எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (35) : தாழ்த்தப்பட்டோருக்கு தந்தை பெரியாரின் தொண்டு!

மே 01-15 2019

 நேயன்

இந்தியாவைப் பீடித்திருக்கும் பெருநோய்களில் முதன்மையானது, தீண்டாமையென்பதைச் சகலரும் ஒப்புக் கொள்கின்றனர். இதை ஒழிப்பதென்றால், ஷெட்யூல் வகுப்பினரின் பொருளாதார நிலை உயர வேண்டும். அவர்கள் யாவருக்கும் கல்வி வசதியளிக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் விசேஷ உரிமையும் பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும். இவைகள் இல்லாத எந்த ஒரு அரசியல் திட்டமும் சர்க்காரின் அங்கீகாரத்தைப் பெற முடியாது.                     

  (‘விடுதலை’ 25.4.1945)

காங்கிரஸ் பதவி ஏற்றதும் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்கின்ற ஜாதி, ஆணவம், கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். பிராமணன் ஓட்டல், பிராமணன் சாப்பிடும், பிரவேசிக்கும் இடம் என்பவைகள் ஒழிக்கப்பட வேண்டும். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன், ஜாதி இந்து, ஜாதி குறைவான இந்து என்பன சாதியவைகள் அரசாங்க ஆதாரங்களில் நடைமுறைகளில் இருக்க இடம் வைக்கக் கூடாது. 

  (‘குடிஅரசு’ 6.4.1946)

எந்த ஒரு மதம் ஒரு மனிதனை, பிராமணனாகவும் ஒரு மனிதனைச் சூத்திரனாகவும் அதாவது தொழிலாளியாகவும், பாட்டாளியாகவும் பறையனாகவும் உண்டு பண்ணிற்றோ அந்த மதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன்.  

(‘குடிஅரசு’ 6.7.1946)

தீண்டாமை பழக்கத்தைக் கிரிமினல் குற்றமாகக் கூடிய சட்டத்தை நிறைவேற்றினாலொழிய அதை அழிக்க முடியாது என்பது உறுதி.

                                                (‘விடுதலை’ 12.9.1946)

பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன் என்று ஒரு ஜாதியும் இருப்பதும், ஹோட்டலுக்குள் ஒரு ஜாதிக்காரன் போகக் கூடாது என்பதையும் பார்த்து வெள்ளைக்காரன் சிரிக்க மாட்டானா?         

       (‘குடிஅரசு’ 9.10.1946)

மனித வர்க்கத்திலே பறையனோ சூத்திரனோ சக்கிலியோ, பிராமணனோ, இழிஜாதியானோ இருக்கக் கூடாது.

(‘குடிஅரசு’ 12.10.1946)

கிராமங்களில் ஆரியர், உயர்ஜாதிக்காரர்கள் என்று கூறப்படுவோர் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்யும் வஞ்சகத்தை உடனடியாக ஒழித்துத் தீரவேண்டுவது நாட்டின் நலன் கருதுவோர் அனைவரின் கடமையாகும்.

                                                (‘விடுதலை’ 5.7.1947)

திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.        

          (‘விடுதலை’ 8.7.1947)

எந்த ஒரு சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டாதவர்கள் இருக்கிறார்களோ, அந்த சமூகத்தை முற்போக்கான ஒரு சமூகம் என்று யாரும் கருதமாட்டார்கள்.

                                    (‘விடுதலை’ 23.12.1947)

திராவிடர் கழகம் ஆதிதிராவிடர்களுக்கும் சேர்த்து பாடுபட்டு வருவதால்தான் திராவிடர் கழகக் கூட்டங்களில் மற்ற ஜாதியினரைக் காட்டிலும் ஆதிதிராவிடர்களே அதிகப் படியாகக் காணப்படுகிறார்கள்.

                                                (‘விடுதலை’ 12.1.1948)

மற்ற நாட்டாரைப் போல பணக்காரன் -_ ஏழை என்ற தொல்லையை ஒழிப்பதற்குப் பாடுபடுவதோடு முயற்சி செய்வதோடு இந்தப் பார்ப்பான் _ பறையன் என்ற தொல்லையையும் ஒழிக்க வேண்டிய நிலைமையிலே நாம் இருக்கிறோம்.                               

  (‘விடுதலை’ 1.5.1953)

அரசமைப்புச் சட்டத்திற்கு நெருப்பு வைக்க வேண்டும். இந்தச் சட்டப்படி உலகம் உள்ள அளவும் பறையன் இருப்பான். ஆனால், பறையன் என்ற பெயரால் இருக்க மாட்டான். அரிசன் என்ற பெயரில் இருப்பான். விளக்குமாறு என்றால் என்ன? துடைப்பக்கட்டை என்றால் என்ன? உலகம் உள்ள அளவும் பார்ப்பானும் சூத்திரனும் பறையனும் இருக்க வசதி செய்யப்பட்டுள்ளது அரசமைப்புச் சட்டத்தில்.                

   (‘விடுதலை’ 13.10.1957)

இந்த 10 வருடத்தில் அரிசன் தீண்டாமை ஒழியும் என்று சொல்லிவிட்டால் காரியத்தில் நடப்பதென்ன? எந்த சேரி ஒழிந்தது? 10 வருடத்தில் எந்தப் பார்ப்பான் சேரியில் குடியிருக்கிறான்? இன்றும் பார்ப்பான் பாடுபடாமல் நெய்யும் சோறும் சாப்பிடுகிறான். இன்றும் பறையன் பாடுபட்டும் கஞ்சிக்கு வழியில்லாமல் தவிக்கிறான். இன்றும் 100க்கு 100 பார்ப்பான் படித்தவன். இன்றும் பறையன் படிக்காதவன்…          

 (‘விடுதலை’ 12.12.1957)

சேரி என்று ஒன்று இருக்கிறது. அங்குள்ள மக்கள் கீழான நிலையில் வாழ்கிறார்கள். ஏதோ அந்த இனத்தில் முன்னேற்றுகிறோம் என்று சொல்லி ‘அரிசனம்’ என்று பெயர் வைத்து ஏதோ 2 பேருக்கு உத்தியோகம் தந்துவிட்டு மற்றப்படி அந்தச் சாதித்தன்மை, கீழ் நிலைமை அப்படியே வைக்கத்தான் முயற்சி செய்கிறார்கள்.                    

        (‘விடுதலை’ 4.7.1958)

திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதே. அதாவது, எந்த மனிதனும் எனக்குக் கீழானவனல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்லன். ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே. 100க்கு 97 பேராக உள்ள மக்கள் பறையன், சூத்திரன் என்று வீட்டில் இன்று உள்ளார்கள். இங்குப் பறையனும் இருக்கக் கூடாது. இப்படிச் சொன்னால் இங்குப் பார்ப்பாரைப் பூண்டும் இருக்கக் கூடாது என்றுதான் அர்த்தம். சித்திரத்தில் வரைவதற்குக் கூட ஒரு பார்ப்பான் இருக்கக் கூடாது. பொம்மை பிடித்து வைக்கக்கூட ஒரு பறையன் இருக்கக் கூடாது. மனிதன்தான் இருக்க வேண்டும்.  

(‘விடுதலை’ 26.10.1958)

திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.                                                              

   (‘விடுதலை’ 8.7.1947)

உயர்ஜாதிக்காரன் என்பதால் பார்ப்பன இன்ஸ்பெக்டர், தாழ்த்தப்பட்ட ஜில்லா சூப்பிரண்டை பறைய சூப்பிரண்டே என்றா கூப்பிடுகிறான்? பறைய சூப்பிரண்டு, பார்ப்பான் சப் இன்ஸ்பெக்டரை, சூப்பிரண்டைக் கண்டால் தொடை தட்டி, பார்ப்பான் சலாம் போட்டுத்தானே தீர வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு கலெக்டர் வேலை கொடுக்க இருக்கிறார். சேலத்தில் இன்று தாழ்த்தப்பட்டவர்தான் கலெக்டர். இப்படிப்பட்ட காரியங்களால்தான் ஜாதியை ஒழிக்க முடியுமே ஒழிய, ஒரு ஏக்கர், அரை எக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதாலோ வீடு கட்டிக் கொடுத்து விடுவதாலோ ஜாதி ஒழிந்துவிட ஏதுவாகாது.

(‘விடுதலை’ 28.1.1964)

இன்றைய 20ஆம் நூற்றாண்டிலும் இந்திய தேசம் என்னும் காட்டுமிராண்டி சமுதாயம் நிறைந்துள்ள நாட்டில் மனிதனில் பிறவியின் பேரால் மேல் ஜாதி, கீழ் ஜாதி, பிராமணன், சூத்திரன், பறையன், முதலாம் ஜாதி, நாலாம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்கின்ற பாகுபாடும் நடப்பும் நடத்தப்படுவதும் ஆன அநீதியும், அயோக்கியத்தனங்களும் சாமி பேராலும் சாஸ்திரங்களின் பேராலும், சட்டத்தின் பேராலும் நீதியின் பேராலும் அமலில் இருந்து வருகிறது.       

  (‘விடுதலை’ 20.11.1967)

பறையன் என்று சொல்லக்கூடாது என்ற ஆரம்பித்தவன் நான்.

(‘விடுதலை’ 15.12.1964)

சேரியிலே இருக்கிற தீண்டப்படாத மக்களை மற்ற மக்கள் வாழும் இடங்களில் வாழ அனுமதிக்க வேண்டும்.

(‘விடுதலை’ 5.4.1964)

தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் 100க்கு 100 பேருக்கு (எல்லோருக்கும்) கல்வி (சலுகை)யுடன் கல்லூரிச் சலுகையும் கொடுத்துப் பட்டதாரிகளாக ஆக்கிவிட வேண்டும். அவர்களுக்கு உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டும்.

                                                (‘உண்மை’ 14.9.1970)

(தொடரும்)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *