Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இதிகாச காலத்திலே இணையதளமாம்! மூடக்கருத்துக்கு அறிவியல் சாயம் பூசும் காவிகள்!

கல்வியாளர்களே விழிப்போடிருங்கள்!

“இதிகாசக் காலத்திலேயே இணையம் வந்துவிட்டது. அது ஒன்றும் நவீனக் கண்டுபிடிப்பு அல்ல; மகாபாரத போர் நடைபெற்றபோது பார்வையற்ற திருதராஷ்டிரன் போர்களத்தின் அருகில் இல்லை. அரண்மனையில் இருந்தவாரே போர் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அவர் அறிந்து கொண்டார். இணையதளமும் செயற்கைக்கோளும் அப்போதே இருந்ததால்தான் அவருக்கு அது சாத்தியமாயிற்று.’’ – இவ்வாறு கூறியிருப்பவர் இந்திய நாட்டின் ஒரு முதலமைச்சர் _- திரிபுராவின் முதலமைச்சர் கடந்த 40 நாட்களாக!

‘பிப்லப் தேப்’ என்ற இவர் டில்லி ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர பயிற்சி பெற்றவர் என்பது கோடிட்டு காட்டப்படவேண்டிய ஒன்று! இவர் மாத்திரம் இப்படி இந்த அதிமேதாவித்தனத்தின் அரிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து அகிலத்திற்கு அருட்கொடையாக (?) தரவில்லை.

இவரது தலைவர், வழிகாட்டி, பிரதமர் நரேந்திரமோடியும் (அவரது ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ பாடப்பயிற்சி வழியே) சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் கூடிய அகில உலக விஞ்ஞானிகள் மாநாட்டை பிரதமர் என்ற முறையில் துவக்கி வைப்பதற்கு அழைக்கப்பட்டார். அப்போது அங்கே அவர் ஆற்றிய துவக்க உரை விஞ்ஞானத்தையே அதிர்ச்சியடைய செய்த ஒன்றாகும்.

பிரதமர் மோடி பேசினார்:

“உடல் உறுப்பு அறுவை மாற்றிப் பொருத்தும் அதி நவீன விஞ்ஞான மருத்துவ சாதனை — இந்தியாவிற்கு _ எங்களுக்குப் புதியதல்ல. புராண, இதிகாச காலத்திலேயே வெகு சாதாரணமாக நடந்த ஒன்றுதான்!

எடுத்துக்காட்டாக, “பரமசிவன் பார்வதியைத் திருப்தி செய்ய தலைவெட்டப்பட்ட வினாயகனுக்கு ஒரு ஆணின் தலைக்குப் பதிலாக _ அது காணாமல் போனதால் _ காட்டில் உள்ள ஒரு யானையின் தலையை வெட்டி வந்து இந்த மனித உடம்போடு பொருத்திய கதை மூலம், ‘Transplantation’’ என்ற ‘உறுப்பு பொருத்தல்’ ஹிந்து மதப்புராணப்படி, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இங்கே நடைமுறையில் இருந்திருக்கிறதே! இப்போதைய விஞ்ஞானத்திற்கே “நமது பாரம்பரிய மதமும் _ கடவுளும் முன்னோடிகள்’’ என்ற கருத்துப்படப் பேசினார்! அதைக் கேட்ட ‘நோபல் பரிசு’ பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்அவர்கள், “இனிமேல் இங்கு (பாரத தேசத்தில்) நடைபெறும் விஞ்ஞான மாநாட்டிற்கே வருவதில்லை’’ என்று முடிவெடுத்தார்;

ஒரு பேட்டியில் அறிவிக்கவும் செய்தார்!

இதற்குப் பிறகு, மனிதவள மேம்பாட்டுத் துறை எனப்படும் மத்திய கல்வி இணை அமைச்சர் ஓர் அதிபுத்திசாலி. மேலும் அதிர்ச்சியூட்ட கூடிய ஓர் அரிய சூப்பர் விஞ்ஞான கண்டுபிடிப்பைக்கூறி, மத்திய கல்வித் திட்டத்தில் இதுபோன்ற கருத்தியல்களை புகுத்தவேண்டுமென்று பொருள்படக் கூறினார்.

“புவிஈர்ப்பு சக்தி (லிணீஷ்s ஷீயீ நிக்ஷீணீஸ்வீtணீtவீஷீஸீ) போன்ற விதிகளை சர். அய்சக் நியூட்டன் போன்ற மேலைநாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, வேதங்களில், மத்திர ஒலிகளில் இந்த ‘ஆதர்ஷன சக்தி – விதிகள்’ பற்றி தெரிந்ததால் அத்தகைய மந்திர ஒலிகளுக்கு தனித்துவமான முக்கியத்துவத்தைத் தந்தனர்’’ எனக் கூறினார் மத்திய இணையமைச்சர் சத்தியபால் சிங். அவரது மூத்த அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் என்ற (மராட்டிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்), “இது மூடதனத்தில் இடம் பெறாது’’ என்று மறுத்து விளக்கமளித்தார்.

விஞ்ஞானத்தை ஹிந்து வேத சாஸ்திர மயமாக்கும் திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏற்பாடு இது. சில ஓய்வு பெற்ற விஞ்ஞான பட்டதாரி  பார்ப்பனர்களைக் கொண்டு கிருஷ்ணன் கதை, ராமன் கதை, புராண, இதிகாசங்களுக்கு விந்தையான விஞ்ஞான விளக்கம் கூறி ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும்’ வித்தைகளைப் பரப்புகின்றனர்.

வரலாற்றை ‘காவி’ மயமாக்குவதைப் போல _ இராணுவத்தை ‘இந்து’ மயமாக்கும் இந்துத்துவ முயற்சி போலவே _ அறிவியலை ‘இந்துத்துவ’ மயமாக்கும் திட்டமிட்ட ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு. இவை ‘வெறும் உளறல்கள்’ என்று அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல. இதன் பாதுகாப்பான முன்னேற்பாடுகள்தான் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக ஆர்.எஸ்.எஸ்.காரர்களை தேடிக் கண்டுபிடித்து திணிக்கப்படும் நிலை!

கி.ஙி.க்ஷி.றி என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பு மூலம் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஏராளமான பணச்செலவு செய்து இந்தத் திட்டத்தை செயலாக்குகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு காட்டும் யி.ழி.ஹி. புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம், அய்தராபாத் பல்கலைக்கழகம், தென்னாட்டிலும், தமிழ்நாட்டிலும் முற்போக்கு கருத்துள்ள பல்கலைக்கழகங்களை ‘கபளீகரம்’ செய்து அல்லது தொல்லை கொடுத்து மூடிவிட நெருக்கடிகளைத் தந்தும் ஆர்.எஸ்.எஸ்.க்குப் பயன்படும் சில பல்கலைக்கழகங்களுக்கு அளவுக்கதிகமான ‘சலுகைகளை’ வாரிவழங்கி,   தங்களது ஏடுகளில் மிகையான விளம்பரங்களைத் தந்து ‘ஒரே கல்லில் பல மாங்கனிகளை’ அடிக்கின்றனர். மாணவர்கள், மக்கள் புரிந்து கொள்வார்களா?

நாள்:                                                                        கி.வீரமணி,
20.04.2018                                                                  ஆசிரியர்.