– சிகரம்
சுந்தரர் திருவொற்றியூர் விட்டு நீங்கக் கண் இழத்தல்
“சங்கிலியாருக்கு முன் தாம் செய்து கொடுத்த வாக்குறுதி தவறிய காரணத்தால் சுந்தரர் கண்களில் ஒளி மறைய மூர்ச்சித்தார்; யாது செய்வதென்று அறியாது திகைத்தார்; பெருமூச்சு விட்டார்; “சத்தியம் தவறினமையால் இது நிகழ்ந்தது’’ என்று நினைத்து, “இத்துன்பம் நீங்கும்படி எமது திருவொற்றியூர்ப் பெருமானைப் பாடுவேன்’’ என்றெண்ணி “அழுக்கு மெய் கொடு’’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி நிலமுற வீழ்ந்து வணங்கி நின்று, குற்றத்தையும், பழியையும் போக்கி அருளுமாறு மிகவும் நினைந்து வேண்டினார். அப்போது இறைவர்அருளாது வாளா இருந்தனர். ஆயினும் சுந்தரர் கையினைச் சிரமேற் கூப்பித் தொழுது திருவாரூரினைச் சென்று தொழுதற்கு நினைந்தவாறே நடந்த வண்ணமாயிருந்தார். உடன் செல்லுவோர்கள் தமக்கு வழி காட்டியிட முன்னே சென்று திருவடமுல்லை வாயிலை அடைந்தார்; தொண்டைமானுக்கு முன்னாளில்அருள் செய்த திருமுல்லைவாயில் நாயகரை வணங்கி நின்று, “சங்கிலியின் பொருட்டு என் கண்களை மறைத்தீர்’’ என்ற தன்மை விளங்கும்படி திருப்பதிகம் பாடியருளி, “எனது துயரினைக் களைந்திட வேண்டும்’’ என்று துதித்தார்.
சுந்தரர் இடக்கண் பெறுதல்
பின் காஞ்சி மாநகர் வந்து, காமாட்சி அம்மையாரின் திருக்கோயிலின் முன் சென்று வணங்கினார்; பிறகு உலகம் முழுதும் காத்து அழித்து மீளப் படைக்கும் முதல்வருடைய திருவேகம்பம் புக்குப் பணிந்து “விண்ணவர்களுக்காக விடத்தினை உண்டு அமுதத்தை அளித்த கண்ணாளா! கச்சி ஏகம்பனே! கடையேனாகிய நான் செய்த குற்றத்தைப் பொறுத்தருளி இங்கு அடியேன் காணும்படி கண் அளித்தருள வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டு கீழேவீழ்ந்து வணங்கினார்.
“விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெரு விடமுண்ட
கண்ணாளா! கச்சியே கம்பனே! கடையானேன்
எண்ணாத பிழைபொறுத்(து)இங் கியான்காண எழிற்பவள
வண்ணா!கண் ணளித்தருளாய்’’ என வீழ்ந்(து) வணங்கினார்.
காமாட்சி அம்மையாருடைய தளிர்க்கரங்களால் வழிபாடு செய்து பணிந்த திருவடிகளை நினைந்து துதித்த நம்பியாரூரருக்கு அம்மை தழுவக் குழைந்த பெருமான், மறைந்த இடதுகண் பார்வையினைக் கொடுத்துத் தம் திருக்கோலத்தையும் காட்டியருளினார். சுந்தரர் நிலமுற வீழ்ந்து எழுந்து மகிழ்ந்து, “ஆலற் தானுகத் தமுது செய்தானை’’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி ஆனந்தக் கூத்தாடினார்’’ என்கிறது இந்து மதம். கண்ணின் பார்வை போனபின் அது மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லை. அப்படியே கிடைக்க வாய்ப்பு இருப்பின் அது மருத்துவ சிகிச்சை மூலமே முடியும். அதுவே அறிவியல். ஆனால், பாட்டுப் பாடியதும் பார்வை வந்தது என்று மூடநம்பிக்கை வளர்க்கும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
நீரினால் விளக்கெரிதல்
நமிநந்தியடிகளின் பண்பு
“ஏமப்பேறூரில் திருநீற்றுச் சார்புடைய சைவ பார்ப்பனர் குலத்தில் நமிநந்தியடிகள் என்னும் ஒருவர் அவதரித்தார். அவர் சிவபெருமான் திருவடிகளை வணங்கி வாழ்த்தும் பேறுபெற்ற தவத்தினையுடையவர்; திருநீற்றின் சார்பே உண்மைப் பொருள் என்று துணிந்து மேற்கொண்டவர்; இரவும் பகலும் இறைவன் திருவடிகளையே எண்ணி இன்பம் அடைபவர்; அவ்வூரினின்றும் திருவாரூரை நாடொறும் அடைந்து அங்கு எழுந்தருளியுள்ள பெருமானுடைய திருவடிகளை வணங்குதலே எல்லா பூதியங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது என்று கருதிப் பல நாளும் சென்று வணங்கிவரும் செயலை மேற்கொண்டார்.
விளக்கெரிக்க நெய் தேடுதல்
ஒருநாள் நமிநந்தியடிகள் புற்றிடங் கொண்டெழுந்தருளிய பெருமானைத் தரிசித்து வீழ்ந்து வணங்கிக் கொண்டு புறப்பட்டுத் திருமுன்றிலை அடைந்து, அதன் அருகிலுள்ள அரநெறி என்னும் தனி ஆலயத்தினுள்ளே புகுந்து அரநெறியப்பரைத் தரிசித்துக் கை கூப்பித் தொழுதார்; பின்பு அன்பு காரணமாக உள்ளத்துதித்த பேராவலோடு அங்கே செய்ய வேண்டிய பலதிருத்தொண்டுகளைச் செய்து இரவில் எண்ணில்லாத தீபமேற்ற விரும்பினார்; அப்போது ஞாயிறு மேற்றிசையில் இறங்கும் மாலைப் பொழுதாதலைக் கண்டு, “தமது ஊருக்குச் சென்று நெய் கொண்டு திரும்பி வருவதாயின் பொழுது சென்றுவிடும்’’ என்று கருதி, அதனைத் தவிர்த்து அருகிலுள்ள மனையொன்றிலே சென்று, “சிவாலயத்தில் விளக்கேற்ற நெய் தாருங்கள்’’ என்று கேட்டார். அஃது உண்மைநிலை அழிந்த சமணரது மனையாக இருந்தது. அங்கிருந்த சமணர்கள் அவரை நோக்கி நகைத்து, “கையில் விளங்கும் கனலை ஏந்திய நும் பெருமானுக்கு விளக்கு எதற்கு? இங்கு நெய் இல்லை; விளக்கெரிக்க வேண்டுமானால் நீரைமுகந்து எரிப்பீராக’’ என்று கூறினார்.
நமிநந்தியடிகள் நீரினை வார்த்து விளக்கெரித்தல்
சமணர் அவமதித்துக் கூறிய மொழிகளைக் கேட்ட நமிநந்தியடிகள் மனம் நொந்து, அங்குநின்றும் புறப்பட்டுப் போய்த் திருக்கோயிலை அடைந்து இறைவன் திருமுன்பு கீழே வீழ்ந்து வணங்கினார். அப்போது ஆகாயத்திலே, “நமிநந்தியே! உன்னுடைய மனக்கவலையை ஒழித்து விடுக; அருகிலுள்ள இக்குளத்து நீரினை முகந்து கொண்டுவந்து இடையறாது திருவிளக்கேற்றுக’’ என்று சிவபெருமானின் திருவருளால் ஒரு திருவாக்கு எழுந்தது. அதனை நமிநந்தியடிகள் மனமகிழ்ந்து கேட்டுத் திகைத்து நின்றார். பிறகு சிவபெருமானுடைய திருவருளை வியந்துகொண்டு எழுந்து சென்று, அருகிலுள்ள திருக்குளத்தில் இறங்கி, இறைவனின் திருநாமத்தை உச்சரித்து, நீரை முகந்துகொண்டு மேலேறி வந்து, அரநெறியப்பர் திருக்கோயிலை அடைந்து அகலிலே முறுக்கியிடப்பட்ட திரியின்மேல் அந்நீரை வார்த்து விளக்கேற்றினார். என்னே அதிசயம்! அவ்விளக்கு, சுடர்விட்டு மேல்நோக்கி எழுந்து எரிந்தது’’ என்கிறது இந்து மதம். விளக்கு எண்ணையால்தான் எரியும். தண்ணீரை விளக்கில் நிரப்பி திரிபோட்டு கொளுத்தினால் திரி கருகி அணையுமே தவிர விளக்கு எரியாது. இதுவே அறிவியல் உண்மை. ஆனால், தண்ணீரில் விளக்கு எரிந்தது என்கிற இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
விபூதியால் வயிற்று வலி நீங்குதல்
திலகவதியம்மையார் தமது கால்களில் வீழ்ந்து வருந்தும் தம்பி திருநாவுக்கரசரை பார்த்துச் சிவபெருமான் திருவருளை நினைந்து கைதொழுது, “நல்ல குறிக்கோள் இல்லாத புறச்சமயப் படுகுழியில் வீழ்ந்து அறியாது துயருழந்தீர்; இனி எழுந்திரீர்’’ என்று கூறினார். திலகவதியாரும் இறைவரது பேரருளை நினைந்து, தம்பியார் திருவீரட்டம் புகுதற்குத் தகுதியுடையவராக ஆக்குவதற்குத் திருவைந்தெழுத்தை ஓதித் திருவெண்ணீற்றைக் கொடுத்தனர். திருநாவுக்கரசர், திருவெண்ணீற்றை வாங்கித் தம் திருமேனியில் தரித்துக்கொண்டு திலகவதியம்மையாரின் பின் சென்றார்.
தமக்கையாரோடு தம்பி வீரட்டானஞ் செல்லல்
திருநீற்றினை அணிந்த மருணீக்கியாருடைய அகத்திருந்த இருளும் புறத்தில் நிறைந்த கங்குலிருளும் செல்லும்படி திருப்பள்ளி யெழுச்சிக் காலத்தில் திலகவதியம்மையார் வழக்கம்போல் தொண்டு புரிதற்குத் திருவலகும், திருமெழுக்கும், தோண்டியும் கொண்டு தம்பியாரையும் உடன்கொண்டு திருக்கோயிலினுள்ளே சென்றார்.
திருப்பதிகத்தினைச் சந்நிதிக்கு எதிரில் நின்று பாடியருளினார். அவருடைய கொடிய சூலை நோயும் அக்கணமே நீங்கியது என்கிறது இந்து மதம். வயிற்று வலிக்கு உரிய சிகிச்சை செய்தால்தான் நீங்கும் என்கிறது அறிவியல். ஆனால், விபூதி பூசி பதிகம் பாடினால் வயிற்று வலி நீங்கும் என்கிறது இந்து மதம். இப்படி அறிவுக்கு ஒவ்வாத முரணான கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
(சொடுக்குவோம்)