– செங்கதிர்
இரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி “கலைஞன் என்பவன் தன்னுடைய சமுதாயத்தின் செவியாக கண்ணாக நெஞ்சமாக விளங்குபவன்; வாழும் காலத்தின் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்; அவனே மக்கள் கலைஞன்’’ என மக்கள் எழுத்தாளனுக்கான இலக்கணத்தை வரைந்துள்ளார். அந்த இலக்கணத்தைக் கடைப்பிடித்து மக்களுக்காக எழுதியவர் விந்தன்.
செங்கற்பட்டு மாவட்டம், நாவலூர் என்பது விந்தனின் சொந்த ஊர்; பெற்றோர் வேதாசலம்-ஜானகியம்மாள், இவர்களின் மூத்தமகனாக 22.09.1916ல் பிறந்தார். இயற்பெயர் கோவிந்தன். நடுநிலைப்பள்ளி கல்வியைக்கூட முடிக்காமல் தந்தையுடன் கூலி வேலைக்குச் சென்றார். பின்னர் இரவுப் பள்ளியில் சேர்ந்து படித்தார். ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். வறுமையினால் ஓவியத்தையும் பாதியில் விட்டார். தமிழரசு, ஆனந்த போதினி , கல்கி, போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்து இலக்கிய உலகிற்கு வந்தவர்.
இலக்கியம் கற்பனையிலிருந்து பிறக்கவில்லை, வாழ்க்கையில் இருந்துதான் பிறக்கிறது என்பதை உணர்ந்த விந்தன், அவரது படைப்புகளில் மனித நேயத்தையே இலட்சியமாக கொண்டிருந்தார். விந்தன் உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாட்டாளிகள் ஆகியோரின் சுக துக்கங்களை இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தினார். கிராமத்தில் தீண்டாமை என்னும் கொடிய நோய் ஏழை எளிய உழைக்கும் மக்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை தனது சிறுகதைகள் மூலம் சித்தரித்தார்.
விந்தனுடைய முல்லைக்கொடியாள் என்னும் சிறுகதைத் தொகுப்பு 1946ம் ஆண்டு வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்த ஆண்டில் தான் தோற்று விக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சிக் கழகம் அளித்த சிறுகதைகளுக்கான பரிசைப் பெற்ற முதல் எழுத்தாளர் விந்தன் ஆவார்.
பொன்னி இதழில் கண் திறக்குமா? என்ற தொடர்கதை எழுதினார். பின்பு, கல்கி இதழில் பாலும் பாவையும் என்ற நாவலை வாரந்தோறும் வடித்தார். அந்த நாவல் விந்தனுக்கு புகழையும், பன்முகப் பாராட்டையும் அள்ளிக் கொடுத்தது. இந்த நாவல் கன்னடம் மற்றும் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.
சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும் பஜகோவிந்தம்(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாக பசிகோவிந்தம் (1956) என்ற நூலை விந்தன் எழுதினார்.
பொன்னுக்கும் பொருளுக்கும் உள்ள மதிப்புக்கூட இந்த காலத்தில் பெண்ணுக்கு ஏன் அவள் கற்புக்குக்கூட இல்லை என தன் படைப்புகளின் மூலம் சமூக அவலங்களைச் சுட்டெரித்தார். மேலும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, காதலும் கல்யாணமும், சுயம்வரம் போன்ற சமூக பிரச்சனைகளைக் மையமாகக் கொண்ட நாவல்களையும் படைத்து தமிழ் மக்கள் நெஞ்சத்தில் நீங்காத இடத்தைப் பிடித்தார். விந்தனின் நாவல்கள், மனிதர்களின் வாழ்க்கைத் துன்பங்களையும் அத்துன்பங் களிலிருந்து விடுபடுவதற்கான போராட்டங் களையும் படிப்பவர்கள் மனதில் துடிப்புடன் ஏற்படுத்துவன.
விந்தன் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். விந்தனின் சிறுகதைகளில் காதலும் மனிதப் பண்பும் பாசமும் பரிவும் பிணைந்திருக்கும். வளரும் சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சாதிமத பேதங்கள், வர்க்க உணர்வுகள், இன்னும் பிற தடைக்கற்கள் உள்ளன; அவற்றையெல்லாமல் உடைத்தெறியாமல் உண்மையான காதல் வெற்றிபெற முடியாது என்பதைத் தமது கதைகளில் வெளிப்படுத்தினார்.
விந்தன் எழுதிய ‘பெரியார் அரிச்சுவடி’ ஒரு தலைசிறந்த குழந்தை இலக்கியமாகும்.