செய்யக் கூடாதவை

ஜுலை 16-31

செய்ததையே திரும்பத் திரும்பச் செய்யக் கூடாது

உணவு உண்பதாயினும், உடை உடுத்து-வதாயினும், அலுவலகத்தில் செயல்-படுவதாயினும், பொழுதுபோக்காக இருந்தாலும், ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்யாது, மாற்றி மாற்றிச் செய்வது, சலிப்பைத் தவிர்த்து, புத்துணர்ச்சியைத் தரும். இரவு என்றால் இட்டிலி என்பதற்குப் பதில் ஒரு நாளைக்குத் தோசை, ஒருநாளைக்குச் சப்பாத்தி, ஒருநாளைக்குப் பூரி, ஒருநாளைக்கு இடியப்பம், இன்னொரு நாளைக்குக் கொழுக்கட்டை என்று சாப்பிடுவது உடலுக்கும் நல்லது; உள்ளத்திற்கும் நல்லது; நாக்குக்கும் நல்லது.

தொலைக்காட்சியைப் பார்க்கும்போது, நாடகங்களையே பார்ப்பது அல்லது நகைச்சுவையையே பார்ப்பது, அல்லது பாட்டுக் கேட்பது, இல்லையென்றால் செய்தியையே கேட்பது என்று ஒன்றையே செய்யாது ஒரு மணி நேரம் ஒன்றைப் பார்த்தால், அடுத்து வேறு ஒன்றைப் பார்ப்பது சலிப்பைத் தவிர்த்து, மாற்றத்தையும், மனநிறைவையும், ஆர்வத்தையும் கொடுக்கும். ஒரே மாதிரி உடைக்குப் பதில் மாற்றி மாற்றி அணிவது மனதிற்கு நிறைவளிக்கும். பழகுகின்ற நண்பர்களைக்கூட காலை ஒருவர் மாலை ஒருவர் மாற்றி மாற்றிப் பழகுவது நல்லது.

காரிலே செல்வதற்குப் பதில் ஒருநாள் பேருந்தில், ஒருநாள் தொடர்வண்டியில் என்று மாறி மாறிச் செல்வது மனமாற்றத்திற்கு வித்திட்டு மகிழ்வளிக்கும். சலிப்பில்லா வாழ்விற்கு இது துணை செய்யும். கணவனையும் மனைவியையும் பெற்றோரையும், பிள்ளை-களையும் மாற்ற முடியாது.

அவர்களிடம் வேறு வேறு முறையில் பழகிப் புத்துணர்ச்சி பெற வேண்டும். ஒரு நாளைக்குச் சேர்ந்து விளையாடுவது, ஒருநாளைக்குத் திரைப்படம், ஒருநாளைக்குப் பூங்கா, கடற்கரை செல்வது என்று மாற்று முறை வாழ்வு சலிப்பை நீக்கி, மகிழ்வளிக்கும்.

நம் மகிழ்வை அடுத்தவர் தீர்மானிக்கக் கூடாது

வாழ்க்கையில் மிகத் திறமையான செயல்பாடு எது என்றால், நம்மைப் பிறர் ஆளாது நம் ஆளுகையில் நம்மை வைத்திருப்பதேயாகும்.

அவன் அப்படிப் பேசிவிட்டானே; பேருந்தில் ஒருவன் சண்டைக்கு வந்தானே; இன்றைக்கு அவர் நமக்கு வணக்கம் சொல்ல-வில்லையே; இவர் எழுந்து நிற்கவில்லையே என்று ஆயிரம் கவலைகளை ஒருவன் ஏற்படுத்திக் கொள்வான்  என்றால் அவன் வாழவில்லை; அவன் வாழ்வில் அடுத்தவர்-தானே வாழ்கிறார்கள் என்று பொருள். அவனை மற்றவர்களே ஆள்கிறார்கள் என்று அர்த்தம்.

எனவே, நம்மை, மகிழ்வாக நாம்தான் வைத்துக் கொள்ள வேண்டும். நம் மகிழ்வைப் பறிக்கும் எதையும் நாம் பறித்து எறிந்துவிட வேண்டும். அதை மனத்திற்குள் வைத்து மீண்டும் மீண்டும் அசை போடக்கூடாது.
நகைச்சுவை நாடகம் பார்த்துக் கொண்டு, எதிர் வீட்டுக்காரன் திட்டியதை நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு நிம்மதியும் இல்லை; மகிழவும் இல்லை. கவலைப்படுவதால் ஆவது எதுவும் இல்லை. ஆனால், கேடு உண்டு. அப்படியிருக்க அதையே அசை போடுவது முட்டாள்த்தனம் அல்லவா?

பணமும், பதவியும், வசதியும் மகிழ்வைத் தந்துவிடாது. குடிசையில் கூழைக் குடிப்பவர்கள் குதூகலமாய் வாழ்வர். மாடிவீட்டில் அனைத்து வசதிகளுடனும் நொந்து வெந்து கொண்டிருப்பர். வசதிகள் வாழ்வல்ல. மகிழ்வும் நிம்மதியுமே வாழ்வு. அவற்றை உருவாக்குவதே வாழும் திறன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *