ஆர்.எஸ்.எஸ். ஆட்களால் அன்றாடம் கொடுமைகள் !
மஞ்சை வசந்தன்
அண்மையில் உலகையே உறையச் செய்த கொடுமை. காவிகளால் சிறுமியிடம் நிகழ்த்தப்பட்ட வன்புணர்வு, கொலை!
ஜம்மு_காஷ்மீரில் உள்ள கத்துவா என்ற இடத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா குதிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த புல்வெளியிலிருந்து வீடு திரும்பவில்லை. அவளது பெற்றோர் அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்தனர். காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த உடன் அந்தப் புல்வெளிப் பகுதியின் அருகில் இருந்த சஞ்சீவ் ராமின் கோவிலுக்குச் சென்று காவல்துறை விசாரித்துள்ளனர்.
அப்போது சஞ்சீவ் ராம், “நான் அந்தச் சிறுமியை பார்க்கவே இல்லை’’ என்று பொய் கூறி இருக்கின்றான்.
காவல்துறை அதிகாரி கூறுகையில், விசாரிக்கும் நேரத்தில் கோவில் பூட்டப் பட்டிருந்தது. சஞ்சீவ் ராம், ஆசிஃபாவை கோவிலின் உள்ளே ஒரு மேஜைக்கு அடியில் பிளாஸ்டிக் பாய்களைக் கொண்டு மறைத்து வைத்திருந்திருக்கின்றான். சஞ்சீவ்ராம் மற்றும் எட்டு பேர்கள் கொண்ட குழு அவளின் கழுத்தைப் பிடித்து தூக்க மாத்திரைகளை உட்கொள்ள வைத்துள்ளனர். மேலும் அவர்கள் அவளை அருகில் உள்ள ஒரு கோவிலில் அடைத்து வைத்திருந்திருக்கிறார்கள்.
அதன் பின் அடுத்த மூன்று நாட்களுக்கு அவளைத் தொடர்ந்து மாறி மாறி வன்புணர்வு செய்துள்ளனர்.
மறுநாள், ஆசிஃபாவின் சிதைக்கப்பட்ட உடல் அந்தக் காட்டுப்பகுதியில் அதே ஊதா நிற உடையில் இரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
புலனாய்வுத் துறையினரின் கருத்துப்படி மதவெறிதான் காரணம்:
அவர்கள் ஆசிஃபாவை கற்பழித்ததற்கான நோக்கம் அவளின் நாடோடி சமூகத்தின் மீது இருந்த வெறுப்புணர்வே ஆகும்.
இந்த வழக்கு சம்பந்தமாக எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எட்டு நபர்களும் ஹிந்துத்துவாவினர் ஆவர். குற்றவாளிகளில் இருவரை வழக்கில் இருந்து விடுவிக்க காவல்துறை அதிகாரிகளிடம் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 15 வயது சிறுவன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையின் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு 19 வயது இருப்பதாக கூறுகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுபோல பல அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக கூறுகின்றனர்.
பச்சிளம் சிறுமியை மிருகக் குணமும், மதவெறியும் கொண்ட சில அயோக்கியர்கள் செய்த வன்புணர்ச்சி காவி ஆட்சியின் வன்முறைகளின் மாற்று முகத்தைக் காட்டியுள்ளது.
ஆசிஃபாவின் நாடோடி சமூகமான பக்கர்வால் மக்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் ஆவர். ஹிந்துத்துவாவினர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஹிந்துக்கள் என்பதால் அவர்களுக்கு ஆதரவு தந்து காப்பாற்ற போராடுகின்றார்கள். ஆனால், ஆசிஃபாவிற்கான நீதியைப் பற்றி அவர்கள் கவலைக் கொள்ளவில்லை. இது தான் இந்தியாவின் மனுநீதி உருவாக்கிவரும் சமூகநீதி ஆகும்.
இந்த வாரம் ஹிந்துத்துவ வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வந்த காவல்துறை அதிகாரிகளை நீதிமன்றத்திற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பின் அந்த அதிகாரிகள் மாலையில் நீதிபதியின் இல்லத்திற்கு சென்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
தற்போது ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் பரவி வருகின்றன. புதன் கிழமையன்று வட இந்தியாவின் சிறிய நகரமான கத்துவா பகுதி போராட்டக்காரர்களால் முடக்கப்பட்டது. இந்த நகரம் ஆசிஃபா கொல்லப்பட்ட பகுதியை ஒட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பல ஹிந்து பெ ண்களும் கலந்து கொண்டு குற்றவாளிகளுக்கு ஆதரவான போராட்டக்காரர்களை ஆதரித்துள்ளனர்.
“பக்கர்வால் சமுதாய மக்கள் எங்கள் மதத்திற்கு எதிராக உள்ளனர்’’ என்று எதிர்ப்பாளர்களில் ஒருவரான பிம்லா தேவி கூறியுள்ளார். மேலும் “குற்றவாளிகளை நீதிமன்றம் விடுவிக்காவிட்டால் நாங்கள் தீக்குளிப்போம்’’ என்றும் கூறினார்.
“இந்த வழக்கை விசாரிக்கக் கூடிய அதிகாரிகளில் சிலர் முஸ்லிம்களாகவே உள்ளனர். அதனால் எங்களுக்கு நம்பகத்தன்மை இல்லை’’ என்று ஹிந்துத்துவாவினர் கூறுகின்றனர்.
ஆக, ஓர் அப்பாவி சிறுமி மதவெறியர்களால் சிதைத்துக் கொல்லப்பட்ட கொடுமையான செயலை காவிக் கூட்டம் இரக்கமேயின்றி ஈனப்பார்வையில் அணுகுகிறது.
ஆனால், காவல்துறை ஆய்வாளர்களோ ஆசிஃபாவின் கொலைக்கு அவர்கள்தான் காரணம் என்பதற்கு உடற்கூறுகளின் சாட்சியங்கள், மரபணு பரிசோதனை மூலம் கிடைத்த சாட்சியங்கள் என்று 130க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் உள்ளது என்று அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்துத்துவ மேலாதிக்கத்தை இலட்சியமாக கொண்ட பாரதீய ஜனதா கட்சி இந்த வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து கையகப்படுத்தி மத்திய புலனாய்த்துறையிடம் ஒப்படைக்குமாறு கூறுகின்றது. அவர்கள் நடுநிலையாளர்கள் என்பதே பா.ஜ.க.வின் வாதம். ஆனால், மத்திய அரசு, குற்றம் சாட்டப்பட்ட ஹிந்துத்துவ வாதிகளுக்கு சாதகமாகவே இந்த முடிவை முன்னெடுக்கிறது. மத்திய புலனாய்வுத்துறை ஆளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் குற்றவாளிகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க பா.ஜ.க முயல்கிறது என்பதே உண்மை.
“ஆசிஃபா கொலை வழக்கில் ஒரு ஹிந்து கோவில் மையமாக உள்ளது. இந்தக் கோவிலின் பாதுகாவலனான சஞ்சீவ் ராம் என்பவன், பக்கர்வால் சமூகத்தின் மீது வன்முறைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான். அதற்காகத்தான் அவனுடைய நண்பர்களின் உதவியைக் கொண்டு ஆசிஃபாவை கடத்தி, வன்புணர்வு செய்து கொன்றுள்ளனர்’’ என்று காவல்துறை கூறுகிறது
ஆக, இந்துமதக் கோயில்கள் காவிக் கூட்டத்தின் கொலைக் கூடாரமாக, வன்புணர்ச்சி நிலையங்களாக மாறி வருகின்றன.
பக்கர்வால் சமுதாய மக்கள் வட இந்தியாவின் சமவெளிகளிலும், மலைகளிலும் உள்ள தங்களது மந்தைகளோடு நகர்ந்து செல்லும் நாடோடிகள் ஆவர். குளிர் காலங்களில் தங்கள் விலங்குகள் மேய்ச்சல் கொள்ள இந்து விவசாயிகளிடமிருந்து நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளனர். ஆனால், சமீப ஆண்டுகளாக கத்துவா பகுதியில் சில இந்துக்கள் நாடோடிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அந்தக் கிராமத்தில் உள்ள காவிகளின் வன்முறைத் தலைவன் சஞ்சீவ் ராம் என்பவன். தங்கள் மதவெறியைக் காட்டி எதிரிகளை விரட்ட இந்த வன்கொடுமையைத் திட்டமிட்டுச் செய்துள்ளான்.
தன் மகள் கொல்லப்பட்டதற்கான காரணம் பக்கர்வால் முஸ்லிம் சமூகம் இங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே என்கிறார் ஆசிஃபாவின் தந்தை.
“இதுதான் எங்கள் வாழிடம். இங்குதான் எங்கள் வாழ்க்கை. மேலும் இதுதான் எங்கள் வீடு என்கின்றார்’’ அவர்.
அவளுக்கு சகோதரர்கள் இருக்கின்றனர். அவள் எப்போதும் பள்ளிக்குச் சென்றதில்லை. அவளுக்கு புல்வெளிகளில் மந்தைகளை மேய்ப்பதுதான் பிடித்தமான செயல்.
இப்படிப்பட்ட கொடுமைகளை கடுமையாக அடக்கி அழிக்க வேண்டிய அரசு, குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் அநியாயம் இங்கு நடக்கிறது.
மோடி ஆட்சி வந்த பின், இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் பதிவாகும் பாலியல் வழக்குகள் 2007இல் 21ஆக இருந்தது 2016இல் 39ஆக உயர்வு
நாட்டில் பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு ஆண்டும் பாலுறவுக் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பாதுகாக்க வேண்டிய பிரதிநிதிகளே பெண்களை சூறையாடி வருவது நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 வயதுப் பெண்ணை அரசியல்வாதியே சூறையாடி இருக்கும் சம்பவமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் காயங்கள் ஆறுவதற்கு முன்பே சூரத்தில் 9 வயது சிறுமி உடலில் 89 காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். உடல் பரிசோதனையில் அந்த சிறுமி பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்தக் கொலைகளைப் பார்க்கும்போது, அனைவரும் சிறுமிகள்தான். ஆபாசம் வெளிப் படாத பிஞ்சுக் குழந்தைகள். இதற்கு விடிவு எப்போது கிடைக்கும். தாமதமாக கிடைக்கும் நீதியால் எந்தப் பலனும் இல்லை. உடனடி நீதியும், கடுமையான தண்டனையும்தான் இது போன்ற குற்றங்களை குறைக்க முடியும். ஒரு பக்கம் சிறுமிகள், இன்னொரு பக்கம் பதின் வயதினர் உள்ளிட்ட எல்லா வயதுப் பெண்களும் வன்புணர்வு கொடுமைக்குட்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இன்னொருபுறம் அருப்புக் கோட்டை நிகழ்வைப் போல பெண்களை விற்பனைப் பொருளாக மாற்ற முயலும் சம்பவங்களும் நடைபெறுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது தொடங்கி 77 வயது வரையிலான பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் என்கிறது அய்.நா. புள்ளிவிவரம். இது அதிகரித்து வருகிறதே தவிர குறைந்த பாடில்லை. இதற்குக் காரணம் கெட்டுவிட்ட தனிமனித ஒழுக்கம் தான். அவன் தனித்து இருக்கும்போது அவனைக் கெடுக்கும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணைய தளங்களும் பெருகிவிட்டன. இதனைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றாவிட்டால் நாடு போகும் நிலையை எண்ணிப் பார்க்க முடியாது. சட்டங்களைத் திருத்த நாம் குரல் கொடுக்க வேண்டும்.
இத்தகைய குற்றங்களுக்கு தனிமனித ஒழுக்கம் முக்கிய காரணமாக இருந்தாலும் தண்டனைகளுக்கு நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் ஒரு முக்கியக் காரணமாகும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் 2,78,886 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதில் தண்டனை பெற்றவர்கள் 30 சதவீதத்திற்கும் குறைவு 70 சதவீதம் தண்டனை பெறவில்லை என்பது உண்மை.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2015ஆம் ஆண்டைவிட 2016இல் 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பெரும்பாலான வழக்குகள் ‘கணவன் அல்லது அவரது உறவினர்களால் கொடுமை செய்யப்படுவது ஆகும். (32.6 சதவீதம்) பெண்களின் மீது தாக்குதல் நடத்தி அவளுடைய மன வலிமையை சீர்குலைத்தல் (25.0 சதவீதமாகும்) பெண்கள் கடத்தல் (19.0 சதவீதம்) மற்றும் ‘பாலியல் வன்கொடுமை’ (11.5 சதவீதம்).
நாட்டில் 30 சதவீத அரசியல்வாதிகள் குற்றப் பின்னணியில் உள்ளவர்கள். பாலியல் வன்புணர்ச்சி வழக்கு 2015ஆம் ஆண்டில் 34,651 வழக்குகள், 2016இல் 38,947 என 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் அதிக அளவு பாலியல் வன்புணர்ச்சி வழக்குகள் பதிவாகி உள்ளது. 4,882 வழக்குகள் (12.5 சதவீதம்), 4,816 (12.4 சதவீதம்), மகாராஷ்டிரா 4,189 (10.7சதவீதம்) நாட்டின் 6 மெட்ரோ நகரங்களில் பெண்களின் பாதுகாப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் தான் குறைவு. 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 544ஆக பதிவாகி உள்ளது. சென்னையில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 15 பேர்தான் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டில்லி முதலிடம் பெற்று உள்ளது. 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டில்லியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டில்லியில் 1 லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பாதுகாப்பான நகரப் பட்டியலில் சென்னை முதலிடத்திலும், மும்பை இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதே போன்று கொல்கத்தா 3ஆ-வது இடத்திலும் பெங்களூரு 5-ஆவது இடத்திலும் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மோசமான நகரமாக டில்லி உள்ளதாக குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2016ஆம் ஆண்டு நிலவரப்படி ஒரு மணி நேரத்தில் பதிவாகும் பாலியல் வழக்குகள் 39 ஆகும். இது 2007ஆம் ஆண்டு 21ஆக இருந்தது.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் பாலுறவு கொடுமைகள்
காஷ்மீர் மாநிலம் கதுவாவில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் அளித்த அதிர்வலைகள் மாறுவதற்குள், உ.பியில் 7வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து ஈட்டா போலீஸ் எஸ்.பி.அகிலேஷ் சவுரேஸ்யா கூறியதாவது:
“ஈட்டா நகரின் புறநகரான மண்டி சமிதியில் நேற்று ஒரு திருமணத்துக்காக 7 வயது சிறுமி அவரின் பெற்றோரும் வந்தனர். நள்ளிரவு1.30 மணி அளவில் திருமணத்துக்காக பந்தல் அமைக்கும் பணியில் இருந்த ஒருவர் வெளியில் தூங்கிக்கொண்டிருந்த 7-வயது சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் கயிற்றால் கழுத்தை இறுக்கி சிறுமியை கொலை செய்து, அருகே இருக்கும் கட்டிடத்துக்குள் போட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ. ராமகந்த தேவ்ரி, விடுதி ஒன்றில் ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த காணொலி வெளியாகி மாட்டிக் கொண்டார்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நீரஜ் சாக்யா, விபசார விடுதி நடத்திவந்தார் _ இவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அரசியல் தலையீடு காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.
இமாச்சலப் பிரதேசத்தில் விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் விபசாரத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் ராஜிந்தர் ராணா, எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகு பதவி விலகினார்.
மத்தியப் பிரதேச நிதி அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராகவ்ஜி, வீட்டு வேலைக்காரியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்த பாஜக தலைவர் ரவீந்தர பவந் தாதே-யின் காணொலி வெளியாகி, கைது செய்யப்பட்டார்.
ஜார்க்கண்ட் பாஜக பெண் தலைவர் கீதா சிங் என்பவரின் ஆபாசக் காணொலி வெளியாகி, பெரும் பரபரப்பு கிளம்பியது.
பாஜகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து கள்ளக் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம் இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நந்தினி என்ற தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து, கொடூரமாகக் கொலை செய்தார்.
உத்தரப் பிரதேசம், உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கும், அவரின் சகோதரரும் 17 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வெளியே சொன்ன குற்றத்திற்காக அவரின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்தே கொலை செய்துவிட்டார்கள்.
காவல் துறை அதிகாரிக்கு மிரட்டல்
இக்கொலையை விசாரணை செய்த காவல் துறை அதிகாரிகள் மிரட்டப் பட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது,
“சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பான குற்றச்சாட்டு உள்ள அவர்களின் உறவினர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் இவ்வழக்கை கையில் எடுக்காமல் இருக்கவும் இதில் குற்றவாளிகளின் பெயரை கடுமையான குற்றப்பிரிவுகளில் சேர்க்காமல் இருக்கவும் பல்வேறு நெருக்கடிகள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தன. ஆனால் நானும் எனது குழுவினரும் இதற்கெல்லாம் அஞ்சவில்லை. சிலர் அலுவலகத்தில் சந்தித்து மறைமுக மிரட்டல்களும் விடுத்தனர். என்னுடைய புலனாய்வுக் குழுவினரின் குடும்பத்தாரிடமும் மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
நாங்கள் பிராமணர்கள் எங்களை தண்டிக்கக்கூடாது
ஆமாம் குற்றவாளிகள் அனைவருமே பிராமணர்கள், இதனால் என்னை அடிக்கடி நாங்கள் பிராமணர்கள் _- எங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தர்மம் அல்ல, என்று மிரட்டும் தொனியில் பேசினர். (நாங்கள் அனைவரும் பிராமணர்கள், பிராமணர்கள் எந்த குற்றத்தையும் தர்மத்தைக் காக்கவே செய்வார்கள். தர்மத்தை நிலைநாட்ட சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும். அப்போது இதுபோன்றவைகள் (ஆசிஃபா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை) நடக்கும். இதைப் பெரிதாக கொள்ளக் கூடாது. பிராமண தர்மத்தில் பிறஜாதியினரை கொலைசெய்வது தவறாகப்படாது. நாங்களும் பிராமணர்கள், நீயும் ஒரு பிராமணப் பெண், பிராமண நீதியைக் காப்பாற்ற எங்களை கைதுசெய்யக்கூடாது, அந்தப்பெண் முஸ்லீம் _- அப்பெண்ணை நாங்கள் கொன்றதில் எந்த தர்மமும் கெட்டுவிடாது) என்று மிரட்டல் விடும் பாணியில் கூறினார்கள்’’ என்று தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் பிரதமருக்குக் கடிதம்
பிரதமர் மோடிக்கு ஓய்வுபெற்ற 50 அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ். அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
உன்னாவ் மற்றும் கத்துவாவில் பாதிப்புக்குள்ளான குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கோருங்கள் என்று அதில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“இந்தியாவில் உள்ள நிலைமையைக் கண்டு மிகவும் வெட்கப்படுகிறோம், வேதனைப் படுகிறோம், கடுங்கோபப் படுகிறோம்’’ என்ற அந்தக் கடிதத்தின் சில பகுதிகள்:
1. மக்களால் அளிக்கப்பட்ட அடிப்படைப் பொறுப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது என்பதையே கத்துவா மற்றும் உன்னாவ் பயங்கர நிகழ்வுகள் காட்டுகின்றன.
2. இந்துக்கள் என்ற பெயரால் ஒருவர் மற்றொருவரிடம் மிகக் கொடூரமான முறையில் நடந்து கொண்டிருப்பதானது, நாம் மனிதர்களாக இருப்பதற்கே அருகதை யற்றவர்கள் என்று காட்டியிருக்கிறது.
3. பிரதமர் அவர்களே, இக்கடிதத்தை நாங்கள் உங்களுக்கு எழுதுவதற்குக் காரணம், இச்செயல்களைக் கண்டு நாங்கள் வெட்கித் தலைகுனிகிறோம், வேதனைப்படுகிறோம், புலம்புகிறோம் என்று உங்களுக்குத் தெரிவிப்பதற்காக மட்டுமல்ல, இச்செயல்களைக் கண்டு கடுங்கோபம் கொண்டிருக்கிறோம் என்று காட்டுவதற்காகவும்தான் எழுதி இருக்கிறோம். மக்களிடையே மதரீதியாக வெறுப்பை உமிழும் உங்கள் கட்சி மற்றும் அதன் கணக்கிலடங்கா பிரிவுகளின் நிகழ்ச்சி நிரல்கள் கண்டு கடுங்கோபம் கொண்டிருக்கிறோம். இவை நம் நாட்டின் அரசியலில், நம் சமூக மற்றும் கலாச்சாரத்தில், ஏன், நாளும் நடைபெறும் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் மோசமான முறையில் மெல்ல மெல்ல பிற மதத்தினர் மத்தியில் வெறுப்பை உமிழும் காரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. அத்தகைய உங்கள் நிகழ்ச்சி நிரல்தான் கத்துவா மற்றும் உன்னாவ் நிகழ்வுகளுக்கு சமூக அங்கீகாரத்தையும், சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் அளித்திருக்கின்றன.
4. ஜம்முவில் உள்ள கத்துவாவில், சங் பரிவாரத்தால் நாளும் மேற்கொள்ளப் பட்டுவரும் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் வன்தாக்குதல் கலாச்சார நடவடிக்கைகளால் வெறியேற்றப்பட்டுள்ள மதவெறியர்களுக்குத் தங்களுடைய வக்கிரத்தனமான நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுவதற்குத் துணிவைத் தந்துள்ளது. தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் செயலானது, தங்கள் கட்சியில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள், சரி என்று அங்கீகரிப்பார்கள் என்பதும் அதன்மூலமாக இந்துக்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையேயான இடைவெளியை அதிகரித்திட முடியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
பாதிக்கப்பட்டவர்களையே வேட்டையாடும் அரசு
5. உன்னாவ் நிலைமை என்ன? ஆட்சி யாளர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல் செய்தது மட்டுமல்ல, மிகவும் கண்டிக்கத் தக்கதுமாகும். வன்புணர்வுக் குற்றங்களைச் செய்திட்ட கயவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, வன்புணர்வுக்கு ஆளானவரையும் அவர்தம் குடும்பத்தாரையுமே மாநில அரசாங்கம் வேட்டையாடியது என்பது எந்த அளவிற்கு வக்கிரத்தனத்துடன் அந்த அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பதையே காட்டுகிறது. உயர் நீதிமன்றம் கட்டளையிட்ட பின்னர்தான் உத்தரப்பிரதேச அரசாங்கம் கடைசியில் செயல்படத் தொடங்கியது என்பது எந்த அளவிற்கு அது உயர் நீதிமன்றத்தின் கட்டளையை அரை மனதுடனும் கபடத்துடனும் மேற்கொண்டது என்பதைக் காட்டுகிறது.
6. பிரதமர் அவர்களே, இரண்டு வழக்கு களிலும், குற்றமிழைத்துள்ள கயவர்கள், அதிகாரத்தில் உள்ள உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். கட்சிக்குள் எல்லோருக்கும் மேலானவராக நீங்கள் இருப்பதாலும், கட்சியின் மீதான அனைத்து அதிகாரங்களும் உங்களுக்கும் உங்கள் கட்சித் தலைவருக்கும் இருப்பதாலும், இத்தகைய கொடூரமான நிகழ்வுகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டியவராவீர்கள். எனினும் நீங்கள், அவ்வாறு பொறுப்பேற்பதற்குப் பதிலாக, அவற்றைச் சரி செய்வதற்குப் பதிலாக, நேற்று வரை நீங்கள் இத்தகைய இழிசெயல்கள் குறித்து எதுவுமே கூறாது மவுனமாக இருந்தீர்கள். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் மக்கள் கொதித்தெழுந்த பின்னர், இனியும் இந்த இழிசெயல்கள் குறித்து கண்டும் காணாதது போல் இருந்துவிட முடியாது என்று நன்கு தெரிந்த பின்னர்தான் நீங்கள் உங்கள் மவுனத்தைக் கலைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
7. அப்போதும்கூட, இந்த செயல்களைக் கண்டிப்பதாகவும், வெட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள அதே சமயத்தில், இச்செயலுக்குப் பின்னே மறைந்துள்ள மதவெறிக் குணத்தைக் கண்டிக்கவில்லை. அதே போன்று, இத்தகைய ஒரு பிரிவினருக்கு எதிராக வெறுப்பை உமிழும் சமூக, அரசியல் மற்றும் நிர்வாக நிலைமைகளில் மாற்றம் கொண்டு வருவோம் என்றும் கூற முன்வரவில்லை. காலதாமதமாக இவ்வாறு கூறும் ஆட்சேபணைகளையும் உறுதிமொழிகளையும் நாங்கள் நிறையவே கேட்டுவிட்டோம்.
பிரதமர் அவர்களே, உன்னாவ் மற்றும் கத்துவாவில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் குடும்பத்தாரிடம் சென்று நம் அனைவரின் சார்பாகவும் மன்னிப்புக் கோருங்கள். கத்துவா வழக்கில் குற்றம் புரிந்த கயவர்கள் மீதான வழக்கை விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரணை மேற்கொள்ளுங்கள். உன்னாவ் வழக்கில் மேலும் காலதாமதம் செய்யாது, சிறப்புப் புலனாய்வுக் குழு வழிகாட்டுதலின்கீழ் நீதிமன்றத்தை அமைத்திடுங்கள். சமூகத்தில் ஒரு பிரிவினர் மீது வெறுப்பை உமிழும் குற்றத்தால் பாதிப்புக்கு உள்ளான அப்பாவிக் குழந்தைகளின் நினைவாக, முசுலிம்களுக்கும், தலித்துகளுக்கும் மற்றும் இதர சிறுபான்மை இனத்தவருக்கும், அவர்களுடைய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற உறுதி மொழியைப் புதுப்பித்திடுங்கள். அப்போதுதான், அவர்கள் தங்கள் வாழ்வு குறித்தும், சுதந்திரம் குறித்தும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் முழு உதவியுடன் தங்கள் மீது ஏவப்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அஞ்சாது வாழ இயலும். வெறுப்பை உமிழும் குற்றங்களை செய்தவர்கள் மற்றும் வெறுப்பை உமிழும் பேச்சுக்களை பேசுபவர்கள் அரசாங்கத்தின் கீழ் செயல்படும் எவராக இருந்தாலும் அவர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திடுங்கள். வெறுப்புக் குற்றங்கள் எதிர்காலத்தில், சமூகரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடராது, தடுப்பதற்கு வகை செய்யும் விதத்தில், வழிவகை காணும் விதத்தில், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள். இவ்வாறு அவர்கள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்கள்.
பாலியல் வன்கொடுமைகள்: 637 உலகக் கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்குக் கண்டனக் கடிதம்
காஷ்மீர் சிறுமி பாலியல் வன்கொலை உள்பட நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அரங்கேறிவரும் நிலையில், வாய் திறந்து கொஞ்சம் பேசுங்கள் என்று பிரதமர் மோடிக்கு, உலகம் முழுவதும் இருந்து 637 கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கதையாகி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இவற்றைத் தடுக்க பிரதமர் மோடி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற 637 கல்லூரிகளில் இருந்து கல்வியாளர்கள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர். இதில் 200-க்கும் அதிகமான கடிதங்கள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டனில் பணியாற்றும் கல்வியாளர்கள் எழுதியதாகும். 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
காஷ்மீரில் ஒரு சிறுமி, கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே 17 வயதுச் சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கி இருக்கிறார். ஆனால், இதுபோன்ற சம்பவங்களில் நீங்கள் மவுனம் காத்து வருகிறீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று உறுதியளிக்கவும் இதுவரை நீங்கள் முன்வரவில்லை. இது கண்டனத்திற்கு உரியது என்று கல்வியாளர்கள் தங்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நீங்கள் (பிரதமர்) பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த விஷயத்திற்கும் குரல் கொடுப்பதில்லை; முக்கியமாக உங்கள் கட்சியினர் செய்யும் குற்றம் பற்றி எதுவும் பேசுவதில்லை; நீங்கள் கடைசியாக காஷ்மீர் சம்பவத்தை கண்டித்ததுகூட மயில் இறகால் வருடியது போல மென்மையாகவே இருந்தது. நீங்கள் இப்படி அமைதியாக செயலற்று இருப்பது நம்முடைய ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய பிரச்சினையை உண்டாக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களில்தான், சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறியுள்ள கல்வியாளர்கள், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகே இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பாஜக அரசுகள் நேரடியாக வன்முறையில் ஈடுபடவில்லை என்றாலும், வன்முறையில் ஈடுபடுவோர் பாஜகவுடன் தொடர்புடையவர் களாகவே இருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாட்டுக்கே தலைக்குனிவு:
இதைவிட ஒரு அரசுக்குக் கேவலம், கீழ்மை, இழிவு வேறு உண்டா? காவிக் காலிகள் கட்டவிழ்த்து விடப்பட்டு, நினைத்தபடி யெல்லாம் வன்கொடுமை செய்து வருகின்றனர். இந்த நிலை இந்தியா முழுமையிலுமுள்ளது. அயல்நாடுகள் இந்தியாவை வெறுக்கின்றன.
கோயில் கருவறைகளை ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் பாலுறவுப் படுக்கை அறையாக மாற்றி வருகின்றனர்.குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. ஏன், உடனடியாக கைதுகூடச் செய்யப்படுவதில்லை.
2 வயது பெண் பிள்ளைகள் முதல் எந்த வயதுப் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. எப்போதும் எங்கும் சிதைக்கப்படலாம் என்ற நிலை இந்தியா முழுவதும் காணப்படுகிறது.
பெற்றோர் பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பவே அஞ்சுகின்றனர். அர்ச்சகராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பான் முதல் ஆளுநராய் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரன் வரை அனைவரும் இந்தக் கொடுமையை கொஞ்சம்கூட அச்சமின்றி செய்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு செய்கிறது
அரசு, அதிகாரிகள் நீதிமன்றம் என்று எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் புகுத்தப்பட்டு அவர்களின் கூட்டணியில்தான் அத்தனை அநியாயங்களும், கொடுமைகளும், வன்புணர்வும், கொலைகளும் நடக்கின்றன. காவல்துறையும் குற்றவாளிகளுக்கு துணை நிற்கின்ற அவலமும் கண்டிக்கத்தக்கதாகும்!
ஆர்.எஸ்.எஸ். கட்டமைப்பு தகர்க்கப்பட வேண்டும்
முற்போக்காளர்கள் ஒருங்கிணைந்து போராடுவதோடு நில்லாமல், இந்த கூட்டணியைத் தகர்த்து, ஆர்.எஸ்.எஸ்ஸின் பாஸிச திட்டங்களை, செயல்களை முறியடிக்க வேண்டியதும் கட்டாயமாகும்!
இந்த நிலை நீடித்தால் மக்கள் கையில் அதிகாரத்தை எடுக்கும் நிலை கட்டாயம் வரும்! நீதிமன்றங்களும், அரசும் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், மக்கள் புரட்சி நிச்சயம் வெடிக்கும்!