’சோ’த்தபய ராம’பக்‌ஷே துக்ளக்கின் துதிபாடும் பயணம் – 5

செப்டம்பர் 01-15

ஊமப் பொம்மையாதான் இங்க வாழறம் உசுரு மட்டும்தான் மிச்சமிருக்கு!

மகா.தமிழ்ப் பிரபாகரன்

சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமானால், ஒரு முறை அடிமையாய் இருந்து பார் என்றார் இந்திய தேசிய ராணுவத்தைக் கட்டியெழுப்பிய நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். இந்தியாவும் இவர் கூறிய கருத்துப்படியேதான் சுதந்திரத்தை அடைந்தது. ஆனால், அடிப்படையிலேயே இலங்கை அப்படி இல்லை. சுதந்திரப் போராட்டமே மதக்கலவரங்களாகவும் இனக் குரூரங்களை உடையதாகவுமே உருவெடுத்தது. அப்படியான அதிகாரம் படைத்த சிங்கள இனவாதிகளும் புத்த (சிங்கள)மதவாதிகளும் இலங்கை சிங்களர்களுக்கே சொந்தம் என்ற நிலையை அன்றைய ஆங்கிலேயர்களிடம் ஏற்படுத்தினர். அதன் விளைவுதான் தமிழர்களுக்கு உரிமையில் சமபங்கு என்ற விதத்தில் ஒன்றுபட்ட இலங்கையாக இனவாத தேசம் வடிவம் பெற்றது.

 

காலனித்துவத்திலிருந்து இனவாதத்துக்குச் சுதந்திரம் கொடுத்து அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்றும் இலங்கையில் தமிழர்கள் அடிமைகளாக எந்த உரிமைகளையும் கோராமல், தலையாட்டிகளாக வாழ வேண்டும் என்பதே இனவாதத்தின் விருப்பம். இந்த இனவாதத்தீயை அணைக்கத்தான் தமிழர்கள் அமைதி வழியிலும் ஆயுத வழியிலும்  போராடினார்கள். அங்கு அமைதி வழியில் போராடியவர்கள் மீதோ புலிகள் மீதோ ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், சுதந்திரம் என்ற அடிமைத்தனத்தைப் போக்க இவர்கள் போராடியதை மறுக்கவே முடியாது. சுதந்திரம் கேட்பது பயங்கரவாத நடவடிக்கை என்றால் இவ்வுலகில் ஒரு கருத்துக்கு எதிராக எழும் சிறு முரணும் பயங்கரவாதம்தான்.

துக்ளக்கைப் பொறுத்தவரையிலும், இலங்கை அரசைப் பொறுத்தவரையிலும், இந்திய அரசைப் பொறுத்தவரையிலும் இவர்களிடம் அடிப்படைக் கண்ணோட்டத்திலேயே பிரச்சினைகள் இருக்கிறது. எனது இலங்கைப் பயணத்தின் போது முல்லைத்தீவில் ஒரு பெரியவர் சொன்னதுவே இங்கு நினைவுக்கு வருகிறது. அவர், இங்க சுயமரியாதையோட பேசுனாவே அவனுக்குப் புலிப்பட்டம்தான் தம்பி. கொடுக்காத நிவாரணப் பொருளக்கூட நாங்க கேட்டு வாங்க முடியல. ஊமப் பொம்மயாதான் இங்க வாழறம். உசுரு மட்டும் தான் மிச்சமிருக்கு என்றார். இதுதான் அங்குள்ள எதார்த்த நிலை. இவ்வளவு ஏன்? சிங்கள எளிய மக்களுக்குக் கூட இந்த நிலையே உள்ளது என்பதை கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வெலிவெரியாவில் (கொழும்பு அருகே உள்ள சிங்களப் பகுதி) நடந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது. நிலத்தடி நீரை மாசுப்படுத்தும் ஹேலிஸ்(பிணீஹ்றீமீ) என்ற ரப்பர் தொழிற்சாலையை எதிர்த்தும் குடிதண்ணீர் வேண்டியும் போராடிய மக்கள் மீது ராணுவம் தன் கோரத்தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதில் மூன்று சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் போது ராணுவம் பேசிய பேச்சுகளை சிங்கள பத்திரிகையாளர்கள் பலர் குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ஆறாயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தண்ணீர் வேண்டியும் தண்ணீர் மாசுப்படுவதை எதிர்த்தும் கூடுகின்றனர். சிறிது நேரத்தில் ஏதோ பாதுகாப்புக்கு நிற்பது போல் நின்று கொண்டிருந்த ராணுவம் திடீரென போராட்டக்காரர்களை நெருக்கிக் கொண்டே வந்து கடுமையான எச்சரிக்கைகளை விடுக்கிறது.

ராணுவ அதிகாரி, உங்கள் பிரச்சினை தெரிகிறது. மாயாஜாலம் செய்து உங்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. கலைந்து போங்கள். அய்ந்து நிமிடம் தருகிறேன். இல்லையேல் துரத்த வேண்டியது வரும். ராணுவத்தின் நடவடிக்கைகளைப் பத்திரிகையாளர்கள் படம் எடுக்கக் கூடாது எச்சரிக்கை விடப்பட போராட்டக்காரரில் ஒருவர், நாங்கள் ஒன்றும் புலிகள் இல்லை என்று ராணுவத்தை நோக்கிக் கத்துகிறார். அதற்கு ராணுவ அதிகாரி, அதனால்தான் உங்களிடம் பேசிக் கொண்டு உள்ளோம் என்ற சில நிமிடங்களில் ராணுவத்தின் ரத்த வெறியாட்டம் தொடங்குகிறது. சிங்கள மக்கள் கத்திக் கொண்டும் கதறிக் கொண்டும் பாதுகாத்துக் கொள்ள ஓடுகிறார்கள். ராணுவம் தாக்குகிறது. உயிருக்கு அஞ்சி மக்கள் ஆங்காங்கே இருந்த வீடுகளிலும் கடைகளிலும் தேவலாயத்திலும் மறைந்து கொள்கிறார்கள். அப்படி மக்கள் மறைந்திருந்த கத்தோலிக்க தேவலாயத்தை நோக்கி ராணுவத்தினர் சுட்டுக் கொண்டே ஓடுகின்றனர். கன்னியாஸ்திரி ஒருவர் மக்களில் சிலரை ஓர் அறைக்குள் உள்நுழைத்துக் கொண்டு கதவைச் சாத்திக் கொள்ள முயற்சிக்க, அக்கன்னியாஸ்திரி நெஞ்சில் துப்பாக்கி வைக்கிறான் ஒரு ராணுவ வெறியன். அவர், யாரையும் காயப்படுத்தக் கூடாது என்று கெஞ்ச அதற்கு இன்னொரு ராணுவன், நீங்கள் இப்போது சார்ந்திருக்க யார் இருக்கிறார்? நாங்கள் புலிகளை வீழ்த்திவிட்டோம். உன்னால் ஒரு பயனும் இல்லை என கத்திக் கொண்டே தேவலாயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் மீது தாக்குதல் தொடர்கிறது. அக்கன்னியாஸ்திரி, வடக்கில் ராணுவத்தினர் பூச்சிகளைப் போல மடிந்துகொண்டிருக்கும்போது, வெலிவேரியாவில் ரத்தக் கண்ணீர் வடித்த மக்கள் உண்டு. புலிகள் வீழ்த்தப்பட்டபோது வெலிவேரியாவில் ஆனந்தக் கண்ணீர் வடித்த மக்களும் உண்டு என மேலும் கதறிக்கொண்டே இருக்கிறாள். தாக்குதலும் நடந்து கொண்டே இருக்கிறது.

ஓய்ந்த தாக்குதலில் பல மக்கள் காயமடைய கணவனை இழந்த  பிரியங்கனி ஷிரோமி என்ற தாயின் ஒரே மகன் அகில தினேஷ் ஜெயவர்த்தன (17 வயது) இறக்கிறான்; ஆகஸ்ட் 3ஆம் தேதி 19 வயதான ரவிசன் பெராரா இறப்பு. ஆகஸ்ட் 4ஆம் தேதி 29 வயதான நிலந்தா புஷ்பகுமாரா இறப்பு என்று உயர்ந்தது இறப்பு எண்ணிக்கை. இப்படியான வன்முறைத் தூண்டல்கள் தான் சிங்களத் தீவின்  கடந்த அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலான முகமாக உள்ளது.

இப்படி, சிங்களப் பகுதிகளிடையே சிங்கள அரசுக்கு ஏற்படும் முரண்கள், மீண்டும் தமிழ்ப் பகுதிகளில் படுகொலைகள் நடக்கும் என்ற அச்சத்தையே தோற்றுவிக்கிறது. கடந்த காலங்களில் இப்படித்தான் திட்டமிட்டே படுகொலைகள் நடந்தது. 1958 படுகொலைகள் தொடங்கி 2009 படுகொலைகள் கடந்தும் இன்றும் சிங்கள இனவாதம் படுகொலை செய்யும் முறையை விடவில்லை. கருப்பு ஜூலை படுகொலைகள் நடப்பதற்கு முன்னர், அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஜூலை 11, 1983 நான் தமிழர்களின் அபிப்ராயம் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. அவர்களுடைய உயிர்களோ கருத்துகளோ எங்களுக்குப் பொருட்டல்ல என்றார். அதன் பின்னேதான் ஜூலை 23 தமிழர் படுகொலைகள் நிகழ்ந்தது. அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியிடம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்று கேட்டபோது, தமிழர்களின் தலைகளை நொறுக்குவதுதான் தீர்வு என்றார். அதன் போதும் படுகொலைகள் நிகழ்ந்தது. 2009 படுகொலைகள் நடப்பதற்கு முன்னர் ராஜபக்ஷே எல்லைகளைக் காக்கிறோம், பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்றுதான் படுகொலைகளைத் தொடங்கினார். இப்படி சிங்கள இனவாதிகள் தமிழ் மக்களைக் கொல்வதை ஒரு இயல்பாகவே எடுத்துக் கொண்டார்கள். இவ்வளவு ஏன், புத்த துறவி தமிழ்நாட்டில் தாக்கப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் அடையாளமே தெரியப்படாத மூன்று பேர் கொன்று வீசப்பட்டுக் கிடந்தார்கள். போர் நடந்து முடிந்து இப்போதுதான் தமிழர்கள் தங்கள் உரிமை தொடர்பான பிரச்சினைகளை அமைதி முறையில் எழுப்பத் தொடங்கியுள்ளனர். ராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்களைக் கேட்கிறார்கள். அரசியல் நியாயங்களைக் கோருகிறார்கள். இப்போது வட மாகாண சபைத் தேர்தல் தமிழர்களுக்கு வசமாகப் போய்விடும் என்ற பெரும் பயம் சிங்கள இனவாதிகளிடம் உள்ளது. அது போக இந்தியா முன்வைக்கும் தமிழர்கள் உரிமைக்கான 13ஆவது திருத்தச் சட்டத்தில் துளியும் சிங்கள அரசுக்கு விருப்பமில்லை. நேரு காலக்கட்டத்தில் ஒரு முறை தமிழர் பிரச்சினையை இந்தியாவின் பிரதிநிதியாகக் கையாண்ட சீதாராம், இலங்கையைக் கைப்பற்றி இந்தியாவின் ஒரு மாநிலமாக்குவோம் என்று இலங்கை தொடர்பான பிரச்சினையில் கருத்துக் கூறினார். அதன் முதலே சிங்கள இனவாத அரசு ஓர் முடிவெடுத்துக்கொண்டது தமிழர்களின் பெயரில்தான் இந்தியா நம்மில் தலையிடுகிறது, இந்தத் தலையீட்டை நிறுத்த வேண்டுமெனில், தமிழர்கள் இல்லாமல் ஆக வேண்டும். அதற்கு, தமிழர்களைக் கொல்வதையும் இனமாற்றம் செய்வதையும் நாட்டை விட்டு வெளியேற்றுவதையும் வழிகளாக அமைத்துக் கொண்டது. அப்போது முதல் இந்தியாவின் தலையீடு ஒவ்வொன்றும் தமிழர் படுகொலைகளில்தான் முடிந்துள்ளது. எந்தவித பெரிய அளவு உரிமைகளையும் தராத 13ஆவது திருத்தச் சட்டத்தையே சிங்கள அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றபோது இந்தியா எப்படி தீர்வைச் செயல்படுத்தும். இந்தியாவின் தொடர்ச்சியான வெளியுறவுக் கொள்கை தோல்விகள் ஈழத்தமிழர்களின் மீதான கோபமாகத்தான் திரும்புகிறது.

இன்றளவும் மர்மப் படுகொலைகள் ஈழப்பிரதேசத்தில் நிகழ்கின்றது. யாழ்ப்பாணத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவிருந்த எஸ். இராமச்சந்திரன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புக்காக ராணுவம் இருக்கிறது என்று யாழ்ப்பாண ராணுவத் தளபதி ஹத்துரசிங்கவால் ஏன் இதைத் தடுக்க முடியவில்லை. ராணுவமே மர்மக் கொலைகளின் சூத்திரதாரியாக இருப்பதால்தான் இவை தடுக்கப்படாமல் இருப்பதன் காரணங்கள். இவையெல்லாம் இன்னொரு படுகொலைகளுக்குத் தயாராக வரும் பதற்றத்தைத் தான் காட்டுகிறது. இப்படி  ராணுவத்துக்கு படுகொலைகளின் சுவை ஊட்டிய மகிந்த ராஜபக்ஷே பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையில் இன்றும் நாட்டைப் பிளவுபடுத்தி எல்லைகளை வகுக்க முற்படுவோரின் கனவுகள் நிறைவேற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. பயங்கரவாதத்திலிருந்து இந்த நாட்டை மீட்க முடியும் என நாம் நினைத்திருக்கவில்லை. நாட்டின் எதிர்காலம் குறித்து இந்தளவு தீர்க்கமாக எந்தத் தலைவரும் சிந்தித்திருக்கவுமில்லை என்று பேசிக்கொண்டு சர்வாதிகாரியாக மனிதகுலத்துக்கு எதிரான குறியீடாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கவனிக்கையில் பட்டப்பகலில் கொழும்பு நகரத்தில் கொல்லப்பட்ட சிங்களப் பத்திரிகையாளர் லசந்தா தன் இறுதியான கட்டுரையில் குறிப்பிட்ட மார்டின் நிமோல்லர் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது. நாஜிக்கள் கம்யூனிஸ்ட்களைத் தேடிய பொழுது, நான் அமைதியாக இருந்தேன்; ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல. சமூக ஜனநாயகவாதிகளை முடக்கிய பொழுது, நான் மேலும் அமைதியாக இருந்தேன்; ஏனெனில் நான் சமூக ஜனநாயகவாதி அல்ல.

தொழிற்சங்கவாதிகளுக்காக வந்த பொழுது, நான் பேசாமல் இருந்தேன்; ஏனெனில், நான் தொழிற்சங்கவாதி அல்ல.

இறுதியில், அவர்கள் என்னைத் தேடி வந்த பொழுது எனக்காகப் பேச யாருமேயில்லை.
உண்மைகள் கசக்கும்…

var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *