தேவதாசி முறை கட்டுப்பாட்டை உடைத்து வெளியே வந்த முதல் பெண் என்பதோடல்லாமல், கடவுளின் பெயரால் ஒரு சமூகம் மட்டும் இழிவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்ற நியதியைத் தகர்ப்பதே தனது வாழ்நாள் இலட்சியம் என முடிவெடுத்து வாழத் தொடங்கினார் இராமாமிர்தம். அவரை அவரின் உறவினர்கள் மட்டுமின்றி தேவதாசிகளில் பலரும் எதிர்த்தனர். இருப்பினும் மனம் தளராது இக்கொடுமைக்கு எதிராகப் போராடினார்.
1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சி மாநாட்டில் “வகுப்புரிமை’ தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள மறுத்ததால், பெரியார் பலருடன் காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார். இராமாமிர்தம் அம்மையாரும் பெரியாருடன் காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மாயவரத்தில் தேவதாசி முறைக்கு எதிராக மாநாடு ஒன்றினை அம்மையார் அவர்கள் நடத்தினார். அம்மாநாட்டில் தந்தை பெரியார் திரு.வி.க., எஸ். இராமநாதன் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
சுயமரியாதை திருமணம், விதவை மறுமணம், பால்ய விவாகம் எதிர்ப்பு, சாதி மறுப்புத் திருமணம், தேவதாசி முறை ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, பெண்ணுரிமை என சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யப் பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் பயன்படுத்திக்கொண்டார்.
தேவதாசி முறை ஒழிப்புக்கு சி.பி. இராமசாமி அய்யர், சத்திய மூர்த்தி போன்ற பிரமுகர்கள் எதிராக செயல்பட்டனர். தந்தை பெரியார் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கத்தைச் சாடினார். கோயில்கள் விபசாரத்துக்குத் துணை போகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் சேலம் மாநாட்டில் “தென் இந்திய நல உரிமைச் சங்கம்‘ என்ற பெயரில் இருந்த நீதிக்கட்சிக்குத் “திராவிடர் கழகம்‘’ என்று பெயர் சூட்டப்பட்டது. அம்மையார் திராவிடக் கழகத்தில் தந்தை பெரியாரோடு இணைந்து செயல்பட்டார்.