Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குடிகாரனுக்குப் பெண் கொடாத கோட்டைப்பட்டி!

மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தமிழகம் முழுவதும் எழுந்திருக்கும் குரல்களுக்கு மத்தியில், எங்க ஊருக்கு மதுவிலக்கு தேவையில்லை என்கின்றனர், திண்டுக்கல் மாவட்டத்தில் கரூர் சாலையில் உள்ளடங்கி இருக்கும் கோட்டைப்பட்டி கிராம மக்கள்.

தலைமுறை தலைமுறையா மது வாசமே இல்லாத கிராமமா கட்டுப்பாடோடு இன்னைக்கும் வாழ்ந்துகிட்டுதானே இருக்கோம், வந்து பாருங்களேன்… என வாஞ்சையோடு அழைக்கின்றனர் கோட்டைப்பட்டி கிராம மக்கள்.

வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி, தென்னம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது. சுற்றி பாப்பநாயக்கன்பட்டி, தாதிநாயக்கன்பட்டி, புதுகரட்டுப்பட்டி, பழைய கரட்டுப்பட்டி, சின்னப்பநாயக்கனூர் உட்பட 1500 தலக்கட்டு குடும்பங்கள் வாழும் இக்கிராமங்கள் முழுவதும் மதுவிலக்கு கட்டுப்பாடு அய்ந்து தலைமுறைக்கும் மேலாக கட்டுக்குலையாமல், அப்படியே இருக்கிறது.

எங்க ஊர்க்காரவுங்கன்னு மட்டுமில்ல. அவங்க சொந்தபந்தங்கள், நண்பர்கள்னு யாரா இருந்தாலும், குடிப்பழக்கம் இருந்தா ஊருக்குள்ள நுழையவிட மாட்டோம். அதிலும் ஊர் தொடக்கத்துல இருக்கிற தோரணக் கம்ப எல்லையைத் தாண்டி உள்ளே வரக் கூடாது. மதுவுக்கு அவ்வளவு கடுமையான கட்டுப்பாடு வச்சிருக்கோம்.

நான் வெளியூர்ல இருந்து இந்த ஊருக்கு வாக்கப்பட்ட பொண்ணு. எங்க ஊருல குடிசை இல்லாதவனுக்குக்கூட பொண்ணு கொடுப்போம். ஆனா குடிகாரனுக்கு பொண்ணு தர மாட்டோம் என்றார் அகல்யா என்ற பெண்.

இந்த கிராம மக்களிடம் இவ்வளவு உறுதியான கட்டுப்பாடு எப்படி சாத்தியமானது?

என்று மதுவிலக்கு இல்லாத கிராமங்களைப் பற்றி ஆய்வு செய்துள்ள காந்தி கிராம பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஓ.முத்தையாவிடம் கேட்டபோது,     இவ்வூர் மக்கள் மது, போதை பழக்க வழக்கங்கள் இல்லாமல் வாழ்கிறார்கள். மீறினால் தீட்டு, தெய்வக் குற்றம் ஆகிவிடும் என்று எண்ணுகின்றனர்.

இவர்கள் வணங்கும் தெய்வங்களுக்கும், மது இல்லாமலேயே வழிபாடு, திருவிழா நடத்துகிறார்கள்.

கட்டுப்பாடான வாழ்க்கை முறையும், வாக்கு சுத்தமும், யாருடனும் வம்பும் தும்பும் இல்லாத வாழ்க்கையும்தான் முன்னோர்களுக்கும் தெய்வங்களுக்கும் கொடுக்கும் உண்மையான மரியாதை என்கின்றனர் இவ்வூர் மக்கள். அந்த ஒழுக்கநெறிகள்தான் இன்றும் மதுப்பழக்கம் இல்லாத கிராமமாக இவ்வூர் மக்களை வைத்திருக்கிறது என்றார்.

இவ்வூர் மக்கள் தமிழகமே எங்கள் கோட்டைப்பட்டி கிராமம் போல் மாற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஊர்க்கட்டுப்பாடு என்பது இப்படிப்பட்டவற்றிற்கு பயன்படுத்தப்பட வேண்டும். எடுத்துக்காட்டான ஊர். எல்லா ஊரிலும் இப்படியொரு கட்டுப்பாடு கொண்டுவர அவ்வூர் மக்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். முயன்றால் முடியும்!