ஈரோட்டு மேகத்தில்
எரிசர சூரியனாய் கதராடை ஓவியம்
கண்விழித்த வேளையிலே
நீருக்குள் நிமிர்ந்தபடி
நெடுநேரம் மூச்சடக்கி முங்கிக்கிடந்த
முத்தெல்லாம் முகமன் செய்ததடா
பெண்ணின் விடுதலையைப்
பேசிப்பேசி ஓயாது
கல்விக்கும் கஞ்சிக்கும்
கட்டுகின்ற கந்தைக்கும்
வக்கற்று வாழ்ந்தவனுக்கு
வக்காலத்து வக்கீலாகி துன்பந்தரும்
இழிவுகளைத் துடைத்தெறிந்த பெம்மானே!
எழுத்துச் சீர்திருத்தம்
எளிதான வரிவடிவம் சொல்லாத சொல்லெடுத்து
செம்மாந்தக் கவிதைகளால்
அய்யாவுன் தொண்டினையே அனுதினமும்
நாவசைத்து கன்னித் தமிழன்னை
கனிமொழியில் பாடுகின்றாள்!
காதறுந்த செருப்புகள்
கல்லெறிந்து கலகம்
கடவுள் பித்தலாட்டத்தைக்
கனத்த பொருளுரைத்து மானிட பேதங்கள்
மணியொலிக்கும் வேதமென
ஊசலிட்ட வையத்தை உரியடித்த தீரர்நீர்!
சிக்கனச் செல்வத்தைச்
சீதனமாய்த் தந்தவர்தான்
ஒழுக்கத்தை எஞ்ஞான்றும்
ஓம்புகின்ற மக்களில்
ஆகச்சிறந்த வேந்தராக
அணுவளவும் பிசகாது உள்ளளவும்
கடைப்பிடித்த உலகளந்த பெரியோனே!
காவிப் பூனைகளின்
கண்கட்டு வித்தைகளை
ஆவி பூதமென்று அறிவுக்கு
ஒவ்வாததை மூத்திரச் சட்டியுடன்
மேடைதனில் முழங்கியவர்
சாத்திரப் பொய்யுரைத்த சத்திய சீலரன்றோ!
ஈன்றளித்த கொள்கையெலாம்
இடுகாட்டில் இட்டுவிட்டோம்
வியர்வைத் தீயினிலே வேதனை
விறகெரிய கண்ணின் கருமணியில்
கரும்புகை மூளுதய்யா மண்ணின்
வேரடியில் மகத்துவம் ஆனவரே!
உழைப்பைச் சுரண்டுவோர்
ஊளைச்சதை வாதிகளே சோம்பலுக்கு
எதிர்வினையாய் செயலாற்ற மதியிழந்து
இழிவுகளை ஒழித்திட இம்மியும்
இயலாதவன் அருகதை அற்றவனாம்
ஆனமட்டும் சொன்னீரே!
ஜாதி(க்)காளை விரட்டும்நின்
சாட்டைக்கு அஞ்சியவை சகதிக்குள்
சக்கரமாய் சண்டித்தனம் செய்யாதுன்
தோற்றத்தால் கட்டுண்டு தோல்விதனைக்
கண்டதய்யா ஆனாலும் ஆனதென்ன
அடிமாடாய் வாழ்கின்றோம்
மானுடம் போற்றியே
மனுவைச் சாற்றியே
தமிழர்தம் தந்தையாய்
தரணியிலே நின்றிட்டாய்
ஏனெதற்கு என்றிங்கு
ஏகமாய்க் கேட்டுவிட்டால்
மூடத்தனம் தொழுகின்ற
மடத்தனம் விட்டகழும்!
– சேரங்குலத்தான்
Leave a Reply