Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : தந்தை பெரியார் அவர்களின், நெருங்கிய நண்பர் மூதறிஞர் இராஜாஜியா? கர்மவீரர் காமராசரா? – தி.பொ. சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : நீண்ட நாளைய நண்பர் ராஜாஜி! (கொள்கையால்) நெருங்கிய நண்பர் காமராசர்!!

கேள்வி : தினமணி பத்திரிகையில், குறிசொல்பவர்கள் மாநாட்டில் பேசும்போது ஜெயேந்திரர் இறந்தவர்களுக்குச் செய்யப்படும் நீத்தார் கடன் சடங்குகளைத் தவறாமல் செய்யவேண்டும். இது, மதம் மாறினாலும் செய்யப்பட வேண்டும் என பேசி உள்ளார். இதுபற்றிய தங்கள் கருத்து ?

– ச.தெ. முருகேசன், திருவில்லிபுத்தூர்

பதில் : பார்ப்பனர் வருமான மூலம் (Source) அடைபட்டுவிடக்கூடாதே என்ற கவலையால்தான் அவர் அப்படிப் பேசியிருப்பார்!

கேள்வி : ஜெயிலிலிருந்து பெயிலில் வந்திருக்கும் சங்கராச்சாரியார், பத்மநாபசாமி கோயில் நகைகளை மன்னர் பரம்பரையினரிடமே ஒப்படைத்து விடவேண்டும் என்று கூறியிருப்பது பற்றி?

– நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : மன்னர் மான்யம் ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன என்பதை மறந்துவிட்டார் போலும் மாஜி சங்கராச்சாரி (தண்டத்தைப் போட்டுவிட்டு ஓடியவர் அல்லவா?).

கேள்வி : இந்தியாவிலுள்ள கோவில்களில் ஆங்கிலேயர் கொள்ளையடித்ததாகவோ, வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்ட தாகவோ சரித்திரச் சான்று உண்டா?  – ஜே.அய். ஏ. காந்தி, எரும்பி

பதில் : தவறு! பார்ப்பன மதவாதிகளின் எதிர்ப்பால் ஆங்கில ஆட்சி விக்டோரியா மகராணி ஆட்சிக்காலத்தில் மதவிவகாரங்களில் தலையிடுவதில்லை என்று எழுதியே கொடுத்துவிட்டது. அதற்கு விக்டோரியா மகாராணி சாசனம் என்று பெயர். எனவே, ஆங்கிலேயர் ஆட்சியில் கோயில் சொத்துகளைப் பறித்துக்கொண்டதற்கான வரலாற்றுக் குறிப்பு –  நாம் அறிந்தவரையில் இல்லை.

கேள்வி : வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி அன்னா ஹசாரே, யோகா பயிற்சியாளர் பாபா ராம்தேவ், தனித் தெலுங்கானாவுக்கான பிரச்சினைக்காக தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகர்ராவ், ஒய். எஸ். எம். ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பா.ஜ.க. எடியூரப்பா ஆட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனதா கட்சித் தலைவர் குமாரசாமி ஆகியோர் காலவரையற்ற சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டங்கள் என்று கூறிவிட்டு ஓரிரு நாள்களிலேயே முடித்துக் கொள்வது பற்றி?

க.சித்து, உள்ளிக்கோட்டை

பதில் : உயிரை அற்பமாக மதிக்கும் (அ)லட்சியவா(ந்)திகள் இவர்கள்.

கேள்வி : போகிற போக்கைப் பார்த்தால் கோயில்களில் சிக்கியுள்ள திரவியங்கள்தான் இந்தியாவின் வறுமைக்குக் காரணமாகத் தோன்றுகிறதே?

– ந. பொற்கோ, ஆற்காடு

பதில்: ஒரு நல்லரசு இந்தத் தொகைகளை எடுத்து இந்தியாவின் நதிகளை இணைக்கும் திட்டத்திற்குச் செலவழித்தால், வறட்சியாலும், வெள்ளத்தாலும் பற்பல மாநில மக்கள் உயிர்விடுவதை, இழப்பதைத் தவிர்க்க நாட்டில் வளம் பெருக்கலாமே!

பத்மநாபக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட பொருளின் மதிப்பு இந்தியக் கல்வி பட்ஜெட்டைத் தாண்டுகிறதே!

கேள்வி : கோவில் பாதாள அறைகளில் இருந்த ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்களை  இப்போது இருக்கும் மத்திய அரசு என்ன செய்யும் என நினைக்கிறீர்கள்?

– நாககன்னிகா, கூடலூர்

பதில் : மத்திய அரசு வழமைபோல் ஒன்றும் செய்யாது.

கேள்வி : நகரங்களில் ரூ 20ம் கிராமங்களில் ரூ 15ம் ஒரு நாளைக்கு வருவாய் பெறுகின்றவர்கள்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் என்று நிர்ணயம் செய்துள்ளஅரசு 10 ரூபாய்க்குக் குறைவாய் பெறுகின்றவர்கள் என்று நிர்ணயம் செய்திருந்தால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோர் தொகை மிகவும் குறைந்து நமது நாட்டுக்குப் பெருமை சேர்ந்திருக்குமே?     – இ. கிருபாகரன், சோளிங்கர்

பதில்: நல்ல யோசனை; இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் மிகக்குறைவு என்று காட்டப் பயன்படுமோ?

கேள்வி : மும்பை குண்டுவெடிப்பு தொடர்கதையாக உள்ளதே, இதனைத் தடுக்க வழியே இல்லையா? – கோப்பெருந்தேவி, சீர்காழி

பதில்: நோய்நாடி நோய் முதல் நாடவேண்டும்! நோயின் அறிகுறிக்குத் தண்டனை வழங்குவதைவிட அடி ஊற்றுக்கே சென்று கண்டு அதற்குரிய சிகிச்சை கொடுத்தால் அடக்கலாம்! சிங்கப்பூர், சுவிஸ் போன்ற நாடுகளின் பாதுகாப்பு முறையைக் கொஞ்சம் ஆராய்ந்து செயல்படுத்தலாமே!