புதுடில்லியில் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களின் மாநாட்டினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கூட்டினார். (22.10.1998) மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றன. எடுத்த எடுப்பிலேயே நிகழ்ச்சி நிரலில் ‘சரஸ்வதி வந்தனா’ என்று அறிவிக்கப்பட்டது.
மாநாட்டு மேடைக்கு பிரதமர் வாஜ்பேயி வந்தவுடனேயே, ஆந்திர மாநிலத்தின் உயர்கல்வி அமைச்சர் கே.பிரதிபா பாரதி எழுந்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்துக்கு அடையாளமாக சரஸ்வதி மீதான துதிப் பாடலைப் பாடக் கூடாது. அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று ஆட்சேபித்தார்.
பாரதீய ஜனதா அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றுகிறது. தொடக்க விழாவுக்கான நிகழ்ச்சி நிரலை உடனே மாற்ற வேண்டும் என்று பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் (அகாலி தளம்) மஞ்சித் சிங் உரத்த குரலில் ஆட்சேபம் தெரிவித்தார்.
பிரதமர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பார். பிறகு தேசிய கீதம் பாடப்படும். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி மேடையிலிருந்த-படியே வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய கீதம் பாடி முடிக்கப்பட்ட பிறகு, சரஸ்வதியைப் பற்றிய துதிப்பாடல் பாடப்படும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்தனர். உடனே மீண்டும் கூச்சல் எழுந்தது. தமிழ்நாடு, புதுவை, கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம், திரிபுரா, பீகார், பஞ்சாப், ஒரிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் இந்த அறிவிப்பை ஆட்சேபித்து முழக்கம் எழுப்பிக் கொண்டே வெளிநடப்புச் செய்தனர்.
ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தத்தைப் புகுத்த முயற்சி நடப்பதையே இது காட்டுவதாக, வெளிநடப்புச் செய்த கல்வி அமைச்சர்கள் பிறகு செய்தியாளர்களிடம் குற்றஞ்சாட்டினர். கல்வியில் மதத்தின் ஆதிக்கம் ஏற்படுவதை பாரதீய ஜனதா விரும்புவதையே இது காட்டுகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
தங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து கருத்துகளை வரவழைத்து அவற்றை விவாதப் பட்டியலில் சேர்த்துவிட்டது மத்திய அரசு என்று சாடினார் மஞ்சித் சிங் (கல்கத்தா).
கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் சரஸ்வதி வந்தனம் பாடுவது இந்து மத சம்பிரதாயத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறது. இதை எங்களால் ஏற்க முடியாது என்று அமைச்சர்கள் க.அன்பழகன் (தமிழ்நாடு), எஸ்.பி.சிவகுமார் (புதுவை) ஆகியோர் குறிப்பிட்டனர்.