கல்வி இலாகாவில் பார்ப்பன ஆதிக்கம்

மே 01-15

1935ஆம் ஆண்டுகளில் கல்வித்துறையில் இருந்த பார்ப்பன ஆதிக்கத்தை கண்டித்து ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியான கட்டுரை.

விருதுநகர் மகாநாட்டில் தோழர்கள் சி.டி. நாயகம் அவர்களும், ஈ.வெ.ரா. அவர்களும் சர்க்கார் உதவி பெறும் பள்ளிக் கூடங்களில் உபாத்தியாயர் நியமனம் செய்யப்படும் விஷயங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையைக் கையாளும்படி சர்க்கார் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அந்தப்படி நியமனம் செய்யாத பள்ளிக்கூடங்களுக்குச் சர்க்கார் உதவித் தொகை கொடுக்கக் கூடாது என்றும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை கல்வி மந்திரி அவர்கள் வேண்டுகோளின் பேரிலும், மகாநாட்டுத் தலைவர்  தோழர் ராமசாமி முதலியார் அவர்கள் வேண்டுகோளின் பேரிலும் வாபீஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால், இன்று பார்ப்பனர்கள் ஆதிக்கம் உள்ள பள்ளிக் கூடங்களில் அநேகமாக பியூன், வாசல் கூட்டி தவிர மற்றெல்லோரும்  பார்ப்பனர்களாகவே நியமிக்கப்பட்டிருப்பதும், பார்ப்பனரல்லாதார் ஆதிக்கமுள்ள பள்ளிக் கூடங்களிலும் 100-க்கு 75, 90 பார்ப்பனர்களாக நியமிக்கப்பட்டிருப்பதும் யாரும் மறுக்க முடியாது.

சென்னையில் பார்ப்பன பிரமுகர்களான தோழர்கள் சர். சிவசாமி அய்யர், சர். சி.பி. இராமசாமி அய்யர், சர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், வெங்கிட்டராம சாஸ்திரியார், சீனிவாச சாஸ்திரியார் ஆகியவர்கள் நிர்வாகஸ்தராய் இருக்கும் பள்ளிக்கூடங்களிலேயே பார்ப்பனரல்லார் என்கின்ற காரணத்துக்காகவே தோழர் எஸ். குஞ்சிதம் பி.ஏ.,எல்.டி.யை வேலையில் இருந்து எடுத்துவிட்டதும், மற்றும் இரண்டு பார்ப்பனரல்லாத பெண்களை வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டதும் அவைகளுக்குப் பதிலாக பார்ப்பனர்களை நியமித்துக் கொண்டதுமான காரியங்கள் நடந்தது என்றால் மற்ற பள்ளிக்கூடங்களில் பார்ப்பனரல்லாத உபாத்தி மார்களுக்கு இருந்துவரும் தொல்லைகளைக் குறிப்பிட வேண்டுமா? என்று கேட்கின்றோம்.

இது ஒரு புறமிருக்க, சென்ற வாரம் கோபி செட்டிப்பாளையம் டைமெண்ட் ஜுபிளி அய்ஸ்கூல் நிகழ்ச்சிகளை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

அந்தப் பள்ளிக்கூடம் பெரிதும் பார்ப்பனரல்லாதார் பணத்திலேயே கட்டப்பட்டதாகும். அதன் ஆஸ்டலும் 100-க்கு 60 பாகம் பார்ப்பனரல்லாதார் பணமாகும். அதில் படிக்கின்றவர்கள் 100-க்கு 90 பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் ஆகும். அப்படி இருந்தும் அதன் உபாத்தியாயர்கள் 16 பேர்களில் 14 பேர்கள் பார்ப்பனர்கள்.
இந்த நிலையில் ஒரு எல்.டி. உபாத்தியாயர் வேலைக்கு அந்த ஊர்க்காரரும், அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தவரும், அந்தப் பள்ளிக்கூடத்தில் 100-க்கு 75 பேர்களாக படிக்கும் வேளாளக் கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவரும் அந்தப் பள்ளிக்கூடத்தின் மூலமாகவே எல்.டி. பரீட்சைக்கு அனுப்பப்பட்டவருமான ஒருவர் ஒரு விண்ணப்பம் போட்டிருந்தார் மற்றும் ஒரு பார்ப்பனரும் விண்ணப்பம் போட்டிருந்தார், இந்நிலையில் சர்க்கார் அதிகாரிகளுடைய பிரவேசத்தின் பயனாய் அந்த உத்தியோகம் ஒரு பார்ப்பனருக்கே போய்விட்டது.

சம்பளமும் பேனா போன வரையில் நீட்டி 80 ஆக்கி அங்கேயே செய்யப்பட்டு விட்டது.

பார்ப்பனரல்லாத வக்கீல் ஒருவர் பார்ப்பன முனிசீப்புக்கு பயந்து கொண்டு மீட்டிங்குக்கே வரவில்லையாம். இரண்டொரு பார்ப்பன ரல்லாத மெம்பர்கள் அதிகாரிகளுக்குப் பயந்து கொண்டு பார்ப்பன உபாத்தி யாயருக்கே அனுகூலமாய் இருந்தார்களாம்.

ஒரு பார்ப்பனரல்லாத மெம்பரும், பொது உலகில் பிரபலஸ்தருமான தோழர் ஒருவர் இது என்ன பார்ப்பன ஆதிக்கமா? என்று கூப்பாடு போட்டும், ஒன்றையும் லட்சியம் செய்யாமல் அதிகார செல்வாக்கினாலேயே காரியத்தை சாதித்துக் கொண்டார்களாம்.

இனியும் எத்தனையோ பள்ளிக்கூடங்களில் இதைவிட மோசமாக எவ்வளவோ காரியங்கள் நடைபெறுகின்றன. ஆகவே, படிப்பு விஷயத்தில் நேர்மை வேண்டும் என்று கருதினால், கண்டிப்பாக உபாத்தியாயர்கள் விஷயத்தில் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற வகுப்புவாரி கணக்குப்படி உபாத்தியாயர் நியமனம் செய்தாக வேண்டும்.

அந்தப்படி இல்லாத வரை சர்க்கார் கிராண்டை நிறுத்திவிட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

ஈரோடு அய்ஸ்கூல் சமீபகாலம் வரை 50, 60 வருஷ காலமாகவே பார்ப்பன ஆதிக்கமாய் இருந்து ஏதோ சமீப காலத்தில் 2, 4 பார்ப்பன ரல்லாத உபாத்தியாயர்கள் நியமிக்கப்பட நேர்ந்தும் கல்வி இலாகாவில் உள்ள பார்ப்பன அதிகாரிகளால் எவ்வளவோ கஷ்டத்துக்கு உள்ளாக வேண்டி இருந்தது. பள்ளிக்கூட ‘ரெக்கக்நேஷனை’ வித்திட்றா செய்து கொள்ளுவதற்காகக்கூட அதிகார தோரணையில் உத்தரவுகள் அனுப்பப்பட்டது.

அவ்வளவோடு அல்லாமல் நீதி இலாகாவிலும் பார்ப்பன நீதிபதிகளால் பார்ப்பன உபாத்தியாயர்களுக்கு நஷ்டம் கொடுக்க தீர்ப்புக் கூறப்பட்டது.

பள்ளிக்கூட உதவித் தொகைகள் நியாயமாய் கொடுக்கப்படாமல் மறுக்கப்பட்டது. இன்னும் நடந்த கஷ்டங்கள் சொல்ல முடியாது. கடைசியாக நிர்வாகத்திலும் கட்சி, பிரதிக் கட்சிகள் உண்டாக்கப்பட்டது. இவ்வளவு கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாகிக் கொண்டு ஒன்று, இரண்டு பார்ப்பனரல்லாதாரை நியமிக்கக் கூடியதாய் இருந்தால், மற்றபடி இவ்வளவு கஷ்டத்தையும் சகித்துக் கொள்ள யார் சம்மதிப்பார்கள் என்பதை வாசகர்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பள்ளிக்கூட கமிட்டி மெம்பர் சாதாரண வியாபாரிகள், கிராம மிராசுதாரர்கள் ஆகியவர் களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் ஒரு முனிசீப்புக்கும், ஒரு டிப்டி கலெக்டருக்கும், ஒரு வக்கீலுக்கும் பயப்படாமல் இருக்கும்படியான நிலையில் இன்று ஆட்சி நிர்வாகம் இல்லை.

ஒரு சாதாரண போலீஸ் இன்ஸ்பெக்டர், சப். இன்ஸ்பெக்டர் எவ்வளவோ காரியத்தைச் செய்து எப்படிப்பட்டவர்களுக்கும் தொல்லையை விளைவித்து விடுகிறார்கள் என்றால், பெரிய அதிகாரிகள் மனஸ்தாபத்துக்கு இந்த ஆசாமிகள் எப்படி பாத்திரமாக முடியும்?

மதுரை தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் தானமாகக் கொடுத்து 100க்கு 50 உபாத்தியாயர்களாவது பார்ப்பன ரல்லாதாராய் இருக்கட்டும் என்று கெஞ்சினார். அதற்கே சம்மதிக்காத வன்நெஞ்சக் கூட்டம் சும்மா ஒரு வாத்தியாரை நியமிக்க சம்மதிக்கக் கூடும் என்று எந்தப் பைத்தியக்காரனும் நினைக்க முடியாது என்பதோடு, காரியத்தில் சுலபத்தில் நடக்கக்கூடிய காரியமும் அல்ல என்போம். ஆதலால் தனிப்பட்டவர்கள் நிர்வாகத்திலுள்ள பள்ளிக் கூடங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி உபாத்தி யாயர்கள் நியமனம் செய்யப்படும்படியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நிற்க எல்.டி.டிரெய்னிங்குக்கு உபாத்தியாயர்களை எடுப்பதில் 4, 5 வருஷங்களுக்காவது பார்ப்பனர்களுக்கு இடமில்லாமல் செய்து பார்ப்பனரல்லா உபாத்தியாயர்களையே சேர்க்கும்படி செய்ய வேண்டும் என்றும், பார்ப்பனரல்லாத பெண்களுக்குத் தாராளமாய் இடம் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம். இந்தப்படி செய்ய முடியாவிட்டால் எல்.டி. வகுப்புக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறைப்படியாவது அமர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

– ‘குடிஅரசு’ – கட்டுரை – 19.05.1935
(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *