விளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர் – 13
சிவகங்கை ‘வக்கீல் குமாஸ்தா’ ஜெயராமன்
சிவகங்கையில் வழக்குரைஞர் சண்முகநாதன் அவர்களுக்கு உதவியாளராக தனது 14ஆவது வயதில் சேர்ந்தவர் _ வக்கீல் குமாஸ்தாவாக இறுதிவரை பணியாற்றியவர், கறுப்புச் சட்டை அணிந்து கழகச் செயல்பாடுகளை அங்கு கவனித்துவந்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் ஜெயராமன் அவர்கள் ஆவார்கள்!
கழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை செல்லவும் தயங்காதவர். ஜாதி ஒழிப்பிற்கான இந்திய அரசியல் சட்டத்தைக் கொளுத்திய போராட்டத்திலும் சிறைக்குச் சென்று திரும்பியவர். 6 மாத சிறைத் தண்டனையை அனுபவித்தவர்.
இவருக்குப் பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தான் சட்ட எரிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போராட்டத்தில் தீவிரப் பங்கேற்ற இவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை அறிந்த அப்பெண், சிறைக்குப் போகும் இவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூற, எனக்குக் கொள்கைதான் முக்கியம், திருமணமல்ல என்று உணர்வு பொங்கக் கூறியவர்; கழகத்தின் போராட்டக் களத்தில் நிற்கும் நான் எப்போது வேண்டுமானாலும் என் வாழ்நாளில் சிறைக்கு அடிக்கடிச் செல்ல நேரும். எனவே, எனக்கு எப்போதுமே திருமணம் வேண்டாம் என்று கூறி, வாழ்நாள் முழுக்கத் திருமணமே செய்து கொள்ளாது வாழ்ந்தவர் என்பது இவர் இயக்க வரலாற்றில் பதித்த சிறந்த முத்திரையாகும்.
வக்கீல் அய்யா அவர்கள் (சண்முகநாதன்) குடும்பத்து உறுப்பினராகவே இவர் அவர்களது நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தவர். சண்முகநாதன் அவர்களின் மகனும் மாநில திராவிடர் கழகச் சட்டத்துறை செயலாளருமாகிய வழக்குரைஞர் இன்பலாதன் அவர்களிடமும் 2010 வரை பணியாற்றியவர்.
சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் கூட்டங்கள், இயக்கப் பிரச்சாரப் பணிகள் எல்லாவற்றிற்கும் இவரே முன்னிலையில், எடுத்துப்போட்டுக் கொண்டு செய்வார்!
குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவக்கோட்டை பகுதிகளில் 1953, 1962, 1966 ஆண்டுகளில் நடைபெற்ற மாநாடுகளை நடத்துவதில் பெரும்பங்கு வகித்தவர்.
கழகத்தின் கட்டுப்பாடு காக்கும் லட்சியத் தோழர். நாளும் விடுதலை மற்றும் கழக ஏடுகளைப் பரப்பும் பணியையும் தவறாது செய்து வந்தவர்.
தலைவர் தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் ஆகியோர்தம் அன்பையும் நன்மதிப்பையும் பெற்ற ஒரு எடுத்துக்காட்டான தொண்டர் _ தோழர். நம்மிடம் மிகுந்த அன்பையும் பாசத்தையும் கொட்டிய கடமை வீரர்!
நம்முடைய இயக்கத்தின் இரத்த நாளங்களே, ஏழை, எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தினர்களாக இருப்பினும், கொண்ட கொள்கையில் உள்ள உறுதிப்பாடும், தடுமாற்றமற்ற தலைமை மீதுள்ள நம்பிக்கையும், கொண்ட லட்சியங்கள் கொள்கைகளுக்காக ‘சர்வபரித் தியாகம்’ செய்யவும் தயங்காதவர்கள்!
இன்றைய திராவிடர் கழகச் சட்டத்துறை செயலாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன், அவரது குடும்பத்தினரிடம் (டாக்டர் மலர்க்கண்ணி, பிள்ளைகள் ராஜா, தேம்பாவணி முதலியவர்கள்) சிறு குழந்தைகளாக இருந்த காலத்திலிருந்தே அவர்களை பாசத்தோடு, கொள்கை சொல்லிக்கொடுத்து வளர்த்தவர் ஜெயராமன் என்றால் மிகையல்ல!
அதேபோல தோழர் ஜெயராமன் அவர்கள் பழைய இராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது பொறுப்பிலிருந்த அய்யா என்.ஆர்.சாமி முதல் இன்றுள்ள மூன்றாவது, நான்காவது தலைமுறை தோழர்கள் _ பிள்ளைகள் வரை நன்கு அறிமுகம் ஆகி அவர்களாலும் மதிக்கப்பட்ட தோழர் பெரியார் பெருந்தொண்டர் _ ‘வக்கீல் குமாஸ்தா’ _ கறுப்புச்சட்டை ஜெயராமன் அவர்கள் ஆவார்! 29.12.1936இல் பிறந்த இவர் 01.09.2010இல் தமது 74ஆம் வயதில் மறைவுற்றார்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மீதும், என் மீதும் அளவற்ற “பற்று வெறி’’ கொண்டவர். பெரியார் பாசறையின் அரிய பெரிய வீரர் இவர். எனவே, இவரை “வீரநெஞ்சன்’’ ஜெயராமன் என்றே அழைப்பர். வீரநெஞ்சம் வெளியில் தெரிந்தாலும் ஈரநெஞ்சினர் என்பதையும் தன் வாழ்நாள் முழுமையும் தன் தொண்டறப் பணியால் காட்டியவர்.
இத்தொண்டர்களின் கடின உழைப்பு, கைம்மாறு கருதாத தொண்டறம், இயக்கம் அப்பகுதியில் வளர்ந்தோங்குவதற்கான சரியான உரம் ஆகும்! வளர்க வாழ்க அத்தகையவர்களின் புகழ்!!
– கி.வீரமணி