திய பலன் என்ன என்று கேட்டுள்ளார்களா? காரணம் தந்தை பெரியார் சொன்னதுபோல “பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்“ என்பது சரிதானே!
யாகம் _ பூஜை _ சங்கீத கச்சேரி எல்லாம் அவரவர் தனிப்பட்ட முறையில் செய்யலாமே தவிர, (அதுவும் மூடநம்பிக்கை என்பது ஒருபுறமிருந்தாலும்) அரசு செலவில், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கெதிராக இப்படி நடைபெறுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
துள்ளிக் குதிக்கும் துர்ப்புத்தியாளர்கள், புரிந்த நடு நிலையாளர்கள் சிந்திக்க வேண்டாமா?
பூஜையினால், யாகத்தினால் மழையை வரவழைக்க முடியும் என்றால் வானிலை ஆய்வுத் துறையே தேவையில்லை. இந்த “பிரகஸ்பதிகளையே” அதிகாரிகளாக்கிக் கொழுக்க வைக்கலாமே!
அந்தோ மூடத்தனத்தின் முடைநாற்றம்?
– கி.வீரமணி,
ஆசிரியர்