கேள்வித்தீ:
மாந்தரின் கையடக்க சிறப்புக் கருவி
கேள்விகள் தான் பூமியை உருண்டையாகச் செய்தன. உரிய கேள்விகள் எழுப்பப்படுவதற்கு முன் இருப்பதை ஏற்றுக் கொண்டவர்களின் அறிவைப் போலவே அதுவும் தட்டையாகவே இருந்தது. அதுவரை அய்ம்புலன்களால் துய்க்கும் உலகம் கண்ணுக்குப் புலனாகிய படியே தான் அறிவுக்குள்ளும் பதிந்திருந்தது.புலன்களின் நீட்சியாகவே அறிவும் இயங்கிய காலம் என்பது, தீயினால் ஓர் “பச்சை உணவுப் பொருளை” வாட்டிடாமல் அப்படியே உட்கொண்டதைப் போன்றது தான். இயற்கையில் விளைந்த காயை, கிழங்கை, இறச்சியைத் தீயினால் வாட்டுவதில் என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அதைப் போன்று கேள்வியினால் வாட்டி எடுக்கப்பட்ட “புலன்வழித் தகவல்கள்” கொடுத்து உதவிய நன்மைகள் ஏராளம். “கேள்வித் தீ” மனிதருக்கு வாய்த்த கையடக்கமான சிறப்புக் கருவி. வாய்க்கு அடக்கமான வாட்டி எடுக்கும் நெருப்பு அது.
குழந்தைகள் கல், மண்ணை அப்படியே விழுங்குவதைப் போல் பெரியார் “யதார்த்தத்தை” விழுங்கவில்லை. தான் பிறந்த மக்கள் கூட்டத்தில் நிலவும் சமூக ஒழுங்கைப் பண்பாட்டை, கடைபிடிப்புகளை, பழக்க வழக்கங்களை யதார்த்தம் என்ற பெயரில் புலன் வழியாக அவர் அப்படியே விழுங்கவில்லை. முதலில் அதை விலகி நின்று வேடிக்கை பார்க்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார். அடுத்து, அந்த யதார்த்தத்தில் சிக்குண்டு உழவும் மனிதர்களின் ‘அவல நாடகம்’ அவரது வேடிக்கைப் பார்த்தலின் ஆர்வத்
தைத் தூண்டுகிறது. அந்த அவல நாடகம் ஏற்படுத்தும் உணர்வு கிளர்த்தல்
களை முதல் கட்டமாகக் கடந்து அது எப்படி இத்தகைய அவல நாடகமாக உருமாறியது என்கிற விசாரணைக்குள் நுழையும் போது யதார்த்தம் அவருக்கு மாபெரும் ஆய்வுக் கூடமாக மாறிவிடுகிறது.
யதார்த்தமெனும் ஆய்வுக்கூடம்:
ஏனெனில், யதார்த்தத்துக்குள் தான் மக்கள் வாழ்வு உழன்று கொண்டிருக்கிறது. அந்த மக்கள் வாழ்வைச் சமயமும் இன்னும் பல ‘அப்பாலை’ உலக கருத்துகளும் திட்டவட்டமாக வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அந்தச் ‘சமய – அப்பாலை’ உலகக் கருத்துகளுக்கு புரோகித பிராமணர்கள் மானிடச் சேவகர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேசிய – முற்போக்குப்பார்ப்பனர்கள் தங்கு பலகைகளாக இருந்து காத்து வருகிறார்கள். இவர்களுக்கான வாழ்வாதார எரிபொருள் வழங்கும் நிலையங்களாக வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், அய்.ஏ.எஸ் போன்ற நவீனத்துவம் சார்ந்த ஆட்சியில் உத்தியோகஸ்தர்கள் உதவி விடுகிறார்கள் இவை மொத்தமும் சேர்ந்து கலந்து இயல்பான யதார்த்தம் போல ஒன்று உருண்டு கொண்டிருந்தது. யதார்த்தத்தையே ஆய்வுக்கூடமாக மாற்றிவிடும் பெரியாரின் சமூக விஞ்ஞான அணுகுமுறைதான் இந்த யதார்த்தத்துக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் தனிமங்கள், சேர்மங்கள், அமிலங்கள், வாயுக்கள், ஆவியாதல்கள் என அனைத்தையும் அலகு, அலகாகப் (அக்கு அக்கு அல்ல)பிரித்து பட்டியல்படுத்தி நம் பார்வைக்கு முன்வைத்தது. இந்தச் சிறப்பாற்றல் அவருக்கு எப்படி இதே யதார்த்தத்துக்குள் இருந்து திடீரெனக் கிடைத்தது. முதல் பத்தியில் கூறிய அதே “விலகி நின்று வேடிக்கை பார்த்ததில் இருந்து தான்”. ஆனால் அதை ஆழமான தீவிரமான கவனமான ‘வேடிக்கைப் பார்த்தல்’ என்று சொல்ல வேண்டும்
கிட்டத்தட்ட இன்றைய பறவையிய லாளர்கள் (Ornithology), வனவிலங்கின ஆய்வாளர்கள் (Wildlife watchers), ஆழ்கடல் ஆய்வாளர்களின் ஆழமான கவனமான வேடிக்கைப் பார்த்தல் போன்றது என்று தான் சொல்ல வேண்டும். அவர் அப்படி வேடிக்கை பார்த்தவற்றை முதலில் தெளிவாகத் தொகுத்துக் கொள்கிறார். அவரே தொகுத்துக் கொண்டவற்றை அவரே மீண்டும் மீண்டும் பகுத்துப் பார்க்கிறார். தொகுக்கும்போதும் பகுக்கும் போதும் ஏற்படும் வேதிவினைகளை ஆவியாதல்களை, சிதைவுகளை, இழப்புகளை அனைத்து பாகுபட்டக் கூறுகளிலும் அவற்றின் முழுமையிலும் தொடர்ந்து கவனித்துக் கொண்டே வருகிறார்.
இதில் ஏற்படும் இடைவெளிகளுக்கு ஏற்ப கேள்விகளை எழுப்பியும் இட்டுக் கட்டிய வரைவுகளைக் (draft) கொண்டும் மனதிற்குள் உரையாடிக் கொண்டே இருக்கிறார்.உரையாடல் ஓய்வதில்லை. சரி இதையெல்லாம் எங்கிருந்து செய்து கொண்டிருக்கிறார்.வெங்காய மண்டியிலிருந்தும், ஈரோட்டு வீதிகளில் இருந்தும், பயணங்களில் இருந்தும் தான். எதைப் பற்றுக்கோடாகக் கொண்டு உகந்த நிலையாக (idealism) இலக்காகக் கொண்டு இதையெல்லாம் செய்து வருகிறார். அய்ரோப்பிய, அமெரிக்க, சோவியத்து நாடுகளில் வாழும் சுதந்திரமான, அறிவார்ந்த, மானுட வாழ்வைத்தான், தன் ஆய்வுக்கு உரைகளாக கொள்ளுகிறார்.
உலக தேசிய நிலைமைகளைப் புகட்டுதல்:
அவர் உடல் பௌதிகமாக உள்ளூரில் வாழ்ந்து கொண்டிருந்ததே தவிர அவரது மனம், நாடு, (இந்தியா) என்கிற அளவிலும் அதைக் காலனியமாகக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிற பிரிட்டன் அதற்குச் சவாலாக எடுத்துக் கொண்டிருக்கிற நாசிச பாசிசக் கூட்டணி (ஹிட்லர் + முசோலினி) அதனை அடக்கி ஒடுக்க பிரிட்டனோடு கைகோர்த்த சோவியத் யூனியன் (USSR) அய்க்கிய அமெரிக்க நாடுகள் (USA) இவை ஒவ்வொன்றும் தத்தமது பக்கத்து நியாயங்களோடு இயங்கிய இரண்டாம் உலகப்போர் அது. இந்தியாவின் விடுதலையை எப்படித் தீர்மானிக்கப் போகிறது என்கிற கூர்ந்த கவனிப்பும் அதன் வழியாகத் தான் முதன்மைக் கவனம் செலுத்துகிற பார்ப்பனர் அல்லாத (திராவிடர்கள்) மக்கள் தொகுதிக்கு கிடைக்கப் போகிற சமூகப் பொருளாதார அரசியல், வாழ்வியல் மாற்றம் என்ன என்பதை நாள்தோறும் வெளிவரும் இதழியல் செய்திகள், நுண்ணறிவு மிக்க ஆசிரியர் பலரின் நூல்கள், அறிஞர்கள், கலைஞர்கள், வழக்குரைஞர்கள், பலரது தெருமுனைப் பேச்சுக்கள், இவற்றின் வழியாகத் தொகுத்து கொண்டே வந்தார்.
தான் தொகுத்துக் கொண்ட உலக தேசிய நிலைமைகளைத் தன்னிலும் குறைவான தகவல் அறிவும், கண்ணோட்டமும் கொண்டு வாழும் தம் மக்கள் தொகுதிக்குத் தன்னுடைய இதழியல் தெருமுனைப் பேச்சு மலிவு விலை நூல்கள் வழியாகப் புகட்டிக் கொண்டே வந்தார். இங்கே ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உலக அளவில் நடந்து கொண்டிருந்த முக்கியமான நிகழ்வுகள் எதனையும் அவர் நேரடிப் புலன் கட்சியாகக் கண்டதோ, கேட்டதோ, துய்த்ததோ இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகள் நடந்து முடிந்த பிறகு தான் அவர் உலகப் பயணம் மேற்கொண்டார். அவை பெரும்பாலும், அவருக்கு இதழியல், வானொலி, நூல்கள் போன்ற தகவல் பரிமாற்ற ஊடகங்களின் வழியாகக் கிடைத்தவை மட்டுமே. அதே நேரத்தில் அவர் உள்ளூரில் வாழ்ந்து கொண்டிருந்தபோது இங்கே அவர் புலன்காட்சியாக அன்றாடம் காணக்கூடியதாக இருந்த சமயம், கோயில், ஜாதி சார்ந்த சடங்குகள், கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள், ஒன்று கூடல்கள் பலவும் இந்த யதார்த்தத்திற்குள் அவரை மூழ்கடித்து விடவில்லை. இதில் தான் இருக்கிறது அவரது பகுத்தறிவின் நுண்கருவிகளது (tools) சிறப்பு.
அகிலத்தை அறிதலில் பெரியாரின் அணுகுமுறையைக் குறைத்து மதிப்பிடுவதா ?
எந்த நிகழ்வு வரலாற்றின் அடுத்தக் கட்டத்தை நோக்கி மக்கள் கூட்டத்தை நகர்த்துகிற நிகழ்வு, எது அத்தகைய உள்ளாற்றல் அற்ற போலி நிகழ்வு என்பதும் அவரது புலன் காட்சிகளை (நேர்க்காட்சி வாதம்) கடந்த பகுத்தறிவு அணுகுமுறைக்குத் தெளிவாகப் பெற்றுத் தந்தது. ஆனால் அவரது அந்த அணுகுமுறை வெறும் “அனுபவ வாதமே” (empricism) என்று சுருக்கி உரைத்தனர் பலர். உண்மையில், வரலாற்றுப் பொருள் முதல்வாதம், இயங்கியல் பொருள் முதல்வாதம் என்கிற மார்க்சிய சிந்தனைச் சட்டக வழியில் இந்த உலக நடப்புகளை விளங்கிக் கொள்வது மட்டுமே, புரட்சிகர மாற்றத்திற்கு உதவும் என்கிற நோக்கில் “அகிலத்தை அறிதலில்” பெரியாரின் அணுகுமுறையைக் குறைத்து மதிப்பிட்டு வந்தனர்.
ஆனால் 1990இல் இருந்து 2000 ஆண்டுக்குப் பிறகு தான் உலக அளவில் பல நாட்டு மொழி, இனங்களில் பிறந்து வளர்ந்து இயங்கிய மார்க்சிய அறிஞர்கள் பலரும் தத்தமது சொந்தப் பண்பாடு, கல்வி, கேள்வி அணுகுமுறைகளில் இருந்து தொடங்கியது. அவர்களது தேசிய விடுதலைத் தேவைக்கேற்பவே சிந்தித்து, மார்க்சியத்தின் மூலச் சிறப்புள்ள உலகளாவிய சிந்தனைத் தளத்தை வந்து எட்டுகின்றனர் என்பது பல மொழிபெயர்ப்பு நூல்களின் வழியாக பலருக்கும், ஏன் இங்குள்ள மார்க்சியர்களுக்கும் புரிபடத் தொடங்கியது. அப்படி இல்லாமல் உள்ளூரைப் பொறுத்தவரை எதுவும் மாற்றத்தக்கதே இல்லை இழக்கத்தக்கதே இல்லை மாறாக உலக அளவில் ஏற்படுகிற சோவியத்து, சீனாவின் புரட்சிகளை இங்கே ஆட்சியில் ரீதியாக மொழி பெயர்த்துக்கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி என்பதும், தனி ஒருவர் முதல் சமூகக் குழுக்கள், மொழி வழி தேசிய இனங்கள், பழங்குடி இனங்கள் இவற்றை வரலாற்றில் அடுத்தடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த இங்கு நிலவிக் கொண்டிருக்கிற தேக்க நிலையை உடைத்தாக வேண்டும் என்கிற பொறுப்பு ஏற்பு அகிலத்தை அறிதலில் அடங்காது என்கிற பார்வை தான் அன்று மார்க்சிய முகாம்களில் நிலவி வந்தது.
சமயம் – ஜாதி – நிறம் – பாலினம் எனும் உள்ளூர் அநீதி:
மானிட வாழ்வில் பொருளாதார சமத்துவத்தை மூலதன நீதியை(capital Justice) உருவாக்கி நிலைநிறுத்திவிட வேண்டும் என்கிற விழைவு பெரியாருக்குச் சிறப்பாகவே உண்டு. ஆனால் இங்கு இருக்கிற உள்ளூர் சார்ந்த சவால்களை, நெருக்கடிகளை, முறியடித்துக் கொண்டே செல்கையில் உணரப்படுகிற மிக ஆழமானதும் தொன்மையானதும் வலிமையானதுமாகிய சவால். இந்த “மூலதன அநீதி” என்கிற இந்தச் சவால் என்பது எல்லா மொழி, இன, பழங்குடி, நிலப்பகுதிகளைச் சார்ந்த எல்லா மானிடர்களாலும் கண்டுணரப்படும். இப்படி அணுகாமல் மூலதன அநீதியை முதலில் உலக அளவில் (global level) தேசிய அளவில் (national level) அழித்து ஒழிப்பதன் வாயிலாக பரந்துபட்ட அளவில் (macro level) உருவாகிற சாதகமான சூழ்நிலைகள் எல்லா உள்ளூர் நிலைமைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றின் வலுவைக் குறைத்து இல்லாமல் செய்துவிடும் என்கிற “தலைகீழ் வாசிப்பு” பெரியாரின் அகிலத்தை அறிதலில் இடம்பெறுவதில்லை.
“மூலதன அநீதி”(capital injustice)பொருளாதாரச் சுரண்டல் எவ்வளவு தீங்கானதோ, கேடு பயப்பதோ அவ்வளவு தீங்கு பயப்பதும் கேடு பயப்பதுமே சமயம் ஜாதி, நிறம், பாலினம் சார்ந்த அடையாளமும் அதன் வழி ஏற்படும் பாகுபாடுகளும் சுரண்டல்களும் என்பதே பெரியார் ஆய்வுக்கூடத்தின் முடிவுகள் ஆகும்.மாறாக காரல் மார்க்ஸ் “மூலதன அநீதியின்” தோற்றம் – வளர்ச்சியை விலக்கிக் கூறிய முறையில் தான் அந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும் முடியும் என்பது ஆசிரியர் ஒரு பாடத்தை விளக்குவதற்காக வகுப்பறையில் கூறிய எல்லாவற்றையும் தேர்வுத் தாளில் விடையாக எழுதக் கூடாது என்பதும் அவர் கூறியதைச் சாரமாக விளங்கிக் கொண்டு விடுக்கப்பட்ட கேள்விகளுக்கு (challenge) பொருத்தமான பதிலைத்தான் விடைத்தாளில் எழுத வேண்டும் என்பதே பெரியார் இயலின் தேற்றம்.
சான்றாக:
இப்போது உலக அளவில் ஏற்பட்டுவிட்ட பெரும் போர் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டணி, ஈரானை – லெபனானை அடித்துச் சிதைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதில் பெரும்பாலான மார்க்சிய நோக்கர்கள் விளக்கி உரைக்கும் முறை இதில் தொடர்புள்ள, எண்ணெய் வளம், புவி அரசியல் நலன், போர்த் தளவாட உற்பத்தியாளர்கள் நலன் என்கிற கோணத்திலேயே பிரதானமாக அமைவதைக் காண்கிறோம். ஆனால் இதில் தொடர்புடைய ஆதிக்க அமெரிக்க, பாலஸ்தீனியர்கள், ஈரானியர்கள் லெபனானியர்கள் பற்றிய விவரங்கள் அடையாள அரசியல் ரீதியாக தீவிரமான விசாரணைக்கு உள்ளாவது இப்போது பெருகி வருவதைக் காண்கிறோம்.
இந்த அணுகுமுறையில் பல மொழி, இன நாடுகளைச் சார்ந்த இளம் மார்க்சியர்களும் அடங்குவர். இது நெடுங்காலமாக பெரியார் கவனம் செலுத்தி வந்த மிகத் தீவிரமான மானிடப் பிரச்சனை ஒன்று பற்றிய அதே விவகாரம் தான். அமெரிக்க இஸ்ரேலிய நாடுகளின் பொருளியல், போரியல், அரசியல் நலன்கள் இதில் எவ்வளவு முக்கியம் என்று ஆய்ந்துரைக்கப்பட வேண்டுமோ அதே அளவு அதில் தொடர்புடைய சமய, பாலின, வட்டாரம் சார்ந்த அடையாளங்களும் தொடர்பு கொண்டு உள்ளன என்பது ஆய்ந்துரைக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்தப் பூசல்களுக்கான மூலக்கூறுகள் பொருளாதாரத்தில் தொடங்கி, பொருளாதாரத்திலேயே முடிவடைந்து விடுவதாக ஏமாந்து இன்னும் சில நுட்பமானப் பாகுபாட்டின் மூலக்கூறுகளைக் காணத் தவறியவர்களாவோம்.
பெரியாரியர்கள் பொருளாதாரச் சிக்கல்களை ஆழமாக உணர்வதும் மார்க்சியர்கள் மானிட அடையாளச் சிக்கல்களை ஆய்வு நிலையில் ஆய்ந்துணர வேண்டியதும் இன்றியமையாதது.
யதார்த்தம் என்கிற ஆய்வுக்கூடம் திறந்து இருக்கிறது. வாருங்கள் தோழர்களே..!





