(இயக்க வரலாறான தன்வரலாறு – 210)
“இணையில்லா இருவேந்தர்கள்”

14.04.1984 அன்று சென்னையில் நடத்தப்பட்ட தமிழர்களின் பேரணியில் சுமார் 5 லட்சம் மக்கள் திரண்டனர். உணர்வுபூர்வமாகவும் கூடிய கூட்டத்தினர் உணர்ச்சி மயமாகவும் இருந்தனர்.
17.04.1984 அன்று மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் அதிருப்தி அடைந்து 260 மாணவ, மாணவிகள் ‘ரிட்’ மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்டனர். அதன் மீது சென்னை உயர்நீதிமன்றம் ‘டிவிஷன் பெஞ்ச்’ _ இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதனை எதிர்த்து தமிழக அரசு ‘சுப்ரீம் கோர்ட் அப்பீலு’க்குப் போக முடிவு செய்திருப்பதை நான் கண்டித்து “மருத்துவக் கல்லூரி தீர்ப்பு; சுப்ரீம் கோர்ட் அப்பீலா?’’ என்ற தலைப்பில் முக்கிய அறிக்கையை எழுதி கண்டித்து இருந்தேன்.
ராமகோபாலன் என்ற பார்ப்பனர் சில வாரங்களுக்கு முன் திருச்சியில் பேசிய “தரங்கெட்ட’’ பேச்சினைக் கண்டித்து, கலைஞர் அவர்கள்கூட அதே திருச்சியில் 08.04.1984 அன்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்.சின் ஆதரவு, இந்து முன்னணியின் ஆதரவு தமக்கு கிடைக்கட்டும் என்று கருதி ஆளுங்கட்சி நினைத்தால் அதைவிட யானை அதன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட கதை வேறு இருக்க முடியாது! என்பதனை உணர்ந்த “மதவெறித்தனமான பேச்சு அரசு நடவடிக்கை என்ன?’’ என்று கேட்டு 18.04.1984 அன்று முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.
எடுத்துக்காட்டாக 18.04.1984 அன்று அ.தி.மு.க. ஆட்சியின் அவல நடவடிக்கைகளின் மற்றோர் அங்கமாக _ சென்னை மாவட்ட நூலகங்களுக்கும் ‘விடுதலை’ நாளேடு நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட மத்திய நிர்வகிப்பில் உள்ள 103 கிளை நூலகங்களுக்கு 01.04.1984 முதல் ‘விடுதலை’யை நிறுத்த சொல்லி 17ஆம் தேதி ‘விடுதலை’ மேலாளருக்கு தகவல் கடிதம் கிடைத்தது. இக்கடிதத்தில் நூலகர் கையெழுத்திட்ட தேதி 12.04.1984 அரசுத் துறையின் ‘சிகப்பு நாடா’ மெத்தனத்திற்கு எடுத்துக்காட்டான இக்கடிதத்தில்,
“நூலகங்களுக்கு ‘விடுதலை’ விநியோகிக்க ஆணை வழங்கப்படவில்லை; எனவே, உடனடியாக நிறுத்துக!’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் ‘விடுதலை’ அனுப்பிடவில்லை.
ஏற்கெனவே தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் அரசுத் துறை நூலகங்களில் ‘விடுதலை’ நிறுத்தப்பட்டது; இந்த இழிசெயலை எதிர்த்து வாசகர்களும், தோழர்களும் ஆள்வோருக்கு குமுறல் கடிதங்கள் எழுதியுள்ளனர்; எதிர்த்து கையெழுத்தியக்கங்களும் நடக்கின்றன என்பதை ‘விடுதலை’யில் எடுத்துக்காட்டியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், தமிழ்நாடு சட்டமன்றத்தில் 11.04.1984 அன்று நடந்த இந்து அறநிலையத் துறை மீதான மான்யக் கோரிக்கை விவாதத்தின்போது, கீழ்க்கண்டவாறு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
“பழனி கோயிலில் உள்ள மூலவராக பழனி ஆண்டவர் சிலை, பல ஆண்டுகாலமாக கரைந்து கொண்டே வருகிறது. இதைத் தடுப்பதற்காக ஆலோசனை கூற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செங்கோட்டுவேலன் அவர்கள் தலைமையில், அரசு மற்றொரு கமிட்டியை நியமிக்க இருக்கிறது. இந்தக் கமிட்டி, மதத் தலைவர்களுடன் பேச்சுகள் நடத்தி, பழனிமுருகன் சிலை மேலும் கரைந்து போகாமல் தடுப்பதற்கான வழிகளை ஆராயும்’’ என்ற கூறியுள்ளார். இதனை நான் கண்டித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.என்.என்.சந்துருகர் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் “இந்து மத தொடர்புடைய கமிட்டியில் நீதிபதி இடம் பெறலாமா?’’ என்ற தலைப்பில் கடிதம் எழுதியிருந்தேன்.
21.04.1984 அன்று கடுமையான _ அதிகமான உடல்வலி இவற்றின் காரணமாக நான் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் சுற்றுப் பயணத்தை ரத்து செய்து ‘விடுதலை’யில் அந்த செய்தியை வெளியிட்டிருந்தேன்.
24.04.1984 அன்று மாலையில் சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பாவாணர் நூலக மய்யக் கட்டிடத்தில், புரட்சிக்கவிஞர் விழா சிறப்புடன் நடைபெற்றது.
பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள் படிக்கத் தடை விதிக்கப்பட்ட _ புரட்சிக்கவிஞரின் ‘தமிழியக்கம்’ நூலை தமிழகம் முழுவதும் மாணவர்களிடையே பரப்ப பெரியார் திறந்த பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது என்பதை அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துக் கொண்டேன்.
25.04.1984 அன்று காஞ்சிபுரத்தில் அன்பரசன்_ மலர்மணி ஆகியோரது திருமணத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். நண்பர் சபாபதி அவர்கள் சீரிய பகுத்தறிவாளர். உள் ஒன்று பேசிவிட்டு புறம் ஒன்று பேச அறியாதவர். அவருடைய குடும்பம் எப்படிப்பட்ட போராட்டங்களானாலும், பிரச்சினைகளானாலும் அவை அத்தனையையும் ஏற்று ஒரு கொள்கை வழி நின்று நடக்கின்ற குடும்பமாகும் என்று குறிப்பிட்டேன்.
29.04.1984 அன்று தென்னாற்காடு மாவட்டம் கண்டமங்கலத்தில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது, இழிவை ஒழிக்கும் போரிலும், உரிமை காப்புப் போரிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
30.04.1984 அன்று நீடூர் (மயிலாடுதுறை)யில் இடைத்தேர்தலில் போட்டியிடும் 4 தி.மு.க. வேட்பாளர்களை தீவிரமாக ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன். அப்போது, உதயசூரியனுக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு ஈழத் தமிழனைக் காக்க இந்திய அரசே! இலங்கைக்குப் படையை அனுப்பு! என்ற உணர்வுக்குப் போடும் வாக்கு! மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டும் விவசாய தொழிலாளர் விரோத செயல்பாடுகளையும் குறிப்பிட்டுப் பேசினேன்.
05.05.1984 அன்று ‘விடுதலை’யில் “தி.மு.க.வை வெற்றிபெறச் செய்வீர்’’ என்ற தலைப்பில் முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தேன். விவசாயிகளின் பொருட்கள் ஜப்தி, மாணவர்கட்குத் தடியா, தொழிலாளர்கள் பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டமோ உச்சம்! விலைவாசிகளோ விஷம்போல்! ‘நூலகங்களில் எதிர்க்கட்சி ஏடுகள் வாங்கக் கூடாது என்று பகிரங்க ‘இடி அமீன்’ பாணி அறிவிப்பு! இவற்றிற்குப் பாடம் புகட்ட வேண்டாமா? என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டேன். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தொழிற்சாலைகளையெல்லாம் கோட்டைவிட்ட எம்.ஜி.ஆர் அரசை கோட்டையை விட்டு இறக்குவீர்! என்று கண்டனத்தை தெரிவித்து இருந்தேன்.
13.05.1984 அன்று தந்தை பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் மூன்றாமாண்டு கல்லூரி மாணவர்களின் பிரிவு உபச்சார விழா தஞ்சை வல்லம் பாலிடெக்னிக்கில் நடந்தது. அதில் நான் உரையாற்றுகையில், “உலக வாழ்க்கையிலே அய்யா அவர்கள் நினைத்த புதுமைப் பெண்களாக விளங்க வேண்டும். நல்ல அளவுக்கு நீங்கள் அறிவார்ந்த வாழ்க்கையே வாழ வேண்டும்’’ என்று மாணவர்கள், மாணவிகளிடம் கேட்டுக்கொண்டேன்.
14.05.1984 அன்று தஞ்சை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து 50க்கும் மேற்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் கொடியேற்று விழாக்கள் நடத்தியும், குறைந்தது ஒவ்வொரு இடத்திலும் 20 நிமிடம், 40 நிமிடம் வரைக்கும் நான் கடுமையான பிரச்சாரம் செய்தேன்.
15.05.1984 அன்று திருவாரூரில் நடைப்பெற்ற கீழத்தஞ்சை திராவிட விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினேன். மற்ற தொழிலுக்கெல்லாம் பாதுகாப்பு உண்டு. ஆனால், விவசாயத்திற்கு மட்டும் எந்தவித பாதுகாப்பும் இல்லை. எனவே, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உரையாற்றினேன்.
பட்டுக்கோட்டை வட்டத்தில் _ கிராமம் கிராமமாக நான் மின்னல் வேக சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்தித்து 25, 26.05.1984 ஆகிய நாட்களில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டேன். நாட்டுச்சாலை, பள்ளத்தூர், கரிசவயல், இரண்டாம் புலிக்காடு, சேதுபாலாசத்திரம், பெருமகளூர் ஆகிய கிராமங்களில் பேசிவிட்டு கடைசி சிறப்புக் கூட்டமாக பேராவூரணிக் கூட்டத்தில் உரையாற்றினேன்.
மூடநம்பிக்கைகளற்ற சமுதாயம் உருவாக வேண்டும். உழைப்பவர்கள் உயர வேண்டும். எல்லோரும் உத்தியோகம் பார்க்க வேண்டும். மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆகவேண்டும் என்று குறிப்பிட்டேன்.
26.05.1984 அன்று மன்னார்குடியில் ராஜகோபால் சுவாமி திருமண மண்டபத்தில் மு.ராமதாஸ், க.மணிமேகலை வாழ்க்கை ஒப்பந்த விழா என்னுடைய தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நான் வந்திருந்தவர்களிடையே பகுத்தறிவு, கடவுள், ஜாதி, மதம், மூடநம்பிக்கை, சிக்கனம், இனஉணர்ச்சி ஆகிய கருத்துகளைப் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினேன்.
28.05.1984 அன்று திருச்சி (கிழக்கு) மாவட்ட தி.க. தலைவர் கோமாகுடி பிச்சையப்பா அவர்களது மகள் சசிகலாவுக்கும் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியுனுடைய மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகிருட்டிணன் அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தத்தை உறுதிமொழியினைக் கூறி திருமணத்தை நடத்தி வைத்தேன்.
28.05.1984 அன்று திருவெறும்பூரில் முத்தமிழ் விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது, “வங்க தேசத்திற்கு திரும்புகின்ற இந்தியப்படை தமிழர்கள் தாக்கப்படும்போது, தமிழ்ச் சகோதரிகள் கற்பழிக்கப்படும்போது, தமிழ்த் தாய்மார்கள் மானபங்கப்படுத்தப்படும்போது ஈழத்திற்குத் திரும்புவதற்கு மறுக்கப்படுகிறது.
உலகத்திலே வாழுகின்ற தமிழனுக்கெல்லாம் பாதுகாப்பு தாய்த்திருநாட்டிலிருந்துதான் செல்ல வேண்டுமென்று சொன்னால் _ இங்கேயுள்ள தமிழன் இனவுணர்வு இல்லாமலும் மொழியுணர்வு இல்லாமலும் இருப்பானேயானால் தன்னுடைய வழி எது என்று அவன் தெரிந்துகொள்ள முடியாமல் இருந்தால் வாய்ப்பு ஏற்படுமா? என்ற கேள்வியைக் கேட்டு உரையாற்றினேன்.
29.05.1984 அன்று சிங்கப்பூர் சென்றிருந்த எங்களை சிங்கைத் தமிழ்க் குடும்பத்தினர் நூற்றுக்கணக்கானோர் வந்து வரவேற்றார்கள். வணிக மேதை வள்ளல் திரு.ஹனீபா அவர்கள் எங்களை வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து நேரே ஹனீபா அவர்கள் இல்லத்திற்குச் சென்று சிறிதுநேரம் இருந்துவிட்டு சிங்கைத் தோழர் சந்திரன் இல்லத்திற்குச் சென்றோம்.
31.05.1984 அன்று சிங்கப்பூர் நாளேடு ‘தமிழ் முரசு’ அலுவலகத்திற்குச் சென்றோம். நாளேடு தலைமை ஆசிரியர் சா.ஜெயராம்,
(கோ.சாரங்கபாணியின் மூத்தமகன்) அவர்கள் எங்களை அன்போடு வரவேற்றார். சிங்கையில் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
சிங்கப்பூர் ஹனிபா டெக்ஸ்டைல்ஸின் புதிய கிளை நிறுவனங்கள் 149 ரோச்சேரர் ரோடு ஃபூலூ சௌகாம்ப்ளெகிஸ் எண்: 02_08, 02_11 முகவரியில் நான் திறந்துவைத்து உரையாற்றினேன்.
சிங்கையைச் சேர்ந்த பல வணிகப் பெருமக்களும் கழகத் தோழர்களும் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் வருகை புரிந்தனர். கிளைகளைத் திறந்து வைத்து சிங்கப்பூர் ஹனிபா அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை விளக்கி உரை நிகழ்த்தினேன்.

02.06.1984 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளும், மணி விழா நாயகருமான அவர்களுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்தி, என் வாழ்த்துக்களை அவருக்காக ‘விடுதலை’யில் பதிவு செய்திருந்தேன்.
03.06.1984 அன்று மாலை சீரணி அரங்கில் நடந்த கலைஞர் மணிவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
08.06.1984 அன்று சென்னை பெரியார் திடலில், மறைந்த செட்டிநாட்டரசர் ராஜா சர்.முத்தையா (செட்டியார்) அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று ராஜா சர்.முத்தையா (செட்டியார்) அவர்களின் குடும்பம் தமிழர்களுக்கு ஆற்றிய தொண்டினைப் பாராட்டினார்கள்.
நான், தலைமை உரையை நிகழ்த்தினேன். “செட்டிநாட்டரசர் அவர்களுக்கு திராவிடர் இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய பங்கு உண்டு. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இல்லாவிட்டால் நானெல்லாம் பட்டதாரியாக வந்திருக்க முடியாது; தமிழகத்திலே இரண்டு வேந்தர்கள் உண்டு ஒன்று வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார்; மற்றொரு வேந்தர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இறுதிவரை இணைவேந்தராக இருந்த டாக்டர் ராஜா சர்.முத்தையா செட்டியார்.
வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் எனக்கு பகுத்தறிவு பாடம் புகட்டினார்; இணைவேந்தர் டாக்டர் ராஜா சர்.முத்தையா செட்டியார் அவர்கள் எனக்கு பட்டக் கல்வியைப் புகட்டினார்.
ராஜா சர் அவர்கள் வரும்போது, தந்தை பெரியார் எழுந்து நின்று சென்று வரவேற்பார்கள்; அதற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு ராஜா சர் அவர்களும் அய்யாவிடத்தில் மரியாதை காட்டுவார்கள். மறைந்த ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் ஒரு தனி மனிதரல்ல; ஒரு நிறுவனம்’’ என்று நான் குறிப்பிட்டேன்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.
மாநில பகுத்தறிவு ஆசிரியரணியினுடைய இணைச் செயலாளர் லெக்குமிகாந்தன் அவர்களுடைய தம்பி கரிகாலன் அவர்களுக்கும் அமுதா அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை 08.06.1984 அன்று பெரியார் திடலில் நடத்தி வைத்தேன்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று கேட்ட காலம் போய் இன்று எல்லாம் மாறி பெண்கள் எல்லா நிலைகளிலும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன்.
திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையில் 09.06.1984 அன்று வசந்தி, மதிவாணன் வாழ்க்கை ஒப்பந்த விழா என் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில், மணமக்களுக்கு வாழ்க்கை ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறி திருமணத்தை நடத்தி வைத்தேன்.
10.06.1984இல் மன்னைக்கு அருகிலுள்ள விக்கிரபாண்டியர் கிராமத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
காஞ்சியில் 13.06.1984 அன்று நடைப்பெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது காஞ்சி மடத்தின் மோசடிகளை விளக்கி ஆதாரத்தோடு பேசினேன்.
16.06.1984 அன்று சென்னையில் செட்டிநாட்டரசர் ராஜா சர். முத்தைய்யச் செட்டியார் மறைவுக்கு, நகர ஷெரீப் கூட்டிய இரங்கல் கூட்டத்தில் பேசினேன்.
பொள்ளாச்சி நகர திராவிடர் கழகத்தின் சார்பாக ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு விளக்கப் பொதுக்கூட்டம் 17.06.1984 அன்று இரவு திருவள்ளுவர் திடலில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் நான் உரையாற்றும்போது, ஆர்.எஸ்.எஸ். பற்றியும் அந்த நச்சுப் பாம்பினை ஒழிக்க வேண்டிய அவசியம் பற்றியும் நுழைவுத் தேர்வின் அபாயம் பற்றியும், அவ்வபிப்பிராயத்தைத் தடுக்க கழகம் நடத்தும் போராட்டம் பற்றியும் சிறப்பாக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றினேன்.
நியூயார்க் நகரில் நடைபெறும் உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்க 27.06.1984 அன்று சென்னை விமான நிலையத்தில் எங்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் தி.மு.க., தி.க., காமராஜ் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் ஏராளமாக கலந்து கொண்டார்கள். 30.06.1984 முதல் 02.07.1984 வரை நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்க நான் காமராஜ் காங்கிரஸ் கட்சித் தலைவர் ப.நெடுமாறன், மதுரை ஆதினகர்த்தர் மற்றும் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வை.கோபால்சாமி (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்) உள்ளிட்டோர் அமெரிக்கா பயணமானோம். ஏராளமான தோழர்கள் விமான நிலையத்தில் வழியனுப்ப வந்திருந்தார்கள்.
உலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டுச் செல்லும் வழியில் பம்பாய் விமான நிலையம் வந்து சேர்ந்ததும், அப்போது பம்பாய் தமிழர் பேரவைத் தலைவர் ராஜபாண்டியன், செயலாளர் ஜெயராஜ், திராவிடர் கழகத் தோழர்கள் மந்திரமூர்த்தி வேலாயுதம், சேகர்பானு, தி.மு.க. அவைத் தலைவர் பொற்கோ, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எத்திராசன், செயலாளர் குமரேசன் ஆகியோர் எங்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
28.06.1984 அன்று விடியற்காலை லண்டன் வழியாக நியூயார்க் பயணமானோம். திராவிடர் கழகத் தோழர்கள் மந்திரமூர்த்தி, சுப்பையா ஆகியோர் இறுதிவரை உடனிருந்து வழியனுப்பி வைத்தனர்.
28.07.1984இல் லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
(நினைவுகள் நீளும்…)
– கி.வீரமணி


Leave a Reply