கவிஞர் கலி.பூங்குன்றன்

இராசி பலன்களையும், சோதிடம் குறித்தும் வெளியிடாதிருந்த இந்து ஏடு சமீபத்தில் வெளியிட ஆரம்பித்துவிட்டது. தமிழ் இந்து ஏட்டில் ஒரு செய்தி. (6.1.2017 பக்கம் 9)
3 ஆண்டுகளுக்குப் பிறகு
ஒரே ஆண்டில் ராகு-கேது, குரு, சனிப் பெயர்ச்சி
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017இல்) குரு, ராகு-_கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன.
சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி என 9 நவக்கிரகங்கள் உள்ளன. நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும்போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும்.
சந்திரன் இரண்டேகால் நாள், புதன், சூரியன் தலா ஒரு மாதம், சுக்கிரன் ஒன்றரை மாதம், செவ்வாய் ஒரு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் இடம்பெயரும். குரு ஓராண்டு, ராகு_கேது ஒன்றரை ஆண்டு, சனி இரண்டரை ஆண்டுகள் என ஒவ்வொரு கோளும் ஒரு ராசியில் சஞ்சரிக்க எடுத்துக்கொள்ளும் காலம் வேறுபடும்.
இவற்றில் குரு, ராகு_கேது, சனிப்பெயர்ச்சிகள் நடைபெறும்போது கோயில்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் பாதிப்பு உள்ள ராசிகளுக்கு பரிகாரங்கள் செய்யப்படும்.
குரு ஆண்டுதோறும் இடம் பெயர்வதால் பெரும்பாலான ஆண்டுகளில் குருப்பெயர்ச்சி ஏற்படும். ராகு_கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் ஒரு சில ஆண்டுகளில் ராகு_கேது பெயர்ச்சி இருக்காது. அதேபோல, சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுவதால் ஒன்று அல்லது 2 ஆண்டுகளுக்கு சனிப் பெயர்ச்சி இருக்காது.
ஆனால், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017இல்) குரு, ராகு_கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 27ஆம் தேதி ராகு_கேது பெயர்ச்சி, செப்டம்பர் 2ஆம் தேதி குருப் பெயர்ச்சி, டிசம்பர் 19ஆம் தேதி சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன.
சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி என ஒன்பது நவக்கிரகங்கள் உள்ளன என்று ‘இந்து’ இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் பிரச்சினைகளையும் பிற நாட்டுப் பிரச்சினைகளையும் முடிபிளந்து எழுதும் இந்த ஏடுகள் மதம் சார்ந்தவை என்று வரும்பொழுது முழுவதுமாக தங்களைத் தொலைத்துவிட, அல்லது மலிவாக மூடநம்பிக்கையை விலைக்கு விற்றுவிடுவதில் சற்றும் தயக்கமோ, வெட்கமோ படுவதில்லை _ கூச்சப்படுவதும் இல்லை.
இந்த நவக்கிரகப் பட்டியலில் சூரியன் இடம் பிடித்தது எப்படி? அது ஒரு நட்சத்திரம். உண்மையான கிரகமான பூமிக்கு இந்த நவக்கிரகப் பட்டியலில் ‘கல்தா’ கொடுக்கப்பட்டு விட்டது; ஆனால், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இவற்றை எல்லாம்விட குமட்டிக் கொண்டுவரும் ஒரு சேதி உண்டு. ராகு, கேது என்கிற கிரகங்களே கிடையாது. அப்படி இருக்கும்போது இவை எப்படி நவக்கிரகப் பட்டியல் என்னும் பந்தியில் ‘சப்பனம்’ போட்டு உட்கார வைக்கப்பட்டுள்ளன.
தேவகுருவாகிய வியாழன் என்பவனின் மனைவியை குருவின் சீடனான சந்திரன் கற்பழித்து விட்டான் என்றும், குருவின் சாபத்தால் ராகு, கேது என்ற பாம்புகள் சந்திரனை விழுங்குவதால்தான் சந்திரன் அழகு குறைந்து தேய்பிறை ஏற்பட்டது என்றும் இந்துப் புராணம் கூறுவது எல்லாம் எவ்வளவு ஆபாசமும், அறியாமையும் ஆகும்!
1781ஆம் ஆண்டில் யுரேனஸ், 1846ஆம் ஆண்டில் நெப்டியூன், 1930ஆம் ஆண்டில் புளூட்டோவும் கண்டுபிடிக்கப்பட்டன. விண்ணியல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் இதில் புளுட்டோ என்பது கோளின் அம்சத்துக்குக் கீழ் வரவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டு கிரகங்களின் பட்டியலி லிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
புதிய இரு கிரகங்களுக்கு சோதிடத்தில் பலன் இல்லையே _ எங்கே போய் முட்டிக்கொள்ளப் போகிறார்கள் _ இந்த சோதிட சிகாமணிகள்? கிரகங்களில்கூட வருணங்கள் உண்டு; வியாழன், வெள்ளி இரண்டும் பிராமணர்கள், ஞாயிறும், செவ்வாயும் சத்திரியர்கள், சந்திரனும், புதனும் வைசியர்கள், ராகு, கேது சூத்திரர்களாம். சோதிட மூடத்தனத்தில்கூட வருண பேதங்கள். இவையெல்லாம் பார்ப்பனீய இட்டுக்கட்டும் கற்பிதங்கள் என்று விளங்க வில்லையா?
சோதிடத்தில் கைரேகை, வாஸ்து என்பது போன்ற வகையறாக்கள் உண்டு. மூலமே முட்டாள்தனம் என்றால் அதன் வகையறாக்கள் வடிகட்டின முட்டாள்தனமாகத்தானே இருக்கும்?
இதற்கு இரு எடுத்துக்காட்டுகளைக் கூறினால் சரியாக இ¢ருக்கும்.
மூடநம்பிக்கை வியாபாரிகளுள் ‘குமுதமும்’ ஒன்று, பிரார்த்தனைக் கிளப்பு நடத்திய கில்லாடியாயிற்றே!.
ஒரே ஒரு முறை உருப்படியான ஒரு காரியத்தைச் செய்தது.
ஒரு பிரமுகரின் கைரேகையைப் பதிவு செய்து சென்னையில் உள்ள நான்கு பிரபல சோதிடர்களிடம் கொடுத்து அதற்குப் பலன் கணித்துச் சொல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது.
அரசியலில் மிகவும் உயர்ந்தவர் என்றார் ஒரு சோதிடர். எதிர்காலத்தில் இன்னும் உயர்பதவிகள் எல்லாம் காத்திருக்கின்றன என்று ஒரு போடு போட்டார் இன்னொரு சோதிடர்.
இன்னொரு சோதிடர் சொன்னது அதைவிட தமாஷ். இவர் ஒரு பிரபல சினிமா நட்சத்திரம், உலகம் முழுவதும் பேசப்படுபவர் என்று தன்பாட்டுக்கு கதையளந்தார். அடுத்தவர் தம் மனப் போக்கில் எதை எதையோ உளறினார்.
உண்மையிலேயே அந்தக் கைரேகைக்கு உரியவர் யார் என்பதை அதே ‘குமுதம்’ வெயியிட்டபோது வெடிச்சிரிப்புதான். விலா நோகாததுதான் மிச்சமோ, மிச்சம்! அந்தக் கைரேகைக்கு உரிய ஆசாமி யார் என்றால் சென்னை அண்ணா சாலையில் ஒரு பிச்சைக்காரன். (உபயம்: குமுதம் பால்யூ)
வாஸ்துவைப் பற்றி சொல்ல வேண்டாமா? வெற்று வார்த்தைகளில் விளாச விரும்பவில்லை; அதற்கு ஓர் எடுத்துக்காட்டைச் சொன்னால் தானே சரியாக இருக்கும்.
சென்னையைப் பற்றி சொல்லிவிட்டோம். பெங்களூரிலிருந்து ஓர் உண்மை சரக்கு இது. இந்தத் தகவலை அனுப்பி உதவியவர் இயக்கச் சிந்தனையாளர் தோழர் முத்துசெல்வன்.
கருநாடகத்தில் விஜயபுரா என்னும் ஊர் உள்ளது. அந்த ஊரில் ஒரு சட்ட நிறுவனத்தில் பணிபுரியும் திரு.மகாதேவ் துதியால் என்பவர் 2007 முதல் தன் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். அதனால் துயருற்ற அவர் “எத்தெ தின்னால் பித்தம் தெளியும்’’ என்னும் கூற்றுக்கேற்ப அலைந்துள்ளார். ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரத்தைக் கண்டார். அதில் சந்திரசேகர் குருஜி என்பவர், தன்னுடைய ஆலோசனையின் பேரில் தங்கள் வாழிடங்களை வாஸ்து சாத்திரத்திற்கேற்ப மாற்றி அமைத்தும் புதிய வீடுகளைக் கட்டியும் மக்கள் பலர் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அவர் நடத்தி வந்த அமைப்பிற்கு, “சரள வாஸ்து’’ என்ற பெயர். ஊப்பளியில் உள்ளது.
விளம்பரத்தைப் பார்த்த திரு.மகாதேவ் சந்திரசேகர் குருவை அணுகி ஆலோசனை கேட்டுள்ளார். சரள வாஸ்துவின் சார்பில் வந்தவர் இவரிடமிருந்து ரூ.11,600/_அய் ஆலோசனைக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு, வீட்டில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களுக்கான வரைபடத்தைக் கொடுத்துள்ளார்.
எப்படியேனும் தொல்லைகளில் இருந்து விடுபட வேண்டும் என்னும் உந்துதலால் மகாதேவ் ரூ.4.5 லட்சத்தைக் கடனாகப் பெற்று வரைபடத்தில் உள்ள மாற்றங்களைச் செய்துள்ளார். வீட்டின் சுவர்களை இடித்து, நுழைவாயிலின் திசையை மாற்றி அவற்றுக்கேற்ப வேறு சில மாற்றங்களையும் இரண்டு மாதங்களில் செய்து முடித்துள்ளார். மூன்றிலிருந்து எட்டு மாதங்களுக்குள் உறுதியாகப் பலன் கிட்டும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
சந்திரசேகர குருவின் பரிந்துரையின் பேரில் மாற்றங்களை மேற்கொண்டு விடியலுக்காகக் காத்து, காத்துப் பார்த்து ஒரு முன்னேற்றத்தையும் காணாமல் வெறுத்துப்போன மகாதேவ் ஊப்பளியில் உள்ள சரள வாஸ்து நிறுவனத்தை அணுகியுள்ளார். பலமுறை சென்றும் அவருக்கு உரிய விளக்கம் கிடைக்கவில்லை. ஏற்கெனவே கடன் தொல்லையால் துன்புற்றவருக்கு வாஸ்துப் பரிகாரத்தால் மேலும் 4.5 லட்ச ரூபாய் கடனானதும் மன உளச்சலும்தான் கண்ட பலன்.
இப்போது திரு.மகாதேவ் இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். தன் மனுவுடன் குருஜி அளித்த வரைபடத்தையும் இணைத்துள்ளார். சரள் வாஸ்துவால், தான் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
முறையற்ற, குறைகள் நிறைந்த வணிக நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதாக, குருஜியின் நிறுவனத்தின் மீது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவருடைய வழக்கறிஞர் அனந்தபுர் கூறியுள்ளார்.
தான் இந்த வழக்கைத் தனக்காக மட்டுமல்லாமல், வருங்காலத்தில் எவரும் இத்தகைய ஏமாற்று வேலைக்கு ஆளாகக் கூடாது என்னும் நோக்கிலேயே தொடுத்துள்ளதாகத் திரு.மகாதேவ் துதியால் கூறியுள்ளார்.
இதுபோலவே சோதிடத்தை நம்பி ஏமாந்தவர்கள், இராசிபலன்களைப் பார்த்து ஏமாந்தவர்கள். கோள்களின் பெயர்ச்சிப் பலன்களைப் படித்து அவற்றின்படி நடவாமல் ஏமாந்தவர்கள் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுக வேண்டும்.
சாதகம் பார்த்து, அரச மரம் நட்டு, அய்யனை வைத்து, அக்னி வலம் வந்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நடந்த திருமணங்களில் பாதிக்கப்பட்டவர்களும் சோதிடர்கள் மீதும், நாள் பலன், வாரப்பலன், மாதப்பலன், ஆண்டுப்பலன், பெயர்ச்சிப் பலன்கள் வெளியிடும் ஊடகங்கள் மீதும் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் இவற்றை வைத்துப் பிழைப்பை நடத்துபவர்கள் பின்வாங்கி விடுவார்கள்.
ஆசிரியர் வீரமணி அவர்கள் கூறியுள்ளபடி, “நீதிமன்றங்களில் நல்ல தீர்ப்புக் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் பல நேரங்களில் கிடைக்காது. காரணம் நீதிபதிகளிலும் ஜோதிடப் பைத்தியங்கள் உண்டே!’’ என்பது மெய்ப்பிக்கப்படுமா என்பதை மேற்கண்ட வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் பொறுத்திருந்து பார்ப்போம்.
_ -முத்து செல்வன், பெங்களூரு.
வாஸ்து மோசடிக்கு இந்த உண்மையான நடப்புப் போதாதா?
வாஸ்து சாஸ்திரம் என்று சொல்வதிலும் வருண பேதங்கள் உண்டு. பிராமணனுக்கு புளியமரம், சத்திரியனுக்கு ஆச்சா மரம், வைசியனுக்குத் தேக்கு மரம், சூத்திரனுக்கு வேங்கை மரம். மண்ணில்கூடப் பேதம் உண்டு. பிராமணர்களுக்கு வெள்ளை நிறம், சத்திரியர்களுக்கு சிவப்பு நிறம், வைசியர்களுக்குக் கறுப்பு நிறம், சூத்திரர்களுக்கு பாசி (பச்சை) படர்ந்த காட்டு மண்ணும் கொண்டு வீடுகட்ட வேண்டுமாம். இந்தக் கழுதை புரண்ட களத்தை என்னவென்று சொல்லுவது! வாஸ்து பற்றி வக்கணையாகப் பேசுபவர்களுக்கு ஒரு கேள்வி உண்டு. வாஸ்துவில் கழிப்பறைக்கு இடம் உண்டா? இதுவரை அவர்களால் பதில் சொல்ல முடியாத இடம் இது!
தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டி.என்சேஷனை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எதையும் தடாலடியாகப் பேசக்கூடிய, செய்யக்கூடிய ‘தாண்டவராயன்’ அவர்.
1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பி.ஜே.பி. வேட்பாளர் எல்.கே.அத்வானியை எதிர்த்துப் போட்டியிட்டார்.
அவர் அளித்த பேட்டி ஒன்று _ அவாளுக்கு மிகவும் நெருக்கமான ‘தினமலர்’ (28.8.1999) -ஏட்டிலேயே வெளிவந்த அந்தச் செய்தி இதோ.
“அத்வானி போட்டியிடும் காந்தி நகர் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்றும், இங்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதா என்றும் சேஷனிடம் கேட்டபோது, “இந்தத் தொகுதியில் போட்டியிடுவதால் என்னை முட்டாள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். தோல்வியடையப் போகும் இடத்தில் போட்டியிடுகிறாரே என்று கருதுகிறீர்கள். ஆனால், எனக்கு ஜோசியம் தெரியும். நான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று எனது ஜாதகம் கூறுகிறது. எனவேதான், இங்கு போட்டியிடுகிறேன்’’ என்று டி.என்.சேஷன் பேட்டியளித்தாரே. அதனைத் தினமலர் (28.8.1999) வெளியிட்டதே. சேஷன் வெற்றி பெற்றாரா? அவர் நம்பிய ஜாதகம் என்னாயிற்று?
காந்தியாருக்கு 125 வயது ஆயுள் என்று திருத்தணி பிரபல சோதிடர் கிருஷ்ணமாச்சாரி கணித்தது என்னாயிற்று? எவ்வளவோ சொல்லலாம். வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. “குடிக்கவும் நல்ல நேரம்’’ என்று திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் வெளியிட்ட காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் எளிதில் நம்ப மாட்டீர்களே. எதைச் சொன்னாலும், ஆதாரத்தின் சவுக்கடி கருஞ்சட்டைப் பாசறையிலிருந்து கிளம்புமே.
6.7.2003 நாளிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் (பக்கம் 21) வெளியிட்டுள்ள ‘அரிய’ தகவலோ தகவல் இதோ:
“திருப்பதி தேவஸ்தானம் வெளியிடும் காலண்டர், பஞ்சாங்கத்தை எனது உறவினர் வீட்டில் ரெகுலராக வாங்குவார்கள். இதேபோல், அவர்கள் வாங்கியிருந்த சுபானு ஆண்டிற்கான பஞ்சாங்கத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் 130ஆம் பக்கத்தில் மனை வாங்க, வாகனம் வாங்க, விற்க, பயணம் செய்ய எனப் பல நல்ல காரியங்களுக்கு உகந்த நாள்கள் கச்சிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பக்கத்தின் கடைசியில் அச்சாகியிருந்த விஷயம்தான் அதிர்ச்சியைத் தந்தது. அதாவது ‘மதுபானம் அருந்த உகந்த நாள்கள்’ என்ற தலைப்பில் சில நல்ல நாள்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மதிப்பிற்குரிய திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள பஞ்சாங்கத்தில், நமது பண்பாட்டுக்குப் பொருத்தமற்ற இப்படிப்பட்ட செய்தி வெளியிடப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளித்தது. இந்தத் தவறைத் திருத்த தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அடுத்த வருட புதிய பஞ்சாங்கத்தில் இதுபோன்ற ‘நல்ல’ விஷயங்கள் இடம் பெறாமல் கவனிக்க வேண்டும். ஏமண்டி, பாக சூஸ்துரா?
_ எஸ்.வத்சலா, கெங்காராம்.
ஏழுமலையான் யோக்கியதைக்கும், ஜோதிடத்தில் கழிப்பிணித்தனத்துக்கும் வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவையோ?
சோதிடத்தைப் பற்றி நினைக்கும்பொழுது குஷ்வந்த் சிங் நினைவுக்கு வருவார். ‘இல்லஸ்ட்டிரேட்டட் வீக்லி’ இதழின் ஆசிரியராக இருந்தார் குஷ்வந்த்சிங். தற்செயலாக வாரபலன் எழுதிவரும் ஜோதிடரிடமிருந்து அவ்வார பலன் வரவில்லை. என்ன செய்வது என்று இதழ்க் குழுவினர் தவித்த நேரத்தில், இதழ் ஆசிரியர் குஷ்வந்த் சிங் என்ன செய்தார்? கடந்த இதழ்களில் வெளிவந்த பலன்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெட்டி ஒட்டி அவரே ஒரு வார பலனைத் தயாரித்து வெளியிட்டார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்த இதழின் வாசகர்கள் பலருக்கு அந்த வாரப் பலனே மிகவும் சிறப்பாகப் பொருந்தி இருந்ததாம்.
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள் என்பதற்கு இன்னும் என்ன வேண்டும்?


Leave a Reply