பெரியார் பேருரையாளர் அ.இறையன்
சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் திரு.ரெங்கசாமி திருமதி. பொன்னுத்தாய் ஆகியோரின் மகளாய்ப் பிறந்து, அந்தக் காலத்திலேயே விடாப்பிடியாக நின்று தந்தை பெரியாரவர்களை மணம் புரிந்து கொள்ளுவதில் வெற்றியடைந்த அன்னை நாகம்மையார், துணைவி எனும் சொல்லுக்குரிய அத்தனை விளக்கங்களுக்கும் ஏற்ப, துணையாகத் திகழ்ந்தார்.
தொடக்கத்தில்அய்யா அவர்களின் புரட்சியான சுயமரியாதைக் கருத்துக்களை முழுமையாக ஒப்புக் கொண்டு நடப்பதில் அன்னையார் தயக்கம் காட்டினாரென்றாலும், சில காலத்திற்குள் உண்மைகளை ஆழமாக உணர்ந்து தெளிவடைந்து, பின்னர் தம் வாழ்நாள் முழுவதையும் சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்கென்றே ஒப்படைத்துக் கொண்டார்.
படிப்படியாக மேடைப்பேச்சு நிகழ்த்தும் அளவுக்கு ஆற்றல் பெற்றுவிட்ட அம்மையார், தம் துணைவரின் அண்ணன் திரு.ஈ.வெ.கி. அவர்கள் தலைமை தாங்கிய உண்மை நாடுவோர் சங்கத்தில் ‘தோழர் கிருஷ்ணசாமி’ என்று விளித்து கூடியிருந்த மகளிருக்கெல்லாம் பேரதிர்ச்சியை விளைவிக்கக்கூடிய அளவுக்குப் புரட்சிப் பெண்மணியாக உயர்ந்துவிட்டார்!
“நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல’ என்றும், “எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார்’’ என்றும் தந்தை பெரியார் அவர்களே பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்க வீரர் எண்ணற்றோருக்கு மலர்ந்த முகத்தோடும் இனிய சொற்களோடும் பல்வகை உணவுகள் வழங்கி, அவர்களின் உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, ஊக்கத்திற்கு உரமிட்ட அன்னையை நன்றியுடன் பாராட்டி மகிழாத தொண்டர் எவரும் இல்லை.
அக்காலத்தில் சுயமரியாதைத் திருமணம், கலப்பு மணம், விதவை மணம் செய்யத் துணிந்து முன்வந்தோர் பலரை அன்னையார் தம் இல்லத்திலேயே சில காலம் வைத்திருந்து அரவணைத்து, ஊக்கமொழிகள் உரைத்து, பிறகு அவர்கள் விரும்பும் ஊர்களில் தனிக்குடித்தனம் வைத்து சில நாட்கள் ஆறுதலாக உடனிருந்துவிட்டு ஊர் திரும்புவார்.
இயக்க நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள அம்மையார் தவறவில்லை. சுயமரியாதை மாநாடுகளில் பெரும் பங்காற்றி நிறையத் திராவிட மகளிரைக் கவர்ந்திழுத்து இயக்கத்திற்குக் கொணர்ந்தார் சுயமரியாதை மணங்களைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
தந்தை பெரியாரவர்கள் தொடங்கிய ‘குடிஅரசு’ என்னும் சுயமரியாதை இயக்க இதழ் வெளியார் அச்சகத்தில் அச்சாகிய நிலை மாறி, முதன்முறையாக ‘உண்மை விளக்கம்’ எனும் சொந்த அச்சகத்தில் 9.1.1927 முதல் அம்மையாரைப் பதிப்பாளராகக் கொண்டு வெளியிடப்பட்டது. அப்பொறுப்பினைத் திறம்பட அவர் நிறைவேற்றினார்.
அய்யா அவர்கள் அய்ரோப்பியச் சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது சுயமரியாதை இயக்க இதழான ‘குடிஅரசு’ வெற்றியாக நடந்து வர அம்மையார் பெரும் அக்கறை காட்டினார். 24.4.1932இல் ‘ஈ.வெ.ரா.நாகம்மாள் பிரிண்டர் அண்டு பப்ளிஷர்’ எனும் பெயரில், “நமது பத்திரிகையின் ஆசிரியர் தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தின் பொருட்டுப் புறப்பட்டுச் சென்று சுமார் நான்கு மாதங்களாகின்றன; இந்த நான்கு மாதங்களாக நமது ‘குடிஅரசு’க்குக் கட்டுரைச் செல்வத்திலும், பொருட் செல்வத்திலும் ஒரு சிறிதும் வறுமை தோன்றாதபடி இரண்டையும் வழங்கி ஆதரித்து வந்த நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த வாரம் நமது பத்திரிகைக்கு எட்டாவது ஆண்டு பிறக்கப்போவதால் நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களும் வாசகர்களும் சிறந்த கட்டுரைகளை வழங்கியும், எண்ணற்ற சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும் பத்திரிகையின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்’’ என்பதாக அம்மையார் வெளியிட்ட அறிக்கை அவர்தம் இயக்க ஈடுபாட்டிற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.
அய்யா அவர்களின் கீழைநாட்டுச் சுற்றுப் பயணத்தின்போது அம்மையாரும் உடன் சென்று இயக்கக் கொள்கைகள் பரப்பும் நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். காங்கிரஸ் கட்சியில் அய்யா ஈடுபட்டுத் தொண்டாற்றி வந்தபோது, கள்ளுக்கடை மறியற்போரை நிறுத்திவிடுவது என்பது என் கையில் இல்லை; அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடந்தான் இருக்கிறது’’ எனக் காந்தியாரோலேயே புகழப்படும் அளவுக்கு எப்படி அன்னையார் தீவிரப்பணி புரிந்தாரோ, வைக்கம் போரில் அய்யா சிறைசென்ற காலத்தில் தீண்டாமைக் கொடுமைகளைப் பற்றி அம்மையார் எவ்வாறு நாடெல்லாம் சுற்றிக் கருத்துகளைப் பரப்பினாரோ, அவ்வாறே சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதிலும் முனைப்போடு பணி மேற்கொண்டார். சிங்கப்பூர் சென்று திரும்பும்வேளை அங்கு வதிந்த தன்மான வீரர்கள் அம்மையாரிடம், “தங்கட்குத் தேவையான, விருப்பமான மலாய் நாட்டுப் பொருள்கள் என்னென்ன?’’ என்று பரிவோடு கேட்டு முன்வந்தபோது, “நீங்களெல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டுப் பரப்பியிருக்கிறீர்களே, அதுவே எனக்கு அருமையான பொருள்’’ என்று கூறிப் பரிசுப் பொருட்களை வேண்டாது, கொள்கை பரவுதலில் நாட்டம் காட்டிய அன்னையின் செய்கை நமக்கு எத்தனையோ உணர்த்தவல்லது. தாம் ஈன்ற ஒரே மகவும் மறைந்த பிறகு அய்யா அவர்களின் தொலைநோக்கான விருப்பத்திற்கிசைந்து இயக்கத் தொண்டர்களையே தம் பிள்ளைகளாக வரித்துக்கொண்டு அவர்களால் ‘அன்னை’யென்று மதிக்கப் பெறும் உயர் நிலையை எய்தினார்.
எனவேதான் அவர் 11.5.1933 அன்று மறைவுற்ற காலை, “உணர்ச்சி போயிற்று என்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்று என்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்று என்று சொல்லட்டுமா?’’ என்று கழிவிரக்கத்துடன் எழுதினார் தந்தை பெரியாரவர்கள்.
அம்மையார்தம் பிரிவுக் கட்டத்தில்கூடப் புரட்சிக்கு மூலமானார். அதாவது நெருங்கின உறவினர் முதல் உற்ற இயக்கப் பெருங்குடும்பத்தினர்வரை எல்லோரும் ‘அழுதல்’ என்னும் நாகரிகமற்ற வழக்கை விட்டொழிந்து அமைதியாக விருக்கும் பண்பாட்டைக் கடைப்பிடித்தனர். 1933இல் இது மிகவும் பெரும் புரட்சிதானே!
நம் அன்னையாருடன் பொதுவுடைமைக் கொள்கைத் தந்தை காரல் மார்க்சின் துணைவியார் ஜென்னிமார்க்ஸ் ஒப்பிடத் தகுந்தவர் எனலாம்.
அய்யா அவர்களின் ஒவ்வோர் அசைவுக்கும் துணையாக இயங்கிய அம்மையார் பொதுத்தொண்டு புரியும் மகளிர்க்கு வழிகாட்டும் ஒளியாவார்! அன்னை நாகம்மையார் வாழ்க!
நூல்: சுயமரியாதைச் சுடரொளிகள்