ஆசிரியர் பதில்கள்

அக்டோபர் 01-15

கேள்வி : ஆடைச் சுதந்திரம் என்ற பெயரில் பொதுவிடங்களில் ஆண்களும் பெண்களும் விரசமாக ஆடைகளை அணிவது (ஜட்டி தெரிய பேன்ட் போடுவது, உறுப்பு தெரிய இறுக்கமாக அணிவது) ஏற்புடையதா? வக்கிரம் வேறு, முற்போக்கு வேறு அல்லவா?
– க.சிவசுப்பிரமணியன், சமயபுரம்

பதில் : பொது இடங்களில் விரசமாக இரு பாலரும் உடைகளை அணிந்து வருவது விரும்பத்தக்கதல்ல. அதற்காக அவர்களது உடை அணியும் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது. உடை நாகரிகமான முறையில் (Elegant) அமைவது இரு பாலருக்கும் நல்லது! ஆண்_பெண் வேறுபாடு களையும் உடை அமைப்பு வரவேற்கத்தக்கது!

கேள்வி : நாட்டின் மக்கள் தொகையில் இந்துக்களின் விகிதம் முதல்முறையாக 80%க்கும் கீழே வந்திருப்பதை பெரிய செய்தியாகப் பரப்பி வருகின்ற சங்பரிவாரங்கள், எல்லா மதத்திலுமே மக்கள் தொகை குறைந்திருப்பதை ஏற்க மறுப்பது ஏன்?
– சீ.இலட்சுமிபதி, தாம்பரம்

பதில் : உண்மை எப்போதும் கசக்கும்!

கேள்வி : இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி, தந்தை பெரியார் பிறந்த நாளில் (செப்.17) வந்ததால், பிள்ளையாரை முன்பு, பெரியார் போட்டுடைத்ததை இன்று யாருக்கோ… விநாயகரே அதை நினைவுபடுத்துவது போல் எடுத்துக் கொள்ளலாமா? அது குறித்து தங்களது கருத்து?
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : கற்பனைகள் எப்படியும் இருக்கலாம்! பெரியார் பிறந்தது உண்மை _ பெரியார் பிறந்த நாள் மாறாத நாள். பிள்ளையார் பிறந்தது உண்மையும் அல்ல. நாளும் மாறி மாறி வரும்! பெரியாரை _ அவரது பற்றாளர்கள் பின்பற்றுகிறார்கள். பிள்ளையார் பக்தர்களைப் போல் அவமானப்படுத்தி கரைப்பது, அறுத்து கடலில் தூக்கி வீசுவது கிடையாது!

கேள்வி : பிச்சை கேட்பதும் இடஒதுக்கீடு கேட்பதும் ஒன்றுதான் என்று பேசுகிறவர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது என்ன?
– மா.திருமூலசாமி, செங்கை

பதில் : இடஒதுக்கீட்டின் தத்துவத்தையே புரிந்துகொள்ளாத தவளைகள் இல்லையானால் தறுதலைகள்!

கேள்வி : முதல்நாள் துதித்த பிள்ளையாரை மறுநாள் மிதிக்கிறான்! பைத்தியக்காரச் செயலுக்குத்தான் பக்தி என்று பெயரா?
– தீ.அகிலா, கோவை

பதில் : பக்தி என்றால் பைத்தியம் வெறி என்று அர்த்தம். அது பிடித்தவர்கள் செய்கையை வரையறுக்க முடியாதே!

கேள்வி : பெண்கள் வேலைக்குப் போவதால்தான் வேலையின்மை ஏற்படுகிறது என்று சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் (சத்தீஷ்கர்) சொல்லியிருப்பது பற்றி தங்கள் கருத்து என்ன?
– ஆ.மகேஷ்வரி, தாம்பரம்

பதில் : பா.ஜ.க.வின் புத்திசாலித்தனம்! ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகண்ட சிந்தனை இது! இது சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்றிருப்பது அவர்கள் மனுக்கு எப்படிப்பட்ட பேரன்கள் என்பது தெரிகிறதே!

கேள்வி : பூணூலை பார்ப்பனர் அல்லாத சில ஜாதியினரும் அணிகிறார்களே, அது எதனடிப்படையில்?
– ரா.ராதாகிருஷ்ணன், திருவள்ளூர்

பதில் : இமிட்டேஷன் அடிப்படையில் சாஸ்திரம் இதனை அனுமதிப்பதில்லை.

கேள்வி : மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தபின் இளைஞர்கள் மத்தியில் பெரியாரின் தாக்கம் பெருகியுள்ளது என்ற என் கணிப்புச் சரியா?
– மீ.வேல்முருகன், வேலூர்

பதில் : இன்னும் அதிகமாக, அவர்களது அடாவடிச் செயல்கள் நல்ல அளவுக்கு உதவிடும் என்பது உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *