– மஞ்சை வசந்தன்
ஆரியர்கள் என்றைக்கு இந்தியாவிற்குள் நுழைந்தனரோ அன்றே ஆரிய – திராவிடப் போர் தொடங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அப்போர் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், சூழல், போர்முறை, எதிராளி நோக்கு இவற்றில்தான் அவ்வப்போது மாற்றம்.
சொந்த மண்ணில் திராவிடர்கள் வாழ்ந்த நிலையில், பிழைக்க வந்த ஆரியர்கள் மிகச் சிறுபான்மையினர். எனவே, நேர் நின்று மோதும் வல்லமை அவர்களுக்கு இல்லை. ஆகையால், அவர்கள் வணங்கும் தெய்வங்களை யெல்லாம் துணைக்கழைத்து வேண்டினர். அவையே வேதங்கள்! இதுவே, அவர்களின் முதற்கட்ட போர் முறை.
அதற்கடுத்து ஆட்சியாளர்களை அண்டி, அவர்களின் ஆதரவோடு தங்கள் ஆதிக்கத்தை, தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்தினர். இது அதிகாரத்தைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கி வென்ற போர்முறை.
மூன்றாவது கட்டமாக எதிராளிகளான திராவிடர்களை சாஸ்திரங்களை எழுதி, வர்ணங்களாகப் பிரித்து அதன்வழி ஜாதிப் பிரிவுகள் ஏராளமாய் உருவாகச் செய்து, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளச் செய்து, திராவிடர்களைப் பலமிழக்கச் செய்ததோடு, தங்களை அவர்களினும் உயர்ந்தவர்களாக நிலைநிறுத்தினர்.
இது சாஸ்திர ரீதியிலான போர் முறை. மற்ற போர்முறைகளைவிட ஆரியர்களுக்கு இதுவே அதிகப் பயன் தந்தது; நிலைத்த பயனையும் தந்தது.
நான்காவதாக உடல் வலிவை ஒதுக்கி சடங்குகளே சக்திமிக்கவையென்ற மூட நம்பிக்கையை மூளையில் ஏற்றி அதன்வழி உடல்பலம், ஆள்பலம் அற்ற அவர்களே, மிக்க வலிமையுடையவர்கள் என்று எதிரியையே நம்பச் செய்தனர். அதற்கு முதலில் மன்னர்களை இதற்கு மயங்கச் செய்தனர்.
உடல் வலிமை, ஆயுத வலிமை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை யென்று வலிமையை நம்பிப் போரிட்டவர்களை, வெற்றிபெற இவற்றைவிட யாகமே சிறந்தது என்று நம்பவைத்து’ அந்த யாகத்திற்கு நாங்களே உரியவர்கள் என்றாக்கி, அரசர்களின் வெற்றி தங்கள் கையில் என்று நம்பச் செய்து, தங்கள் ஆதிக்கத்தை அச்சத்திற்குரியதாக்கி, தங்கள் எதிரிகள் வணங்கும் நிலைக்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்டனர்.
இதன்வழி அரசர்களுக்கு நெருக்கமானவர்களாகி அதைப் பயன்படுத்தி அமைச்சர்களாயினர். அதன்வழி அவர்கள் சொல்லும் வகையில் ஆட்சியும் சென்றது, அதிகாரமும் சென்றது.
அதிகாரத்தைத் தன்வசப்படுத்தி, தன் ஆதிக்கத்தை வளர்த்தெடுத்து எதிரியை வீழ்த்திய போர்முறை இது.
அய்ந்தாவதாக, ஆங்கில ஆட்சியில் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஆங்கிலம் கற்று, அவர்களின் நிர்வாகத்தில் நுழைந்து திராவிடர்களுக்கு எதிரானவற்றை இயன்றவரைச் செய்தனர். ஆனால், ஆங்கிலேயர்களிடம் இவர்களின் முயற்சி முழுமையாய் வெற்றிபெறவில்லை.
ஆரியப் பார்ப்பனர்களின் சனாதன ஆதிக்கம் சற்றே சரிந்தது, ஆங்கிலேயர் காலத்தில்தான். அதன் இறுதிக் கட்டத்தில் நீதிக்கட்சித் தோற்றம், தந்தை பெரியாரின் சிந்தனைகள், போராட்டங்கள், பிரச்சாரங்கள், அம்பேத்கரின் கிளர்ச்சி, எழுச்சி, அறிவுநுட்பம் போன்றவை ஆற்றல்மிகு எதிர்ப்பை, போரை ஆரியத்திற்கு எதிராய் முன்னிறுத்த, ஆரியம் தோற்றுத் துவண்டது. இந்திய வரலாற்றில் ஆரிய திராவிடர் போரில் ஆரியம் தோற்றது இக்கால கட்டத்தில்தான். அந்த வெற்றியின் வீரத் தளபதிகள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஆவர்.
விடுதலை இந்தியாவில் நேருவின் சோசலிச செயல்பாடுகள், நேர்மையான எண்ணங்கள் ஆரியத்தின் வீழ்ச்சிக்குத் துணைநின்றன. ஆரியத்தின் ஆதிக்கம் சரிந்து சரிந்து வீழ, ஆரிய ஆதிக்க நச்சரவம் ஆலய கருவறைக்குள் ஓடி ஒதுங்கி ஒளிந்தது. அங்கும் தடிகொண்டு தாக்கினார் தந்தை பெரியார்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்து, அண்ணாவும், கலைஞரும் அய்யாவின் கொள்கைகளை அடுக்கடுக்காய் நிறைவேற்ற, எம்.ஜி.ஆர். அதற்குத் துணை நின்று இடஒதுக்கீட்டை உயர்த்த ஆரிய பார்ப்பனர்கள் நாட்டை விட்டே ஓட மூட்டைக் கட்டத் தொடங்கினர்.
திராவிட ஆரிய போரில் ஆரியம் புறமுதுகிட்டு ஓடிய காலம் அது.
அரசுடமையும், இந்தியா முழுக்க இடஒதுக்கீட்டு உணர்வும், மூடநம்பிக்கை வீழ்ச்சியும், பகுத்தறிவு எழுச்சியும் பரவி வந்த நிலையில், தொலைக்காட்சி மக்களிடம் ஆதிக்கம் செலுத்தி வீடுதோறும் மக்களின் சிந்தனை மாற்றத்தைத் தீர்மானித்தது.
தோற்று வீழ்ந்த ஆரியம், தொலைக்காட்சி என்னும் அறிவியல் சாதனத்தைத் தங்களின் அடுத்தக் கட்டப் போர்க் கருவியாகக் கையில் எடுத்தது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை, அறிவியல் சாதனங்களின் உதவியோடு மெருகூட்டி, கவர்ச்சி ஏற்றி, கட்டாயம் காணவேண்டும் என்ற ஈர்ப்பை உருவாக்கும் விதத்தில் அவற்றைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர்.
“ராம்’’, “ராம்’’ என்று இந்தியாவெங்கும் ஒலிக்கச் செய்தனர். அதன்மூலம் இந்துக்களிடையே ஓர் உணர்வை உருவாக்கினர். இந்த உணர்விற்கு ஓர் இலக்கைக் காட்டினால்-தான் அது பயன்தரும் என்று இஸ்லாமியர்-களையும், கிறித்தவர்களையும் எதிரிகளாய்ச் சித்தரித்து அவர்களோடு மோதவிட்டனர். அதன்வழி கலவரங்கள் நாடெங்கும் நடத்தப்பட்டன.
மதவெறியைத் தூண்டி இந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாய் முயன்று தோற்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள், இராமனை முன்னிறுத்தி இந்துக்களை உசுப்பி, இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் எதிரிகளாய் வெறுக்கச் செய்தனர்.
தங்களின் அரசியல் பிரிவாய் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கி, இந்துக்களின் உணர்வை வாக்குகளாக மாற்ற முயற்சித்தனர். அது ஓரளவிற்கே உதவியது. இருந்தாலும், ஓயாது முயன்று கூட்டணி ஆட்சி என்ற நிலைக்குச் சென்றனர்.
ஆரியம் மீண்டும் வீரியம் பெறத் தொடங்கியது. இராமருக்கு கோயில் கட்டுவதாய் ஒரு வாக்குறுதி அளித்து முயன்று அப்போதும் ஆரியம் தோற்றது. என்றாலும் மதம் சார்ந்த உணர்வை மக்களிடம் வளர்த்தனர்.
மோ(ச)டிப் போர்: பலவகையிலும் தோற்ற ஆரிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் மோசடியாக வெல்லும் தந்திரத்தைக் கையில் எடுத்தனர். காங்கிரஸ் ஆட்சிமீது மக்களுக்கிருந்த வெறுப்பு அதற்குக் கை கொடுத்தது.
ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஆரிய பார்ப்பனர்கள் பின்னே அணிவகுத்து நின்று, இளைஞர்களை மோசடியாக மூளைச் சலவை செய்தன.
“மாற்றம்’’ என்பதை “மந்திர’’மாக உச்சரிக்கச் செய்தனர்.
மோடி வந்தால் இந்தியாவின் வளர்ச்சி உச்சத்துக்கு உயரும் என்று ஊடகங்கள் ஒட்டுமொத்தமாய் ஒலித்து, இளைஞர்களை நம்பச் செய்தன. தொலைக்காட்சி, இணையம், செல்பேசி என்று ஒட்டுமொத்த அறிவியல் சாதனங்களை இப்போரின் கருவியாக ஆரியம் கையில் எடுத்து, மோசடியை மூலதனமாக்கி, மோடி என்ற ஒற்றை மனிதரின் கவர்ச்சியில் இளைஞர்களை ஈர்த்து, இந்துத்வா என்ற பாசிச ஆட்சியை மத்தியில் அமர்த்தினர்.
இப்போது இந்தியாவில் நடக்கும் புதிய போர்:
பெரும்பான்மை பலத்தோடு மத்தியில் ஆட்சியில் அமர்ந்த அடுத்தக்கணமே, அரும்பாடுபட்டு பெற்ற வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று இந்து ராஷ்டிரா அமைக்கும் முயற்சியில் இறங்கினர்.
ஆரிய பார்ப்பன மேலாண்மை, குலக்கல்வி, வர்ணாச்ரமம், சமஸ்கிருத ஆட்சிமொழி, ஒரே கடவுள், ஒரே மதம், மனுதர்மச் சட்டம், ஒரே கலாச்சாரம். (இந்து கலாச்சாரம் _ ஆரிய கலாச்சாரம்) பிற மதத்தார் எல்லாம் அதை விட்டு இந்து மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்துத்துவாவாதிகள் சொல்லும்படிதான் உண்ண வேண்டும், உடுக்க வேண்டும், திருமணம் செய்ய வேண்டும்.
இந்துத்வாவாதிகளுக்கு எதிராகக் கருத்துக் கூறக் கூடாது. கூறினால் கொலை செய்யப்படுவர்.
தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டோர்களும் உயர்கல்வி பயிலக் கூடாது என்று ஒவ்வொன்றாய் கட்டாயப்படுத்தினர். இதற்கு அவர்களின் பல அமைப்புகளிலும் உள்ள அடியாட்களை, காலிகளை, கூலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஆக, சுருங்கச் சொன்னால், இந்திய குடியரசை இந்து இராஷ்டிர அரசாக ஆக்கும் அனைத்துச் செயல்களிலும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் அன்றாடம் இறங்கிச் செயல்படத் தொடங்கிவிட்டன.
இப்போது இந்தியாவெங்கும் நடப்பது இந்திய குடியரசுக்கும் இந்து ராஷ்டிராவிற்குமான போர்தான்! இப்போரை, இந்தியக் குடியரசை ஏற்றுக் கொண்டு, வெற்றிபெற்று அந்த அமைப்பிற்குள் இருந்துகொண்டே அதை வீழ்த்தும் வியூகத்தை இப்போரில் அவர்கள் வகுத்துச் செயல்படுத்துகின்றனர்.
இந்தியக் குடியரசு என்பதற்கு நேர் எதிரான கொள்கையுடையது இந்துத்வாவாதிகளின் இந்து இராஷ்டிரம்.
¨ இந்தியக் குடியரசு மதச்சார்பின்மையை அடிப்படைக் கொள்கையாய் கொண்டது.
ஆனால், இந்துராஷ்டிரா, இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் இந்தியாவில் இருக்கக் கூடாது என்பது. இந்து மதத்தை ஏற்காதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி விடவேண்டும் என்பது. இதை அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்கள்.
¨ இந்தியக் குடியரசு ஆண்_பெண் இருவருக்கும் சமஉரிமை, சமவாய்ப்பு அளிக்கிறது.
ஆனால், இந்து இராஷ்ட்ரா பெண்களை பாவஜென்மமாக, இழிவாக, உரிமையற்றவர்களாகக் கருதுகிறது. ஆணைச் சார்ந்தே பெண் வாழ வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்து, பிள்ளைகளை வளர்த்து, இந்துக்களின் பண்பாட்டைக் காப்பதே பெண்ணின் வேலை என்கிறது.
¨ ஆலய வழிபாட்டில் ஆணுக்குள்ள உரிமை பெண்ணுக்கு உண்டு என்கிறது இந்தியக் குடியரசு. ஆனால், பெண் ஆலயத்திற்குள் நுழையக் கூடாது என்கிறது இந்து இராஷ்டிரா.
¨ அனைத்து மக்களும் தங்கள் கருத்தைச் சொல்ல உரிமையுண்டு என்கிறது இந்தியக் குடியரசு.
ஆனால், இந்துத்வா சிந்தனைக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னால் கொல்வோம் என்கிறது இந்து இராஷ்டிரா.
¨ பிறப்பொக்கும் என்கிறது இந்தியக் குடியரசு. ஆனால், ஆரியப் பார்ப்பனர்களே உயர்ந்தவர் மற்றவர் எல்லாம் இரண்டாம் தர, மூன்றாம் தர, நான்காம் தர, அய்ந்தாம் தர, ஆறாம் தர குடிமக்கள் என்கிறது இந்து இராஷ்டிரா.
¨ 14 மொழிகளை தேசிய மொழியாக ஏற்கிறது இந்தியக் குடியரசு.
ஆனால், செத்துப்போன, வழக்கொழிந்த சமஸ்கிருதம் மட்டுமே தேசிய மொழி என்கிறது இந்து இராஷ்டிரா.
¨ கல்வியும் வேலைவாய்ப்பும் அனைவருக்கும் உரியது என்கிறது இந்தியக் குடியரசு!
ஆனால், கல்வியும் வேலைவாய்ப்பும் ஆரிய பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது என்கிறது இந்து இராஷ்டிரா.
¨ எதை உண்பது, உடுத்துவது, எப்படி வசிப்பது, வாழ்வது போன்றவை தனிமனிதச் சுதந்திரம் என்கிறது இந்தியக் குடியரசு. ஆனால், இந்துத்துவாவாதிகள் என்ன சொல்கிறார்களோ, சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றனவோ அப்படி வாழவேண்டும் என்கிறது இந்து இராஷ்டிரா.
¨ மறுமணம் செய்ய, மணவிலக்குப் பெற உரிமை தருகிறது இந்தியக் குடியரசு.
ஆனால், இறந்த கணவனோடு கட்டி எரியூட்டச் சொல்கிறது இந்து இராஷ்டிரா!
¨ இந்தியக் குடியரசு இந்த நாட்டில் அரசியல் சாசனத்தைக் காக்க வேண்டும்; அதன்படி நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்கிறது.
ஆனால், இந்து இராஷ்டிரா, இந்திய அரசியல் சாசனத்தைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, மனுதர்மத்தையும், மற்ற சாஸ்திரங்களையும் சட்டங்களாக்க வேண்டும் என்கிறது இந்து இராஷ்டிரா!
இப்படி இன்னும் பலப்பல எதிர்நிலைகள்! முரண்பாடுகள்! சுருங்கச் சொன்னால், தனிமனித சுதந்திரத்திற்கும், சர்வாதிகார, ஆதிக்க, பாசிச நடைமுறைக்குமான போர் தொடங்கி விட்டது. ஆம். பி.ஜே.பி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்த அன்றே தொடங்கிவிட்டது!
இப்படிப்பட்ட இந்துராஷ்ட்ராவை உருவாக்க, பள்ளி, கல்லூரி, உயர்கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், இராணுவம், ஊடகங்கள் என்று பலவற்றிலும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிபெற்ற ஆட்களை நுழைக்கும் செயலும் அரவம் தெரியாமல் நடந்து வருகிறது.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் தொண்டர்கள், இடதுசாரிகள், சமூக நீதியில் அக்கறை கொண்டோர் இந்தப் போரில் இந்துராஷ்ட்டிரா பேர்வழிகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். போராட்டம் அதிகமாகும்போது பின்வாங்குவதும், பின் மீண்டும் தங்கள் செயல்திட்டங்களைச் செயல்படுத்தவதுமாகவுள்ளனர்.
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், பொதுவுடமைப் போராளிகளும் ஊட்டிய மனித உரிமை உணர்வின் காரணமாக உயர்கல்வி நிறுவனங்களில் சிந்தனை முதிர்ச்சி பெற்ற மாணவர்கள் வெகுண்டெழுந்து இந்து இராஷ்டிராவிற்கு எதிராகப் போராடத் தொடங்கி விட்டனர்.
இதைக் கண்டு பொறுக்காத ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கூட்டம் மோசடி வழக்குகள், தேச விரோதக் குற்றச்சாட்டுகளைக் கூறி அவர்களை ஒடுக்க முயற்சி மேற்கொள்கின்றது.
ஆனால், அதற்கெல்லாம் அஞ்சாது மாணவர்கள் துணிந்து தெளிவுடன் நிற்பது இப்போரில் இந்து ராஷ்டிரா முயற்சி தோற்று அழியும் என்பதை உறுதியாய்க் கூறுகிறது.
கன்னையா குமார்கள் களத்தில் இறங்கி விட்டனர். அவர்களின் உரிமை முழக்கமும் ஆழ்ந்த சிந்தனையும், உள்ளத்து உறுதியும் அவர்களின் பேட்டியில் தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.
“இந்தியாவிலேயே நமது பல்கலைக்கழகத்தின் சிறப்பு, ஆராய்ச்சி, தெளிவு, எதிர்காலத்தை வழிநடத்தக்கூடிய போக்கு என இந்திய குடியரசின் நோக்கத்துக்காக இந்திய பாராளு-மன்றத்தால் தனிச்சட்டம் இயற்றி தொடங்கப்பட்டது நமது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் என்பதாகும். 90 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களுக்கு ஆராய்ச்சிக் கல்வி அளித்துக்கொண்டிருக்கும் பல்கலைக்கழகம் இது. பீகாரில் சத்துணவு ஆயா வேலைபார்க்கும் தாய்க்கு பிறந்து இந்தப் பல்கலைகழகத்தில் படிப்பதோடு 46 ஆண்டுகால பல்கலைக்கழக வரலாற்றில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவனாக வரமுடிந்த நான், அரசியல் பொருளாதாரம், சமூக செயல்பாடு என ஆராய்ந்து தனிப்பார்வையை தேர்ந்தெடுத்து பக்குவப்பட்டு வருகிறேன். இரவு நேரத்தில் பல்வேறு மாணவ இயக்கங்கள், சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் என பலரையும் கொண்டுவந்து கருத்தரங்கம் நடத்துவார்கள். கருத்தரங்கத்தில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டுத்தான் போகவேண்டும் என்பது விதி. இப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்துகொண்டு இந்திய குடியரசுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் முகத்திரையை கிழித்தேன். அதனால் தான் என் மீது தேசத் துரோக வழக்கை பாய்ச்சியிருக்கிறார்கள். குறிப்பாக, தேசபக்தி என்கிற பெயரில் அடிமைத்தனத்தையும் பழமைவாதத்தையும் புகுத்தும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை கண்டித்ததால் என் மீது வழக்கு. இன்றைய மத்திய அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் மத்திய அரசு என்று இயங்காமல் ஒரு கட்சியின் பிரதிநிதி போல அவர்களின் கொள்கைகளை பிரதிபலிக்கும் கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்றுக்கருத்தோ மாற்று மதமோ என்றால் தேசவிரோதம் என்பது பா.ஜ.க.வின் செயல்பாடாக இருக்கிறது. நாங்கள் நடத்துவது, இந்து ராஷ்டிராவுக்கும் இந்திய குடியரசுக்கும் இடையே நடக்கும் யுத்தம்.
பார்ப்பனியத்திலிருந்து விடுதலை, மனுவாதத்திலிருந்து விடுதலை, நிலவுடைமை ஆதிக்கத்திலிருந்து விடுதலை, தீண்டாமையிலிருந்து விடுதலை என இந்தியா வுக்குள்ளிருந்து விடுதலை கேட்க இடதுசாரிகள், தலித் இயக்கங்கள் மற்றும் ஜனநாயக இயக்கங் களை ஒன்று சேர்த்து போராடுவேனே தவிர, நான் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதில்லை. இது “கவர்ன்மெண்ட் ஆஃப் இண்டியா’வுக்கு எதிரான போராட்டம் அல்ல; “கவர்ன் மெண்ட் ஆஃப் பி.ஜே.பி.’க்கு எதிரான போராட்டம்.