கவிதை : பிள்ளையாரே, பேசுவீரா?

பிப்ரவரி 16-28 2019

தும்பிக்கை முகத்தோரே! பானை போலே

                தொந்திமிகப் பருத்தோரே! நானுன் மேலே

நம்பிக்கை மிகுந்தோனாய்க் கரங்கள் கூப்பி

                நயந்துமையே தலைவணங்கிப் பக்தி யோடு

கும்பிட்டு வரம்கோரப் போவ தில்லை;

                குறும்புடனே சிலகேள்வி கேட்டு உம்மை

வம்புக்கு இழுப்பதற்கே விரும்பு கின்றேன்

                வாய்திறந்தே சிலவார்த்தை பேசு வீரா?

 

தம்பிக்கே ஞானப்பழம் தன்னை அன்று

                தந்திடாமல் ஏமாற்றித் தானே தின்று

வெம்பிப்போய்ச் சிறுவயதில் ஆண்டி யாகி

                வீற்றிருக்க வைத்தவர்நீர் மலையின் மீதே!

செம்பிற்குள் கறந்துவைத்த பாலை யெல்லாம்

                சிறிதும்நீர் மிச்சமின்றிக் குடிப்பீ ராயின்

எம்பிள்ளை குட்டியெல்லாம் ஆண்டி யாகி

                எந்தமலை மீதமர்வார் கூறு வீரா?

 

பால்குடிக்கும் சேய்தனக்குப் பசியெ டுத்தால்

                பாசமுடன் தாய்மடியைப் பிடித்தி ழுக்கும்!

கால்முளைத்த வால்முளைத்த மிருக மெல்லாம்

                கன்றுமுட்டப் பால்மடியில் சுரந்த ளிக்கும்!

வேல்பிடித்த வேலனுக்கு மூத்த வேழே!

                விநாயகரே! நீருமக்குப் பசியெடுத்தால்

பால்குடிக்க யார்மடியைப் பிடித்தி ழுப்பீர்?

                பார்வதித்தாய் வருவாரா? யோசித் தீரா?

 

அருமையுடன் யார்வளர்க்கும் பிள்ளை யார்க்கும்

                ஆசையுடன் ஊட்டிவிடும் பாலும் சோறும்

மறுதினமே மலமாகச் சிறுநீ ராக

                மாறிவெளி யேறிவிடும் உண்மை பாரீர்!

பெருமையுடன் ஊர்துதிக்கும் பிள்ளை யார்நீர்

                பிரியமுடன் அருந்துவதும் அதுபோ லாகிக்

கருவறையே கழிப்பறையாய் நாறிப் போகும்

                கட்டாயம் ஏற்படுமே! சிந்தித் தீரா?-

 

தூயதமிழ் மந்திரமும், தாழ்த்தப் பட்டோர்

                தொழுவதுவும் கடவுளுக்குத் தீட்டு என்றும்,

கோயிலுக்குள் நுழைவதுவே பாவம் என்றும்

                கூறிவரும் ஓர் குலத்தோர் நாளைக்கே நீர்

வாயினிக்கப் பால்பழத்தை உண்டு விட்டு

                வாந்திபேதி தானெடுத்தே கிடப்பீ ராயின்

பாயலசி மலமெடுத்துக் கால்க ழுவிப்

                பணிவிடைகள் செய்வதற்கு ஒப்பு வாரா?

 

உற்றதொரு தெய்வமெனப் பலர்து திக்கும்

                உம்மையுமே பால்குடிக்க வைத்த தாகக்

கற்பனைக்கும் எட்டாத கதையைக் கூறிக்

                காவிகட்டித் தாடிவைத்து ஊரை ஏய்க்கும்

அற்பரது முகத்திரையைப் புதிய தொரு

                அவதாரம் எடுத்துநீரும் கிழிப்பீ ராயின்

பொற்பதங்கள் பிடித்தும்மை நித்தம் நானும்

                பூசிப்பேன் புரட்சிதன்னை நிகழ்த்து வீரா?

 

– தளவை இளங்குமரன், இலஞ்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *