பண்பாளன்
சேலத்தைச் சார்ந்த மாற்றுத் திறனாளியான அனுராதா அரசுப் பணியில் இருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வே எழுத முடியாத சூழலிலிருந்து, இன்று சேலம் வேளாண் பொறியியல் துறை உதவியாளராக உயர்ந்திருப்பது வரை இவர் கொடுத்திருக்கும் உழைப்பு அபாரம்.
இரண்டு வயதில் இவருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டது. உடல்நிலை சரியில்லாமல் அப்பாவும் இறந்துவிட்டார். போலியோ பாதிப்பு, அப்பாவின் இறப்பு என்று பெரிய கஷ்டங்களைக் கடந்தபோதும் ‘உன்னால் முடியாதது எதுவுமில்லை’’ என்று இவரது அம்மா தன்னம்பிக்கையை ஊட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்.
இடுப்புக்குக் கீழ் முழுமையாய் செயலிழந்த அனுராதாவை கடும் பொருளாதார சிரமங்களையும் மீறி, மருத்துவ சிகிச்சைக்கு அம்மாவும், பாட்டியும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதன் பலனாய் படுக்கையிலிருந்து தவழ்ந்து நடக்கும் அளவுக்கு அனுராதா முன்னேற்றமடைந்திருக்கிறார். பிறகு ட்ரை சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டு சுயமாக வெளியிடங்களுக்குப் போக வரத் தொடங்கியிருக்கிறார்.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போக பரீட்சை எழுத முடியவில்லை. அதற்காக வீட்டிலேயே முடங்கிவிடாமல் இருக்க, கம்ப்யூட்டர் உள்பட பல கோர்ஸ்களை படித்திருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர வழியில் பி.காம்., எம்.காம். மற்றும் பி.ஏ. இந்தி முடித்து குரூப் 4 தேர்வுக்கு தயாராகியிருக்கிறார்.
சேலத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பயிற்சி கொடுக்கும் அதியமான் அவர்களிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு, நான்கு வருடங்கள் நிறைய போட்டித் தேர்வுகளை எழுதியிருக்கிறார். அனுராதாவின் தொடர் முயற்சியாலும், கடின உழைப்பாலும் ஒரு நாள் வெற்றி வசப்பட்டிருக்கிறது.
2012இல் குரூப் 4 தேர்வில் தேர்வாகி சேலம் வேளாண் பொறியியல் துறையில் டைப்பிஸ்ட்டாக பணி கிடைத்திருக்கிறது.
பணியில் சேர்ந்த 3 ஆண்டுகளில் அம்மாவும் இறந்து விட மனம் தளராமல் தன் பணியில் கடினமாக உழைத்ததன் பலனாக 2016ஆம் ஆண்டு வேளாண் பொறியியல் துறை உதவியாளராக பதவி உயர்வு கிடைத்திருக்கிறது. இதற்கிடையே பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, பி.ஏ. ஆங்கிலமும் படித்திருக்கிறார்.
“திருமணம் ஒன்று இருந்தால் அரசு வேலைக்குப் போன பிறகுதான் என்பதில் உறுதியாய் இருந்தேன். இப்போது திருமணம் என்பதைவிட, சக மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு என்னாலான உதவிகளை, வழிகாட்டல்களைச் செய்யணும் என்பதில்தான் ஆர்வம் இருக்கு. எனது அடுத்த லட்சியமே குரூப் 2 தேர்வு எழுதி வெற்றி பெறுவது தான்’’ என்று உறுதியாய்க் கூறுகிறார் அனுராதா. மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் மனம் தளராது, குடும்ப உறுப்பினர்களின் இழப்புகளையெல்லாம் பொருட்படுத்தாது உழைத்து, படித்து பல பட்டங்களைப் பெற்று சுயமாய் முன்னேறி இருக்கும் அனுராதாவை பாராட்டுவதோடு அவரின் லட்சியங்கள் நிறைவேற நெஞ்சார வாழ்த்துவோம்!