
முதலாளிகள் கொண்டாடும் ராஜபக் ஷே
நீ போக வேண்டிய இலக்கின் நடுவில் ஆங்காங்கே குரைக்கும் எல்லா நாய்கள் மீதும் கல்லெறிந்து கொண்டிருந்தால் நீ போக வேண்டிய இலக்கை அடைய மாட்டாய் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். சோ கூட்டத்தை நினைத்தால் குரைக்கும் நாய்களைத்தான் நினைவுப்படுத்துகிறது.
இவர்களின் மீது நாம் கல்லெறியத் தேவையில்லை. ஆனால் இவர்கள் குரைக்கும் குரலில் யாரின் அதிகாரம் நிரம்பியுள்ளது, யாருக்காக இந்த வேடதாரிகள் குரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டால்தான் இடர்களினூடே நாம் பயணித்திட முடியும்.
1980-களுக்கு முன்பு இலங்கை ராணுவம் என்றால், காலையில் நடைப்பயிற்சி, மாலையில் வாலிபால், இரவில் மது என்று ஜாலியான ஒரு பணியாகத்தான் இருந்தது. வீரர்களுக்குப் போர் நுட்பங்களே தெரியாது. புலிகள் உருவான பிறகுதான், அவர்கள் சண்டைக்கான பயிற்சிகளைப் பெற ஆரம்பித்தனர். ராணுவ வீரர்கள் போரில் எல்.கே.ஜி. படிக்கத் தொடங்கியபோது, புலிகளோ அதில் பிஹெச்.டி. முடித்திருந்தனர். பல உலக நாடுகளில் பயிற்சி எடுத்து வந்துதான், இலங்கை ராணுவத்தினர் புலிகளுடன் போரிட்டனர் என்றாராம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான ஆடிட்டர் ஒருவர். அதற்கு துக்ளக் நிருபர்கள், இலங்கை ராணுவம் நிறைய இழந்துதான் இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இழந்தது என்பது ராணுவ வீரர்களின் உயிர்கள் மட்டுமில்லை; அரசின் சொத்துக்கள், பொருளாதாரம், சுற்றுலா… என்று பல விஷயங்களை அந்த நாடு இழந்துள்ளது. எனவேதான், புலிகளை அழித்த ராஜபக்க்ஷேவை இலங்கை மக்கள், குறிப்பாக வர்த்தகர்கள் கொண்டாடுகிறார்கள். இதனால்தான் 2010 பொதுத் தேர்தலில் ராஜபக்க்ஷேவும், அவரது கூட்டணிக் கட்சிகளும் பெருவாரியான வெற்றியைப் பெற்றுள்ளனர். இன்று அரசியல் சாசனத்தைத் திருத்தக்கூடிய அளவிற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் ராஜபக்க்ஷே அரசுக்குக் கிடைத்துள்ளது என்று சோ தீட்டிய புத்தியில் கச்சிதமாக இலங்கை அரசின் பிரதிநிதிகளாக இப்படி ஒரு வாதத்தை எழுதியுள்ளனர்.
இலங்கை தன் ராணுவத்தையும் பொருளாதாரத்தையும் சொத்துக்களையும் மட்டும்தான் இழந்துள்ளதாம். இவர்களின் மனச்சாட்சிக்கே தெரிந்துள்ளது, தமிழர்களை இலங்கை தன் நாட்டு மக்களாகக் கருதவில்லை என்று. அதனால் தானே தமிழ் மக்கள் உயிர்கள் பறிபோனதை, தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டதை, தமிழர்கள் ஏதிலிகளாகத் துரத்தப்பட்டதை எல்லாம் தெரிந்தும் இலங்கை அரசு தமிழர்களை இழந்ததாக குறிப்பிட முடியவில்லை.

புலிகளை அழித்த ராஜபக்க்ஷேவை இலங்கை மக்கள், குறிப்பாக வர்த்தகர்கள் கொண்டாடுகிறார்கள் என்ற துக்ளக், தெரிந்தோ தெரியாமலோ ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டது. அதாவது, இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடந்த போர் என்பது பல உலக நாடுகளின் உதவியோடு மட்டும் இந்தியாவின் அனுசரணையோடு நிகழ்ந்த போர் மட்டுமல்ல.

அதற்கும் மேலாக புலிகளுக்கு எதிராக நிகழ்ந்த போர், முதலாளித்துவத்தின் போர், இலங்கையை தன் சந்தை நிலமாக வளைக்க நினைத்த தனியார் முதலாளிகளின் போர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கத் தேவையில்லை. அதற்கு ஆதாரமாக டாட்டா, ஏர்டெல், பிராமால் கிலாஸ், அசோக் லைலாண்ட், எல்&டி, தாஜ் விடுதிகள் ஆகிய இந்திய தனியார்களின் முதலீடுகளையே கூறலாம். இவற்றுக்கும் மேலாக அய்.ஓ.சி., எல்.அய்.சி.யும் இலங்கையில் முதலீடு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டின் கணக்குப்படி இலங்கையில் இந்தியா தான் இரண்டாவது பெரிய அந்நிய நேரடி முதலீட்டைச் (147 மில்லியன் டாலர்கள்) செய்துள்ளது. அதே போலாக இலங்கை முதலீடுகளையும் இந்தியாவுக்குள் கொண்டு வந்துள்ளது. 2011இல் மட்டும் 4.3 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு இலங்கைக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது 2010 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 75 சதவீதம் அதிகமாகும். லாபத்தை மட்டுமே வெறியாகக் கொண்டுள்ள வர்த்தகர்கள் எதற்காக ராஜபக்க்ஷேவைக் கொண்டாடுகிறார்கள் என்று இப்போது புரிகிறதா?
இது மட்டுமல்ல! நாள்தோறும் தமிழ் மீனவர்களை இந்தியாவுக்கும் -இலங்கைக்கும் இடையேயான கடல் பிரதேசத்தில் இலங்கைக் கடற்படை அடித்துத் துரத்துகிறதே, அதுவும் இப்படியான ஒரு தனியார் முதலாளிகளின் லாபவெறிக் கணக்கைக் கொண்டதுதான்.
மீன் வளம் மூலம் கடந்தாண்டு இலங்கை அரசுக்குக் கிடைத்த வருமானம் 250 மில்லியன் டாலர்கள். இந்த வருடம் 500 மில்லியன் டாலர்கள் ஈட்ட வேண்டும் என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசு சீன தனியார் நிறுவனம் ஒன்றோடும், கியோமுரா என்ற ஜப்பான் நிறுவனத்தோடும் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்நிறுவனங்கள் இலங்கைக் கடல் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும். இந்த மீன்பிடி அனைத்துமே சிறப்புப் பொருளாதார மண்டலத்தை மய்யமாகக் கொண்டதாகும்.
இப்படி இங்கு கூறப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களோடான இலங்கை அரசின் உறவு சில எடுத்துக்காட்டுகள் தான். இப்படி இலங்கை அரசு போட்டுள்ள ஒப்பந்தங்களின் வழியே கிடைக்கும் பெருமளவு லாபத் தொகையில் ராஜபக்க்ஷேவின் குடும்பத்துக்கு மட்டுமே தனிப்பெரும் பங்குள்ளது.
இந்துக் கோவில்கள் அழிப்பு, தமிழ்ப் பெயர்கள் அழிப்பு, சிங்களக் குடியேற்றம், சீனர் ஆதிக்கம், இன அழிப்பு, முள்வேலி முகாம்கள், புலிகளுக்கான சித்திரவதைக் கூடங்கள் இப்படி எழுந்த அத்தனை புகார்களுமே பச்சைப் பொய்களாம். இது எல்லாமே தமிழகத்தில் கிளப்பிடவிடப்பட்டவையாம். அப்படியா, இருக்கட்டும்!
இந்தப் புகார்கள் எதுவுமே இல்லை என்பதை எப்படி ஆறே நாட்களில் ஆராய்ந்தீர்கள்? மூன்று லட்சத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகும் உங்களுக்கு இன அழிப்புக்கான ஆதாரம் வேண்டுமா?
சீனர் ஆதிக்கம் என்பது சீன மக்களை இலங்கையில் கொண்டு வந்து குவிப்பதல்ல, சீனாவின் நிறுவனத்தையும், -சீனாவின் சந்தையையும், -அத்தொழிலுக்காக சீனத் தலைமைத் தொழிலாளர்களையும் நியமிப்பது. இது நடக்கின்றன என்று சீன நிறுவனங்களுடனான இலங்கை அரசின் ஒப்பந்தங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டது. இதில் என்ன ஆராய்ந்தீர்கள் துக்ளக்கர்களே?
புலிகளுக்கான சித்ரவதைக் கூடங்கள் இல்லையென்று சோத்தபய ராஜபக்க்ஷே அழைத்துச் சென்று உறுதி செய்தாரா? அப்படி என்றால் போரின் போது இரண்டு பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்ட மூத்த தளபதிகளும் புலி உறுப்பினர்களும் எங்கே? தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்படவில்லை என்பதைச் சிங்களக் கண் கொண்டு கண்டீர்களோ?
இவை அத்தனைக்குமான ஆதாரங்களும் வாக்குமூலங்களும் உலகத்தின் கண்முன்னே விரிக்கப்பட்டுக் கிடக்கிறது. இந்தப் படுகொலைகளின் ஆதாரங்கள்தானே இலங்கை பான் கி மூனின் ருவாண்டா என்று மனிதநேயர்களால் குறிப்பிடத் துணையாக நின்றது. சோ கூட்டமே இவையெல்லாம் பச்சைப் பொய்கள் அல்ல, தமிழர்களின் குருதியால் சிவந்த உண்மைகள்.
– மகா.தமிழ்ப் பிரபாகரன்
(உண்மைகள் கசக்கும்)


Leave a Reply