Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மனிதர்களாகிய நமக்கு மண்ணின் மீது ஆசையில்லாமல் இருக்க முடியாது. கஷ்டப்பட்டு ஒரு அடி நிலத்தையாவது வாங்க வேண்டுமென்று நினைப்போம். இவ்வாறு நமக்கு ஒரு சொத்தை வாங்க வேண்டுமென்று நினைத்துவிட்டால் அந்த சொத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் விசாரித்து அதன் பிறகுதான் அந்த சொத்தை வாங்க நினைப்போம். அதன்பிறகு, சொத்தின் உரிமையாளரிடம் கலந்துபேசி, அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர் கிரைய ஆவணம் பதிவு செய்து கொள்வோம்.

கிரைய ஆவணம் மட்டும் ஒரு சொத்தின் முழுமையான ஆவணம் ஆகாது. இதனுடன் வருவாய்த்துறை ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல், அ பதிவேடு, நிலத்தின் வரி மற்றும் பிற ஆவணங்களையும் தன் பெயருக்கு பெயர் மாற்றம் செய்து கொண்டால்தான் சொத்தின் முழுமையான உரிமையாளர்கள் ஆவோம்.

இதே போல் நம் முன்னோர் வழியில் கிடைத்த சொத்துக்களையும் அவை நிலமாக இருந்தால் பட்டா, சிட்டா, அடங்கல், வரி மற்றும் பிற ஆவணங்களை நம்முடைய பெயருக்கு பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். இதுவே வீடாக இருந்தால் மின்சாரத் துறையில் வழங்கப்பட்ட அட்டை, குடிநீர் மற்றும் கழிவுநீர் மற்றும் இதர ஆவணங்களையும் தன்னுடைய பெயருக்கு பெயர் மாற்றம் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையாக நம் பெயருக்கு மாறியதாக அர்த்தம்.

இதே போல் நமக்கு தாய் தந்தையின் மூலமோ (அ) நம்முடைய உறவுகள் மூலமோ செட்டில்மெண்ட் தானம், விடுதலை போன்ற ஆவணங்கள் பதிவு செய்து அதன் மூலம் நமக்கு கிடைத்திருந்தாலும் அந்த சொத்துக்களையும் நம்முடைய பெயருக்கு பெயர் மாற்றம் செய்துகொள்ளுதல் வேண்டும்.

இல்லையென்றால், பதிவு செய்த ஆவணங்களை மட்டும் வைத்துக் கொண்டு அனுபவித்துவரும் சமயத்தில் சொத்தில் பிரச்சனைகள் வர பதிவு செய்த ஆவணத்தை கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய மனு கொடுத்து நம் பெயரில் பட்டா மாற்ற விசாரணை செய்வார்கள். அவ்வாறு விசாரணை செய்யும் பட்சத்தில் நாம் வாங்கிய சொத்தில் பிரச்சனைகள் இருந்தாலும், அளவுகள் மாறுபட்டு இருந்தாலும் தெரிந்துவிடும். இவ்வாறு இல்லையென்றால் போலியான ஆவணங்களைக் கொண்டு நமக்கு விற்றிருந்தாலும் கண்டுபிடித்து உடனடியாக சட்ட நடவடிக்கைகளை எடுத்து உரிய நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

சொத்தை நாம் பதிவு செய்த ஆவணங்களை மட்டும் நம்பி அனுபவித்துக் கொண்டு வரும் சமயத்தில் நம்மை ஏமாற்றி விற்றுவிட்டு இருந்தாலோ (அ) நமக்கு விற்ற நபர் இறந்திருந்தாலோ பல வருடங்கள் ஆனபிறகு இந்த விஷயம் நமக்குத் தெரியவரும் போதும், நாம் வாங்கிய சொத்து நாம் அனுபவித்துக்கொண்டுவரும் சமயத்தில் முறையான நபர்களிடம் வாங்கமலும் பட்டா, சிட்டா, அடங்கல், வரி போன்ற ஆவணங்கள் நம்முடைய பெயருக்கு மாற்றம் செய்யாமல் இருக்கும் பட்சத்தில் வழக்கு தொடர்ந்தாலும் சொத்து நமக்கு கிடைப்பது சந்தேகம் ஆகிவிடும்.

மேற்சொன்ன பிரச்சினைகளை தவிர்க்க வேண்டுமென்றால் பதிவு செய்த உடனே ஆவணங்களைக் கொண்டு வட்டாட்சியரிடம் மனுசெய்து தங்கள் பெயருக்கு பட்டா, சிட்டா, போன்ற ஆவணங்களை தன் பெயருக்கு மாற்ற வேண்டும். சொத்தின் ஆவணங்களைக் கொண்டு பட்டா தன்னுடைய பெயருக்கு எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதைப்பற்றி தமிழ்நாடு பட்டா பாஸ்புக் சட்டம் 1983இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

பட்டா மாற்றம் செய்து தர மனு செய்தவுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் விசாரணை செய்து அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் நமக்குப் பட்டா மாற்றம் செய்து தர வட்டாட்சியர் ஆணை பிறப்பிப்பார்கள். அந்த ஆணையின் அடிப்படையில் நம்முடைய பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுப்பார்கள்.

இவ்வாறு வழங்கப்படும் பட்டாவில் நம்முடைய சொத்து பற்றிய விவரங்கள் அதாவது எந்த மாவட்டம், வட்டம், சொத்து அமைந்துள்ள ஊர், சொத்தின் உரிமையாளர் பெயர், சொத்தின் சர்வே எண், சப் டிவிஷன் எண் போன்ற விவரங்கள் நமக்கு வழங்கப்படும் பட்டாவில் இருக்கும்.

இவ்வாறு பட்டா மாற்றம் நம்முடைய பெயருக்கு செய்த பிறகுதான் நம்முடைய சொத்திற்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கும். இவ்வாறு அனுபவிக்கும் போது பிரச்சனைகள் வந்தாலும் பதிவுசெய்த ஆவணங்கள் மற்றும் பட்டா போன்ற ஆவணங்களைக் கொண்டு நம்முடைய சொத்துதான் என நிரூபித்து மகிழ்ச்சியாக அனுபவித்து வாழலாம்.