இந்திய நாட்டின் முதல் குடிமகன், முப்படைகளின் தளபதி, மாண்பமை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் அவரது துணைவியார் அவர்களும் ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு சென்றுள்ளனர்.
எந்த உயர்பதவியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இந்தக் கோவிலுக்குள் இடமில்லை என்று கோவில் குருக்கள் மறுத்து விடவே, தன் துணைவியாருடன் கோவில் படியில் அமர்ந்து வழிபாடு செய்துவிட்டு புறப்பட்டு சென்றிருக்கிறார்.
இந்த நிகழ்வு இந்திய அளவிலும், உலக அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையல்ல _ மனித உரிமைப் பிரச்சினை _ சட்டத்தின் மரியாதையைக் காப்பாற்றும் பிரச்சினை. எனவே, தாழ்த்தப்பட்டவர் என்பதால் குடியரசுத் தலைவரையே கோயிலுக்குள் நுழைய விடாததைக் கண்டித்து சமூக நிதிக்காகப் பாடுபடும் திராவிடர் கழகம் சார்பில் முதற் கட்டமாக 07.06.2018 அன்று தமிழக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழர் தலைவர் தலைமையில் போராட்டம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் 7.6.2018 அன்று காலை 11 மணி அளவில் போராட்டம் தொடங்கியது. வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் வரவேற்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திருவள்ளூர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வழக்குரைஞர் சைதை சுப்பிரமணி, கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் நிகழ்த்தினார்.
“கோவிலுக்குள் நுழைய விடாமல் குடியரசுத் தலைவரை அவமதித்தது இருக்கிறதே, இதைவிட தேசிய அவமானம் வேறு கிடையாது. இந்தச் சம்பவத்தின் மூலம் நாட்டில் ஜாதிவெறி, தீண்டாமைக் கொடுமை எவ்வளவு உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.
எனவேதான், அகில இந்தியா முழுவதும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வரவேண்டும் என்று சட்டம் வரவேண்டும். இது ஒரு மனித உரிமை பிரச்சினை. இதை ஜாதி வேறுபாடின்றி, கட்சி வேறுபாடின்றி அனைவரும் வரவேற்க வேண்டும்.
ஏற்கெனவே, இந்திய அரசின் இராணுவ அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவமானப்படுத்தப்பட்டார். மோடி ஆட்சியில் இதற்கு என்ன பதில்? இதை மனித உரிமைப் போராளிகள் தட்டிக் கேட்க வேண்டும்’’
போராட்டக் களத்தில் ஊடகங்களுக்கு தமிழர் தலைவர் பேட்டி
“திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களை வாக்கு வங்கிக்காக குடியரசுத் தலைவராக _ பொம்மையாகப் பயன்படுத்தி இருக்கிறார்களே தவிர தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினுடைய விடுதலைக்காக அவரை பயன்படுத்தவில்லை.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்கு உச்சநீதிமன்றத்தில் எந்தத் தடையும் இல்லை. அந்தத் தீர்ப்பு செல்லும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. கலைஞர் அவர்கள் கொண்டுவந்த சட்டமென்றாலும் எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்தபோது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சட்டமன்றத்தில் உறுதிமொழி கொடுத்திருக்கிறார். இந்தச் சட்டத்தை தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் நடைமுறைக்குக் கொண்டுவர நாடாளுமன்றத்திலே இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.’’
ஆர்ப்பாட்டம் நிறைவு
“போராடுவோம் வெற்றி பெறுவோம்! வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!’’ என்று எழுச்சி மிகுந்த முழக்கங்களோடு நடைபெற்ற போராட்டம் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூற நிறைவுற்றது.
போராட்டத்தில் ஜாதி, மத பேதமின்றி பொதுமக்களும் அனைத்து கட்சி மற்றும் அமைப்பினரும், கலந்துகொண்டனர்.