கே: நாட்டின் முக்கிய தொழிலான வேளாண்துறையை தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க பிரதமர் மோடி முனைப்புக் காட்டுவது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலல்லவா ?
– கி.மாசிலாமணி, தஞ்சை
ப: ‘விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்கள் அநீதிகள் பல தொடர்கின்றன. இதையும் அப்பட்டியலில் சேர்த்துக்கொள்க. ‘ஜெய் கிசான்!’ என்பர்!
கே: இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பிஜேபி.யின் முக்கியத் தலைவர்கள் கூறிவரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியப் பொருளாதாரம் பிரம்மிக்கத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதாகப் பாராட்டுவது சரியா?
-தா.சீனிவாசன், தாம்பரம்
ப: அவர் அமெரிக்க மோடி. இங்கிருப்பவர் இந்திய டிரம்ப். இந்துமதக் காதலர்கள்தானே. அப்படித்தான் “உண்மையை’’யே பேசுவர்!
கே: சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் பதிப்பகங்கள் பங்கேற்காததற்குக் காரணம் ஏதாவது உண்டா?
– வா. மாரியப்பன், வேலூர்
ப: வருத்தப்பட வேண்டிய செய்தி; வரும் காலங்களில் இது மாறும் என்று நம்புகிறோம்.
கே: அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 முறை வழங்கப்பட்டு வந்த முட்டை இனி நிறுத்தப்படும் என்று மத்திய பினாமி அரசின் அறிவிப்பைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
– தமிழோவியன், தெற்கிருப்பு, கடலூர்
ப: நிறுத்தக் கூடாது என்று முன்பே அரசுக்கு வேண்டிய அறிக்கை உடனே தந்தோம். நிறுத்தப்படாது என்று சம்பந்தப்பட்ட தமிழக அரசினர் கூறியுள்ளார்களே!
கே: பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனையில் சிறையிலிருக்கும் ‘ராம் ரஹிம் சிங்’க்கு சிறையில் தனிப்பட்ட முறையில் சலுகைகள் வழங்கப்பட்டு வருவது எதைக் காட்டுகிறது?
– பா.காவேரி, சேலம்
ப: அவரது செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதைக் காட்டுகிறது. திருமதி சசிகலாவுக்குச் சலுகை என்று துருவித் துருவி எழுதும் ஏடுகளின் பார்வை ஏன் அங்கே பாய மறுக்கின்றது?
கே: தமிழகத்தில் ஒரு செயல்படாத சொரணையற்ற அரசு இருப்பதால் மாநில சுயஅதிகாரங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஆளுநரின் ஆய்வுக் கூட்டங்களைப்போல் நானும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவேன் என்று மத்திய அமைச்சர் பொன்னாரும் கூறியுள்ளார். இதற்கு முடிவுதான் என்ன?
– தீ.வேல்முருகன், மதுரை
ப: மாற்று ஆட்சி _ ‘கட்டுண்டோம் பொறுத்திருப்போம்’ தி.மு.க. ஆட்சி வரும்வரை.
கே: வருமானவரித்துறை என்பது ஆளுங்கட்சியின் ஏவலாளாக இயங்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் எப்படியிருக்க வேண்டும்?
– தெ. வரலட்சுமி, மீனம்பாக்கம்
ப: தங்கள் கைகளையும் பைகளையும் சுத்தமாக என்றும் வைத்திருக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட வேண்டும்.
கே: அஞ்சலக பணம் அனுப்பும் படிவத்தில், ‘தமிழ்’ இன்று காணாமல் போனது ஏன்? அரசியல்வாதிகள் வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பது சரியா?
– தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி
ப: தமிழை மீண்டும் கொணர வேண்டும் என்ற முக்கிய வேண்டுகோளைத் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் _ கட்சி வேறுபாடு இன்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெற்றி பெற வேண்டும். நண்பர் குமரியாருக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அது ஆகும்.’
கே: மாநிலங்கள் இணைந்த அமெரிக்கக் குடியரசு (ஹி.ஷி.கி) என வல்லரசே இயங்கும்போது, இந்தியா ‘மாநிலங்கள் ஒருங்கிணைந்த இந்தியா’ (ஹி.ஷி.மி) என மாற வாய்ப்புள்ளதா?
-நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: இங்கு கூட்டாட்சி உண்மையில் நடந்தால் அல்லவா அப்பெயரில் பொருள் இருக்க முடியும்? இங்கு பெயரளவில் கூட்டு; நடைமுறையில் மாநில அதிகாரங்களுக்குப் பூட்டுதானே! பின் எப்படி அப்பெயர் பொருந்தும்?


Leave a Reply