என்னுடைய கைப்பேசி மணி ஒலித்தது. “இனிய தமிழ் வணக்கம்!’’ என்று பெயரைக் கூறினேன். “வணக்கம் அய்யா! உங்களுடைய மாணவன் பேசுகிறேன்!’’ என்று பெயரைக் கூறினார். அன்பான உரையாடலின் நிறைவாக “அய்யா! உங்களுடைய அறிவுரைகளால், இன்று நான் ஒரு முழுமையான பகுத்தறிவாளனாக வாழ்கிறேன்!’’ என்றார். என் மனம் பெருமையால் பூரித்துப் புகழ்மகுடம் சூட்டிக் கொண்டது.
இவ்வாறு பாடம் கற்பிக்கும் போதே பகுத்தறிவையும் கற்பித்த நான், பார்க்குமிடமெல்லாம் பனை மரங்களாகக் காட்சியளித்த பனையூரில் பணியாற்றியபோது நிகழ்ந்ததே இக்கதை.
அந்தப் பள்ளியில் ஆசிரியன் நான் ஒருவனே. மாணவர்? மாணவரும் ஒருவரே. என்னுடைய அணுகுமுறையால், ஆறே திங்கள்களில் அறுபது மாணவரும் மூன்று ஆசிரியருமாகப் பள்ளியின் தரம் உயர்ந்தது. அதன் காரணமாக ஊர்மக்கள் அனைவருக்கும் என்பால் அன்பு ஏற்பட்டது. என்னையும் அவர்கள் ஒருவனாக ஏற்றுக் கொண்டனர்.
நான் வாழ்ந்த ஊரிலிருந்து பள்ளிக்கு மிதி வண்டியிலேயே சென்று வந்தேன். அந்த நாட்களில் ஒருநாள் என்னுடைய முதுகுப் பகுதியில் கடுமையான தசைப் பிடிப்பு ஏற்பட்டது. உடலின் எந்த ஒரு சிறு அசைவும் பெரும் துன்பத்தைத் தந்தது. அந்த நிலையிலும் மிதிவண்டிப் பயணம்தான்.
கடமை தவறாமையும் காலம் தவறாமையும் உடைமை என எண்ணி உள்ளம் மகிழ்வதே எம் இயல்பாகும். என் துன்பம் கண்டு துன்புற்ற ஊர்மக்கள் ஆளுக்கொரு மருத்துவம் சொன்னார்கள். இறுதியாக அருகிலிருந்த மலையூர் அர்ச்சகர் மனைவியிடம் மந்திரித்தால் குணமாகும் என்று கூறினார்கள்.
“மந்திரம் என்பது தந்திரமே’’ என்பது என்றன் உறுதியான நிலைப்பாடு. ஆனால், அவர்கள் விடுவதாக இல்லை. எனவே, அன்று மதியம் உணவு வேளையில் ஊரார், மாணவர் புடைசூழ மலையூர் சென்றேன்.
மலையூர் பிள்ளைகளும் என்னிடம் பயின்றார்கள். எனவே, நான் அங்கு சென்றபோது மாணவர் சிலரும் மக்கள் சிலரும் வந்தனர். அதைக் காண ஒருபுறம் பெருமையாக இருந்தாலும் மற்றொருபுறம் சங்கடமாகவும் இருந்தது.
அர்ச்சகர் வீட்டம்மை என்னைக் கிழக்கு முகமாக அமரச் செய்தார். என் முன் ஒரு வெங்கல வட்டில் வைத்து அதில் ஒரு சொம்பு நீரை ஊற்றினார்கள். அருகில் சில நூல் திரிகள், ஒரு தீப்பெட்டி, ஒரு கிண்ணத்தில் எண்ணெய் ஆகியவையும் இருந்தன.
அம்மையார் திரியை எண்ணையில் நனைத்து தீக்குச்சியை உரசி அதில் பற்றவைத்தார். நன்கு எரிந்த தீயைச் சொம்பினுள் போட்டார். இரு கைகளாலும் சொம்பை ஏந்தி, கிழக்கே காட்டி என்னவோ முனுமுனுத்தார். பிறகு அந்தச் சொம்பை என் தலையின் இடம், வலமாக மூன்று முறையும், வலம் இடமாக மூன்று முறையும் மேல்கீழாக மூன்று முறையும், கீழ்மேலாக மூன்று முறையும் என்னைச் சுற்றி மூன்று முறையும் சுற்றிவிட்டு, தன் உடலை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு, அப்படியே வட்டில் நீரில் கவிழ்ந்தார்.
“சுர்ர்ர்ர்….’’ என்ற ஒலி எழுந்தது. அடுத்த நொடி வட்டிலில் நீர் இல்லை. கூடியிருந்தவரெல்லாம் “ச்சுச்சுச்சு’’ என்று உச்சு கொட்டினார்கள். ஒரு மூதாட்டி கன்னத்தில் கைவைத்தபடி கூறினார், “அடி ஆத்தா! எம்புட்டு புடுச்சிருக்கு!’’ ஒரு முதியவர் வியந்தார், “எப்படித்தான் மிதிவண்டியிலேயே அம்புட்டு தூரம் வந்துட்டு போறாரோ!’’ இளைஞர் ஒருவர் அழுத்தம் திருத்தமாக கூறினார், “அய்யா ஒரு பத்து நாளைக்கு வராதீங்க அய்யா! நாங்க பார்த்துக்கிறோம்!’’
இதற்கிடையே, முன் செய்த சுற்றும் சடங்கை, அம்மையார் மேலும் இருமுறை செய்தார். என்னை எழச் சொன்னார். கைகால்களை நீட்டி, மடக்கி, உதறச் சொன்னார். திண்ணையிலிருந்து மூன்று முறை குதிக்கச் சொன்னார்.
முந்தாணையால் முகத்தையும் கழுத்தையும் துடைத்துக் கொண்டே “எப்படி இருக்கு?’’ என்று வினவினார். வலி அப்படியேதான் இருந்தது. ஆனால், நான் எதுவும் கூறவில்லை.
சற்று நேர உரையாடலுக்குப் பின் இளைஞர் ஒருவரை அழைத்தேன். நான் அமர்ந்த இடத்தில் அவரை அமர்த்தினேன். அம்மையார் எனக்குச் செய்த அனைத்தையும் அவருக்குச் செய்தேன். நிறைவாக, வட்டில் நீரில் சொம்பைக் கவிழ்த்தேன். “-சுர்ர்ர்ர்’’ வட்டிலில் நீர் இல்லை.
ஒருவர் கேட்டார், “உங்களுக்கு மூச்சுப் பிடிப்பு இருக்குது. மந்திரிச்சதும் வட்டித் தண்ணி சொம்புக்குள்ளே போயிடுச்சு! ஆனால், இவனுக்கு எப்படி?’’ ஆனால், யாரும் எதுவும் பேசவில்லை. சிலர் மெல்ல நகர்ந்தனர். அம்மையார் முகம் மாறியது. என்னை முறைத்தபடி எதுவும் பேசாமல் வீட்டினுள் சென்றுவிட்டார்.
நான் விளக்கம் சொன்னேன். “எல்லா இடத்திலும் காற்று இருக்கிறது. இந்தச் சொம்பினுள்ளும் இருக்கிறது. தீ காற்றை எடுத்துக் கொண்டுதான் எரியும். திரியில் எரிந்த தீயும் சொம்பில் இருந்த காற்றை எடுத்துக் கொண்டுதான் எரிந்தது. அதனால் சொம்பில் காற்று இல்லை. வெற்றிடம் ஏற்பட்டு விட்டது.
காற்று வெற்றிடத்தை நோக்கி நகரும்! என்பது அறிவியல் கோட்பாடு. இந்த அடிப்படையில் காற்று இல்லாத காலிச் சொம்பை வட்டிலில் கவிழ்த்தவுடன் வெளிக்காற்று சொம்பினுள் செல்ல முயற்சிக்கிறது. இடையில் நீர் இருந்ததால் அதைத் தள்ளுகிறது. இதனால் நீர் சொம்பினுள் சென்றுவிட்டது.’’
யாரும் எதுவும் பேசவில்லை. அம்மையார் கதவின் அருகில் நின்றதை அவரது கால்கள் காட்டின. நானே பேசினேன். “இதை யார் செய்தாலும், யாருக்குச் செய்தாலும் இது நடக்கும்!’’
நான் பள்ளி திரும்பினேன். அதன்பிறகும் மக்கள் மந்திரிக்க அம்மையாரிடம் சென்றதாகக் கூறினார்கள். அவரும் மந்திரித்ததாகப் பேசிக் கொண்டார்கள்.
எனக்கு நானே வேதனையுடன் சிரித்து நினைத்துக் கொண்டேன். நம் மண் விடுதலை பெற்றால் மட்டும் போதாது. முடை நாற்றம் வீசுகின்ற மூடத்தனத்திலிருந்தும் விடுதலைபெற வேண்டும். அப்பொழுதுதான் தமிழினம் தன்னை உணரும்! தன்மானம் பெறும்! தலைநிமிர்ந்து வாழும்! சிந்தனை செய் மனமே!
நன்றி!