– மதிமன்னன்.சு
மாற்றம் தருவாரா மாமன்னர்
இந்தியர்கள் வியாபாரிகள் ஆவார்களா? பிக்காரிகள் ஆவார்களா?
முதுநிலைப் பட்டம் பெற்று நடித்துக் கொண்டிருக்கும் வங்க நடிகை நந்திதா தாஸ் (தமிழில் அழகியில் நடித்தவர்) நாத்திகத் தந்தைக்குப் பிறந்த நாத்திகர். சமூகப் பிரக்ஞை உள்ளவர். பாலிவுட் நடிகை ஷப்னா ஆஸ்மியுடன் சேர்ந்து நடித்த ஃபயர், வாட்டர் போன்ற படங்களுக்காக விமர்சிக்கப்பட்டவர்.
ஆர்எஸ்எஸ் பிற்போக்குவாதிகளால் எதிர்க்கப்பட்டவர். இப்படங்களை எழுதியவரும் தயாரித்தவருமே குஜராத்திப் பெண்கள்தாம். பாப்சி சித்வாவும் தீபா மேதாவும். 2008இல் நந்திதா தாஸ் தயாரித்த ஃபிராக் எனும் திரைப்படம் கோத்ரா கலவரம் தொடர்பானது. இப்படத்தைப் பிரத்தியேகமாக மாமன்னர் நரேந்திர மோடிக்குத் திரையிட்டுக் காட்டவேண்டும் எனக் கோரப்பட்டது.
இவர் மறுத்துவிட்டார். குஜராத்தில் திரையிடப்படும்போது திரையரங்கில் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டார். (பம்பாய் திரைப்படத்தை சிவசேனாத் தலைவர் பால்தாக்கரே பார்ப்பதற்காகத் திரையிட்டு அவரின் யோசனைகளின்படி வெளியிட்ட நம்மூர் மணிரத்னத்தை இந்நேரத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை.) அவரது அச்சம் தற்போது, தனக்கு என்ன நடக்குமோ, தாம் எப்போது பாகிஸ்தானுக்கு இவர்களால் அனுப்பப்படுவோமோ என்பதாக இருக்கிறது.
புகழ்பெற்ற ஓவியர் ஹூசேன், நாடு கடந்து கத்தாரில் தங்கி இறந்துபோனார் இவர்களது கொடுமையால்! இந்து மதத்தைச் சேர்ந்த ஓவியர்கள் சுபாஷ் அவ்சட், சுபோத் கர்கர் ஆகியோர்கூட இந்துமதப் பழங்கதைக் காட்சிகளை வரைந்ததற்காகக் கண்டிக்கப்பட்டனர். சங் பரிவாரம் கருத்துச் சுதந்திரம் என்பதையே அளிக்க மறுக்கிறது; சந்திரமோகன் எனும் ஓவிய மாணவர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னிலையிலேயே கொடுமைப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அவற்றை நினைத்துக் கல்வியாளர்கள், கருத்துச் சுதந்தரம் பேசுபவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் _ மாமன்னர் என்ன செய்வாரோ? எப்படிச் செய்வாரோ? என்று.
பெண் இனத்தை மதிப்பாரா?
50 ஆண்டுக்காலமாக தனக்கொரு மனைவி உண்டு என்பதையே மறைத்த மகானுபாவர் மாமன்னர் ஆகிவிட்டார். மகளிர் நிலை என்னவாகும்? நா ஸ்த்ரீ சுவதந்தர மர்ஹாட்டி என்ற மனுநீதிப்படிப் பெண்கள் எவ்வித சுதந்தரத்திற்கும் அருகதை உடையவர்கள் அல்லர் என்கிற தத்துவம் தலைமை தாங்குமா எனக் கவலையும் அச்சமும் மகளிரைப் பிடித்துள்ளது. வாக்காளர்களில் சரிபாதிப் பேர் பெண்கள். அவர்களின் வாக்குகளைப் பெற மகளிர் வாக்குச் சேகரிப்பது வாடிக்கை. ஆனால் வசுந்தராஜேவும் சுஷ்மா சுவராஜும் மாமன்னர் மோடியின் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றனரா? ராஜஸ்தான், டெல்லி மாநில முதலமைச்சர்களாக இருந்தவர்கள் என்றாலும் கட்டைப் பிரம்மச்சாரி எனப்படும் ஆஞ்சநேயருடன் பவனி வர அனுமதிக்கப்படாத சீதாக்களாகவே அவர்கள் வைக்கப்பட்டனர். 5 ஆண்டோ 25 ஆண்டுகளோ அவர்கள் நிலை என்ன ஆகும் என்பதே இப்போதைய கவலை! ஆர்எஸ்எசின் கொள்கையான மூன்று சி-சமையல் பெருக்குவது குழந்தை பெறுவது மட்டுமே முதன்மை பெறுமா? காலம் காட்டும்.
இந்து நாடா?
குஜராத் மாடல் வளர்ச்சி என்கிறார்கள். இவருக்கு முன்பு குஜராத் ஒன்றும் பிகார் மாதிரிப் பின்தங்கி இருந்தது கிடையாது. குஜராத் வளர்ச்சி என்பதுவேகூட, விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறுகிறார் பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா. மோடியை ஹிந்து என்கிறார்கள். இந்தியா என்ன இந்துநாடா? இசுலாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் தனியே விடுதிகள் கட்டித் தரப் போகிறார்களா? இசுலாம் இல்லாத இந்து கலாச்சாரமோ, இந்து இல்லாத இசுலாமியக் கலாச்சாரமோ, இந்து அல்லாத கிறித்துவமோ, பழங்குடிப் பண்பாட்டுக் கூறு இல்லாத இந்துப் பண்பாடோ இங்கே கிடையாது என்று அடித்துக் கூறுகிறார் டி.எம்.கிருஷ்ணா. (டி.டி.கிருஷ்ணமாச்சாரி குடும்பத்தைச் சேர்ந்தவர்.) மாமன்னர் மோடியின் அரசு நம்மையெல்லாம் எங்கே அழைத்துப் போகுமோ? என்கிற அச்சம் நமக்கும் ஏற்படுகிறது.
மக்கள் மகிழ்ச்சிதான் தேவை
96 வயதில் பெங்களூருவில் வசிக்கும் சமக்கிருதப் பேராசிரியர் கே.டி.பாண்டுரங்கி மாமன்னர் நரேந்திர பாய்க்குச் சொல்ல அனுப்பியிருக்கும் புத்திமதி இதுதான் _ ப்ரஜா ஹிதே ஹிதம் ராஜ்நா, பிரஜா சுகி சுகம் ராஜ்நா. அதாவது தம் மக்களின் தேவைகளைவிட தனியான தேவை ஆள்வோனுக்குக் கிடையாது. தம் மக்களின் மகிழ்ச்சிதான் மன்னனுக்கும் மகிழ்ச்சி.
தமது தேவைகளும் மகிழ்ச்சியுமே முக்கியம்! மக்கள் தேவையும் மகிழ்ச்சியும் எனக்கு முக்கியமல்ல, ஆர்எஸ்எசின் தேவையும் திருப்தியும்தான் என் நோக்கம் என்பாரோ மாமன்னர்?
வெறிபிடித்த வெகுசிலரைத் தவிர மீதியுள்ள 125 கோடி மக்களை யார் காப்பாற்றுவது? இந்தக் கவலைதான் நமக்கு! இந்தத் தேர்தல் நடப்பதற்கு அரசு செலவழித்தது 3426 கோடி ரூபாய். அரசியல் கட்சிகள் எல்லாம் செய்த செலவு 32 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பீடு. அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான செலவு 2012இல் 42 ஆயிரம் கோடி. அப்படியானால் இந்தியா வியாபாரி நாடா? பிக்காரி நாடா? இதில் பிஜேபி செலவு செய்தது மட்டுமே 21 ஆயிரம் கோடிக்கு மேலே என்கிறார்கள். மொத்த செலவில் 3இல் 2 பங்கு பிஜேபி செய்திருக்கிறது எனும்போது வியாபாரிகள் நாடுதான் என்றே சொல்ல முடியும்! அத்தகைய வியாபாரிகள் யார் என நினைக்கிறீர்கள்? குஜராத்திகள்தான்.
இந்தியக் கோடீசுவரன்களில் முதல் 10 பேர் பட்டியலில் இடம் பிடித்திருப்பவர்களில் 7 பேர் குஜராத்திகள் என்றால் வியாபாரிகள் குஜராத்திகள்தானே! அந்த 7 பேர் போன்றவர்களை வளர்த்துவிட்ட வியாபாரிதான் இப்போது இந்தியாவின் மாமன்னர்! வெகு சிலரின் வாழ்வில் வசந்தத்தை வானளாவ உயர்த்திடத் தன் பதவியைப் பயன்படுத்திய மாமன்னர் வெகு மக்களின் வாழ்வில் எதை ஏற்படுத்தப் போகிறார்?
கோவிலா? கழிப்பறையா?
கிராமங்களில் கழிப்பறை இல்லாத நிலை பல்வேறு பாலியல் வன்முறைகளுக்கு வழியேற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு வடபுலத்தில் எழுந்துள்ளது. பெரிய உரு எடுத்து மிரட்டுகிறது. 60 கோடி மக்களுக்குக் கழிப்பறை இல்லை. இதில் 30 கோடிப் பெண்கள் திறந்தவெளிக் கழிப்பறையைத்தான் பயன்படுத்தும் கேவலம். கோவில்கள் கட்டுவதைவிடக் கழிப்பறைகள் கட்டுவதில் அக்கறை காட்டவேண்டும் என்றார் பழைய மந்திரி ஜெய்ராம் ரமேஷ்! ஆர்எஸ்எஸ் வகையரா பிலு பிலுவெனப் பிடித்துக் கொண்டனர் அவரை! அந்நேரத்தில் அதே குரலில் – ஜெய்ராம் ரமேஷைப் போலவே குரல் கொடுத்தவர் மோடிபாய்! இப்போது எப்படி? போகப் போகத் தெரியும்!
ஆனால் ஒன்று! நம் ஊரில் ஒரு முதலமைச்சர் கழிப்பறை கட்டினார். தண்ணீர் வசதி தரவில்லை. அதனால் கழிப்பறை _ கழிவுகளால் நிரம்பிக் காய்ந்தது _ இடிந்தன! அப்படிப்பட்ட நிலை இவர் காலத்தில் வந்துவிடக் கூடாது!
கன்னடத்தில் ஒரு சினிமா. கஜகேசரி என்ற பெயரில். ஒரு பொறுக்கித்தனமான ரவுடி ஒரு மடாலயத்தின் தலைவனாக நியமிக்கப்பட்டதால் அவன் செயல்பாடுகள் எப்படி மாறிப் போயின என்பதைக் காட்டுகிறதாம்! அப்படிப்பட்ட மாற்றத்தை மாமன்னரான வியாபாரி காட்டுவாரா?
நாடு எதிர்பார்க்கிறது! நாமும்தான்!
பழைய கருப்பனே என்று காட்டிவிட்டால்… என்ன செய்வது என்கிற கவலை நாட்டுக்கும்! நமக்கும்தான்! பார்ப்போம்!