அம்மாவின் புடவையை மடிக்க முடியாது! அப்பாவின் சில்லரையை எண்ண முடியாது!! என்ற விடுகதைக்கு _ வானத்தையும், நட்சத்திரங்களையும் பதிலாக குறிப்பிடுவார்கள்! அந்த விடுகதையையே பொய்யாக்கி விட்டனர் நமது விண்ணியல், இயற்பியல் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்திலுள்ள மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1019 (லட்சம் கோடி கோடி) என்று கண்டறிந்துள்ளனர்.
நெபுலாக் கொள்கையின்படி ஒட்டு மொத்த பிரபஞ்சம் தோன்றி சுமார் 1500 கோடி ஆண்டுகள் _ பூமி உள்ளிட்ட சூரியக்குடும்பம் தோன்றி சுமார் 500 கோடி ஆண்டுகள் ஆகின்றன _ என்ற உண்மையும் கண்டறியப்பட்டுள்ளன.
கற்பனைக்கும் எட்டாத அளவில் பரந்து விரிந்திருக்கும் பிரபஞ்சத்தின் எல்லை சுமார் 1000 கோடி ஒளி ஆண்டுகள் தூரம்! அதாவது நொடிக்கு 3 லட்சம் கி.மீ. பயணம் செய்யும் வெளிச்சம் ஒரு ஆண்டு முழுவதும் பயணம் செய்தால் அடையும் தூரம் ஒரு ஒளி ஆண்டு _ அதைப் போல 1000 கோடி ஒளி ஆண்டு _ அதாவது 100 கோடி கோடி கோடி கி.மீ. தூரம்! அதுதான் பிரபஞ்சத்தின் எல்லை! _ அதாவது _ பூமி முதன்முதலாக தோன்றியபோது பிரபஞ்சத்தின் ஒரு மூலையிலிருந்து புறப்பட்ட வெளிச்சம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ. பயணம் செய்தும் _ இன்னும் நம்மை வந்தடையவில்லை! என்னே விந்தையிது!
பூமியைச் சுற்றி காற்று மண்டலம் வியாபித்திருப்பதால் பகலில் நாம் வெளிச்சத்தைப் பார்க்கிறோம்! விண்வெளியில்? -_ எங்கும் இருட்டு _ கும்மிருட்டு _ இரவும் பகலும் _ எப்போதும்!
இந்தப் பிரபஞ்சத்தில் ஏராளமான பேரண்டங்கள் (Universe) – கோடிக்கணக்கான அண்டங்கள் (Galaxy) – அதில் ஒரு அண்டம்தான் _ நமது சூரியக் குடும்பத்தையும், சூரியன் போன்ற பல கோடி நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய பால்வெளி மண்டலம் (Milky way galaxy)! ஒரு பூரிக்கட்டையைப் போன்ற (Spiral galaxy) தோற்றம் கொண்ட நமது பால்வெளி மண்டலத்தின் ஒரு ஓரத்தில் நமது சூரியக் குடும்பம்!
நமது கோள்களுக்கு துணைக்கோள்கள் _ பூமிக்கு நிலவுபோல _ பால்வெளி மண்டலத்திற்கும் துணை அண்டங்கள் இருக்கின்றன _ பெரிய மெகல்லன் வான்முகில், சிறிய மெகல்லன் வான்முகில் என்பவைதான் அவை! பால்வெளி மண்டலத்தின் ஒட்டுமொத்த விட்டம் மட்டும் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் தூரம்! பால்வெளி மண்டலத்தின் மய்யப் பகுதிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் மட்டும் சுமார் 32 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரம்! நமக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 15 கோடி கி.மீ. அதாவது சூரியனிடமிருந்து புறப்படும் வெளிச்சம் நம்மை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. நமது சூரியக் குடும்பத்தில் ஒரே நட்சத்திரம் சூரியன் _ அது 15 கோடிக் கி.மீ. தூரத்தில்!
நமது சூரியக் குடும்பத்துக்கு மிக மிக அருகில் இருக்கும் அடுத்த நட்சத்திரம் ஆல்பா சென்டாரி. அதற்கும் நமக்கும் உள்ள தூரம் 4.3 ஒளி ஆண்டுகள்! அதாவது 43 லட்சம் கோடி கி.மீ.! நமது சூரியக் குடும்பத்திற்கு அடுத்த நட்சத்திரமே 43 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில்! ஒவ்வொரு நட்சத்திரமும் எவ்வளவு தூர இடைவெளியில் வியாபித்து இருக்கின்றன என்பதை எண்ணிப் பாருங்கள்!
எல்லாம் சரி _ நமது பூமி ஒரு நொடிக்கு 0.5 கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றுகிறது! நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றுகிறது! சூரியன் பால்வெளி மண்டலத்தைச் சுற்றுகிறதா? சுற்றுகிறது _ நொடிக்கு 220 கி.மீ. வேகத்தில்! பால்வெளி மண்டலம் (Galaxy) பிரபஞ்சத்தைச் சுற்றுகிறது _ நொடிக்கு 600 கி.மீ. வேகத்தில்! கூட்டிக் கழித்துக் கணக்குப் போட்டால் _ இந்த உலகத்தில் வாழும் உயிரினங்கள் _ மனிதன் உட்பட வெறுமனே உட்கார்ந்து கொண்டும் உறங்கிக் கொண்டிருந்தாலும் கூட _ ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் சுமார் 2 ஆயிரம் கோடி கி.மீ. பயணம் செய்கிறோம்! புதிராக இல்லை? ஆனால் இதுதான் பிரபஞ்ச உண்மை! அதேபோல் சூரியன் தன் குஞ்சுகுளுவான்களுடன் _ குடும்பத்துடன் தன் தாய்வீடான பால்வெளி மண்டலத்தை ஒருமுறை சுற்றிவர 25 கோடி ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது! அதை ஒரு காஸ்மிக் ஆண்டு (Cosmic Year) என்பார்கள்! சூரியன் தோன்றி இதுவரை தன் தாய் வீட்டை 20 முறைதான் வலம் வந்திருக்கிறது _ அதுபோல இன்னும் 20 முறைதான் வலம் வரும் _ தன் வாழ்நாளில்.
பரிணாம வளர்ச்சி என்பது உலகிலுள்ள உயிர்களுக்குத்தான் உண்டு சூரியனுக்கு உண்டா? ஆம்! சூரியனுக்கும் பரிணாம வளர்ச்சி உண்டு _ சுமார் 5000 கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே சூரியன் கருக் கொண்டது! அது சுருங்கிச் சுருங்கி தற்போதைய நிலைக்கு வந்தது 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான்! அதையே சூரியன் வயதாக நாம் கணக்கிலெடுத்துக் கொள்கிறோம்.
பிரபஞ்சத்திலுள்ள லட்சம் கோடி கோடி நட்சத்திரங்களில் _ ஒரேயொரு நட்சத்திரமான சூரியனில் _ 13 லட்சம் பூமிகளை உள்ளடக்கி விடலாம்! என்னே பிரபஞ்சத்தின விஸ்தீரணம்! நினைக்கவே மலைப்பாக இல்லை?
சூரியக் குடும்பத்தின் நிறையில் 99% சூரியன் எடை _ மற்ற 1% தான் பூமி உள்ளிட்ட மற்ற கோள்கள் _ இத்யாதிகளின் எடை! சூரியனின் எடை _ 2 பக்கத்தில் 30 சுழிபோட்டால் எத்தனை எண் வருமோ _ அத்தனை கிலோ எடை! பிரமிப்பாக இல்லை?
பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் கம்பிச்சுருள் போன்ற வடிவில் சுழன்று சுழன்றே நகர்ந்து கொண்டிருக்கின்றன. நமது சூரியக் குடும்பமும், சூரியனும் அதற்கு விதிவிலக்கல்ல! நாம் இருசக்கர வண்டியோட்ட _ 8 போட்டால்தான் உரிமம் கிடைக்கும். அதுபோல சூரியனும் நகர்கிறபோது ஓர் ஆண்டில் 8 போடுகிறது! நமக்கும் சூரியனுக்கும் எத்தனை ஒற்றுமை பாருங்கள்!
இப்போது நாம் அவ்வப்போது காணுகின்ற சூரிய கிரகணம் _ அதாவது நிலவின் நிழல் சூரியனை மறைப்பது _ இன்னும் 60 கோடி ஆண்டுகளுக்குப்பின் நிகழவே நிகழாது! ஏனென்றால் நம்மைவிட்டு ஒவ்வொரு வருடமும் 3.8 செ.மீ. தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கும் நிலவுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி 60 கோடி ஆண்டுகளில் 25 ஆயிரம் கி.மீ. அதிகமாகி விட்டிருக்கும்!
அதேபோல இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணம் 2009ஆம் ஆண்டு ஜுலை 22ஆம் நாள் நிகழ்ந்தது _ சுமார் 7 நிமிடங்கள் சூரியன் மறைக்கப்பட்டது! இதைப் போன்ற முழு சூரிய கிரகணத்தை இன்னும் 100 ஆண்டுகள் கழித்து கி.பி.2114இல்தான் மீண்டும் காணமுடியும்!
சூரியன் தோன்றி இந்த 500 கோடி ஆண்டுக் காலத்தில் அது வெளிப்படுத்திய ஆற்றலைக் கணக்கிட்டால் _ அது எப்போதோ தீர்ந்து போயிருக்க வேண்டும் _ ஆனால் உண்மை என்ன? சூரியன் ஒரு கிராம் நிறையை இழந்தால் _ அது 9 இலட்சம் மடங்கு பெருக்கி ஆற்றலாக வெளிப்படுகிறது. இதைத்தான் அறிஞர் அய்ன்ஸ்டீன் _E=MC2[E=Energy, M=Mass, C=Velocity of light] என்று கண்டறிந்தார்.
அதேபோல _ நமக்குத் தெரிந்து 3 பரிமாணங்கள்தான் (3D) – நீளம், அகலம், உயரம் _ நான்காம் பரிமாணமான விண்வெளி நேரம் (Space time) என்பதைக் கண்டறிந்து சொன்னவரும் அய்ன்ஸ்டீன்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சூரியனின் மய்யப் பகுதியின் (Core) வெப்ப நிலை 15 கோடி செல்சியஸ் _ சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற வெப்பநிலை 6000ஷீ நீ! அதேபோல _ சூரியனிடமிருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்கள்தான் உயிர்களை உண்டாக்கும் அடிப்படைப் பொருளான அமினோ அமிலத்தை உண்டாக்குகின்றன _ அதுதான் உலகத்தில் உயிர்கள் தோற்றத்துக்கான அடிப்படை!
8 கோள்கள்_88 துணைக்கோள்கள் _ கோடிக்கணக்கான ஆஸ்டிராய்ட்கள் _ எண்ணிலடங்கா வால் நட்சத்திரங்கள் _ இவையெல்லாம் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன! சூரியக் குடும்பத்தின் விட்டம் மட்டும் சுமார் 15 லட்சம் கோடி கி.மீ.! பூமியின் விட்டம் சுமார் 40 ஆயிரம் கி.மீ.!
அதேபோல நிலவின் விட்டம் சுமார் 3500 கி.மீ. _ அதாவது முழு நிலவின் விட்டத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள தூரத்தை நாம் வெறுங் கண்ணால் பார்க்கிறோம்!
இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஹீலியம் மூலக்கூறாக மாறுகின்ற அணுச்சேர்க்கைதான் (Nuclear fusion) சூரியனின் ஆற்றலுக்கு அடிப்படை! ஹைட்ரஜன் அணுகுண்டின் அடிப்படையும் அதுதான்!
பூமியிலுள்ள சக்திக்கெல்லாம் மூல சக்தி சூரியன்தான்!
அதனால் அதைக் கடவுளாக வழிபடலாமா? தேவையில்லை _ ஏனென்றால் _ அது ஒரு அணு உலை அடுப்பு அவ்வளவுதான்.
ஹைட்ரஜன் 71 சதமும் _ ஹீலியம் 27 சதமும் _ மற்ற தனிம வாயுக்கள் 2 சதமும் கொண்ட அணு உலை அடுப்பான சூரியனும் ஒரு நாள் இறந்து போகும்! கவலைப்பட வேண்டாம்! அது நடக்க இன்னும் 500 கோடி ஆண்டுகள் ஆகும்! அப்போதைக்கு சூரியனின் பெயர் சிவப்பு அரக்கன் (RedGiant) என்று விஞ்ஞானிகள் நாமகரணம் சூட்டியிருக்கிறார்கள்! சிவப்பு அரக்கனான சூரியனின் இறுதிப் பயணத்தில் _ பூமிப்பந்தும் இன்ன பிற கோள்களும் என்னவாகும்? வெப்பமும் ஈர்ப்பும் குறைந்து போன சிவப்பு அரக்கனின் பிடியிலிருந்து பூமிப்பந்து கழன்று ஓடி தப்பித்துக்கொள்ளும்! மனிதர்களாகிய நம் கதி என்னவாகும்? அந்தக் காலம் _ காலச்சக்கரத்தின் அந்திமக்காலம் வருவதற்குள் நம்மை _ வேற்றுக் கிரகவாசிகளாக நம்முடைய விஞ்ஞானத்தின் அசுரவேகம் மாற்றிவிட்டிருக்கும்! _ சிவப்பு அரக்கனாக சுருங்கிப்போன சூரியன் வெண்குள்ளர் (White Dwarf) என்ற நிலையை அடைந்துவிட்டிருக்கும்!
இந்த ஆராய்ச்சிக்குத்தான் _ நமது தமிழகத்தைச் சேர்ந்த, அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த விஞ்ஞான மேதை சந்திரசேகர் _ நோபல் பரிசைப் பெற்றார்! நட்சத்திரக் கூட்டங்களின் பிறப்பும் இறப்பும் பற்றி பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த விண்ணியற்பியல் அறிஞர் சந்திரசேகர் பிரபஞ்சத்தில் கடவுள் நாற்காலி இன்னும் காலியாகவே கிடக்கிறது என்ற உண்மையைச் சொன்னவர் என்பதை நினைவில் வைப்போம்!
அறிந்ததும், அறியாததும் _ புரிந்ததும், புரியாததுமான ஏராளமான புதிர்களை உள்ளடக்கிய _ நாம் வாழும் இந்த பூமியே நமது ஆச்சரியத்தின் எல்லையாக பரந்து கிடக்கிறது.
அவ்வளவு பெரிய பூமியைப்போல _ சுமார் 13 லட்சம் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவிற்கு பெரிய நட்சத்திரம் _ நமது சூரியன்! நமது சூரியன் அடிப்படையில் ஒரு நடுத்தர வகைப்பட்ட _ நட்சத்திரம்! அவ்வளவுதான்! சூரியனைப்போல பெரியதும் சிறியதுமான நட்சத்திரங்கள் சுமார் 1019 (லட்சம் கோடிகோடி) நட்சத்திரங்களை உள்ளடக்கியதுதான் பிரபஞ்சம் (Space)! என்னே அதன் விஸ்தீரணம்!
இதில் _ கடவுள் எங்கே இருக்கிறார்? கொஞ்சம் யோசித்தாலும் கடவுள் தத்துவம் ஒரு அப்பட்டமான புளுகு மூட்டை _ கட்டுக்கதை என்பது புரிந்துவிடும்!
விஞ்ஞானிகளுக்கும், மேதைகளுக்கும் புலப்படாத கடவுளை _ மூட நம்பிக்கையோடு வழிபடும் அஞ்ஞானிகளை _ பக்தர்களைக் கண்டு எள்ளி நகையாடுவதைத் தவிர நமக்கு வேறு வழி தெரியவில்லை.
கடவுள் இல்லை! கடவுள் இல்லை!! கடவுள் இல்லவே இல்லை!!!
என்று உண்மையை உரத்து முழங்கிய சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியாரின் தத்துவம் இந்த பூமிக்கான தத்துவம் மட்டுமல்ல – பிரபஞ்சத்துக்கான தத்துவம்!.
Leave a Reply