ஏரி காத்தான்

மே 01-15

ஆறு.கலைச்செல்வன்

இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் போதும். ஏரி நிரம்பி வழிய ஆரம்பித்துவிடும். அப்புறம் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து, வீடுகள் தண்ணீரில் மிதக்கும். இப்படிப்பட்ட நிலையே மணப்பட்டு கிராமத்தில் காணப்பட்டது.

தொடர்ந்து ஒரு வாரமாகக் கடும் மழை. மக்கள் வெளியில் வரவே முடியவில்லை. மின்சாரமும் தடைப்பட்டுவிட்டது. செய்வதறியாது ஊர் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். சிலர் அவ்வப்போது வெளியில் வந்து ஏரியின் நிலைபற்றி அறிந்து கொண்டனர்.

அந்த ஏரியின் பெயர் காட்டேரி. மழை பெய்தால் மட்டுமே ஏரி நிரம்பும். கடந்த சில ஆண்டுகளாக அதிக மழை இல்லாததால் வறண்டே கிடந்தது. அதனால் அதன் கரையும் சரியாகப் பராமரிக்கப்படாமல் பலகீனமாகவே காணப்பட்டது.  எதிர்

பாராமல் இந்த ஆண்டு நல்ல மழை பெய்கிறது. ஏரி நிரம்பி வழிய ஆரம்பித்தால் கரை கண்டிப்பாக உடையும் ஆபத்தும் உள்ளது.

அந்த ஊர் நெடுஞ்சாலையிலிருந்து பல கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள கிராமம். யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் உதவிக்கும் வந்துவிட முடியாது. கிராம மக்கள் என்ன செய்வ தென்றே தெரியாமல் தவித்தனர். மின்சாரம் இல்லாததால் வெளி உலகச் செய்திகளும் அந்த ஊருக்கு எட்டவில்லை.

அந்த மணப்பட்டு கிராமத்தில் இரண்டு தெருக்கள் மட்டுமே இருந்தன. இரண்டு தெருக்களை ஒட்டியும் இரண்டு வாய்க்கால்கள் இருந்தன. வாய்க்கால்கள் ஏரியிலிருந்து தொடங்கி, தூரத்தில் உள்ள ஆறுவரை சென்றன.

சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் சற்றுநேரம் மழை ஓய்ந்தது. அப்போது சில இளைஞர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தனர். சற்று நேரத்தில் மற்றவர்களும் குளிரில் போர்வையைப் போர்த்திக்கொண்ட நிலையில் வெளியே வந்தனர். அனைவர் முகத்திலும் கவலை ரேகைகள் படர்ந்திருந்தன. பலரும் வானத்தை அண்ணாந்து பார்த்து மழை இனிமேலாவது விட்டுவிடுமா? என எண்ணத் தொடங்கினர்.

சற்று தூரத்தில் காட்டேரியில் தண்ணீர் மழை நீருடன் செம்மண் நிறத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஊருக்குள் நுழைய தக்கத் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாகப் பலரும் நினைத்தனர்.

செல்வராசு என்பவனும் பக்கத்துத் தெருவில் உள்ள தன் வீட்டை விட்டு வெளியே வந்து ஊர் மக்களிடம் பேச்சுக் கொடுத்தான்.

“ஏரி உடையாமல் இருக்கவும், ஊர் தண்ணீரில் தத்தளிக்காமல் இருக்கவும் ஒரே வழிதான் இருக்கு. நாம் அதைச் செய்வோமா?’’ என்றான்.

“என்ன வழி, சீக்கிரம் சொல்லுப்பா. செய்ஞ்சிறுவோம்’’ என்றார் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர்.

“நாளைக்கே ஏரிகாத்த விநாயகரைத் தூக்கி ஊர்வலம் வருவோம். அவர்தான் நம்மைக் காப்பார்’’ என்றான் செல்வராசு.

“ஆமாம், ஆமாம். அதுதான் நல்லவழி. ஒவ்வொரு வூட்டுக்கும் வரி போடுவோம். உயிர்போனாலும் பரவாயில்லை. எப்படியாவது டவுனுக்குப் போய் பூசைப் பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து விடுவோம். ஏரிகாத்த விநாயகன்தான் நம்மைக் காப்பாத்தனும்’’ என்று அவன் கூறியதற்கு ஆதரவாகப் பலரும் பேசினர்.

வீட்டிற்கு அய்நூறு ரூபாய் வரி என முடிவு செய்து உடனே வசூலையும் துவக்கினான் செல்வராசு. மாலை, அலங்காரப் பொருட்கள், பூசைப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வர சில இளைஞர்களை ஏற்பாடு செய்தான் செல்வராசு.

மழையாக இருந்தாலும், சேற்றில் சிக்கி கீழே விழுந்தாலும், விஷக்கடிகளுக்கு உள்ளானாலும் தூரத்தில் உள்ள நகருக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்துவிட வேண்டும் என்பது செல்வராசு அவர்களுக்கு இட்ட கட்டளை. அந்த இளைஞர்களும் பயந்துகொண்டு வாங்கி வருகிறோம் என்று தலையாட்டினர்.

இதையெல்லாம் பொறுமையாகக் கவனித்துக் கொண்டிருந்த அதே தெருவைச் சேர்ந்த கதிர்மதி மெல்ல கூட்டத்தினரை விலக்கிவிட்டு செல்வராசு இருக்கும் இடம் வந்தான்.

“செல்வராசு, ஏரிகாத்த விநாயகனுக்கு நம் மீது அக்கறை இருந்தால் நம்மைக் காப்பாத்தட்டுமே! அவனுக்கு லஞ்சம் கொடுப்பதுபோல் பூசை செய்து தெருத் தெருவாக இழுத்தால்தான் நம்மைக் காப்பானா?’’ என செல்வராசுவைப் பார்த்துக் கேட்டான்.

அவனை முறைத்துப் பார்த்த செல்வராசு, “ஆண்டவன் மனம் குளிர்ந்தால்தான் நாம நல்லாயிருக்கலாம்’’ என்றான்.

“இப்ப என்ன ஆண்டவன் மனம் ஹீட்டா இருக்கா? மழைதான் பெய்துகொண்டே இருக்குதே. உஷ்ணம் தணியவில்லையா? ஏரிகாத்த விநாயகனுக்கு ஏரியைக் காப்பதைவிட வேறென்ன வேலை? இத்தனை நாள் பண்ணின பூசைக்கெல்லாம் ஏதும் பயனில்லையா? அப்பப்ப லஞ்சம் தரணுமா?’’ எனச் சரமாரியாகக் கேட்டான் கதிர்மதி.

“நாம இப்ப ஊரில் வெள்ளம் வராமல் தடுக்க என்ன செய்யலாம்னு முடிவு செய்யக் கூடியிருக்கோம். அதுக்கு ஒரே வழி ஏரி காத்த விநாயகனுக்கு பூசை செய்து ஊரைச் சுற்றி தூக்கி வருவதுதான் சரியின்னு நான் சொல்றேன். நீங்க என்ன சொல்றீங்க?’’ என்று கூடியிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டான்.

பலரும் அவன் சொன்னதை ஆமோதித்தனர். ஒரு சிலரே ஏதும் பேசாமல் நின்று கொண்டிருந்தனர்.

கதிர்மதி மீண்டும் குறுக்கிட்டுப் பேசினான்.

“நான் சொல்றதை எல்லோரும் கவனமா கேளுங்க. ஏரிகாத்த விநாயகன் நம்மைக் காக்க மாட்டான். நாம்தான் நம்மையும் ஊரையும் காப்பாத்திக்கணும்.’’ இவ்வாறு கதிர்மதி பேசிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்த செல்வராசு,

“நீ என்ன சொல்லப்போறே! விநாயகரைத் தூக்கக் கூடாதுன்னு சொல்லப்போறே. அவ்வளவுதானே’’ என்றான்.

“ஆமாம். உண்மைதான். எத்தனை விநாயகன்தான் நாட்டில் இருக்கிறான்? ஒவ்வொரு விநாயகனுக்கும் டிபார்ட்மென்ட் பிரிச்சி விடப்பட்டுள்ளதா? இந்த விநாயகன் ஏரியை மட்டும்தான் காப்பாரா? மக்களைக் காப்பாத்த மாட்டாரா?

மழையை நிறுத்த மாட்டாரா? மக்களைக் காப்பாத்த மாட்டாரா?  இத்தனை ஆண்டுகளாக ஏரி வறண்டு போயிருந்ததே! அப்போது இந்த விநாயகன் என்ன செய்தான்? மழையைக் கொடுத்தானா? ஏரியை நிரப்பினானா? வேண்டாம், பேசுவதற்கு நேரமில்லை. உடனே நல்ல முடிவு எடுக்க வேண்டும். நான் சொல்றதைக் கேளுங்க’’ என்றான் கதிர்மதி.

ஒரு சிலர் மட்டும் அவன் பக்கம் திரும்பி என்ன செய்ய வேண்டுமென்றுக் கேட்டனர்.

“நம்ம ஊரில் ரெண்டு தெருக்கள் இருக்கு. ரெண்டு தெருக்கள் பக்கத்திலும் வாய்க்கால்கள் இருக்கு. அதிலெல்லாம் ஆகாயத்தாமரை, கதண்டுகள் ரொம்ப முளைத்து அடைச்சிகிட்டு இருக்கு. அதையெல்லாம் நீக்கி வாய்க்காலை சரி செய்தால் ஏரிக்கரை உடைந்தாலும் தண்ணீர் விரைந்தோடி ஆற்றில் சேர்ந்து விடும்’’ என்றான் கதிர்மதி.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் அதாவது பத்து பேர் மட்டுமே கதிர்மதி பேச்சைக் கேட்டனர்.

அதுவும் அவர்கள் கதிர்மதி தெருவில் வசிப்பவர்கள். ஏரி காத்த விநாயகனைத் தூக்கும் திட்டத்திற்கு மற்றவர்கள் ஆதரவு தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

செல்வராசு பணம் வசூல் செய்துகொண்டு சிலருடன் பூசைப் பொருட்கள் வாங்க நகரை நோக்கிப் புறப்பட்டான்.

கதிர்மதி தன்னுடன் சேர்ந்த பத்து பேருடன் கத்தி, மண்வெட்டி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தங்கள் தெரு பக்கம் இருக்கும் வாய்க்காலை முதலில் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். நல்ல குளிர். மழையும் இலேசாக பெய்ய ஆரம்பித்தது. இருப்பினும் எதையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டனர்.
வேலை செய்து கொண்டிருக்கும்போதே ஒரு இளைஞன் கதிர்மதியிடம் கேட்டான்.

“-ஏம்பா கதிர்மதி. இந்த வேலையெல்லாம் அரசாங்கம் நமக்கு செய்ஞ்சிகொடுக்காதா? நாம்தான் செய்ய வேண்டுமா?’’

“மனு கொடுத்துப் பார்த்தாகிவிட்டது. ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. இப்ப அதைப் பற்றி யோசிக்க நேரமும் இல்லை. நம்மோடு நம் ஊரையும் நாம்தான் காப்பாற்ற வேண்டும்’’ என்று பதில் கூறியபடி வேலையைத் தொடர்ந்தான் கதிர்மதி.

கதண்டுகளாலும், ஆகாயத் தாமரைகளாலும் கைகால்களில் அரிப்பு ஏற்பட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பணிகளை மேற்கொண்டனர். அதேவேளையில் செல்வராசு பூசைப் பொருட்களை வாங்கி வந்து அன்று இரவே பிள்ளையார் சிலையைத் தூக்கிக்கொண்டு ஊர்வலம் நடத்தினான். பலரும் பிள்ளையார் சிலையிடம் ஊரைக் காக்க வேண்டினர். தேங்காயும் உடைத்தனர்.

பொழுதுவிடிந்தது. காலை நேரத்திலேயே மழையும் ஆரம்பித்துவிட்டது. கதிர்மதி தனது நண்பர்களுடன் அதே வேலையைத் தொடர்ந்து செய்தான். அவர்கள் தெருவில் ஓடிய வாய்க்காலை வெட்டி நன்றாக சீர் செய்து விட்டார்கள்.

அதையடுத்து செல்வராசு இருக்கும் அடுத்தத் தெருவில் தங்கள் பணியினைத் தொடரச் சென்றனர். செல்வராசுவும் மற்றவர்களும் அவர்களை ஏளனமாகப் பார்த்தனர்.

“கதிர்மதி, பிள்ளையாருக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செய்தாகி விட்டது. இனிமேல் ஏரியைப் பற்றி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. எல்லாத்தையும் அந்த ஏரி காத்த விநாயகர் பார்த்துக்கொள்வார். எங்களை மட்டுமல்ல, உங்களையும் அவர் காப்பாற்றுவார். எங்க தெருவில்தான் கோயிலும் இருக்கு. நீங்க உங்க வீட்டுக்குப் போய் வேற வேலையிருந்தா பாருங்க’’ என்று கிண்டலடித்தான் செல்வராசு.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்கள் பணியில் ஈடுபட்டபோது கடும் மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. அதோடு காற்றும் பலமாக வீசியது. அவர்களால் வேலை செய்ய முடியவில்லை.

மின்னலைத் தொடர்ந்து இடியோசையும் பலமாகக் கேட்டது. அதேநேரத்தில் மக்களின் கூக்குரலும் ஏரி இருக்கும் திசையில் பலமாகக் கேட்டது. அனைவரும் ஏரியை நோக்கி ஓடினர். ஏரியைப் பார்த்த அவர்கள் அப்படியே திகைத்து நின்றனர். காரணம் அதன் கரை சற்றே உடைந்து வெள்ள நீர் ஊரை நோக்கி பாய்ந்தோடியது. கதிர்மதியும் நண்பர்களும் வேலைசெய்த வாய்க்காலில் தண்ணீர் தலைகீழாக ஓடி ஆற்றில் கலந்தது.

ஆனால், செல்வராசுவின் தெருவில் இருந்த வாய்க்கால் தூர்ந்து போய் கிடந்ததால் தண்ணீர் ஓட வழியில்லாமல் வெள்ள நீர் எகிறி வீட்டுக்குள் புகுந்தது. அந்தத் தெரு மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அப்போது அங்கு ஓடிவந்த கதிர்மதி அந்தத் தெருவில் உள்ள அனைவரும் தன்னுடைய தெருவிற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டான். செல்வராசு தன் பெற்றோர்களையும் மற்றவர்களையும் அனுப்பிவைத்தான்.

அவர்கள் சென்ற அடுத்த நிமிடம் நீர்வரத்து அதிகரித்து பெரும் இரைச்சலுடன் ஆர்ப்பரித்து ஓடியது.

கதிர்மதியும் செல்வராசுவும் அந்த இடத்திலிருந்து விரைந்து செல்ல எத்தனித்தபோது வெள்ள நீர் சூழ்ந்து கொண்டு முழங்கால் வரை ஓடியது. அப்போது ஏதோ ஒரு பெரிய பொருள் அவர்கள் காலில் மோதியது. அது ஏதோ பெரிய நீண்ட கல்போல் தோன்றியது. கதிர்மதி அதைப் பிடித்து தண்ணீருக்கு மேலே தூக்கினான். அதைப் பார்த்த செல்வராசு “ஆ’’வென அலறினான். காரணம், அது ஏரி காத்த விநாயகனின் சிலை. கோயிலிலும் வெள்ள நீர் புகுந்ததால் அந்த சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ளது.

“கதிர்மதி, நாங்களும் உன் பேச்சைக் கேட்டு இந்த வாய்க்காலை சரி செய்திருந்தால் எங்கள் தெருவும் பாதுகாப்பாக இருந்திருக்கும். இப்போ வீடு பூராவும் வெள்ளம் புகுந்துவிட்டது. தன்னையே காத்துக் கொள்ள முடியாத விநாயகனை நம்பி மோசம் போய்விட்டோமே! உண்மையாக ஏரி காத்தவன் யார் என்று இப்போதுதான் எனக்குப் புரிந்தது. இனி கனவில் கூட இந்த விநாயகனை நினைக்க மாட்டேன்’’ என்று செல்வராசுவின் வாய் முணுமுணுத்தது.

அதைக் காதில் வாங்கிய கதிர்மதி மெல்லச் சிரித்துக்கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *