Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் ஒரு பிறவி புரட்சியாளர்! மேனாள் பிரதமர் சரண்சிங்

அய்யாவின் அடிச்சுவட்டில்.. இயக்க வரலாறு தன்வரலாறு(166)

இன்னும் சில ‘புத்திசாலிகள்’ பெரியார் இதைத்தான் சொன்னார் என்கிறார்கள். எவ்வளவு தைரியம் அய்யா? பெரியார் மடியில் தவழ்ந்த நீங்கள் எல்லாம் இருக்கும்பொழுது, நாமெல்லாம் இருக்கும்பொழுது இவ்வளவு தைரியமாக புளுகுகிறார்கள்.

 

தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி பார்_அட்_லா அவர்கள் உரையாற்றியதாவது: (அவரது ஆங்கில உரையை திருப்பூர் இறையன் தமிழாக்கம் செய்தார்)

பெரியார் அவர்களுடைய வீரம் அவருக்கு ஏராளமான எதிரிகளைத் தேடித் தந்தது. மனிதாபிமானம், நவீன மனப்பான்மை இந்த இரண்டையும் நிலைநிறுத்தப் பெரியார் பெரும்பாடுபட்டார். உலகிலேயே இந்த இரண்டையும் இணைத்துப் பாடுபட்ட ஒரே தலைவர் பெரியார்தான்.

காங்கிரஸில் இருந்த மேல்ஜாதி பார்ப்பனர்கள் அதற்குத் தடையாயிருந்து வந்தனர். அதை உணர்ந்த பெரியார் அவர்கள் ‘போய்வருகிறேன் காங்கிரசை விட்டே!’ என்று கூறி வெளியேறினார்.

பெரியார் அவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறிய நேரத்தில் பெரியார் விரும்பிவந்த கருத்துக்களைக் கொண்ட ஒரு கட்சி நாட்டில் இருப்பதைக் கண்டார் அதுதான் நீதிக்கட்சி.

அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதில் நியாயம் இருப்பதாகப் பெரியார் கருதினார்; பின்னர் அக்கட்சியின் தலைவராகவும் பெரியார் ஆனார்.

இக்காலத்து இளைஞர்களுக்கு பானகல் அரசர் என்றால் அனேகமாகப் பெரும்-பாலோர்க்குத் தெரியாது இருக்கலாம். அவர் இந்நாட்டு ஆதிக்கவாதிகளுக்கு எதிராக உறுதியாக இருந்தார். முதன்முதலாக இந்து அறநிலையச் சட்டத்தைக் கொண்டு வந்தவரே அவர்தான். பணியாளர் தேர்வு வாரியம் (Staff Selection Board) என்ற அமைப்பையும் அவர்தான் கொண்டுவந்தார்.

மருத்துவம், பொறியியல் போன்ற கல்லூரி-களில் சேர வேண்டுமானால் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்தனர்.

இதனால் பார்ப்பனரல்லாதார் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்த பானகல் அரசர் அந்த நிபந்தனையைத் தூக்கி எறிந்தார்.

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டபொழுது பார்ப்பனர்கள் கட்டுப்பாடாக, பெரிதாக எதிர்த்தார்கள்.

பெரியார் அந்த நேரத்தில்தான் களத்திற்கு வருகிறார். பொதுமக்களிடம் அந்தச் சட்டத்தின் நன்மை பற்றி விளக்கமளித்தார். அவர்களுக்குப் புரிகிற மொழியில் பேசினார்.

பெரியாருடைய பேச்சைக் கேட்க மக்கள் மொய்ப்பார்கள். இந்து அறநிலையச் சட்டம் பார்ப்பனர்களின் எதிர்ப்பிலிருந்து பெரியாரால் தப்பிப் பிழைத்தது. ஆந்திராவில் பெரியார் சுற்றுப் பயணம் செய்தபொழுது தெலுங்கில் பேசினார்.

பார்ப்பனப் பத்திரிகைகளில் வருவதுதான் சரியானது, உண்மையானது என்று நம்பிக்கைக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதைப் பொய்ப்பித்தவர் பெரியார். அவருடைய தமிழ்ப் பேச்சு ஒரு நல்ல திருப்பமாக அமைந்தது.

மேடைப் பேச்சில் இன்று வீரமணி சிறப்பாகப் பேசுகிறார். கலைஞர் வல்லவராக இருக்கிறார். அமைச்சர்கள் உரையாற்று-கிறார்கள் என்றால் பெரியார் காட்டிய பொது வழி அது!

இந்த நாட்டிலே ஒரு பெரும் சமுதாய மாற்றம் நிரந்தரமாக ஏற்பட்டாக வேண்டும் என்று அவர் விரும்பி, அதிலே தன்னை முழுவதும் மூழ்கடித்துக் கொண்டார்.

சுயமரியாதைத் திருமணம், கலப்பு மணம், விதவைத் திருமணம் இவற்றையெல்லாம் நாட்டிலே அறிமுகப்படுத்தி வைத்த பெருமை பெரியார் அவர்களையே சாரும்.

பெரியார் சாதித்த வெற்றி சுயமரியாதை உண்ர்வை யாவருக்கும் உண்டாக்கிய வெற்றியாகும்.

பெரியார் சமுதாயத்திலே உண்டாக்கிய சமத்துவ உணர்வுதான், ஒருகாலத்தில் கோயில்  வளாகத்துள்  அனுமதிக்கப்படதா சமூகத்தைச் சேர்ந்த தேவசகாயம் அவர்களின் பலகாரத்தைத் தேடிச்சென்று வாங்கும் உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எந்தவித சோசலிசத்துக்கும் அடிப்படை-யானது சுயமரியாதை என்பதைத்தான் பெரியார் உணர்த்தினார். இதை எல்லோரும் உணர வேண்டும்.

சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவர் தி.நாகரெத்தினம் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

“தமிழ்நாட்டில் நடைபெறும் தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவிலே கலந்துகொள்-வதற்காக சிங்கப்பூர், மலேசியா, குவைத், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து நாங்கள் ஏறத்தாழ 25 பேர் வந்திருந்தோம். அகில இந்திய ரீதியிலே பல மாகாணங்களி-லிருந்தும் பலர் இங்கே வந்திருந்தனர்.

தந்தை பெரியார் அவர்களின் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட உழைப்பு. இந்நாட்டு மக்களிடத்திலே எந்த அளவு பதிந்துள்ளது; தந்தை பயிற்றுவித்த கட்டுப்பாட்டில் கருஞ்சட்டைத் தோழர்கள் எந்த அளவுக்கு நெறியாக இருக்கிறார்கள் என்பதை எங்களால் நன்றாக அறிய முடிந்தது.

தமிழர்களின் தளபதி தமிழகத் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர், தந்தை இருந்தபோதும், இறந்தபோதும், இன்றும், அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டவராக இருக்கும் அய்யா அவர்களின் ஒரே வாரிசு வீரமணி அண்ணா அவர்களைப்பற்றி நான் கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகின்றேன்.

தந்தை பெரியார் அவர்கள் அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து சந்தித்து தன் கருத்துக்களை, தத்துவங்களைச் சொல்லி வந்தார்.

அய்யாவின் அறக்கட்டளைப் பணிகள், கல்வி நிறுவனங்களின் பணிகள், ஆதரவற்ற குழந்தை-களைக் காக்கும் பணிகள், அய்யா அவர்களைப் போற்றிப் பாதுகாக்கும் பணிகளிலே அருமை அம்மா அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.

பத்திரிகைத் துறையிலே, பிரச்சாரத் துறையிலே, கழக அமைப்புத் துறையிலே நமது பொதுச் செயலாளர் அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.

இன்று அய்யா இல்லை; அம்மா இல்லை. அவர்கள் இருவரும் கவனித்து வந்த பணிகளையும் சேர்த்துக் கவனிக்கும் நிலைமை நமது பொதுச் செயலாளர் அவர்களுக்கு இன்றைய தினம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவுக் கடுமையான பணிகளையும், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், தீவிரமாக ஈடுபட்டு சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள்.

அய்யாவின் தத்துவங்களை, சிந்தனைகளை உள்ளது உள்ளபடியாக ஒரிஜினலாகக் கொடுக்கக்கூடிய அமைப்புகளோ, தலைவர்-களோ, திராவிடர் கழகத்தைத் தவிர, நமது பொதுச்செயலாளர் அவர்களைத் தவிர வேறு எங்கும் கிடையாது.

நான் தஞ்சை மாவட்டத்துக்காரன். மாயூரத்தைச் சேர்ந்தவன். தந்தை பெரியாரின் தொண்டன், தந்தை பெரியாரின் கருத்துக்களை ஏற்றதால் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு வருபவன். சிங்கப்பூரில் இருந்தாலும், தந்தை பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு, அதை நெறியாகக் கொண்டு வாழுபவன். வாய்ப்புக் கிட்டும் பொழுதெல்லாம் அய்யா அவர்களின் கருத்துக்களை முடிந்த அளவில் பிரச்சாரம் செய்து வருபவன்.

விழாவில் பெருந்திரளாக கலந்து கொண்டவர்-களில், சிவகங்கை வழக்கறிஞர் இரா.சண்முகநாதன், செங்கற்பட்டு திராவிடர் கழகத் தலைவர் காஞ்சி சி.பிஇராசமாணிக்கம், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன், கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் மறைந்த கோ.சாமிதுரை, குவைத் பெரியார் படிப்பக நிர்வாகி செல்லப்பெருமாள், சிங்கப்பூர் தமிழர் சீர்திருத்தச் சங்கச் செயலாளர் முருகு சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவராகிய எம்.கல்யாண-சுந்தரம், பெரியார் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் என்.சேதுபதி, மாநில இளைஞர் பிரிவு செயலாளர் கோவை கு.இராமகிருஷ்ணன், வடசென்னை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பார்வதி கணேசன், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி பார்_அட்_லா, மலேசியா திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு தஞ்சையைத் தினறடித்தனர் என்பதை நினைத்தாலே உள்ளத்தில் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.

இந்திய அரசியலில் மிகப் பெரும் தலைவராக விளங்கியயவரும் – பார்ப்பனரல்லாத சமுதாயத்தில் பிறந்து – பதவிப் பக்கம் திரும்பாமல் உழைத்தவரும் – சிறந்த சோசலிசவாதியுமான ஜெயப்பிரகாசர் அவர்கள் 8.10.1979 அன்று அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி மிகப்பெரிய வருத்தத்தை நமக்கு ஏற்படுத்தியது.

தந்தை பெரியார் மறைந்தவுடன், சர்வோதய தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் 27.12.1973 அன்றுசென்னை பெரியார் திடலில் உள்ள அய்யா இல்லத்திற்கு வருகை தந்தார்.

துயர வெள்ளத்திலிருந்த அன்னை மணியம்மையாரைக் கண்டு ஆறுதல் கூறினார்.

பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஜாதி, மூடநம்பிக்கைகளை முழுமூச்சாக எதிர்த்த பெருந்தலைவர்.

இந்தியாவில் அவரைப் போன்ற தலைவரைப் பார்க்கவே முடியாது, கொடுமைக்கு எதிராகப் பெரும்போர் தொடுத்தவர் அவர்.

1936-_இல் ஒருமுறை நான் ஈரோட்டில் அவரது இல்லத்தில் விருந்தினராகத் தங்கினேன். அப்போது அந்த விருந்தில் எனக்குப் பரிமாற இருந்த புலால் உணவுகளின் வகைகள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாகப் படிந்திருக்கின்றன. மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டு பழகும் தன்மையாளர் அவர். அதற்குப் பின்பும் இரண்டு, மூன்று முறை அவரைச் சந்தித்து அளவளாவி இருக்கிறேன்.

பெரியாருக்கு எடுக்கப்படும் நினைவுச் சின்னம் வெறும் கட்டிடங்களாக அமையாமல் அவை எல்லாம் அவரது பயனுள்ள கருத்துக்களை மக்களிடையே பிரச்சாரம் செய்யும் கருவிகளாக அமைய வேண்டும் என்ற கருத்தையும் கூறினார்.

அம்மாவின் பக்கத்தில் இருந்த குழந்தையைச் சுட்டிக்காட்டி அவர் விசாரித்தபோது அது திருச்சி பெரியார் மாளிகையிலுள்ள “அனாதைகள்’’ இல்லத்தினைச் சேர்ந்தது என்று அவருக்கு விளக்கம் கூறப்பட்டது. அங்குள்ள அய்யாவின் மாளிகையையும் பள்ளி நிறுவனங்களையும் கண்டிப்பாக பார்வை-யிடுவதாகக் கூறினார்.

அம்மா அவர்களுக்கு ஆறுதல்கூறும் வகையில், “நீங்கள் வருந்தக் கூடாது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பெரியார் எப்படிப் பாடுபட்டாரோ அதேபோல் பாடுபடுங்கள்! அவர்கள் எல்லாம் உங்களுடைய குழந்தைகள்-தான். நீங்கள் தனித்து விடப்படவில்லை’’ எனக் கூறி அம்மாவிடம் விடைபெற்றார்.

அய்யா அவர்கள் தூங்கும் படுக்கை, புதிய வேன் ஆகியவற்றைப் பார்வையிட்டார். வசதி மிகுந்த அய்யா அவர்களின் வேனைப் பார்த்தபோது, “வசதி மிகுந்த இந்த வேனைப் பயன்படுத்தி அவர் பொதுத் தொண்டை மேலும் நீடிக்க முடியாமல் போயிற்றே’’ என்று வருந்தினார்கள்.

சுமார் 15 நிமிடங்கள் பெரியார் திடலில் கழித்து சென்றார்கள். அய்யா அவர்களின் கருத்துக்களை பரப்பும், ‘விடுதலை’, ‘உண்மை’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ போன்ற வெளியீடுகளைப் பற்றி நான் எடுத்துக் கூறினேன்.

திரு. ஜெயபிரகாஷ் அவர்களிடம் நான், சில நாட்களுக்கு முன் “எவர்மேன்’’ என்ற பத்திரிகையில் லஞ்சமும் ஊழலும் நாட்டில் ஒழிய வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிய வேண்டும். அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற கருத்து கொண்ட ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களது கட்டுரையை தந்தை பெரியார் அவர்களிடம் படித்துக் காட்டியதாகவும், அந்தக் கட்டுரையை தந்தை பெரியார் அவர்கள் பெரிதும் ரசித்து அதனை மொழிபெயர்த்து ‘விடுதலை’யில் வெளியிடுமாறு கூறினார் என்றும், அதன்படி வெளியிடப்பட்டது என்றும், தந்தை பெரியார் அவர்கள் பன்னெடுங்காலமாக இதையே சொல்லி வருகிறார்கள் என்றும் எடுத்துக் கூறினேன்.

ஜெயபிரகாஷ் அவர்கள் இதைக் கேட்டதும் பெரிதும் மகிழ்ந்தார்கள்.
(‘விடுதலை’ 28.12.1973)

“பதவி வெறி தலைவிரிகோலமாக ஆடும் இந்த நாளில் பதவியைத் துச்சமாக மதித்து ஒதுங்கி ஜாதியற்ற, சமதர்ம சமுதாயம் காண விழைந்த அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு ஆகும். அவருக்கு நாம் காட்டும் மரியாதை _ அவர் வழியில் ஜாதியற்ற சமதர்ம சமுதாயம் அமைப்பதேயாகும்’’ என்று என்னுடைய இரங்கல் அறிக்கையில் தெரிவித்து இருந்தேன்.

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றிலேயே பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் பிரதமர் சவுத்திரி சரண்சிங். அவர் முதன்முலாகச் சென்னைக்கு வருகிறார். அதுவும் நமது இயக்கத்தின் நிகழ்ச்சியிலேயே கலந்துகொள்ள வருகிறார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் முதல் பிரதமருக்கு, பிற்படுத்தப்பட்ட சமூகமே எழுந்து நின்று வரவேற்பு கொடுப்போம்; என்று ‘விடுதலை’யில் கழகத் தொண்டர்களுக்கு அழைப்பு கொடுத்து இருந்தோம். இதற்கு இசைவு தெரிவித்து பிரதமர் அவர்கள் வருகை தர சம்மதித்திருந்த நிலையில், நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செயல்பட்டு வந்தன.

நமது கழகத்தின் சார்பில் மூன்று நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் அவர்கள் தங்கியிருந்த இல்லம், அய்யா அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அய்யாவுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு “பெரியார் காட்சியகம்’’ (விusமீuனீ) அமைக்கப் பட்டிருந்தது. அதனை திறந்து வைக்கவும், பெரியார் _ மணியம்மை இலவச மருத்துவமனைக்கு நான்கு மாடிகள் கொண்ட கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டவும், அதனைத் தொடர்ந்து பெரியார் மணியம்மை படத்தினைத் திறந்து வைக்கவும் பெரியார் திடலிலுள்ள எம்.ஆர்.ராதா மன்றத்தில் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்-பட்டிருந்தன.

இதுகுறித்து, ‘23.10.1979 விடுதலை’யின் 3ஆம் பக்கத்தில் ‘பிரதமர் சரண்சிங்’ அவர்களுக்கு பெரும் வரவேற்பு தருவோம், வாரீர்! என்று அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தேன். அந்த அறிக்கையில், “பெரியார் திடலில் நடை-பெறவிருக்கும் பெருவிழாவிற்கு வரவிருக்கும் பிரதமர் அவர்களுக்கு மகத்தானதோர் வரவேற்பினை 26ஆம் தேதி காலை விமான நிலையத்திலும், 27 மாலை பெரியார் திடலிலும் தந்திட கருஞ்சட்டைத் தோழர்களும், கழக வீரர்கள், வீராங்கணைகளும், பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பெருமக்களும் திரண்டு சிறப்பாக முன்னின்று நடத்தி ஒரு புதிய வரலாறு படைத்திட வேண்டுமென அன்புடன் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

பின்பு, பிரதமர் வருகை திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது என்று அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, 24.11.1979  அன்று பிரதமர் தமிழகம் வருகை தந்தார். அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் உணர்ச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. கலைவாணர் அரங்கத்திலேயே முதல் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, மழை காரணமாகவோ என்னவோ அல்லது வேறு ஏதேனும் சங்கடங்கள் காரணமாகவோ என்னவோ, சேலத்திற்குப் புறப்பட முடிவெடுத்து, இந்த நிகழ்ச்சியில் தன் சார்பில் ஆளுநர் அவர்களைக் கலந்துகொள்ளுமாறு அன்போடு தெரிவித்து _ தாம் நேரில் கலந்துகொள்ள இயலாமைக்கு வருத்தத்தையும் தெரிவிக்கச் சொல்லியிருந்தார். ஆளுநர் அவர்கள் மிகுந்த சிரமத்தினிடையே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மிகவும் உற்சாகத்தோடு வந்திருந்தார்கள்.

சவுத்ரி சரண்சிங்

பிரதமர் அவர்களை அழைத்து மிகப் சிறப்பான இந்த நிகழ்ச்சியை நடத்த நாம் எற்பாடுகள் செய்திருந்தாலும் எதிர்பாராத விதமாக இந்தத் தடங்கல் ஏற்பட்டுள்ளது என்று கழகத் தோழர்களிடையே எடுத்துக்கூறி, இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருப்பதை ஏற்று அவர்களைப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக வரவேற்றேன்.

மேடையில் தந்தை பெரியார் _ அன்னை மணியம்மையார் படங்களைத் திறந்து வைத்து ஆளுநர் பட்வாரி உரையாற்றும்போது, பெரியார் ஏழைகளின் உயர்வுக்காகப் பாடுபட்டார். கிராம ஏழை மக்களின் நலனுக்காக உழைத்தார் என்று எடுத்துக் கூறினார்கள்.

பெரியார் அவர்களின் ‘காட்சியகம்’ பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பெரியார் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் நினைத்திருந்தால் எவ்வளவோ சுகபோக-மாகவும், உல்லாசமாகவும் வாழ்ந்திருக்க முடியும்.

இன்றைக்கு பொது வாழ்க்கையிலே காணப்பட முடியாத நேர்மை பெரியாரிடம்   இருந்தது. இன்றைக்கு நாட்டில் கள்ளமார்க்கெட், ஊழல், கட்சி மாறல் இவை அதிகரித்து விட்டன. பெரியாரின் தன்னலமற்ற, தியாகத் தொண்டை அவர்கள் பாடமாகக் கொள்ள வேண்டும்.

பொது வாழ்க்கை தூய்மையாக இருக்க பெரியாருடைய கருத்துகள் தீவிரமாகப் பரப்பப்பட வேண்டும். கட்டிடங்களும் மாளிகைகளும் நூலகங்களும் இந்த நிறுவனம் நடத்தி வருவதற்கு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன் என்று கூறினார். விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.என்.அனந்தநாயகி உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடர் கழகத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தியப் பிரதமர் மாண்புமிகு சவுத்ரி சரண்சிங் அவர்கள், எனக்கு 28.11.1979 அன்று கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். அதில், “அண்மையில் சென்னைக்கு நான் வருகை தந்தபோது பெரியார்_மணியம்மை நினைவு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட இயலாது போனது குறித்து, என்னுடைய உண்மையான மன்னிப்பை வேண்டுவதற்காக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்’’ என்று குறிப்பிட்டு, “தங்களது நிகழ்ச்சியில் பங்கேற்க நான் பெரிதும் விரும்பினேன்.

மதிப்பிற்குரிய அம்மையார் அவர்களுக்கும் பெரியார் அவர்களுக்கும் என்னுடைய மரியாதையையும், ஈடுபாட்டையும் தெரிவிக்க விரும்பினேன். இருந்தாலும் நேரத்தின் நெருக்கடி என்னை அந்தப் பணியை செய்ய விடாமல் தடுத்துவிட்டது.

பெரியார் ராமசாமியைப் போன்ற ஒரு சமூகப் புரட்சியாளர், சாதிக் கொடுமையையும் மூடநம்பிக்கையையும் ஒழித்துக்கட்ட -_ நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தேவை என்று ஏற்கனவே நான் தெரிவித்துள்ள கருத்தை _ இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிர பங்களிப்பை எடுத்துக் கொண்டதன் மூலம் பெரியார் தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கியதும், தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் நுழைவுக்கான இயக்கத்தை முன்னின்று நடத்தியதும் _ மார்க்சிய சிந்தனையில் ஈடுபாடு கொண்டதும் _ பிறகு ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறியதும்  திடீரென்று நடந்துவிட்ட அசாதாரணமான நிகழ்ச்சிகள் அல்ல.

அடிமைப்படுத்தும் நுகத்தடிகளை ஆவேசத்தோடு தூக்கி எறிய எப்போதும் முயன்ற ஒரு பிறவி புரட்சிக்காரர் பெரியார்.

கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கையை எதிர்த்து அவர் கிளர்ந்தெழுத்தார். ஒட்டுமொத்த எதேச்சாதிகாரத்தை எதிர்த்து _ ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை வேண்டும் என்ற அடிப்படையை தனது இயக்கத்தின் அடித்தளமாக்கினார். கடும் எதிர்ப்புகள் நிலவிய சூழ்நிலைகளிலேயே அவர் செயல்பட்டார். தான், விரும்பி ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக தீரத்துடன் போராடினார்.

தமிழ்நாட்டு அரசியலின் போக்கை அவர் படிப்படியாக மாற்றியமைத்தவர். தமிழ்நாட்டில் ஜாதி முட்டுக்கட்டைகளை உடைத்-தெறி-வதற்கும், பெண்களின் நிலை உயரு-வதற்கும் ஒரு வகையில் அவர் காரணமாக இருந்தார்.

ஜாதியைப் பற்றி நான் கொண்டிருக்கும் கருத்தின் அடிப்படையில் சொல்லப்போனால் ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து ஈ.வெ.ரா. நடத்திய லட்சியப் போரில் மிகுந்த ஈடுபாடு கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

வறுமை ஒழிப்புப் போராட்டம், வேலை இல்லாப் போராட்டம், வருமான ஏற்றத் தாழ்வுகள் உள்ளிட்ட எல்லா முனைகளிலும் போராடியாக வேண்டியதோடு, அறிவு-பூர்வமான ஒரு இயக்கத்தையும் தொடர்ந்து நடத்தியாக வேண்டும்.

பெரியாருடைய போராட்ட வாழ்க்கையில் அவருக்கு ஒரு உந்து சக்தியாக விளங்கிய மணியம்மையார் அவர்களின் நினைவுக்கு என்னுடைய மரியாதையை இந்த சந்தர்ப்பத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று எழுதியிருந்தார்கள். இதனை அப்படியே 01.12.1979 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தோம்.

இப்படி வடபுலத்துத் தலைவர்கள் பெரியாரைப் பின்பற்றும் நிலையில் தமிழக முதல்வரின் செயல் வேதனையளித்தது.

தமிழகம் முழுவதும் நவம்பர் மாதம் 26ஆம் தேதி பிற்பட்டோர் உரிமைகளைப் பறித்து, பிற்பட்ட சமூகத்தின் எதிர்காலத்தை இருளில் ஆழ்த்தும் எம்.ஜி.ஆர். அரசின் ஆணையை எரிக்கும் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டிட நான் தஞ்சை, திருச்சி, கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் ரெயில் மூலமாக சுற்றுப் பயணம் செய்துவந்தேன்.
(நினைவுகள் நீளும்)