புதுமை இலக்கியப் பூங்கா
ஆலங்காட்டுக் காளி
– இளமைப்பித்தன்
முனிசிபல் எல்லைக்கு அப்பால், ஒரு பெரிய மைதானம். அதைச் சுற்றிலும் பனந்தோப்பு; தூரத்தில் சுடுகாடு; சிற்சில சமயங்களில் நரிகளின் ஊளைச்சத்தம் காதைத் துளைத்துவிடும். இதற்கு நடுவில்தான் ஆலங்காட்டுக் காளியின் கோவில் இருக்கிறது. கோவில் சாதாரணமானதுதான். உள்ளே ஒரு சுற்றுப்பிரகாரம்; இடிந்து பாழ்பட்ட மதில் சுவர்கள். கதவு இல்லாத நுழைவாயில். எதிரே ஒரு பலி பீடம். அந்தக் கோவிலுக்குப் பூசையும் கிடையாது; பூசாரியும் இல்லை. ஆனால் அதற்குள் ஆவாகனமாகி நிற்கும் காளியின் சக்தியைப் பற்றிய கதைகளை என்னுடைய பாட்டியின் வாயிலாகக் கேட்டிருக்கிறேன். அவளுக்குக் காளியிடம் வரம் வாங்கிய புலவர்களைப் பற்றிப் பேசுவதென்றால் ஒரு அலாதியான உற்சாகம். அது கிடக்கட்டும் பழங்கதை!
பிறகு நான் எழுத்தாளனாகி எவ்வளவோ கதைகளை எழுதிக் குவித்தேன். நாளாக ஆக இந்தத் தொழில் உனக்கு எதற்கு? என்று அடிக்கடி பலரும் என்னைக் கேட்கவே என் மனம் கைத்துப் போய்விட்டது. அதனால் வெகு நாட்களாக நான் சும்மாவே இருந்துவிட்டேன்.
இருந்தாற் போலிருந்து திடீரென்று கவி பாட வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. காளமேகமும் காளிதாசனும் எப்போதுமே என் மனத்தைவிட்டு அகலாதவர்கள். காளியிடம் வரம்பெற்றுக் கவிபாடிப் புகழ் அடைந்தவர்கள் அல்லவா? நறுக்காக நாலு அடிகளைக் கொண்டு அவர்கள் நல்லதும் செய்தார்கள்; கெட்டதும் செய்தார்கள்; அவர்கள் அறம் வைத்துப் பாடியதால் அழிந்துபோன சத்திரம் சாவடிகளை இன்றும் நான் கண்களால் பார்த்து வருகிறேன். அவர்களைக் கண்டு எத்தனையோ பேர் பயந்தார்கள். விண்ணும், மண்ணும்கூட நடுநடுங்கிற்றாம்! இன்னும் சொல்லப்போனால் எத்தனை யெத்தனையோ விந்தைகள்! விரிந்து கொண்டே போகும்!
கேவலம் கதாசிரியனைக் கண்டு பயப்படாதவர்கள் கவிராயனென்றால் பயப்படுவார்கள் அல்லவா? இந்தக் காரணத்தால்தான் ஆலங்காட்டுக் காளியைத் தினசரி வழிபட ஆரம்பித்தேன். ஒருவருக்கும் தெரியாமல் அவளிடம் போய்க் கவிபாடும் சக்தியைப் பெற்றுக் கொண்டு வந்துவிடவும் தீர்மானித்துவிட்டேன்.
முன்னிருட்டுக் காலம்!
ஆலங்காட்டுக் காளியின் சந்நிதானத்தில் துண்டை விரித்துப் போட்டுப் படுத்துக் கொண்டிருந்தேன். மனித வாடையே வீசாத இடத்தில் நான் ஒருவன் தன்னந்தனியாகப் பயம், கோழைத்தனம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒரே இலட்சியம் நிறைந்த உறுதியான உள்ளத்துடன் படுத்திருந்தேன். நடுச்சாமத்தில்தான் அன்னை வெளியே புறப்பட்டுப் போவாளென்பது அய்தீகம்.
பக்கத்திலிருந்த பவள மல்லிகை மரத்தில் பூத்திருந்த மலர்களின் வாசனை கம்மென்று வீசிக் கொண்டிருந்தது. மைதானத்தைக் கடந்துவரும் பேய்க்காற்று சற்றைக்கொரு தரம் சுழன்று சுழன்று சீழ்க்கையடித்துச் சென்றது.
வெகுநாழி கழித்து நிலவும் வந்துவிட்டது. அரையுங் குறையுமான நிலா வெளிச்சத்தில் மைதானம் மங்கிப்போய்க் கிடந்தது. தொலைவில் சுடுகாட்டில் பிணம் எரியும் வெளிச்சம்தான் தெளிவாகத் தெரிந்தது.
நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடுச்சாமமும் நெருங்கி வந்துவிட்டது. ஆச்சு, இன்னும் சிறிது நேரத்தில் காளி புறப்பட்டு விடுவாள். நமக்குக் காளி தரிசனம் கிடைத்துவிடும் மெள்ளத் தலையைத் தூக்கிப் பார்த்தேன்.
கோவிலுக்குள் நான் ஏற்றிவைத்த விளக்குத்-தான் மங்கலாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. ஆள் அரவமே கிடையாது. என் இருதயத்தின் ஒலிகூடத் தெளிவாக என் காதில் விழுந்தது. ஒவ்வொரு துடிப்பிலும் காளி, காளி என்ற சொல்தான் எழுந்து மடிந்து கொண்டிருந்தது.
அன்னை அரூபியானவளாயிற்றே; ஒருவேளை காற்றோடு காற்றாய் கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. சட்டென்று குருட்டு யோசனை ஒன்று வந்து உதித்தது. எழுந்து போய்க் கர்ப்பக்கிரகத்தின் வாசற்படியில் உட்கார்ந்து கொண்டேன். மனம் எங்கேயோ போயிற்று. அறிவு மழுங்கி விடும் போல இருந்தது.
கண்களில் பூச்சிகள் பறந்தன. உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கும் அணைந்து போய்விடவே, என் நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்துவிட்டன. இருட்டோடு இருட்டாய் ஒன்றியிருந்தேன். அன்னை என் மீது மனமிரங்கி அருள் பாலிப்பாளா? ஆழ்ந்த பெருமூச்சுடன் கண்ணிதழ்கள் சுருங்கின.
யாரோ நடந்து வரும் காலடியோசை, சமீபத்திலேயே கேட்டது. எஞ்சியிருந்த உயிரும் போய்விடுமோ? புலன்களெல்லாம் ஒடுங்கிவிடும் போலத் தோன்றியது. கண் விழித்துப் பார்த்தேன்.
பார்ப்பதற்கு மனித இனத்தைச் சேர்ந்த உருவமாகத்தான் தெரிந்தது.சந்தேகமே இல்லை! காளிக்கு என்மேல் கருணை பிறந்துவிட்டது. கோர ரூபமாகக் காட்சியளித்தால் பக்தன் பயந்து செத்துவிடுவானென்றுதான் இப்படி வாலைக் குமரி உருவில் வந்திருக்கிறாள். உடலெல்லாம் வைரமும் வைடூரியமுமாகச் சொலித்துக் கொண்டிருக்கிறதே! அடேயப்பா, என்ன வாசனை இது? சந்தனமும், சவ்வாதும் கலந்து வீசுகிறதே! இது என்ன ஆலங்காட்டுக் காளியின் கோவிலா அல்லது அண்ட சராசரங்களை-யெல்லாம் ஆட்டிப் படைக்கும் அருட்சக்தியான அமுதவல்லியின் பரலோக வாசஸ்தலமா?
பராசக்தியின் நடையில், பாதச் சிலம்பு பாடிற்று; கைவளைகள் குலுங்கின. திருவிழிகளிலே மின்வெட்டிக் கொண்டிருந்தது. மங்கிய நிலா வெளிச்சம் இவள் வந்ததும் ஒளி மழுங்கிப் போய்விட்டது. வாய் நிறைய வெற்றிலையைப் போட்டுக் குதப்பிக் கொண்டிருந்தாள். கொஞ்சநேரம் கண்மூடிக் கொண்டிருந்து விட்டதில் தேவி எந்தத் திசையிலிருந்து வந்தாளென்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை என்னைத் தாண்டிக் கொண்டுதான் போயிருப்பாளா? அவள் பிரகாரத்தில் அப்படியுமிப்படியுமாகச் சற்று நேரம் உலாவிவிட்டு, ஒரு கருங்கல்லின் மேல் போய் உட்கார்ந்தாள். அவளை எப்படி அழைப்பது? எந்த விதமாக வருணித்துப் புகழ்வது? இவ்வாறெல்லாம் யோசனை செய்து கொண்டே இருந்தேன். ஓடிப்போய் அவள் மலரடிகளைத் தாவிப் பிடித்துக் கொள்ளுவோமா?… கைகால்களெல்லாம் ஏன் இப்படி வெடவெடக்கின்றன எனக்கு?
உள்ளே சிலையாக இருந்தவள் உயிர்பெற்றதும், நான் கல்லாகப் போய்விடுவேன் போல இருந்தது. தேவியின் ஜகன் மோகனாகாரத்தை இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
ஒரு மெல்லிய பூங்காற்று அலைமோதிக் கொண்டு வீசியது. அவளுடைய புடவைத் தலைப்பு, மயிலின் தோகை போல் விரிந்து பறந்து சரிந்தது. அதை இழுத்துச் சரி செய்து கொண்டு வாயில் ஊறியிருக்கும் தாம்பூலக் குழம்பைக் கீழே புளிச் சென்று துப்பிவிட்டுக் கனைத்துத் தொண்டையைப் பதப்படுத்திக் கொண்டாள். அவளுடைய குரலுக்கு எதிரொலியாக மற்றொரு கனைப்புச் சத்தம் கேட்டது. தொடர்ந்தாற் போல கம்பீரமான ஒரு ஆண் உருவம் வந்து சேர்ந்தது. நான் திடுக்கிட்டுப் போனேன். அது யாராக இருக்கலாம்? திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாக இருக்குமோ? யார் கண்டறிய முடியும்?
வந்த ஆசாமிக்குத் தேவி எழுந்துநின்று வணங்கினாள். இதென்ன புதுமை? சிவத்திற்குச் சக்தி தலை வணங்குவதா? சக்திக்குள்தானே சிவம் ஒடுக்கம் என்று சொல்லுவார்கள்? சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டனர்.
என்ன ஜகதம், நான் வர நாழியாகி விட்டதே என்று வருத்தப்பட்டாயோ? என்று கேட்டார் எம்பெருமான்.
என் சுவாமி சந்திக்காமல் இருக்கவே மாட்டாரென்ற நம்பிக்கை என்னைவிட்டுப் போகுமா? ஊரடங்கிய பின்புதானே, நம் உலகத்தில் சந்தடி ஏற்படும்? என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ஜகதாம்பிகை.
எம்பெருமான் அவள் காலடியில் உட்கார்ந்து கொண்டார். உயரத்திற்கேற்ற உடலமைப்பு. நெளிநெளியாகச் சுருண்டிருக்கும் சடாமுடியை உதறி அள்ளிச் செருகியிருந்தார். நெற்றியின்மேல் பால்போன்ற தூய திருநீறு பூசப்பட்டிருந்தது. கழுத்திலே பொன் சரட்டில் கோர்த்திருந்த உருத்திராட்சம், கண்டத்திலுள்ள கறுப்பை மறைத்துக் கொண்டிருந்தது. பளபளவென்ற சரிகை மேல்துண்டால் உடல் முழுவதையும் போர்த்தி மறைத்திருந்தார். அன்று காமனை எரித்த நெற்றிக்கண்ணை மட்டுமே என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால், இரண்டு பெரிய கண்களிலும் கருணை ததும்பியபடி இருந்தது.
நான் எந்தச் சென்மத்தில் செய்த புண்ணியமோ தெரியவில்லை; அம்மையையும், அப்பனையும் ஒருங்கே சேர்த்துத் தரிசிக்கக் கொடுத்துவைத்தேன்! என் பாக்கியமே பாக்கியம்! என் வாழ்வு தூய்மை பெற்றது; பிறவி புனிதமடைந்தது; ஆயுள் முழுவதும் தவமும், யோகமும் செய்து இவர்களைக் காணவிரும்பும் முனிவர்களை யெல்லாம்விட நான் எவ்வளவோ மேலானவன். இனிமேல் சாவு வந்தால்கூடச் சஞ்சலப்பட மாட்டேன் என்ற சிந்தனைகள் என் மனதைப் பிய்த்து எடுத்துக் கொண்டிருந்தன.
தேவியின் காலடியின்கீழ் அமர்ந்திருந்த தேவன், அவள்மேல் ஒயிலாக உரசியபடி ஊராருக்கெல்லாம் படியளந்து விட்டுத்தானே வரவேண்டியிருக்கிறது. அந்தப் பாரத்தை நான் ஏற்றுக் கொண்ட பிறகு, அரையுங் குறையுமாக விட்டுவிட்டு வரமுடிகிறதா? என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் செருகியிருந்த உருண்டு நீண்டிருக்கும் வெள்ளிச் சுருள் குழாயை எடுத்து அவளிடம் கொடுத்தார். அமுதத்தை, முதலில் நீங்கள் பருகுங்கள்; மிகுந்த எச்சில் எனக்கு இருக்கட்டும் என்றாள் அம்பிகை.
அவள் சொல்லைத் தட்டமுடியாமல் அமுதக் குழாயை எடுத்து அவர் பருகினார். நாமும் போய் அதில் கொஞ்சம் பிச்சை கேட்கலாமா வென்று தோன்றியது. சேச்சே! சமய மறியாமல் குறுக்கே போனால், ஏதாவது விபரீதம் நேர்ந்து விட்டால் என்ன செய்வது? இன்னும் கொஞ்சம் நகர்ந்து இருட்டில் பதுங்கிக் கொண்டேன்.
உங்களுக்கு இந்த உலகமே கட்டுப்-பட்டிருக்கிறது போங்கள். பாதாளத்திலிருந்தால்-கூடச் சொன்னால் எதுவும் உடனே வந்து சேர்ந்துவிடுகிறதே என்று தேவி அவர் கன்னத்தில் லேசாகத் தட்டினாள். தேவர் சொன்னால் எதுவும் நடக்கும். என்னை யாரென்று நினைத்துக் கொண்டாய் ஜகதம்? இந்த ஈரேழு பதினான்கு லோகங்களையும் நொடிப் பொழுதில் ஆட்டி வைத்து விடுவேன். உனக்குத்தான் என் குணம் தெரியுமே! என்றார் அவர்.
வெற்றிலைச் சாற்றை அவள் கீழே உமிழப் போனாள். அதை அவர் தடுத்துத் தன் வாயில் துப்பும்படி கட்டளையிட்டார். அவள் அப்படியே செய்துவிட்டு, எஞ்சிய அமுதத்தைப் பருகினாள். பின்பு இருவரும் சரச சல்லா-பங்களில் ஈடுபட ஆரம்பித்தனர். என் உடலுக்குள் ஓடும் இரத்தம் உறைந்து-விடும்போல இருந்தது. இது என்ன விபரீதம்? உலகமும் மனிதனும்தான் மாயைக்குள் கஷ்டப்படுகிறார்களென்றால், மகேசுவரனும், மகேசுவரியும் கூடவாஅதற்கு அடிமைகள்!
தூரத்தில நரிகள் ஊளையிட்டன. பனைமட்டைகளின் சலசலப்பு மந்தமாக இரைந்து கொண்டிருந்தது. எங்கோ குப்பத்து நாய்கள் லொள், லொள் என்று குரைத்தன.
வரமும் வேண்டா, கவி பாடவும் வேண்டாமென்று பயந்துபோய், பின்புறச் சுவர் வழியாக ஏறிக் குதித்து ஓடியே போய்விட்டேன். முனிசிபல் எல்லையை வந்து மிதித்ததும்தான் நல்ல உயிர் வந்தது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம், கோவில் இருந்த திசையில் பட பட, டுர், …ர்ர்… ஙொய்… என்ற பெருத்த இரைச்சல் கேட்டது. அந்தத் தேவகணங்களைச் சாதாரண நரசென்மம் பார்த்துவிட்டதால், யுகப் பிரளயம் நடக்கப் போகிறதோ என்னவோ, உலகம் இடிந்து விழுகிறமாதிரி அதிர்கிறதே என்ற திகைப்புடன் கால்கள் தள்ளாட, என் வீட்டுத் திண்ணையின்மேல் தொப்பென்று வந்துவிழுந்தேன். பிறகு நினைவே இல்லை.
மறுநாள் பொழுது விடிந்தது.
உலகம் எப்பொழுதும் போலத்தான் இருந்தது. யுகமாவது, பிரளயமாவது ஒன்றுமே நடைபெறவில்லை. அடுத்த வீட்டுக்கார கிழவனார் வெகுநேரம் கழித்து, என்னிடம் என்ன தம்பீ, நேற்று ராத்திரி நம்ம ஆலங்காட்டுக் காளி கோவிலுக்குள்ளே, ஒரு அதிசயமில்லே நடந்திருக்கு! ரேஷன் கடைச் சிவனாண்டித்தேவர், நல்லாக் குடிச்சிட்டுக் கூடவே ஒரு பொம்பளையையும் கூட்டிக்கிட்டுப் போய் விழுந்து கிடந்தாராம். இது போலீசுக்குத் தெரிஞ்சு, உடனே லாரியை எடுத்துக்கிட்டுப் போய் அவங்க ரெண்டு பேரையும் கைது பண்ணிட்டாங்களாம்! என்ன பாரு உலகம் போற போக்கை? என்று சொன்னார்.
நான் பதிலே சொல்லவில்லை. உடம்-பெல்லாம் ஒரு முறை நடுங்கிப் புல்லரித்தது. நல்லவேளை! அந்த ஆலங்காட்டுக் காளிதான் என்னைக் காப்பாற்றினாள். இல்லையென்றால் என் கதி என்ன ஆகியிருக்கும்? அவளுடைய லீலா விநோதங்களில் இதுவும் ஒன்று போலும்.