திருவண்ணாமலையில் பார்ப்பன ஆட்சி
திருண்ணாமலையில் திராவிடன் ஆசிரியர் ஸ்ரீ ஜே.எஸ்.கண்ணப்பர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய 7.2.1927 திங்கட்கிழமை காலையில் சென்றார். அதுசமயம் ஸ்ரீமான்கள் தாலுகா போர்டு வைஸ் பிரசிடெண்டு ராமசந்திர செட்டியார், செங்கம் கோவாப்ரடிவ் சொசைட்டி காரியதரிசி வரதராஜுலு ரெட்டியார், வேலூர் பண்டிதர் துரைசாமி முதலியார், திண்டுக்கல் சங்கரப்ப நாயக்கர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோபால் பிள்ளை, பிராசிடிஷன் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாச முதலியார், நரசிம்மலு நாயுடு மற்றும் பலரும் சுவாமி தரிசனத்திற்குச் சென்றார்கள்.
இது விஷயம் தெரிந்த கோவிலதிகாரியான இராமநாத சாஸ்திரி என்கிற ஒரு பார்ப்பனர் ஸ்ரீமான் கண்ணப்பரை கோவிலுக்குள் விடக்கூடாதென நினைத்து அர்ச்சகர்களும் அதிகாரியுமாய்க் கூடி கோபுர வாசற் கதவை அடைத்து விட்டார்கள். கூட வந்திருந்த போலீஸ் அதிகாரி கதவைத் திறக்கச் செய்து கோவிலுக்குள் போகும்படி செய்தார். ஸ்ரீமான் கண்ணப்பர் கோவிலுக்குள் போனவுடன் மேற்படி பார்ப்பனர் உடனே சுவாமி சந்நிதியையும் அம்மன் சந்நிதியையும் மூடி விட்டார். ஸ்ரீமான் கண்ணப்பரும் கூட வந்திருந்தவர்களும் கோவில் தர்மகர்த்தாக்களி லொருவரான வேட்டவலம் ஜமீன்தாரவர்களும் எவ்வளவோ சொல்லியும் சொல்லியனுப்பியும் கதவைத் திறக்க மறுத்துவிட்டார்கள். இதோடு கூடவே அன்று முக்கிய தினமாயிருந்தபடியால் மற்றும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான ஆண் பெண் பக்தர்களும் ஸ்ரீமான் கண்ணப்பருட்பட சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்து வீடு சென்றார்கள். இதைப் பற்றி பொது ஜனங்களுக்குள் பெருத்த பரபரப்பேற்பட்டிருந்த படியால் அன்று மாலை 16 கால் மண்டபத்தில் 10,000 பேர் கூடிய ஒரு பெரும் கூட்டத்தில் ஸ்ரீமான் கண்ணப்பர் மேற்படி பார்ப்பனர்களின் அக்கிரமங்களை யெல்லாம் விஸ்தாரமாய் எடுத்துச் சொன்னதோடு மறுநாள் மேற்படி பார்ப்பனர்களின் மீது மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஒரு பிராதுங் கொடுத்துவிட்டு இரவு சென்னைக்குப் புறப்பட்டு விட்டார்.
சுயமரியாதை உதயம்
இராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தான கமிட்டியார் மேற்படி தேவஸ்தான கமிட்டிக்குக் கட்டுப்பட்ட குளம், கிணறு, ரஸ்தா, பள்ளிக் கூடம் ஆகியவைகளில் யாவரும் தடை யில்லாமல் செல்லலாம் என ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகத் தெரிகிறது. அத்துடன் அந்த தேவஸ்தான கமிட்டிக்குக் கட்டுப்பட்ட எல்லா கோயில்களிலும் தேவதாசிகள் ஊழியத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டு மென்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறார்கள். மற்றும் சர்வ ஹிந்துக்களுக்கும் ஆலயங்களில் பிரவேசம் அளிப்பதைப் பற்றி ஆலய தருமகர்த்தர்களின் அபிப்பிராயம் அறியும் பொருட்டு 7 கேள்விகள் அடங்கிய ஒரு சுற்றுக் கடிதமும் அனுப்பியிருக்கிறார்கள். அக்கடிதத்தில் அடங்கியுள்ள கேள்விகளாவன:-
1. உங்கள் கோயில் பெயர்
2. ஹிந்துக்கள் எல்லாம் உங்கள் கோயிலுக்குள் செல்வதுண்டா?
3. கோயிலுக்குள் எல்லோரும் செல்லு மிடத்துக்கு வரையறையுண்டா? உண்டானால் அதற்குக் காரணம் என்ன?
4. எல்லா ஹிந்துக்களும் கோயிலுக்குள் செல்லாவிட்டால் அதற்குக் காரணம் என்ன?
5. ஜாதி காரணமாக கோயிலுக்குள் போக வொட்டாது யாராவது தடுக்கப் படுகிறார்களா?
6. தடுக்கப்பட்டால் அப்படித் தடுக்கப் படுவதற்குக் காரணம் என்ன? அப்படித் தடுப்பதற்கு உங்களுக்கு ஏதாவது அதிகார முண்டா? உண்டானால் அது எழுத்து மூலமாக ஏற்பட்டதா? அதன் முழு விவரம் என்ன?
7. ஜாதி பேதமில்லாமல் யாவரையும் கோயிலுக்குள் விடுவதற்கு உங்களுக்கு சம்மதமா?
இராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டியாரின் இம்முயற்சியினால் தீண்டாமை யொழிந்து விடுமென்றோ, ஆலயப் பிரவேச உரிமையில்லாதவர்கள் சமீபத்தில் ஆலயப் பிரவேச உரிமை பெற்று விடுவார்களென்றோ மகிழ்ச்சியடையக் காரணமில்லையாயினும், இவ்வளவு முற்போக்கான முறையில் நடந்து கொள்ள ஒரு தேவஸ்தான கமிட்டியார் துணிந்து முன்வந்ததை நமக்குப் பாராட்டாம லிருக்க முடியாது. குருட்டு நம்பிக்கைகளுக்கும் அநாச்சாரங்களுக்கும் இருப்பிடமாய் இருப்பது ஆலயங்கள். அந்த ஆலயங்களைப் பரிபாலனம் செய்வோருக்கு இவ்வளவு சுதந்திர மனப்பான்மை தோன்றியிருப்பதினால் தென்னாட்டிலே சுயமரியாதை உணர்ச்சிமிகு வேகமாகப் பரவி வருவது குறைகிறது. கமிட்டியார் தீர்மானங்களை பொது ஜனங்களும் சர்க்காரும் ஆதரித்தால் தான் அவை அமலுக்கு வரமுடியும். ஈரோடு தேவஸ்தான கமிட்டியார் அக்கமிட்டி எல்லைக்குட்பட்ட ஆலயங்களில் எல்லா ஹிந்துக்களும் பிரவேசிக்கலாம் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருப்பதையும் அது இப்பொழுது அமலுக்கு வராமல் இருப்பதையும், அத்தீர்மானத்தை நம்பி ஆலயப் பிரவேசம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டதையும் தென்னாட்டார் மறந்திருக்கமாட்டார் களால்லவா வெறும் தீர்மானங்கள் நிறைவேற்றுவதினால் மட்டும் ஒரு பயனுமுண்டாகாது. நிறைவேறிய தீர்மானங்கள் அமலுக்குக் கொண்டுவர ஜனங்களுக்கு மனத்துணிவு வரவேண்டும்.
– குடிஅரசு – 26.08.1930
(தொடரும்…)