இந்நூல் திராவிட இயக்கத்தின் பழைய அரிய செய்திகளை அறிய ஓர் அற்புதமான களஞ்சியம் என்பதை இங்கே எடுத்துக்காட்டும் சில பக்கங்களின் மூலமே அறியலாம்.
தியாகராயரும் அரசியலும்
தென்னிந்திய நல உரிமைச் சங்கம்
வாணிபத் துறையிலும், தொழில் துறையிலும் கல்வி அறநிலையத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டு புகழ்பெற்று விளங்கிய தியாகராயர் அரசியல் துறையிலும் நாட்டங்கொண்டு ஈடுபட்டுச் சிறந்த அரசியல்வாதியாகவும் விளங்கினார்.
தியாகராயரின் அரசியல் வாழ்வு 1882ஆம் ஆண்டு முதலே சிறந்து வந்தது. சென்னை மகாசன சபையை நிறுவும் பணியில் ஈடுபட்டதிலிருந்தே, தியாகராயருக்கு அரசியல் துறையில் பங்கு கொள்ளவும், தொண்டாற்றவும் வாய்ப்புகள் ஏற்பட்டு வந்தன.
சென்னை மகாசன சபையானது 1884ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். இந்தச் சபையைத் தொடங்கியவர்களில் இந்து பத்திரிகை ஜி.சுப்பிரமணிய அய்யர், எம்.வீரராகவாச்சாரியார், பி.அரங்கைய நாயுடு, பி.அனந்தாச்சார்லு, பி.சோமசுந்தரம் செட்டி, பி.தியாகராய செட்டி, சேலம் இராமசாமி முதலியார், பி.அரங்கநாத முதலியார், சர்.பி.மாதவராவ் ஆகியோர் முக்கியமானவர்கள் என்று சபையின் வரலாறு கூறுகின்றது.
சென்னை மகாசன சபையின் தாய் நிறுவனம் “சென்னை மக்கள் சங்கம்’’ (விணீபீக்ஷீணீs ழிணீtவீஸ்மீ கிssஷீநீவீணீtவீஷீஸீ) என்பதாகும். இச்சங்கம் 1844ஆம் ஆண்டில், அப்போது பெரும், செல்வாக்குப் பெற்றிருந்தவரும் மக்கள் நலனில் அக்கறைகொண்டு தொண்டாற்றி வந்தவரும் ஆன திரு.கசலு இலட்சுமி நரசு செட்டியார் அவர்களுடைய பெருமுயற்சியால் நிறுவப்பட்டதாகும். ஆனால், 1868ஆம் ஆண்டில் திரு.இலட்சுமி நரசு செட்டியார் காலமாகிவிடவே இச்சங்கம் சரிவர இயங்கவில்லை. அரசியலில் ஈடுபட்டு மக்கள் நலனைக் காப்பாற்றி வருவதற்கு ஓர் அரசியல் நிறுவனம் அவசியமானது என்ற உண்மையை அறிந்த ‘இந்து’ பத்திரிகை ஜி.சுப்பிரமணிய அய்யர் முதலியோர் செயலற்றுக் கிடந்த சென்னை மக்கள் சங்கத்தை 1884ஆம் ஆண்டில் புதுப்பித்தார்கள். சென்னை மகாஜன சபை என்ற புதுப் பெயரையும் அதற்குச் சூட்டினார்கள்.
இந்தப் புதிய சபைதான் தென்னிந்தியாவில் முதல்முதல் ஏற்பட்ட அரசியல் நிறுவனம் எனப்பட்டது. இந்த நிறுவனத்தில் பெரும்பாலும் அக்காலத் தென்னிந்தியத் தலைவர்கள் எல்லோருமே பங்கு கொண்டிருந்தார்கள்.
சென்னை மகாசன சபை நிறுவப்பட்ட 1884ஆம் ஆண்டு இறுதியில்தான் இந்திய தேசிய காங்கிரசும் நிறுவப்பட்டது. கங்கிரசானது அரசியலை மட்டுமே முக்கியமாகக் கொள்ளாமல் சமுதாயம் தொழில், வாணிபம், பொருளாதாரம் முதலிய நலன்களையும் கவனித்து வந்தது. அதன் ஆண்டு மாநாடுகளுடன் சமூக நல மாநாடுகளும் தொழில், வணிக மாநாடுகளும் நடத்தப்பட்டு வந்தன. தியாகராயர் இப்படிப்பட்ட செயல்களை ஆதரித்து வந்ததோடு அவற்றில் பங்கேற்றும் வந்தார். 1914ஆம் அண்டில் சென்னையில் நடைபெற்ற காங்கிரசில் கலந்துகொண்டதுடன், அக்காங்கிரஸ் மாநாட்டு இடத்திலேயே தொழில் துறை மாநாடு ஒன்றை வெற்றிகரமாக நடத்தியும் வைத்தார்.
இதேபோல 1908ஆம் ஆண்டிலும்கூட காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த இந்தியத் தொழில் மாநாட்டில் கலந்துகொண்டு தொண்டாற்றினார். காங்கிரசின் தன்னாட்சி உரிமையை ஆதரித்து நின்றார் தியாகராயர். காங்கிரஸ் கட்சி சுதேசி இயக்கத்தைத் தொடங்கியபோது, அதற்குத் தன் ஆதரவை நல்கினார். காங்கிரஸ் கட்சி தன் அமைதி வழி தவறி வன்முறைகளில் ஈடுபட்டபோதெல்லாம் அதைத் தியாகராயர் கண்டித்து வரலானார். அக்கட்சியின் செயல் ஒரு வகுப்பாரின் நலனுக்கே பயன் அளித்து வந்ததைச் சுட்டிக் காட்டி எல்லா வகுப்பாருக்கும் நலன் பயக்கும் வகையில் அக்கட்சி செயல்பட்டு வரவேண்டும் என்றும் கூறினார். இதேபோல சென்னை மகாசன சபையின் போக்கையும் சீர்திருத்த முயன்று வந்தார்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி, பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்ததையும், அவ்வகுப்பாருக்கு மட்டுமே அக்கட்சியின் செயல்கள் பயனளித்து வருவதையும் தியாகராயர் சுட்டிக் காட்டுவதில் தவறியதே இல்லை. அரசியல் உலகிலும் அரசாங்க அலுவலகங்களிலும் பிராமணரல்லாதாரும் பங்கு பெற்றுப் பயன் அடையும்படி செய்திடுவதே காங்கிரசின் நேரிய வழியாகும்; கடமையாகும் என்று கூறினார். ஆனால், தியாகராயரின் இப்பேச்சுக்கள் காங்கிரசினால் மதிக்கப்படவில்லை. ஒரு காங்கிரஸ் மாநாட்டில் பிராமண ஆதிக்கக் கும்பல், வணிக வேந்தராம் நம் தியாகராயரை அவர்க்குரிய மதிப்பும் மரியாதையும் தராது புறக்கணித்தார்கள் எனவும் கேள்விப்படுகிறோம். ஆகவே, தியாகராயர் அரசியல் உலகைப் பிராமணர்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்கும் வழி வகைகளை யோசித்தார். அதற்கான காலத்தை எதிர்பார்த்திருந்தார். அவர் எதிர்பார்த்திருந்த காலத்தையும் சூழ்நிலையையும், டாக்டர் நடேச முதலியார் உருவாக்கித் தந்தார். டாக்டர் டி.எம்.நாயரையும் துணை நிற்கச் செய்தார். மேலும் காலம் போக்கிடாமல் உடனடியாகப் பிராமணரல்லாதார் நலனுக்காகன கட்சி ஒன்றைத் தொடங்கிவிட்டார்
தியாகராயர். டாக்டர் டி.எம்.நாயர் (T.M.Nair) என்பார்தான் மாணவராக இருந்த காலமுதலே காங்கிரஸ் கட்சியையே ஆதரித்து நின்றவர். தாம் ஸ்காட்லாந்து எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தபோதே இங்கிலாந்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கைத் தம் ஆற்றல் மிக்க சொற்பொழிவினால் பரவச் செய்தவர். 1895ஆம் ஆண்டில் இந்தியாவின் பழம்பெரும் தேசபக்தர் என்றழைக்கப்பட்ட தாதாபாய் நௌரோஜி இங்கிலாந்து பார்லிமெண்ட் வேட்பாளராக சென்ட்ரல் பின்ஸ்பரி என்ற தொகுதியில் நின்றபோது அவருக்காக அத்தொகுதி முழுவதும் இராப்பகலாகச் சுற்றிப் பிரச்சாரம் செய்து அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தவர். இந்தியா திரும்பிய பின்னர் 1910ஆம் ஆண்டு வரையிலும் காங்கிரசில் இருந்து பணியாற்றியவர். சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டு அவர் இந்தியா முழுவதும் ஆற்றிய சொற்பொழிவுகள் ஆங்கிலேயர்களை மிரளச் செய்தன. இப்படிப்பட்ட தியாகசீலரையும் காங்கிரஸ் புறக்கணித்து அந்தக் கட்சியை விட்டே ஓடச் செய்தது. இவ்வாறு காங்கிரஸ் கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இருபெருந் தலைவர்களையும் டாக்டர் நடேச முதலியார் இணைத்து வைத்து திராவிடரின் நல்வாழ்வுக்கு ஒளி ஏற்றி வைப்பாராயினர்.
தென்னிந்திய பிராமணரல்லாதாருக்கெனத் தனி அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கு-வதற்குப் பலமுறை முயற்சி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. மதுரையில் பிராமணரல்லாத நண்பர்கள் சிலர் கூடி கட்சி தொடங்குவதுபற்றி ஆலோசித்தார்கள் என்றும், திரு.ஜே.எம்.-நல்லசாமி பிள்ளை போன்றவர்கள் அம்முயற்சியில் பெரும் பங்கு கொண்டார்கள் என்றும் தெரிகிறது. இத்தகவலை நல்லசாமி பிள்ளை 1918ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது கோவை மாவட்ட பிராமணரல்லாதார் மாநாட்டுத் தலைமை உரையில் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் தொண்ட மண்டலம் துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில் பிராமணரல்லாத பிரமுகர்கள் பலர் கூடிக் கட்சி தொடங்குவது-பற்றி ஆலோசித்தார்கள் என்றும், அக்கூட்டத்தில் அலமேலுமங்கைத் தாயாரம்மாள் உள்ளிட்ட சில பிராமணரல்லாத பெருமக்கள் காணப்பட்டனர் என்றும் ஏ.எஸ்.அய்யர் என்ற பத்திரிகை நிருபர் ஒருவர் அவருடைய முப்பது ஆண்டு பத்திரிகை நிருபர் தொழில்பற்றிய ஒரு ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அக்கூட்டத்தைப்பற்றி ‘நியூ இந்தியா’ என்ற ஆங்கில நாளிதழில் வெளியிட்ட செய்திதான் பிராமணரல்லாதார் கட்சி பற்றிய முதல் செய்தி என்றும், இச்செய்தியிலிருந்தான் பிராமணரல்லாதார் கட்சித் தொடக்கத்தைப் பற்றி மக்கள் தெரிந்துகொண்டார்கள் என்றும் கூறியுள்ளார். “சண்டே அப்சர்வர்’’ என்ற ஆங்கில வாரஇதழ் ஆசிரியர் திரு.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் இந்நூலாசிரியரிடம் கூறியதிலிருந்தும், பத்திரிகையில் எழுதியுள்ளதிலிருந்தும் சென்னை வேப்பேரி வழக்குரைஞர் திரு.டி.எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20ஆம் நாள் வெளியூர் உள்ளூர் பிராமணரல்லாத பெருமக்கள் பெருங்-கூட்டமாகக் கூடினார்கள் என்றும், அக்கூட்டத்தில்தான் பிராமணரல்லாதாரின் கட்சியான நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டது என்றும் தெரிகிறது.
திருவாளர் எத்திராஜுலு முதலியார் இல்லத்தில் கூடிய அக்கூட்டத்தில் ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட பிராமணரல்லாத பெருமக்களும், நூற்றுக்கணக்கான பிராமணரல்லாத தோழர்களும் திரண்டிருந்தார்கள் என்றும், அவர்களில் பலர் பிராமணரல்லாதாருக்குச் சொந்தமான அரசியல் கட்சி ஒன்று தொடங்கப்பட வேண்டிய அவசியம் பற்றிப் பேசினார்கள் என்றும், திரு.பாலசுப்பிரமணிய முதலியார் கூறினார். அக்கூட்டத்தில் கூடியிருந்த சில தெலுங்கு, கர்நாடக, மலையாளப் பெருமக்களின் பெயர்களையும் திரு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இச்செய்தியிலிருந்தும் படித்தறிந்துகொண்ட செய்திகளிலிருந்தும் கீழ்கண்ட பெருமக்கள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலராவர் என்று தெரிகிறது. (1) திவான் பகதூர் பிட்டி. தியாகராய செட்டியார், (2) டாக்டர் டி.எம்.நாயர், (3) திவான் பகதூர் பி.இராஜரத்தின முதலியார்,
(4) டாக்டர் சி.நடேசமுதலியார், (5) திவான் பகதூர் பி.எம்.சிவஞான முதலியார், (6)திவான் பகதூர் பி.இராமராயநிங்கார், (7)திவான்பகதூர் எம்.ஜி.ஆரோக்கியசாமி பிள்ளை, (8) இராவ்பகதூர் ஜி.நாராயணசாமி செட்டி,
(9) இராவ்பகதூர் ஓ.தணிகாசலம் செட்டி,
(10) இராவ்பகதூர் எம்.சி.இராஜா, (11) டாக்டர் முகம்மது உஸ்மான் சாகிப்,
(12) திரு.ஜே.எம்.நல்லசாமி பிள்ளை,
(13) இராவ்பகதூர் கே.வெங்கட்டரெட்டி நாயுடு, (14) இராவ் பகதூர் ஏ.பி.பாத்ரோ,
(15) திரு.டி.எத்திராஜுலு முதலியார்,
(16) திரு.ஓ.கந்தசாமி செட்டியார்,
(17) திரு.ஜே.என்.இராமநாதன், (18) கான்பகதூர் ஏ.கே.ஜி.அகம்மது தம்பி மரைக்காயர்,
(19) திருமதி. அலமேலு மங்கைத் தாயாரம்மாள், (20) திரு.ஏ.இராமசாமி முதலியார்,
(21) திவான்பகதூர் கருணாகர மேனன்,
(22) திரு.டி.வரதராஜுலு நாயுடு, (23) மதுரை வக்கீல் திரு.எல்.கே.துளசிராம்,
(24) திரு.கே.அப்பாராவ் நாயுடுகாரு,
(25) திரு.எஸ்.முத்தையா முதலியார்,
(26) திரு.மூப்பில் நாயர்.
நீதிக்கட்சி தொடங்கிய நாளிலிலிருந்தே அதன் உறுப்பினராகவும், தொண்டராகவும் இருந்து வந்த ஒரே பெண்மணி அலமேலுமங்கைத் தாயாரம்மாள் என்றும், டாக்டர். தருமாம்பாள் அம்மையார் சிறு வயதிலிருந்தே நீதிக்கட்சியிலிருந்து வந்தவர் என்றும், திரு.பி.பாலசுப்பிரமணியம் கூறியதும், இவண் நினைவுக்கு வருகின்றன. டாக்டர் தருமாம்பாள் அவர்களிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது “அக்காலத்தில் நான் சிறுமி. கூட்டங்களில் நான் நீதிக்கட்சிப் பாடல்களைப் பாடிவரும் பணியை மேற்கொண்டிருந்தேன். நமது இயக்கத் தலைவர் டாக்டர் நாயர் மரணத்துக்கு வருந்திக் கூடிய கூட்டம் ஒன்றில் நான் அவரைப் பற்றிப் பாடியது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது’’ என்று அவர் கூறியதும் இவண் நினைவு கூரத்தக்கதாகும்.
கூட்டத்தில் கூடியிருந்தவர்களில் யார் யார் பேசினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், அங்குப் பேசப்பட்ட பேச்சுகளை ஒருவாறு விரிவாகவே கூறினார் திரு.பி.பாலசுப்பிரமணியம். அவர் கூறிய செய்திகளை ஆதாரமாகக் கொண்டு ஒருவர் இவ்வாறு பேசினார். மற்றவர் இவ்வாறு பேசினார் என்ற முறையில் குறிப்பிட்டுக் கட்சி தொடங்கியதற்கான காரணங்கள் காட்டப்பட்டுள்ளன. வாசகர்கள், அக்காலத்துச் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், கட்சி ஏற்படுவதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளவும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
“பிராமணரல்லாதார் தாழ்ந்த ஜாதியார் என்றும், சூத்திர சாதியார் என்றும் அழைக்கப்பட்டு அவமதிக்கப்படுகின்றார்கள். இந்த இழிவை உடனடியாக நிறுத்தியாக வேண்டும்; திராவிடர் தாழ்ந்தவரல்லர், பிராமணர் உயர்ந்தவரல்லர் என்ற உண்மையை ஒவ்வொரு பிராமணரல்லாதாருடைய நெஞ்சிலும் பதியச் செய்திட வேண்டும். தன்மான உணர்ச்சியையும், அஞ்சாமையையும் பிராமணரல்லாதாரிடையே பரப்பிட வேண்டும். இதைச் செய்வதற்கு நமக்கென ஒரு கட்சி அமைப்பு ஏற்பட வேண்டியது இன்றியமையாததாகும். கட்சி அமைப்பு ஒன்றினால்தான் பல்லாயிரக்கணக்கான மைல் பரப்பளவில் பரந்து வாழ்ந்துவரும் திராவிடப் பெருங்குடியினரிடையே கொள்கைப் பரப்பு செய்து தொண்டாற்றி ஒழுங்காகச் செயலாற்றி வரமுடியும்.’’ இவ்வாறாகப் பேசிய நண்பர் ஒருவர், கூட்டத்தினரின் ஆலோசனைச் செயலைத் தொடங்கி வைத்தார்.
இப்பேச்சைத் தொடர்ந்து மற்றொரு நண்பர் “தெய்வ வழிபாட்டுக்குரிய ஆலயங்களில்கூட திராவிடப் பெருங்குடி மக்கள் தாழ்வாக நடத்தப்படுகின்றார்கள். ஊர்ப் பொதுமன்றங்களிலும், சத்திரம் சாவடிகளிலும் இதே போன்றுதான் திராவிட சமுதாயத்தார் அவமதிக்கப்படுகின்றார்கள். கல்வி எனும் கண்ணினைப் பெறுவதற்குரிய கல்விக் கூடங்களில்கூட இச்சாதிக் கொடுமை தலைவிரித்தாடுகின்றது. இப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் ஒழிந்து போக வேண்டுமானால் நாம் திராவிடர்களிடையே சுயமரியாதையையும், பகுத்தறிவையும் வளர்த்திட வேண்டும்! அவர்தம் குடிப் பெருமையையும், மேன்மையையும் நினைவூட்ட வேண்டும்! நாமும் நம் சமுதாயமும் உயர்ந்து, வளர்ந்து வளம்பெற வேண்டும் என்ற ஆவலையும், ஆர்வத்தையும் தூண்டிவிட வேண்டும்! இதற்குக் கட்சி அமைப்பு ஒன்று இருக்க வேண்டியது அவசியம்.’’
——————————————————————————————————————————————————————–
மலிவான முள்ளங்கியின் மகத்தான மருத்துவப் பயன்கள்
இது கந்தகச் சத்து மிகுந்தது. வெள்ளை, சிவப்பு என்று இருவகை இதில் உண்டு.
¨ உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
¨ ஆஸ்துமா, மூச்சிறைப்பு, சைனஸ் பிரச்சினைகளைத் தீர்க்கும். 30 மில்லி முள்ளங்கிச் சாற்றுடன், நீர் கலந்து, சிறிது மிளகுத் தூள் கலந்து பருகினால் கபம் வெளியேறும்; தொண்டை அழற்சி நீங்கும்.
¨ கல்லீரலைப் பாதுகாக்கும். கொழுப்பை எளிதில் கரைத்து கல்லீரலை இது காக்கிறது. பித்தப்பையில் கற்கள் சேராமல் செய்கிறது.
¨ முள்ளங்கி நார்ச்சத்துடையதால் மலச்சிக்கல் நீங்கும்.
¨ மூலம், பவுத்திரம், சிறுநீர்க்கடுப்பு ஆகியவை நீங்க இது நல்ல மருந்து. சிறுநீரகக் கற்களை வெளியேற்றும்.
¨ உணவில் அடிக்கடி முள்ளங்கியைச் சேர்த்தால், புற்றுநோய் வராமல் தடுக்கும்
¨ இதிலுள்ள போலிக் ஆசிட் கருவுள்ள பெண்களுக்கு நலம் தருகிறது. எனவே, அவர்கள் உணவில் முள்ளங்கியைச் சேர்க்க வேண்டும்.
¨ சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
¨ உடல் எடை குறைய உதவும். தோலுக்கு நல்லது; இளமையாய் இருக்கச் செய்யும்.