Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்

டில்லியில் 5.2.2019 அன்று இடஒதுக்கீடு வழிமுறை _ முன்னுள்ள அறை கூவல்கள்’’ (Reservation Policy – Challenges Ahead)    எனும் தலைப்பிலான சமூக நீதிக் கருத்தரங்கினை சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் மன்றம் (Lawyer’s Forum for Social Justice) ஏற்பாடு செய்திருந்தது.

டில்லி நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள அரசமைப்புச் சட்ட மன்றத்தில், துணை சபாநாயகர் அரங்கில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி சமூகநீதிக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்க நிகழ்விற்கு சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் மன்றத்தின் நிர்வாக அறக்கட்டளையாளரும், உச்சநீதிமன்ற முதுநிலை வழக்குரைஞருமான சுப்பாராவ் தலைமை வகித்தார். நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி,

டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.ராஜா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் ஜெயபிரகாஷ் நாராயண் யாதவ் ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கினர். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் சமூகநீதிக்கான அறைகூவல்கள் பற்றியும், எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும், ஆழமான கருத்துச் செறிவுடன் கூடிய உரையினை ஆற்றினார்.

தலைமை தாங்கிய முதுநிலை வழக்குரைஞர் சுப்பாராவ் உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி நீதிபதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதி வழங்குவதில் காட்டி வரும் மெத்தனப் போக்கு, அக்கறை அற்ற தன்மை பற்றிய தனது நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சில், சமூக நீதித் தத்துவத்திற்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கல்வி வள்ளல் காமராசர் ஆற்றிய பங்களிப்பின் சிறப்புப்பற்றி  குறிப்பிட்டார். அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்திட தந்தை பெரியார் காரணமாக அமைந்தார். இன்று ‘பொருளாதார அடிப்படையில்’ அரசியலமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்புக்குப் புறம்பாக உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு (?) 10 விழுக்காடு இடஒதுக்கீடு கொண்டு வந்த சட்டத்தினை, ஆணையினை எதிர்த்து தி.மு.க சார்பில் முதன்முதலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுப் பேசினார்.

 

து.ராஜா எம்.பி., (சி.பி.அய்.)

நாடாளுமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து.ராஜா பேசும்பொழுது, இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை, கோரிப் பெறவேண்டியதில்லை என எழுச்சியுடன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உரையாற்றும் பொழுது பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்றார். மேலும் ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 8 லட்சம் என்பது பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெற பாதகமாகவும், உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சாதகமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ள ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சியான அணுகு முறைப்பற்றிக் கூறினார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிந்தனையாளர்கள்

தமிழர் தலைவர் தமது நிறைவுரையில் குறிப்பிட்டதாவது:

‘‘பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உரிமைக்குப் 10 ஆண்டு காலத்திற்கும் மேலாகப் போராடி பெற வேண்டியிருந்தது. ஆனால் இன்று உயர்ஜாதியினர் இடஒதுக்கீட்டிற்கு வலுவில்லாத சட்டத்திருத்தத்தினை ஒரு வாரக் காலத்தில் நடைமுறைப்படுத்தியது எப்படி? அடக்குமுறை, ஆதிக்கம் நிறைந்த அரசியல் ஆட்சியாளரான மோடியின் ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையினையே இது வெளிப்படுத்தியுள்ளது.

இடஒதுக்கீட்டைத் தொடங்கியது இன்றைய காலத்தில் அல்ல; பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வர்ண அடிப்படையில், ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது மனு _ மனுஸ்மிருதி. அந்தப் பாகுபாட்டைக் களைந்திட இன்று கோரப்படுவது நேர்மறை இடஒதுக்கீடு _ சரி செய்ய இட ஒதுக்கீடு தொடங்கியது. பாகுபாட்டைத் தொடங்கிய ஆதிக்க மனநிலை இன்றும் ஆட்சியாளரிடம் தொடர்கிறது என்பதற்கு அடையாளம்தான்  103 ஆம் அரசமைப்புச் சட்ட திருத்தமாகும் (2019). பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை உயர்ஜாதியினருக்குக் கொண்டு வரும் இந்த சட்டத்தை நீதிமன்றத்திலும் சந்திப்போம்; வீதிமன்றத்திலும் ஒடுக்கப்பட்டோரை ஒருங்கிணைத்துப் போராடுவோம்’’ என்று ஆசிரியர் அவர்கள் தமது நிறைவுரையை முடித்தார்.

கருத்தரங்க நிகழ்ச்சியினை கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு) ஒருங்கிணைத்துத் தொகுத்தளித்தார்.

நிறைவாக திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றி கூறினார்.

பல தரப்பட்டவர்களும், பெருந்திரளாகக் கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்வின் விருதாளர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பங்களிப்பு இல்லையெனில், மண்டல் பரிந்துரைகள் நடைமுறையாக்கம் காணுவது அதிகார நிலையிலேயே தடைபட்டு தாமதமாகி இருக்கும். மண்டல் பரிந்துரைகள் வெளிச்சம் காண உதவியாக  இருந்தார்

2018 ஆம் ஆண்டு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குனர் டாக்டர் சோம. இளங்கோவன் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார்.

சமுக நீதிக்கான கி.வீரமணி விருது

புதுடில்லியில் அரசமைப்புச் சட்ட மன்றத்தில்  (Constitution Club) உள்ள துணை சபாநாயகர்  (Deputy Speaker) அரங்கில் 2018 ஆம் ஆண்டுக்கான “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’’ வழங்கும் விழா நடைபெற்றது. அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் பெரியார் பன்னாட்டு மய்யம் ஒவ்வொரு ஆண்டும் “சமூகநீதிக்காகப் பாடுபட்ட சான்றோர், போராளிகள், தலைவர்களுக்கு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கி வருகிறது.

1996ஆம் ஆண்டு விருது வழங்குவது தொடங்கப்பட்டு, இதுவரை 2018 ஆம் ஆண்டுக்கான விருதுவரை மொத்தம் 10 பெருமக்களுக்கு சமூகநீதி விருது வழங்கப்பட்டுள்ளது. நாடு, மொழி, இனம் பாகுபாடு எதுவும் இன்றி, இந்தியாவில், தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மகாராட்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சார்ந்த தலைவர்களுக்கும், சிங்கப்பூர், மியான்மா, குவைத், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சமூகநீதிக்குப் பங்காற்றிய பெருமக்களுக்கும் இதுவரை விருது வழங்கப் பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான விருது மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி சமூகநீதி வழங்குவதற்கு அளப்பரிய பங்களித்த ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

புதுடில்லியில் 5.2.2019 அன்று பிற்பகல் நடைபெற்ற சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு, இந்த விருதினை 2009 ஆம் ஆண்டு வழங்கப் பெற்றவரும், கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவரும், கருநாடக மாநில அரசின் மேனாள் அட்வகேட் ஜெனரல் பேராசிரியர் ரவிவர்ம குமார் தலைமை வகித்தார்.

விருதினை நிறுவிய பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் சமூகநீதிக்கான வீரமணி விருது நிறுவப்பட்ட வரலாறு, விருது வழங்கப் படுவதன் நோக்கம்பற்றி எடுத்துக் கூறி, 2018 ஆம் ஆண்டுக்கான விருதினை பி.எஸ்.கிருஷ்ணனுக்கு வழங்கப்படுவதன் சிறப்புப்பற்றி உரையாற்றினார்.

விருது வழங்கல்

ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.  அதிகாரி பூபீந்தர்சிங் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.

2018ஆம் ஆண்டு சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை’ (K.Veeramani Award for Social Justice) பணி நிறைவு பெற்ற, மத்திய அரசின் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குப் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் விருதுக் குழுவின் சார்பாக டாக்டர் சோம.இளங்கோவன் வழங்கினார்.

பெரியாரின் இயக்கம்தான் மண்டல் குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட நாடு தழுவிய அளவில் 42 போராட்டங்களையும், 16 மாநாடுகளையும் நடத்தியது.  1990ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமரானபொழுதுதான் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

விருது மடலினையும், விருதுத் தொகையான ரூ.1 லட்சத்திற்கான வங்கி வரைவோலையும் வழங்கப்பட்டது. விருது வழங்கப்பட்டபொழுது பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் வாழ்விணையர் இருவருக்கும் சேர்த்து சிறப்பு செய்யப்பட்டது. அவர்களது மகளும் உடன் இருந்தார். விருது வழங்கப்பட்ட பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

விருது வழங்கும் நிகழ்வின் சிறப்புரையினை மத்திய அரசின் மேனாள் செயலாளரும், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் பூபீந்தர்சிங் வழங்கினார்.

தமிழர் தலைவரின் பாராட்டுரை

நிறைவாக விருது பெற்ற பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சமூகநீதிக்காக ஆற்றிய பணிபற்றி எடுத்துக்கூறி, பாராட்டித் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

அவர் தமது பாராட்டுரையில் குறிப்பிட்டதாவது:

சமூகநீதிக்கான விருதினை பெரியார் பன்னாட்டு மய்யம், என்னுடைய பெயரில் நிறுவிய நேரத்தில், நான் எனது பெயரில் விருது அமையப் பெறுவது வேண்டாம்; சமூகநீதிக்காக களம் அமைத்து 95 ஆண்டுகாலம் போராடிய தந்தை பெரியாரது பெயரில்தான் விருது அமையப் பெறவேண்டும் என அழுத்தமாக எடுத்துக் கூறினேன்.

தந்தை பெரியார் போற்றி காத்து வந்த சமூகநீதிச் சுடரை, அவர்தம் கொள்கையினை, அவரது காலத்திற்குப் பின் யார் எடுத்துச் செல்லுகிறார்கள் என்பதை உலகினர் அறிந்து கொள்வதன் பேரில் ஓர் அடையாளமாக எனது பெயரில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான டாக்டர் சோம.இளங்கோவன் மற்றும் டாக்டர் இலக்குவன்தமிழ் ஆகியோர் கூறினர். விருது பெயரில் தந்தை பெரியாரும், அவர் ஏற்றிப் பாதுகாத்திட்ட சமூகநீதிக் கொள்கையும் உள்ளடக்கம் என விளக்கமளித்தனர்.

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழாவில் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள்,  பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர் (டில்லி, 5.2.2019).

1978இல் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணியினை மண்டல் அவர்களுக்கு மத்திய அரசு வழங்கியது. நாடெங்கும் பயணம் செய்து குழுவின் தலைவர் மண்டலும், குழுவின் உறுப்பினர்களும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கருத்தறிந்து, உண்மை நிலைபற்றி ஆய்வு செய்து 1980ஆம் ஆண்டில் அறிக்கையை அளித்தனர். அரசிடம் அளிக்கப்பட்ட மண்டல் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையினைப் பிரசுரிக்க, பலவிதமான தடைகளை அதிகார வர்க்கத்தினர், அரசியல்வாதிகளில் உயர்ஜாதியினர் ஏற்படுத்தினர். பெரியாரின் இயக்கம்தான் மண்டல் குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட நாடு தழுவிய அளவில் 42 போராட்டங்களையும், 16 மாநாடுகளையும் நடத்தியது.  1990ஆம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமரானபொழுதுதான் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த சமயம் அதிகார நிலையில்  அரசின் செயலாளராக இருந்து நிலவி வந்த நடைமுறைக்கான தடைகளைக் களைந்து பரிந்துரைக்கு ஆதரவாக இருந்து சமூகநீதிக் கொள்கைபற்றிய புரிதலுடன், அவசியம் கருதி உறுதுணையாக இருந்தார்- இந்த நிகழ்வின் விருதாளர்  பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பங்களிப்பு இல்லையெனில், மண்டல் பரிந்துரைகள் நடைமுறையாக்கம் காணுவது அதிகார நிலையிலேயே தடைபட்டு தாமதமாகி இருக்கும். மண்டல் பரிந்துரைகள் வெளிச்சம் காண உதவியாக  இருந்தார் _ பணி நிறைவு பெற்ற நிலையிலும் சமூகநீதிப் பணிகளில் அக்கறைகாட்டிப் பாடுபட்டு வருபவர் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி வகுப்பினர் மேம்பாட்டுக்காக இன்றளவும் பாடுபட்டு வருகிறார். சமூகநீதிக்கான அறைகூவல்கள் எழும்பொழுதெல்லாம் உரிய வகையில் விளக்கமளித்து, தனது அதிகார வர்க்கப் பணியில் கிடைக்கப் பெற்ற அனுபவங்கள் வாயிலாக உண்மை நிலையினை உணர்த்தி வருகிறார். தற்பொழுது மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள உயர்ஜாதியினரில் ஏழை(?)களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடுபற்றிய கருத்தினையும் கூறி, இட ஒதுக்கீட்டுக் கோட்பாடு ஒடுக்கப்பட்டோருக்கான கோட்பாடு; உயர்ஜாதியினருக்கானது அல்ல என்று குரல் கொடுத்து வருகிறார். இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டுவரும் பி.எஸ்.கிருஷ்ணன் முற்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர். அப்படிப்பட்டவரின் ஓய்வு என்பது தனது அரசுப் பணிக்குத்தான், தான் குரல் கொடுத்துவரும் சமூகநீதிக் கொள்கைக்கு அல்ல என்பதாகும். உடலால் சற்று முதுநிலை அடைந்தாலும், உள்ளத்தால் இளைஞரைப் போல சமூகநீதிக்காகப் பணியாற்றிவரும் பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களைப் போற்றிப் பாராட்டுகிறோம். அவரது பணி தொடர்க என வாழ்த்துகிறோம். இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

கலந்து கொண்டோர்

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்படும் விழா விற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

டி.கே.எஸ்.இளங்கோவன், து.ராஜா, அரிபிரசாத் மற்றும் சமூகநீதிக்கான வழக்குரைஞர் சங்கத்தின் நிர்வாக அறக்கட்டளையாளர் _ உயர்நீதிமன்ற முதுநிலை வழக்குரைஞர் சுப்பாராவ், வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், மத்திய அரசின் மேனாள் உயரதிகாரிகள், டில்லி மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியப் பெருமக்கள், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த திராவிடர் கழக வழக்குரைஞர்கள், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் எனப் பலதரப்பட்டோரும் வருகை தந்திருந்தனர். வடமாநிலத்தில், டில்லி தலைநகரில் சமூகநீதிபற்றிய ஒரு விழிப்புணர்வு, இன்றைய பொருத்தப்பாடுபற்றிய விளக்கும் நிகழ்ச்சியாக சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கிடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சமூகநீதி விருதாளரும், செயல்பாட்டாளருமான கோ.கருணாநிதி நன்றி கூறி நிறைவு செய்தார்.