Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பூவிழி புன்னகைத்தாள்

– கடலூர் இள.புகழேந்தி

 

இனியா…
என்ன

டேய் என்னடா வழக்கமான உற்சாகம் இல்லை? என்ன விஷயம்?
ஒண்ணுமில்ல… பண்பு

இல்லை, நீ எதையோ மறைக்கிற
பெரிய விஷயம் இல்ல, அதான்

அப்ப சொல்லலாமில்ல… பூவிழி எதையாவது சொல்லிச்சா
அதெப்படி கரெக்டா சொல்லிட்ட

எல்லாம் ஒரு யூகம்தான். அவ ஒன் காதலி. நான் உன் நண்பன். எங்க ரெண்டு பேரைத் தவிர உனக்கு நெருக்கமானவங்க இங்க யாரும் இல்ல. அதான் அப்படிக் கேட்டேன்

பண்பா, அவ ஒரு விஷயத்தில் மட்டும் என் வழிக்கு வர மாட்டேன்கிறா?

ஏன்? சரியா இருந்தா அவ வழிக்கு நீ போயிட வேண்டியது தானே?

போடா… கடவுள்னாலே சிரிக்கிறா, குருஜின்னாலே முறைக்கிறா! அடுத்த வாரம் குருஜி வரார். ஒரு வாரம் இருக்கிறார். நாம வழக்கமா, அவர்கிட்ட ஆசி வாங்க போவோம் இல்ல. அவளக் கூப்பிட்டா வர மாட்டேங்கிறா

அதுக்கா உம்முன்னு இருக்க

வராட்டினாலும் பரவாயில்ல, குருஜியை கண்டபடித் திட்டறா? …சே… அந்த மகானை இப்படி பேசறாளே வருத்தம் வராதா?

பூவிழிக்கு சந்தேகப் பார்வை, என்ன பண்றது. சாமியார் வேஷம் போட்டுகிட்டு ஏமாத்தறவனுங்களைப் பார்த்துட்டு நம்ம குருஜியையும் பாக்கறா! விடு… காலம் அவளை மாத்தும். அனா, பூவிழி உனக்கு ஏத்த நல்ல பொண்ணு.

நான் மட்டும் இல்லைன்னா சொல்றேன். அவளை மாத்தனும் அதுக்கு என்ன பண்றது, பண்பு.

பொறியியல் படித்து பின்லாந்தில் வேலைப் பார்க்கும் இனியனும் அவன் நண்பன் பண்பாளனும் மூளையைக் கசக்கிக் கொண்டார்கள். இவர்களுக்கு முன்பே அங்கே பல வருடங்களாக வேலையில் இருக்கும் பூவிழியை குருஜியை நம்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
___
ஹெல்சின்கியில் விடுமுறை நாளில் மூவரும் ஒரு காபி ஷாப்பில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தபோது இனியன், பண்பாளனைப் பார்த்துக் கண்ணைக் காட்ட பண்பாளன் மெல்ல ஆரம்பித்தான்.

இனியா, குருஜி வர்ரதா சொன்னீயே எப்ப வரார்

பூவிழி சிரித்தபடியே அவனைப் பார்த்தாள். பண்பாளன் அவளிடம் தொடர்ந்தான்.
பூவிழி, நானும் உன்னைப் போலத்தான். எனக்கு இந்தச் சாமியார்களையே பிடிக்காது. இனியனுக்காக ஒருமுறை பார்த்தேன், வியந்தே விட்டேன். வேடம் போடாத சன்னியாசி இந்த குருஜி. அவருடைய அருளாசி கேட்டவுடன் ஒரு மனநிறைவு, தெம்பு, வாழ்வில் தெளிவு. சே… நாமதான் தப்பா நினைச்சிட்டோம்னு வருத்தப்பட்டேன். சரி உனக்கெதுக்கு அது. சிரித்துக்கொண்டே என்ன இனியா, எப்ப வர்ரார்?

பண்பா, நாளை மறுநாள். ஹெல்சின்கி வரார். ஓரிரு நாட்களில் எஸ்போ போறார்
பூவிழி இடைமறித்து

தமிழ்நாட்டுக்கு எளிதாக மின் உற்பத்தி செய்ய ஏதாவது திட்டம் குறித்து விஞ்ஞானிகளைச் சந்திக்கப் போறாரா?

பூவிழி இந்த கிண்டல்தானே வேண்டாம்றது. வாழ்க்கையின் அர்த்தம் தெரியாம உளறாதே சற்று முறைப்புடனே இனியன் சொன்னான்.

டேய் இனியா, ஏண்டா கோச்சிக்கிற? பூவிழி நீ வேணா ஒருமுறை அவரைப் பாரேன் அப்புறம் தெரியும்.

இல்லே பண்பண்ணா, நான் வரல பூவிழி உடனே மறுத்தாள்.

பாத்தியா பண்பு. அவளுக்கு பயம் அவரை பாத்திட்டா மாறிடுவோம்னு

அதானே பூவிழி. அவன் சொல்றா மாதிரியேதான் நீ நடந்துக்கற இருவரின் பேச்சுக்களையும் கவனித்த பூவிழி மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

சரி, பண்பண்ணா நான் வறேன் அவள் சொல்லி முடிப்பதற்குள், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்வானார்கள் பூவிழி தொடர்ந்தாள்.

நான் வரணும், அதுதானே உங்கள் விருப்பம். அதுக்குத்தானே சுத்தி வளைச்சி பேசனீங்க

யேய்… யேய்.. என்ன நீ இப்படிப் பேசற இனியன் கேட்டு முடிப்பதற்குள்

பூவிழி பாதி புன்னகையுடன் பாதி பார்வையில் பண்பாளனைப் பார்த்தபடியே,
பின்ன என்ன… குருஜியை உனக்கு காட்டியவரே பண்பண்ணன்தான், நீயே ஒருமுறை என்கிட்ட சொல்லியிருக்க (இருவரும் திருதிருன்னு முழித்தார்கள்) பண்பண்ணா ஏதோ நம்பிக்கையில்லாதவர் மாதிரியும் நீதான் அவரை அழைச்சிகிட்டுப் போனா மாதிரியும் என்கிட்டயே சொன்னா என்ன அர்த்தம். எது

எப்படியோ உங்க மனநிறைவு பார்ட்டிகிட்டே நான் வரேன் ஓகேவா

பூவிழி… நீ புத்திசாலிப் பொண்ணு

ஒன்.. வழியிலேயே வந்து உன்னை வரவச்சிட்டோம். அந்த வகையிலே எங்களுக்கு வெற்றிதான் என்றான் பண்பாளன்.

நம்ம நாட்டிலே நம்மைப் போன்ற சாதாரண குடும்பத்துப் பிள்ளைகள் படிக்கவும் வேலைவாய்ப்புகளைப் பெறவும் அந்த சமூக நீதிக்கு தடையாயிருந்த கடவுள், மதம், ஜாதி இவைகளைத் தூக்கியெறிந்து மனிதனை நினைன்னு சொன்ன மனிதநேயர் அய்யா பெரியார் வழிதான் என்வழி. நீங்களும் ஒரு நாள் வருவீங்க, நம்பிக்கையிருக்கு. சரி இனியன் இந்த படிவத்தில் கையெழுத்து போடுங்க என்றாள் பூவிழி.

இனியனுக்கு சம்பளம் கூடுதலாக மிகப்பெரிய கம்பெனியில் வேலைக்கான விண்ணப்பம் அது பண்பாளன் மகிழ்ந்தான். பாத்தியா இனியா இதுதான் பூவிழி என்றான்.

இனியனும் களிப்புடன் கையெழுத்து போட வந்தவன் கடிகாரத்தை பார்த்தான் பூவிழி வாய்விட்டு சிரித்தாள்.

இனியன், இப்ப நாம இருக்கிறது பின்லாந்து. இப்ப எந்த நாட்டு ராகு காலத்தை கணக்கெடுக்கிறீங்க
அது வந்து… அது வந்து…

அதுன்னா… வேலையா…வேலை வந்துடும் கவலைப்படாமல் கையெழுத்து போடுங்க என்றாள் பூவிழி.

போட்டுவிட்டு தனது மூடநம்பிக்கையைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்தான் இனியன்.   முதல்ல காலநேரம் பாக்கற வழக்கம் எல்லாம் இல்லாம இருந்தீங்க இப்ப என்னாச்சு பூவிழி வருத்தப்பட்டாள். பண்பாளன்தான் பதில் சொன்னான்.

வருத்தப்படாத பூவிழி. நாங்க கால நேரம் எல்லாம் மெட்ரோ டிரைன், பஸ், விமானம் இவைகளை நேரம் தவறாம பிடித்திட பார்ப்போம். ஆனா, இல்ல என இழுத்தான்.

அது எல்லாரும் அவசியம் பார்க்க வேண்டியது. இந்த ராகு, சூலம், தெக்க, வடக்க இதெல்லாம் எப்படி நம்ப ஆரம்பிச்சிங்கன்னு கேட்டேன் பூவிழியை இடைமறித்து இனியன் உடனே சொன்னான்.

குருஜியை பார்த்தவுடன், இப்ப என்னா அதுக்கு என்றான். பூவிழி நிதானமாக பொறுமையாக சொன்னாள்.

மூடநம்பிக்கை என்பது சறுக்குப் பாறை மாதிரி. ஒன்னை நம்பத் தொடங்கினா உங்களை அறியாமலேயே கடைசி மடத்தனம் வரை நம்புவீங்க. வெளிய வரது கஷ்டம். பகுத்தறிவு கயிற்றை பிடித்து ஏறிதான் வெளிய வரணும். கடவுள், குருஜி, மதம், ஜாதி, காலபேதம், பூனை, நாய் இப்படி போய்க்கிட்டே இருப்பீங்க. நான் சொல்றது சரிதானே என்றாள். இனியன் முழு விருப்பத்துடன் கேட்டதாகத் தெரியல தலையசைத்துக் கொண்டே எழுந்தான்.

FIN AIR வந்து தரையிறங்கியது. குருஜியை வரவேற்க மெத்தப் படித்தவர்களுடன் ஒருவராக இனியனும் பண்பாளனும் ஆர்வத்துடன் நின்றிருந்தனர். கூட்டத்தில் (மொத்தமே 20 அல்லது 25 பேர்தான்) ஒருவர்.

பிரன்ஸ் (Friends), உலகு முழுமையும் போற்றுகின்ற குருஜி எதற்காக திடீரென்று பின்லாந்து வருகிறார். கடவுள் கட்டளை என்று கேள்விப்பட்டோம்.

ஆண்டவனின் அவதாரமாய் நம்மிடையே காட்சித் தரவுள்ள குருஜியை பணிந்து ஆசிர்வாதம் பெற்று அனைவரும் அமைதியா செல்வோம்.

உலகில் நேர்மை, வாய்மை, தூய்மை இவை மூன்றுமே பேராண்மை என்று நேற்று முன்தினம் டில்லியில் குருஜி போதனையில் சொல்லியிருக்கிறார். அனைவரும் மெய்மறந்து சிலிர்த்துப் போய்விட்டனராம். அமைதியாக எல்லோரும் வணங்குங்கள் என்று பேசிவிட்டுப் பயணிகள் வருகை பாதையைப் பார்த்து கும்பிட ஆரம்பித்துவிட்டார்.

அன்பர்கள் நீண்ட நேரம் கும்பிட்டபடியே நின்றனர். பயணிகள் அனைவரும் வந்து விட்டனர். ஆனால் குருஜி வரவில்லை. அதிர்ச்சி, ஏமாற்றம் யாருக்கும் புரியவில்லை. அந்த நேரத்திலும் மிகப்பெரிய படிப்பு படித்த ஒருவர்.

ஒருவேளை குருஜி விமானத்தில் வரும்போதே தவயோகச் சித்தியினால் மாயமாய் மறைந்து காற்றில் கரைந்து விட்டாரோ என்னவோ?

இன்னொரு மேதாவி,

இருக்கும்… இருக்கும் குருஜி காற்றாய் நம் அருகிலேயே நின்று நம்மை பார்த்துக் கொண்டிருக்கலாம்

இப்போதெல்லாம் முற்போக்குக்காரர்கள் எங்கும் உள்ளதால் அருகில் இருந்த பக்த முற்போக்களார் ஒருவர்,

சார்… தப்பு… திருத்திக் கொள்ளுங்கள். கொஞ்சம் சிந்திக்க வேண்டும். காற்றாய் உள்ள குருஜி பார்க்க முடியாது. காற்றுக்கேது கண். காற்றாய் நம்மை தழுவுகிறார். காற்றாய் மூக்கில் நுழைகிறார் என்பதுதான் சரி என்றார்.

சபாஷ் என்ன இருந்தாலும் நீங்க சிந்தனையாளர் சார் பாராட்டியது ஒரு மேல்தாவி.

ஆனால், குருஜி ஏன் வரவில்லை? என்று மற்றவர்களில் சிலர் விமான நிலைய அதிகாரிகளையும் FIN AIR கம்பெனியையும் விசாரித்தனர். டெல்லியில் உள்ளவர்களுக்கும் குருஜி சீடக்கோடிகளுக்கும் தொடர்பு கொண்டனர். எல்லா இடங்களிலும் டில்லி AIRPORT வந்த வரையில்தான் தெரிந்து இருந்தது.

பதற்றத்துடன் இருந்த இனியனையும், பண்பாளனையும் பூவிழி அழைத்துக்கொண்டு கிளம்பினாள். அவளுக்கும் குழப்பம்தான்.

இரு நாட்களுக்கு பின் வந்த செய்தி தமிழ்நாட்டையும் கடந்து உலகளவில் உண்மையை தெரிவித்தது.

குருஜி என்பவர் டில்லி விமான நிலையத்தில் இரகசிய விசாணைக்கு உட்படுத்தப்பட்டார். இல்லாத கார்ப்பரேட் கம்பெனிகளை இருப்பதாக ஆவணங்கள் தயார் செய்து மத்திய அரசை ஏமாற்றி ஆயிரம் கோடிகளுக்கு மேல் பணம் பெற்றுள்ளார். அந்நியச் செலவாணி மோசடி, பண மோசடி, Money Laundering வெளிநாடுகளில் அவரின் சீடர்கள் என்ற பெயரில் உள்ளவர்கள் மூலம் மேலும் பல தேச விரோதச் செயல்கள் செய்துள்ளதும், அவரின் வாசஸ்தலங்களில் காணாமல் போனார்கள் என்பவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் இன்று எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் எனத் தெரிகிறது. நீதிமன்றத்தின் மூலம் சிறப்பு அனுமதி பெற்று சி.பி.அய். உயரதிகாரி மதிமாறன் விசாரித்து வருகிறார் இந்த நிலையிலும் குருஜி எனப்படும் வைகுந்தன் மலர்ந்த முகத்துடன்,

கடவுள் சொன்னதைச் செய்தேன். பக்தர்கள் கவலைப்பட வேண்டாம். இனிமேலும் கடவுள் சொல்வதைச் செய்வேன் என்று போனார். பொதுமக்கள் கூட்டத்தில் சிலர் வைகுந்தனை வணங்க, பலர் திட்டினர், கல்லலால் அடிக்கவும் முனைந்தனர்.

பலத்த பாதுகாப்புடன் மதிமாறன், வைகுந்தனை அழைத்துச் சென்றார்.

அனுபவம் பெற்ற சில உயர் அலுவலர்கள் சீக்கிரம் வெளியில் வந்து மறுபடியும் ஏமாத்தப் போறான். மக்களும் கடவுள் அவதாரம்னு சொல்லப் போறாங்க. என்னா பண்றது சார் மோடி அரசில் காவிகளுக்குத்தான் காலம் என்றார்கள்.

இனியன், பண்பாளன் இருவரும் தாங்கள் சொன்னதுதான் சரி என்று பிடிவாதம் பிடிப்பவர்களாக இல்லாமல் குருஜியிடம் தாங்கள் ஏமாந்தது குறித்து வெட்கமும் அடைந்தனர். அதேசமயம் பூவிழியின் கேள்விகளும் அவர்களை சிந்திக்க வைத்தது.

இனியன், ரொம்ப மகிழ்ச்சி வைகுந்தனைப் போன்றவர்கள் மக்களை ஏமாற்றக் கையிலெடுப்பது மதம், கடவுள் அல்லவா?

ஆமாம் அதிலென்ன சந்தேகம் பண்பாளன் வேகமாக சொன்னான்.

சரியாக சொன்னீர்கள் அண்ணா… வைகுந்தன் போன்றவர்கள். பல ஆண்டுகளாய் செய்த தில்லுமுல்லுகளால் பாதிக்கப்பட்டவர்கள், செய்தப் படுகொலைகளால் சீரழிந்த குடும்பங்கள் இவர்களுக்கு கடவுள் ஏன் தண்டனை கொடுத்தார். குருஜி போன்றவனை இவைகளைச் செய்ய அதுவும் தன் பெயரால் ஏன் அனுமதித்தான்? மகா மோசமானவன் கடவுள் என்றால் அவன் எதற்கு?

மனித விடுதலைக்கு வாழ்வாதாரத்திற்கு வராத கடவுள் எதற்கு? இந்த கேள்விகள் உங்களுக்கு தோன்றவில்லையா? இனியன் சொல்லுங்கள்?

பூவிழி வேகமாகக் கேட்ட வினாக்களுக்கு பதிலாக இனியன் அமைதியாக அவள் கைப்பையை திறந்தான் பூவிழியும் பண்பாளனும் ஒன்றும் புரியாமல் பார்க்க பையினுள் இருந்த பெரியார் படத்தை எடுத்து எல்லா கேள்விகளுக்கும் பதிலாக.

பூவிழி எனக்கும் ஒரு பெரியார் படம் தருகிறாயா? என்றான்.

பூவிழி புன்னகைத்தாள். அதில் பகுத்தறிவுப் பெருமிதம் ஒளிர்ந்தது.