வினையன் கவிதைகள்

ஆகஸ்ட் 01-15

சாதீ:

பக்கத்து வூட்டு மாட்டுக்கும்
சேத்து புண்ணாக்கு தவுடு
கரைக்கிற அப்பனுக்கும்
கீழத்தெரு மொட்டையமூட்டு
ஆட்டையும் ஆசுபத்திரி
ஓட்டிட்டு போற பெரியப்பனுக்கும்
உசுரு மேல அன்பு.!
மனுசம்மேல எப்ப
அப்பாடிகளா.?
*****

(சா)மி (தி)ருவிழா:

கிடாய்களின் உதிரம் துடைத்ததோடு
முடிந்தது திருவிழா..!
யாருமே கவனிக்கவில்லை.?
யார் இழுப்பார் என்ற சண்டையில்
தேர் சக்கரத்தில் தெளித்த ரத்தத்தை.
*****
படையல் :

கொலசாமி கோயிலுக்கு படையலுக்கு
போனோம்
நடுத்தெரு மாசிலாமணி கிட்ட ரெண்டு
பாக்கெட்
சாராயம் கடன் வாங்கி…!
வழுக்க செட்டியார் கடைல சுருட்டு சகிதம்…
ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என கலர் கலரா
ரொட்டி பாக்கெட் மூணு…
இலைய விரிச்சி எல்லா படையல் சாமானையும்
அதுல போட்டு…!!
வெராக்குடி வீரன முதல்ல அழைச்சா.?
குதிரைக்கு கீழ நிக்கும் கொம்பு வீரனும்
வருவான்.
சனி மூலைல இருக்கும் வெராக்குடி
வீரனுக்கு
ஒரு பங்கு.!
குதிரைக்கு கீழ நிக்கும் கொம்பு வீரனுக்கு
ஒரு பங்கு.!
அஞ்சுனை காத்த அய்யனாருக்கு
பெரிய பள்ளயம்..!
நேத்து என் கனவுல சாராயம் குடிச்ச
எங் கொலசாமி..!!
இன்னக்கி மோந்து கூட பாக்க வரல.!
அய்யா வெராக்குடி வீரா.!
அஞ்சுனை காத்த அய்யா..!!
உனக்கு என்ன கொற வச்சேன்.
முன்னுரிமை?
முப்பது  பழைய  வேட்டி
இருவது  கிழிஞ்ச  சேல
சுத்துப்பட்டு  ஊருல
எழவு, கண்ணாலம், காதுகுத்து
எல்லாத்துக்கும்  நாந்தேன்
பந்த  சோடிப்பு
பாட  சோடிப்பு
அப்பனும்  ஆத்தாளும்
அழகாத்தான்  வச்சாங்க
மாயவன்னு  பேரு..!
எந்த  சாதிப்பயலா  இருந்தாலும்
வலிக்காம  சொல்றான்
வண்ணாத்தி  மொவனுக்கு
சேதி  சொல்லுங்கன்னு.!
*****

கட்சி மாறினர்!

அனைத்து கடவுள்களும்
கைது!
வன்முறை தடுப்புச் சட்டம்
விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்
பாய்ந்தது!
சட்டம் தன் கடமையைச்
செய்தது!
சட்டத்தின் முன் அனைவரும்
சமம்! கடவுள் உட்பட!!
பக்தர்கள் கட்சி மாறினர்
பகுத்தறிவாளர்களாக!

*****
பகுத்தறிவுப் பாதையே!

புரோகிதர்
பாதிரியார்
மௌல்வி
மூவரும் கூடினர்!
அன்றுதான்
அறிவுச் சூரியனை
அறியாமைக் கிரகணம்
பிடித்தது… பரிகாரம்?
பகுத்தறிவுப் பாதையே

– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *