ஒரு புதுவிதமான ஹெல்மெட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் கல்லூரி மாணவர்கள் இருவர்.
மது அருந்தியவர்கள் இந்தப் புதுவிதமான ஹெல்மெட்டை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்ட நினைத்தால், வாகனம் ஸ்டார்ட் ஆகாது. அதுமட்டுமல்ல, ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாது. இப்படி நிறைய…
இந்தக் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்-காரர்கள், சி.தியாகராஜனும் கு.கிஷோரும். சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை பயிலும் மாணவர்கள் இவர்கள். அவர்கள் கண்டுபிடித்த ஹெல்மெட்டுக்கு “இன்டலி-ஜென்ட் ஹெல்மெட்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இன்டலிஜென்ட் ஹெல்மெட் எப்படி உருவானது என்று இருவரும் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
“”நாங்கள் இருவரும் சேலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான். இன்றைய போட்டி நிறைந்த உலகில் தொழில்நுட்பம் தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெல்மெட்டை உருவாக்கத் திட்டமிட்டோம்.
வெளிநாடுகளில் இருசக்கர வாகனத்தை வாங்கும்போதே தலைக்கவசமும் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த நடைமுறை இல்லை. மேலும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், யாரும் தலைக்கவசம் அணிவதில்லை. மாறாக, குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலைமையும் உள்ளது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே இன்டலிஜென்ட் ஹெல்மெட். கல்லூரி துறைத் தலைவர் த.முத்துமாணிக்கம் வழிகாட்டுதலின் பேரில் கடந்த ஒன்றரை ஆண்டு உழைப்பில் ஹெல்மெட்டை உருவாக்கி விட்டோம். இதற்கான காப்புரிமை பெறவும் விண்ணப்பித்துவிட்டோம்.
இந்த ஹெல்மெட்டை அணிந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும். இதற்கென சிறப்பான சென்சாரை உருவாக்கி கம்பியில்லா வசதி மூலம் ஹெல்மெட்டில் சிறிய உபகரணத்தை வைத்துள்ளோம். இதற்கான முழு செயல் இயக்க கட்டுப்பாடு பேனல் அதாவது டிரான்ஸ்சிஸ்டர், டிஜிட்டல் போர்டு உள்ளிட்டவற்றை வாகனத்தில் வைக்குமாறு வடிவமைத்துள்ளோம்.
அதேபோல மது அருந்தி இருப்பதைக் கண்டுபிடிக்க தனிச்சிறப்பான நுகரும் சென்சார்கள் ஹெல்மெட்டின் முகப்பு பகுதி அருகே பொருத்தி உள்ளோம். இதனால் மது அருந்தியவர்கள் வாகனத்தை இயக்க நினைத்தால் வாகனம் ஸ்டார்ட் ஆகாது.
பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் அருகே வேக கட்டுப்பாட்டுடன் வாகனத்தை இயக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் வகையில் அந்தந்தப் பகுதிகளில் பொருத்தப்படும் டிரான்சிஸ்டர்கள் மூலம் தகவலைப் பெறும் வசதி உள்ளது. வாகன ஓட்டி ஒருவர் வேக கட்டுப்பாட்டு பகுதியில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தால், தானாகவே குறைந்தபட்ச வேக அளவான 40 முதல் 50 கிலோ மீட்டராக வாகனத்தின் வேகம் குறைந்துவிடும். வாகன ஓட்டி வேகத்தைக் கூட்ட ஆக்சிலேட்டரை இயக்கினாலும் குறைந்தபட்ச வேக அளவில் மட்டும் வாகனம் ஓடும். இதற்கு ரேடியோ அலைவரிசை மூலம் இயங்கும் டிரான்ஸ்சிஸ்டர்களை அந்தந்தப் பகுதிகளில் பொருத்தி வைத்து வாகனத்தின் வேகத்தைக் குறைக்க முடியும்.
இவை போன்ற கண்டுபிடிப்புகள் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்ல, போக்குவரத்துக் காவலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், சாலை விதிகளை மீறுபவர்களைச் சமாளிப்பது காவல்துறைக்குப் பெரிய சவாலாக இருக்கிறது.
பயோ மெட்ரிக் மூலம் கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்திருப்பவர்கள் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும். இதனால் வாகனத்தை யாரும் எளிதில் திருட முடியாது.
தற்போது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகும்போது ஜி.பி.எஸ். மூலம் கண்டறிந்து காவல்துறை, ஆம்புலன்ஸ் மற்றும் உறவினர்களுக்கு செல்லிட பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை இணைக்க உள்ளோம். இதற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளோம். இன்டலிஜென்ட் ஹெல்-மெட்டை உருவாக்க இதுவரை சுமார் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். இந்த கண்டுபிடிப்பு சந்தைக்கு வரும்போது ரூ.5 ஆயிரத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது” என்றனர்.
சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஏ.நாகப்பன் கூறியது:
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் தொழில் ஊக்குவிப்பு மய்யமாக இக்கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள தொழில் ஊக்குவிப்பு மய்யத்தின் மூலம் இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தில் புதிய படைப்புகளைக் கண்டுபிடிப்புகளாகச் சமர்ப்பிக்க யார் வேண்டுமானாலும் முன்வரலாம். பள்ளி, கல்லூரி, தொழில்முனைவோர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் வரலாம்.
எங்கள் கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ள இன்டலிஜென்ட் ஹெல்மெட் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்அமைச்சகத்தின் தொழில் ஊக்குவிப்பு மய்யத்தின் புதிய கண்டுபிடிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு குறித்து புதுதில்லியில் விரைவில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் விளக்க வேண்டும். அதாவது கண்டுபிடிப்பு உபகரணம் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
இந்தக் கண்டுபிடிப்பை அதிகாரிகள் தெரிவு செய்தால் ரூ.6.5 லட்சம் நிதியுதவி கிடைக்கும். இதன்மூலம் மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்பை சந்தைப்படுத்த முடியும். ஹெல்மெட் தயாரிக்கும் நிறுவனத்திற்கோ அல்லது இருசக்கர வாகனம் தயாரிப்பு நிறுவனத்திற்கோ அவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை அளிக்கலாம். இதற்கான ராயல்டி தொகை மாணவர்களுக்கு சென்று சேரும்” என்றார்.