ஆசிரியர் பதில்கள்

மே 01-15

வர்ண உணர்வால் நீதி கெட்டு வருகிறது!

கே:    டாக்டர் அம்பேத்கரை ஏற்று பெரியாரை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பியின் நோக்கு இருவரையும் ஒழிப்பதுதான், அணுகுமுறையில்தான் வேறுபாடு எனக் கொள்ளலாமா?
        – சீ. லட்சுமிபதி, தாம்பரம்
ப:    கேள்வியைக் கேட்டு பதிலையும் தந்துள்ள நண்பருக்கு எமது நன்றி! உங்கள் கருத்துக்கு 100க்கு 100 மதிப்பெண்கள்!!

கே:    நீதித்துறையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வர் பேசி இருப்பதும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளும் உணர்த்தும் உண்மை என்ன?
        – மா.வேல்முருகன், வேலூர்
ப:    அங்கு வர்ணமும் வர்க்கமும் உள்நீரோட்டமாக இழையோடுவதால் _ நீதி கெட்டு வருகிறது! வர்ணப் பார்வையே!

கே:    விசுவஇந்து பரிஷத் அமைப்பில் இருந்து பிரவீன் தொகாடியா விலகியதில் இருப்பது அவ்வமைப்பு மோதலின் உச்சிக்கே சென்றுவிட்டதன் அடையாளம்தானே!          –     – வே.காளியப்பன், சேலம்
ப:    அது மட்டுமா? ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்றவர்கள் தங்களிடம் மாறுபடுபவரை ‘அழிக்க’ எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது இதிலிருந்து புரிகிறதா? திரிசூலத்தை எடுத்தவர் என்கவுண்டருக்குப் பயந்து மருத்துவமனையில் பதுங்க வேண்டிய நிலைதான் மோடி ராஜ்யத்தில்!

கே:    பி.ஜே.பி ஆளும் குஜராத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதால், சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும்; சிறார் வயது வரம்பு குறைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தைத்தானே காட்டுகின்றன?    
      ——-தே.பாலசுப்பிரமணி, திண்டிவனம்
ப:    அதை, அண்மையில் திட்டமிட்டே ஜம்முகாஷ்மீர் கத்துவா என்ற இடத்தில் 8 வயது சிறுமியை _ அவள் ஒரு முஸ்லீம் பெண் என்பதற்காக _ பா.ஜ.க. கும்பல் கோஷ்டியாக வன்புணர்ச்சி _ பிறகு கொலை நடத்தி, ஹிந்து ராஷ்டிரத்தின் ஒத்திகை கொடுமையாக, கோரமாக நடந்துள்ளதை உணர்த்துகிறது!

கே:    மதவாத சக்திகளுடன் என்றைக்கும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று டி.டி.வி.தினகரன் திட்டவட்டமாகக் கூறியிருப்பது கொள்கைத் தெளிவா?
        –     -தோ.மாரிமுத்து, உடுமலை
ப:    கொள்கைத் தெளிவுதான் –_ Expediency_ ‘சந்தர்ப்ப சூழ்நிலை அரசியல் அல்ல’ என்பதால் நிச்சயம் வரவேற்கலாம்!

கே:    தேர்தலில் பெறும் வாக்கு அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது சமூகநீதித் தத்துவத்தை வளரச் செய்யுமா?    
        – இல.சங்கத்தமிழன், செங்கை
ப:    வாக்கு அடிப்படை விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அரசியல் என்பதற்கும் _ சமூகநீதி _ இடஒதுக்கீடு _ வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்றவைகளும் வெவ்வேறானவை!

கே:    இடஒதுக்கீடு முறையால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று மத்தியப் பிரதேச அமைச்சர் கோபால் பார்கவா கூறியுள்ளது அறியாமையாலா, ஆதிக்க வெறியாலா?
-தா.செண்பகப் பிரியா, திருவள்ளூர்
ப:    பார்கவா என்பவர் பார்ப்பனர்; பார்ப்பனர் எவருக்கும் இடஒதுக்கீடு இனிக்கவா செய்யும்? பா.ஜ.க. _ ஆர்.எஸ்.எஸ். உண்மைக் குரலை அவர் பதிவு செய்துள்ளார்!

கே:    ‘காவியின் தூதுவர் ரஜினிகாந்த்’ என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா சாடியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
              – -மா.சுந்தரமூர்த்தி, திருச்சி
ப:    “உண்மை ஒரு நாள் வெளியாகும்; அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்’’ என்ற பட்டுக்கோட்டை கவிஞரின் நினைவுவருகிறது!

கே:    தர்பைப் புல் ஏந்திய கைகள் கடப்பாரையை எடுக்கத் துடிப்பது எதனைக் காட்டுகிறது?
      – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப:    பார்ப்பனரின் புதிய துணிவு நாடகத்திற்கும் அதற்கு காரணமான மத்திய, மாநில ஆட்சிகளின் பின்புலத்தையும் காட்டுகிறது! குரைப்பது கடிக்காது!

கே:    கோர்ட் அவமதிப்பு வழக்கில் தனி நபருக்கு சிறைதண்டனை வழங்கும் நீதிபதிகள், கோர்ட்டை அவமதிக்கும் அரசுக்கு (அ) அரசுக் கட்டிலில் இருப்போருக்கு கடுமையான தண்டனையை வழங்க முடியாதா?
        – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
ப:    தீர்ப்பில் எவ்வளவு கடுமையினையும் வழங்கத்தான் அவர்களால் முடியும். செயல்படுத்த முடியாதே! என்ன செய்ய?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *