சென்னை புத்தகச் சங்கமம்-2018 முத்திரைப் பதிவுகள்!

மே 01-15

தமிழோவியன்

y7.JPG - 11.51 MB

ஏப்ரல் 23ஆம் நாளை உலகப் புத்தக நாளாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையொட்டி இளைய தலைமுறையினருக்கு வாசிக்கும் பண்பினை ஊக்குவிக்கும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அரிய முயற்சியில் சென்னை புத்தகச் சங்கம் என்னும் அமைப்பு 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு சிறப்பு புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை புத்தகச் சங்கமத்தின் ஆறாம் ஆண்டு சிறப்புப் புத்தகக் காட்சி, அய்ம்பதுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தார் கலந்துகொள்ள ஏப்ரல் 20 முதல் 25 வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்புடன் நடைபெற்றது. தொடக்க நாள் நிகழ்வு 20.04.2018 அன்று மாலை 5 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.ராதா மன்றத்தில் தொடங்கியது.

முதல்நாள் நிகழ்ச்சி 20.04.2018

திறப்புவிழா:

புத்தகக் காட்சியை வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் தலைமையில் புரட்சி இயக்குநர் பாரதிராஜா அவர்கள் திறந்து வைத்தார். பாரதிராஜா அவர்களுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இயக்க வெளியீடுகளை வழங்க, சென்னை புத்தகச் சங்கமத்தின் இயக்குநர் வீ.அன்புராஜ் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். வரியியல் வல்லுநர் ச. இராசரத்தினம் அவர்களும் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களும் தாங்கள் எழுதிய நூல்களை அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். புரட்சி இயக்குநர் பாரதிராஜா அவர்களை வாசகர்கள், பதிப்பகத்தார், மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றனர்.

சிறப்பு உரையரங்கம்:

புத்தகக் காட்சி திறப்பு விழாவில் அனைத்து புத்தக அரங்குகளையும் பார்வையிட்ட பின்னர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் வரவேற்புரையும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரை ஆற்ற, வரியியல் வல்லுநர் ச. இராசரத்தினம் அவர்கள் தலைமையுரையாற்றினார். இறுதியில் புரட்சி இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிப் பிழம்பாக சிறப்புரையாற்றினார். அவர்தம் உரை முழுவதும் தமிழ் மொழி, திராவிட இன உணர்வே மேலோங்கி இருந்தது. முடிவில் சென்னை புத்தக சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் விழிகள் பதிப்பகம் வேணுகோபால் நன்றி கூறினார்.

விழாவில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், எழுத்தாளர் மஞ்சை வசந்தன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன் அச்சகப்பிரிவு மேலாளர் க.சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி 21.04.2018

சென்னை புத்தகச் சங்கமத்தின் இரண்டாம் நாள் புத்தக காட்சி காலை 11 மணிக்கு பதிப்பாளர் மற்றும் ஏராளமான வாசக நண்பர்களின் குதூகலத்துடன் தொடங்கியது.

புத்தகச் சங்கமத்தின் கண்காட்சிகளில் இதுவரை இல்லாத புதுமையாக புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் செய்யும் அரங்கம் அன்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கோவி.கோபால் அனைவரையும் வரவேற்று பேசினார். இதழாளர் அசோகன் (அந்திமழை) தலைமையேற்க, ரா.அருள்வளவன் அரசு (காவேரி தொலைக்காட்சி), வீ.குமரேசன் (தி மார்டன் ரேசனலிஸ்ட்), ஆறாவயல் பெரியய்யா (நக்கீரன்) பங்கேற்று புத்தகங்களை விமர்சனம் செய்து உரையாற்றினர். கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கு புத்தகச் சங்கமத்தின் சார்பில் நினைவுப் பரிவு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.  தோழர் சுரேஷ் நன்றி கூறி நிகழ்வை இனிதே நிறைவு செய்தார்.

மூன்றாம் நாள் நிகழ்ச்சி 22.04.2018

மூன்றாம் நாள் புத்தகக் காட்சி வழக்கம் போல் 11 மணிக்கு தொடங்கியது. காலையிலிருந்தே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரளானோர் கலந்துகொண்டு அறிவை அள்ளித்தரும் ஆக்கப் பூர்வமான நூல்களை கொத்துக் கொத்தாய் அள்ளிச் சென்றனர்.

அன்று மாலை 6 மணியளவில் ‘இளைஞர்களும் வாசிப்பும்’ என்றத் தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

எமரால்டு பதிப்பக உரிமையாளர் கோ.ஒளிவண்ணன், கட்டுரையாளர் ஜெ.தீபலஷ்மி, எஸ் சிவக்குமார் (வி.ஞி., மி sஷீநீமீக்ஷீமீ), வழக்குரைஞர் பி.வி.எஸ்.கிரிதர், ஜெயநாதன் கருணாநிதி ஆகியோர் பங்கேற்று கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியை “புக் கிளப் ஆப் இந்தியா” என்ற அமைப்பு ஒருங்கிணைத்தது. கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவருக்கும் இயக்க வெளியீடுகள் வழங்கி சிறப்பு செய்தார்.

நான்காம் நாள் நிகழ்ச்சி 23.04.2018

சென்னை புத்தகச் சங்கமத்தின் நான்காம் நாள் புத்தகக் காட்சி காலை 11 மணிக்கு மிகுந்த எழுச்சியுடன் தொடங்கியது. காலையிலிருந்து புத்தகக் கண்காட்சியில் வாசகர்கள் கூட்டம் அலைமோதியது.

உலக புத்தகநாள் பெருவிழா – புத்தகர் விருது வழங்கும் விழா

உலக புத்தக நாள் பெருவிழா மற்றும் புத்தக விருது வழங்கும் விழாவிற்கு கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் வருகைத் தந்தார். விழாக்குழு சார்பில் கவிஞருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னை புத்தகச் சங்கமம் புத்தகக் காட்சி அரங்குகளை கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் பார்வையிட்டார். பின்னர் புத்தக காட்சி அரங்கத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வருகை தந்தார். கவிஞர் கலி.பூங்குன்றன் கவிஞர் வைரமுத்துவிற்கு பயனாடை அணிவித்தார். சென்னை புத்தகச் சங்கமம் இயக்குநர் வீ.அன்புராஜ் புத்தகங்களை வழங்கினார்.    வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் எழுதிய தன் வரலாறு நூலை கவிப் பேரரசு அவர்களுக்கு பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.

மேலும், உயிர்மை பதிப்பகத்தின் “ஆண்டாள் – ஆன்மீகம் – அரசியல் – வைரமுத்து கட்டுரையை வாசிப்பது எப்படி?’’ என்ற புத்தகத்தை கவிப் பேரரசு வைரமுத்து வெளியிட, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெற்றுக் கொண்டார். இயக்க புதிய வெளியீடுகளான, “பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி’’, அம்பேத்கரின் “இராமன்_இராமாயணம், கிருஷ்ணன்_கீதை’’, ஆங்கில நூலான “Neet – Why?ஆகிய மூன்று புத்தகங்களையும் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட, புலவர் பா.வீரமணி பெற்றுக்கொண்டார். சென்னை புத்தகச் சங்கமத்தின் 2018ஆம் ஆண்டுக்கான ‘புத்தகர் விருது’ வேலூர் பா.லிங்கம், பேராசிரியர் வீ.அரசு, பூம்புகார் பதிப்பகம் பிரதாப் சிங் சார்பாக ரெஜினால்ட் ராஜ் ஆகியோருக்கு கவிப்பேரரசு வைரமுத்து வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். புத்தகர் விருது பெற்ற பெருமக்கள் ஏற்புரையாற்றினர்.

விழாவில் கவிஞர் கலி.பூங்குன்றன், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், சுப.குணராஜன், ஆகியோர் கருத்துரை வழங்கினர். பின்னர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சிறப்புரையாற்றினார். நிறைவாய் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் நன்றிகூற விழா இனிதே நிறைவடைந்தது.

அய்ந்தாம் நாள் நிகழ்ச்சி 24.04.2018

சென்னை புத்தக சங்கமத்தின் புத்தகக் காட்சி காலை 11 மணிக்கு மிகுந்த உற்சாகத்துடன் துவங்கியது. அன்று மாலை “நான் ஏன் (சு)வாசிக்கிறேன்?’’ என்னும் தலைப்பில் நடைபெற்ற உரையரங்கில் பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார். சென்னை புத்தகச் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர். சென்னை பதிப்பகம் வேணுகோபால் கருத்துரை வழங்கினார். அடுத்த தலை முறையினருக்கு புத்தங்களை வாசிக்கின்ற பழக்கத்தை உருவாக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கவிஞர் ஜோ.மல்லூரி சிறப்புரையாற்றினார். உடுமலை வடிவேல் நன்றியுரைகூற விழா இனிதே நிறைவுற்றது.

நிறைவு நாள் நிகழ்ச்சி 25.04.2018

நிறைவுநாள் என்பதால் முற்பகல் 11 மணிமுதல் வாசகர்கள் வந்தவண்ணமிருந்தனர்.

மாலை நிறைவு நிகழ்வு த.க.நடராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழோவியன் வரவேற்புரையாற்ற, எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்கள், “நூலெனப்படுவது’’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நூல் எப்படியிருக்க வேண்டும்; எப்படியிருக்கக் கூடாது; வாசகர் எதைப் படிக்க வேண்டும்; எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார். நிறைவாய் சு.விமல்ராஜ் நன்றிகூற விழா மிகச் சிறப்பாய் நிறைவுற்றது. அனைத்து நாள் அரங்க நிகழ்வுகளையும் சென்னை புத்தக சங்கம ஒருங்கிணைப்பாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

சென்னை புத்தகச் சங்கமத்தில் குழந்தைகளுக்கான புத்தாக்கப் பயிற்சிகள் மற்றும் பரிசுப் போட்டிகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் நடைபெற்றன

ஏப்ரல் 21 அன்று குழந்தைகளுக்கு ‘கதை சொல்லல்’ என்ற தலைப்பில் “எப்படி கதை சொல்வது என்பதை எளிய முறையில் செயலாக்கத்துடன் அளிக்கப்பட்ட பயிற்சியும் பாங்கும் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அறிவுத் திறனை மேம்படுத்தின.

ஏப்ரல் 22 அன்று ஓவியப் போட்டியில் ‘பிளாஸ்டிக் சுற்றுச்சூழல் பாதிப்பு’ பற்றி குழந்தைகள் சிறப்பான முறையில் ஓவியங்களாகத் தீட்டி பரிசுகள் பெற்றனர்.
ஏப்ரல் 23 _ அன்று ‘தவறின்றித் தமிழ் அறிவோம்’ நிகழ்வில் நற்றமிழின் அடிப்படை இலக்கணம் பற்றி குழந்தைகளுக்கு இலகுவாகப் புரியும்வகையில் கற்றல் பயிற்சி அளித்தனர்.

ஏப்ரல் 24 அன்று ‘அறிவியலாளரைக் கேளுங்கள்’ என்ற நிகழ்வில் குழந்தைகள் கேள்வி கேட்டு அறிவியலில் அய்யம் தெளிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *