Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? -(13)

சிகரம்

சுண்ணாம்பு களவாய் சூடு தென்றலாய்க் குளிருமா?

பல்லவ மன்னன், பாயை ஆடையாகக் கொண்ட சமணர்களை நோக்கி, “மற்றவனை இனிச் செய்வது இன்னதெனச் சொல்லும்’’ என்று கூற, அந்தச் சமணர்கள் சிறிதும் அஞ்சாமல், “சுண்ணாம்புக் களவாயில் போடுக’’ என்று சொன்னார்கள். மன்னன், “அவ்வாறே செய்க!’’ என்று கட்டளையிட்டான். உடனே கொடுங்கோல் மன்னனின் ஏவலாளர்கள் வெந்தழலை ஒத்த சுண்ணாம்புக் களவாயுள் திருநாவுக்கரசரைத் தள்ளிக் கதவை அடைத்துத் தாளிட்டுக் காவல் செய்தனர்.

திருநாவுக்கரசர் உள்ளே சென்றபொழுது, திருவம்பலத்தில் தாண்டவம் புரிந்தருளும் சிவபெருமானுடைய திருவடியின் நிழலையே தம் தலைமேற்கொண்டார்; “சிவனடியார்களுக்குத் துன்பம் வருவதுமுண்டோ?’’ என்று எண்ணிச் சிவபெருமானையே தொழுதவண்ணமா யிருந்தார். சிவபெருமானுடைய கருணையால் கடும் வெப்பம் மிக்க இளவேனிற் காலத்தில் வீசும் தென்றற் காற்றோ அல்லது குளிர்ச்சி பொருந்திய தடாகமோ என்று எண்ணும் படியாக மாறியது; ஒளிவீசும் வெண்ணிலாக் காலத்து எழும் யாழொலிபோல் இன்பம் பயந்தது.

ஏழு நாள்கள் சென்றபின், பல்லவ அரசன் சமணர்களை அழைத்தான்; சுண்ணாம்புக் களவாயைத் திறக்கும்படி கட்டளையிட்டான். சமணர்கள் திறந்து பார்த்தனர்; சிவானந்த வெள்ளத்தில் மூழ்கி, அம்பலவாணருடைய தேன்பிலிற்றும் மலர்ப்பாதத்தின் அமுதத்தை உண்டு தெளிந்த சிந்தையோடு எவ்வகையான ஊனமும் இன்றி வீற்றிருந்த திருநாவுக்கரசரைக் கண்டு, “ஒரு சிறிதும் கெடுதி இல்லையே! இஃது என்ன அதிசயம்!’’ என்று வியந்தனர் என்கிறது இந்து மதம். நெருப்பாகக் கொதிக்கும் சுண்ணாம்புக் களவாயுள் இருந்த திருநாவுக்கரசுவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மலர்ச்சோலையுள் மகிழ்ந்திருப்பதுபோல் இருந்தார் என்பது அறிவியலுக்குப் பொருந்துமா? சுண்ணாம்புக் களவாய் சூட்டில் வெந்து சாகாமல் உயிரோடு இருக்க முடியுமா? ஆனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அறிவுக்கு ஒவ்வாத மூடக் கருத்தைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

விஷம் அமுதமாகுமா?

சுண்ணாம்புக் களவாயில் சாகாது தப்பித்துக்கொண்டதால், சமணர்கள் ஒன்றுகூடி அரசனிடம் சென்று, “கொடிய விஷத்தைக் கொடுத்துக் கொல்லலாம்’’ என்றனர். அரசனும் “அவ்வாறே செய்யும்’’ என்று கூறினான். உடனே  சமணர்கள் கொடிய விஷம் கலந்த பாற்சோற்றைத் திருநாவுக்கரசர் உண்ணும்படிச் செய்தனர். திருநாவுக்கரசர், “எமது நாதருடைய அடியார்களுக்கு நஞ்சும் அமுதமே ஆகும்’’ என்று கூறி, அதனை உண்டார். அதனால் எவ்விதத் தீங்கும் அடையவில்லை. முன்னொரு காலத்தில் பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷம், சிவபெருமானுக்கு அமுதமாயிற்று.

பொடியார்க்கும் திருமேனிப் புனிதற்குப் புவனங்கள்
முடிவாக்கும் துயர்நீங்க முன்னைவிடம் அமுதானால்
படியார்க்கும் அறிவரிய பசுபதியார் தம்முடைய
அடியார்க்கு நஞ்சுஅமுதம் ஆவதுதான் அற்புதமோ?

என்கிறது இந்து மதம். நஞ்சு கலந்த பால்சோற்றை உண்டவர் சாகாமல் இருக்க முடியுமா? ஆனால், சாகாமலிருந்தார் என்னும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படை ஆகும்?

கற்பாறை கடலில் மிதக்குமா?

அரசன் சமணர்களை நோக்கி, “இனிச் செய்யக்கடவது என்ன?’’ என்றான். “திருநாவுக்கரசரைக் கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலில் தள்ளவேண்டும்’’ என்றார்கள். அதுகேட்ட அரசன் கொலைத் தொழில் புரிபவர்களை அழைத்து, “காவலோடு கொண்டுபோய் ஒரு கல்லினோடு சேர்த்துக் கயிற்றினாலே கட்டி ஒரு படகில் ஏற்றிக் கொண்டுபோய்க் கடலிலே விழும்படி தள்ளிவிடுங்கள்’’ எனக் கட்டளையிட்டான். அச்செயலைச் செய்திடச் செல்கிற கொலையாளிகளோடும் சமணர்களும் உடன் செல்ல, செம்மையான திருவுள்ளம் படைத்த திருநாவுக்கரசர் அவர்களுடன் சென்றார். அரசன் சொன்னபடி அக்கடையோர் கடலிடையே தம் செயலினை முடித்துத் திரும்பினார்கள். ஆழமுடைய கடலினுள்ளே சென்ற உண்மைத் தொண்டின் உறைப்புடையவராகிய திருநாவுக்கரசர், “எவ்வாறாயினும் ஆகுக; அடியவன் எந்தை பெருமானாகிய சிவனை ஏந்துவேன்’’ என்று துணிவு பூண்டு, “சொற்றுணை வேதியன்’’ என்று தொடங்கும் தமிழ்ப் பாடல்களால் ஐந்தெழுத்துப் பெருமையினைத் துதித்தருளினார்.

நான்முகன் முதலாகிய தேவர்களாலும் போற்றர்கரியதாகிய திருவைந்தெழுத்தைத் திருநாவுக்கரசர் ஓதவும், அவரோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்த கல், தெப்பம்போல் கடலில் மிதந்தது. உடலைப் பிணித்திருந்த கயிறும் அறுந்தது. அக்கல்லின் மேல் திருநாவுக்கரசர் வீற்றிருந்தருளினார்.

இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில்வீழ் மாக்கள் ஏறிட
அருளுமெய் அஞ்செழுத் தரசை இக்கடல்
ஒருகல்மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ?

கருணையே திருவுருவமாகக் கொண்ட திருநாவுக்கரசரைக் கடல் மன்னனாகிய வருணன் அலைகளாகிய தனது கைகளினால் தாங்கிச் செல்ல என்ன தவம் செய்தானோ? கருங்கல்லே சிவிகை ஆகிட அதில் அமர்ந்திருந்த நாவுக்கரசரை வருணன் ஏந்தியபடியே கொண்டு வந்து திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தின் பக்கத்திலே சேர்த்தான் என்கிறது இந்து மதம். அதிக எடையுள்ள பெரிய கருங்கல்லில் ஒருவரைக் கட்டி கடலில் போட்டால் அவர்கள் கடலுள் அழுந்தி இறப்பர். இதுவே அறிவியல். ஆனால், அந்தக் கல் தெப்பமாக மிதக்க கரை சேர்ந்தார் என்கிறது இந்து மதம். இப்படி அறிவுக்கும், அறிவியலுக்கும் ஏற்பில்லா கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?

(சொடுக்குவோம்…)