தனிநபர் வெறுப்பால் தனிக் கட்சி கூடாது
தனிநபர் வெறுப்பால் தனிக் கட்சி தொடங்குவது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. தனிக்கட்சி தொடங்கும் எவரும் கொள்கை அடிப்படையில், கொள்கை மாறுபாட்டால் தனிக்கட்சி தொடங்குவதில்லை. தலைமைக்கும் தனக்கும் பிடிக்கவில்லை யென்றால் தனிக்கட்சி. தனிநபர் விரோதங்களுக்குக் கட்சியை எவர் தொடங்கினாலும் அது கண்டிப்பட வேண்டியது. உண்மையில் இவர் பக்கம் நியாயம் இருப்பின் கட்சியிலுள்ள பெரும்பாலானவர் களை இவர் தன் பக்கம் கொண்டு வந்து தலைமையை இவர் ஏற்க வேண்டும் பெரும்பாலானவர் ஆதரவு இல்லையென்றால், இவரை அக்கட்சி ஏற்கவில்லை என்றுதானே அர்த்தம்.
எனவே, கட்சிக்குள் தன் கருத்தை வலுவாகச் சொல்லிக் கட்சிக்காரர்கள் ஆதரவைப் பெற்று, சரியில்லாத் தலைமையை மாற்றி, தான் தலைமை ஏற்க வேண்டும். அதுவே, சரியான _ முறையான தொண்டன் செய்ய வேண்டியது. மற்றபடி தனிக்கட்சி தொடங்குவது தன் முனைப்பு நாட்டமேயாகும்.
பழத்தைச் சாறாகப் பருகக் கூடாது
பழத்தை மென்று சாப்பிட முடியாத நிலையில் மட்டுமே திரவ உணவுகள் பருகப்பட வேண்டும். அதைவிட்டு இளம் வயதினர்க்கூட சாறு குடிப்பது சரியல்ல.
பழங்களை உரித்து, மென்று சாப்பிடும்-போதுதான் அதில் தேவையான உமிழ்நீர் கலக்கும், நார்ச்சத்து கிடைக்கும். மாறாக, சாறு பிழிந்தால் நார்ச்சத்து நீங்கும், பிழியும் இயந்திரத்தின் சூடேறி சுவை மாறும். தேவையற்ற சர்க்கரை, பனிக்கட்டி, கிருமி சேரும், பிழியும் இயந்திரத்திலுள்ள அழுக்கும் கலக்கும்.
எனவே, பழங்களைச் சாறு பிழிந்து சாப்பிடாமல் மென்றே சாப்பிட வேண்டும். பழத்தின் முழுப் பயனும் அப்போதுதான் சாப்பிடுபவர்க்குக் கிடைக்கும்.
அடுத்த குழந்தை உடனே பெறக்கூடாது
திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்வது சரியல்ல, அடுத்த குழந்தையை உடனே பெறுவது நல்லதல்ல.
திருமணமானவர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் மகிழ்வாக, இதமாக, சுமையின்றி உடல்நலத்தோடு இன்பம் காண வேண்டும். மகிழ்வோடு சுற்றித் திரிய வேண்டும்.
அதன்பின் ஒரு குழந்தை. அது ஆணோ பெண்ணோ அத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது. இன்னொரு குழந்தை வேண்டும் என்று விரும்பினால் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின் பெற வேண்டும். அப்போதுதான் தாயின் உடல்நலமும் காக்கப்படும், முதல்பிள்ளையும் நன்றாக வளர்க்கப்படும்.
மாதவிலக்கு நிற்கப் போகும் பெண்ணிற்கு உளச்சல் தரக்கூடாது
பெண்களுக்கு 50 வயது வரும்போது மாதவிலக்கு நிற்கத் தொடங்கும். இந்த நேரத்தில் பெண்ணின் உடல்நிலையும், மனநிலையும் சற்று பாதிக்கப்படும். எரிச்சல், கோபம், உணர்ச்சி வசப்படல் வரும்.
இந்த நிலையில் வீட்டிலுள்ள கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவரைத் தவறாக எண்ணக்கூடும். ஆனால், உண்மையில் அவரையும் மீறி அது நடப்பது என்பதை அவர்கள் உணர்ந்து, அவர்மீது வெறுப்புக் கொள்வதற்கு மாறாக அன்பும், அனுதாபமும் காட்ட வேண்டும். அவர் மனம் மகிழும் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் மன உளச்சல் அடையாமல் நாம் நடந்து கொள்ள வேண்டும். அவர் கோபப்பட்டால் நாம் ஒதுங்கிச் சென்று விட வேண்டும். போட்டியாகப் பேசி எரிச்சல் ஊட்டக் கூடாது. முக்கியமாக, அவருடைய வேலைகளை மற்றவர்கள் செய்து அவரை ஓய்வில் இருக்கும்படிச் செய்ய வேண்டும்.
ஆணின் உரிமையை பெண்ணுக்கு மறுக்கக் கூடாது
ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் உண்டு. பெண், ஆணைவிட எவ்வகையிலும் தாழ்வானவள் அல்ல. ஆணுக்குள்ள அத்தனை உணர்வுகளும் பெண்ணுக்கும் உண்டு.
எனவே, பெண்ணை ஆணின் துணையாகக் கருதும் மனநிலைமாற வேண்டும்; ஆணுக்கு இணை பெண் என்ற சரியான எண்ணம் ஊட்டப்பட வேண்டும்.
பெண்ணை இணையாக மதிக்கும், நடத்தும் சமூகமும், நாடுமே மேம்படையும். பெண்ணை முடக்கும் எச்சமுதாயமும் எழ முடியாது.
பெண்ணை இழிவுபடுத்தும், முடக்கும் சாஸ்திர சம்பிரதாயங்கள், மரபுகள், நடப்புகள் புறக்கணிக்கப்பட வேண்டும். தாயைப் போற்றும் சமுதாயம் பெண்ணை இழிவுபடுத்துவது முரண் அல்லவா?
ஆணுக்கு வழங்கும் அனைத்து உரிமைகளும் வாய்ப்புகளும், உயர்வுகளும் பெண்ணுக்கும் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். பெண்களும் உரிமையை எடுத்துக் கொள்ள வேண்டும். பிச்சை பெறுவதல்ல பெண்ணுரிமை!